Jump to content

User:Wikipalanifusion/sandbox

From Wikipedia, the free encyclopedia

This is an old revision of this page, as edited by Wikipalanifusion (talk | contribs) at 06:06, 7 February 2023. The present address (URL) is a permanent link to this revision, which may differ significantly from the current revision.

தோரணமலை முருகன் கோவில்

திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகன் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார்.

தோரணமலை ஸ்ரீ முருகன் திருக்கோவில்

உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டம் கடையம் அருகே தோரணமலை உள்ளது. இந்த மலையின் உச்சியில் இருக்கும் குகைக் கோயிலில் முருகப்பெருமான் கிழக்குநோக்கி வீற்றிருக்கிறார். இறையருள் வீசும் இந்த மலைப்பகுதி ஒரு காலத்தில் பட்டங்கள் வழங்கும் பாடசாலையாக விளங்கியது.

கைலாய மலையில் சிவபெருமானின் திருமணம் நடைபெற்றபோது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது அல்லவா? அப்போது உலகை சமன் செய்ய தென்திசைநோக்கி சிவபெருமானால் அனுப்பப்பட்டவர்தான் குறுமுனி என்று அழைக்கப்படும் அகத்தியர். தென்திசை புறப்பட்ட அகத்தியருக்கு ஆதி மொழியாம் தமிழ் மொழியை உபதேசித்தார் சிவபெருமான்.

தென்தமிழகத்தில் உள்ள பொதிகை மலை வந்ததும் உலகம் சமநிலை அடைந்தது. அதன்பின் அகத்தியர் தமிழ் கடவுளான முருகப்பெருமானிடமும் தமிழை கற்று அகத்தியம் என்ற இலக்கண நூலை எழுதினார்.

தமிழுக்கு இலக்கணம் வகுத்தபின் அகத்தியர் உலக மக்கள் நோயின்றி வாழ மருத்துவ ஆராய்ச்சியில் ஈடுபட்டார். மருத்துவம் என்றால் இந்த காலத்தைப்போல உடல்கூறுகளையும் மருந்துகளை மட்டும் படிப்பது அல்ல. இந்த மண் முதல் விண் வரை உலக இயக்கத்தின் அத்தனையையும் கற்று தேர்ச்சி அடைந்தால்தான் அவன் முழு மருத்துவன் ஆக முடியும். இதற்காக அகத்தியர் மொத்தம் ஒரு லட்சத்து 24 ஆயிரம் கிராந்தங்கள் வகுத்துள்ளார். தான் கண்டறிந்த சித்த மருத்துவ குறிப்புகளை கொண்டு அகத்திய வைத்திய சேகரம் என்ற நூல் படைத்துள்ளார்.

அகத்தியருக்கு பல சீடர்கள் உண்டு. ஒவ்வொருவரையும் வானவியல், வேதியல், மண்ணியல், கணிதவியல், மருத்துவம் என வெவ்வேறு துறையை பற்றி ஆராய்ச்சி செய்ய பணித்தார். அந்த ஆராய்ச்சியின் படி பாடத்திட்டங்களை அகத்தியர் வகுத்தார். அந்த பாடத்திட்டத்தில் தமிழ் மொழி இலக்கிய இலக்கணம் கற்பதே முதல் பாடமாக இருந்தது.

தொடர்ந்து கணிதமும், மருத்துவ ஆய்வு வகைகளும், வானசாஸ்திரங்கள், இருநிலை பிரிவாகம், மலை வாசகம், மூலிகை வாடகம், பாடான வாகடம், மூலிகை மூலாதரத்துவம், இரசாயன ஆய்வு- அதன் அனுபவ பயிற்சி, பாடான சுத்திமுறை, அனுபான முறைகள், களிம்பாக்கம், பற்பம், செந்தூரம், உலோகபற்பம், சங்கு பற்பம், மருத்துவ சிகிச்சை முறைகள், திரிநிலையில் தாவர சமூகங்கள், பாடான பற்பங்கள், தைல லேகிய முறைகள் என்ற வகையில் பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டன. மேலும் சிறப்பு மருத்துவமாக கிருமிநாசினி, நச்சு அகற்றும் முறை, மழலையர் மருத்துவம், இரணவாடகம், உடல்தத்துவம், நார், தசை, தந்தம், குருதி ஆகியவற்றின் ஆய்வு, கபாலம் பற்றிய ஆய்வு, நேந்திரம், நாசி, செவி, கண்டம், சருமநிலை போன்ற படிப்புகளும் உண்டு. இதுதவிர ஆறு ஆதாரநிலைகள், சரியை, கிரியை, ஞானம் என அனைத்து கலைகளும் கற்று கொடுக்கப்பட்டது.

இப்படி முழுமையான பாடத்திட்டம் வகுத்தப் பின்னர் அகத்தியர் தோரணமலை பகுதியில் பாடசாலையை தொடங்கினார். தோரணமலை பயிற்சி கூடத்தில் சீனா உள்பட உலகின் பல்வேறு இடங்களில் இருந்து பயில சித்தர்கள் பலர் வந்தனர். பின்னர் சிவபெருமான் நடனம் புரிந்த ஐந்து சபைகளில் அதாவது திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அங்கு பயின்றவர்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் பாடசாலைகளின் கிளைகள் உருவாக்கப்பட்டன. இதில் இலஞ்சி, மருதமலை, ஆவினன்குடி(பழனி), கொள்ளிமலை, சித்தர்குகை, அவன் அவளாய் நின்ற மலை போன்றவை முக்கியமானதாகும்.

இந்த பாடசாலையில் ஆறு ஆறு ஆண்டுகளாக பாடங்கள் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஆறு ஆண்டுகளுக்கும் தனித்தனியே பட்டங்கள் வழங்கப்பட்டன. இந்த காலக்கட்டத்தில்தான் மன்னன் காசிவர்மனுக்கு தீராத தலைவலிக்காக அகத்தியர் கபால அறுவை சிகிச்சை செய்தார். அவருக்கு மிகவும் உதவிகரமாக இருந்த சீடர் தேரையரை மூலிகை ஆராய்ச்சிக்காக பணித்தார். அவரும் தோரணமலையில் தங்கி இருந்து மூலிகைகள் மூலம் மருத்துவ சேவை செய்து வந்தார். அகத்தியரும் தேரையரும் தோரணமலையில் இருக்கும்போது தமிழ் கடவுளாம் முருகனை சிலை வைத்து வணங்கி வந்தனர். அவர் இங்கேயே சமாதி நிலையை அடைந்தார்.

காலப்போக்கில் அங்கு வழிபாடு நின்றுபோனதோடு முருகன் சிலையும் காணாமல் போனது. ஆயிரமாயிரம் ஆண்டுகள் உருண்டோடிய நிலையில் ஆதிநாராயணன் அவர்களது மூதாதையர் ஒருவர் கனவில் முருகப்பெருமான் வந்து தான் தோரணமலையில் இருப்பதாகவும் அங்கு சுனையில் மறைந்து கிடக்கும் சிலையை குகையில் நிறுவி வணங்கும்படியும் கூறினார். அதன்படி அவர் அங்கு வந்து சுனையில் மறைந்திருந்த முருகனை மீட்டு குகையில் ஸ்தாபித்து வணங்கி வந்தார்.

சித்தர்கள் வழிபட்ட முருகன் என்பதால், தோரணமலை முருகனை வணங்கினாலே எந்த தோஷமும் நம்மை நெருங்காது என்பது ஐதீகமாகும்.

இந்த நிலையில்தான் 1970 ஆம் ஆண்டு ஆதிநாராயணன் அவர்கள் கோயில் பொறுப்புகளை ஏற்றார். பள்ளிக்கூட ஆசிரிய ரான அவர் வேலைநேரம் தவிர மற்ற நேரங்களை தோரணமலையிலேயே கழித்தார். கடையம் சுற்றுவட்டாரத்திற்கு மட்டும் தெரிந்த அந்த கோயிலை பிரபல படுத்த எண்ணினார். அதற்கு என்னவழி என்று சிந்தித்தார். அப்போதெல்லாம் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு சினிமா மட்டுமே. எனவே சினிமா தியேட்டர்களில் தோரணமலை முருகன் பற்றிய சிலேடுகளை போட ஏற்பாடு செய்தார்.

அப்படித்தான் தோரணமலையின் புகழ் பல்வேறு மாவட்டங்களுக்கு பரவியது. இந்த நிலையில் தோரணமலையின் வனப்பை கண்ட சினிமா கலைஞர்கள் அங்கு சினிமா படம் எடுக்க வந்தனர். அவர்களுக்கு ஆதிநாராயணன் அவர்கள் பல்வேறு உதவிகளை செய்து கொடுத்தார். படப்பிடிப்பு முடிந்தவுடன் தங்களுக்கு இடம் கொடுத்து உதவியும் செய்ததற்காக ஒரு கணிசமான தொகையை ஆதிநாராயணனன் அவர்களிடம் கொடுத்தனர்.

ஆனால் அந்தப் பணத்தை வாங்க மறுத்துவிட்டார். மாறாக, எனக்கு நீங்கள் நன்றிக்கடன் செலுத்த வேண்டுமானால் படத்தில் எழுத்துப்போடும் போது தோரணமலை என்ற பெயரை போடும்படி கேட்டுக்கொண்டார். அதனை புனிதமாக கருதிய படக்குழுவினர் தோரணைமலை என்ற பெயரை படத்தில் சேர்த்தனர். மறைந்த இயக்குனர் பரதனின் சாவித்திரி என்ற சினிமாப்படம் (இந்த படத்தில் கதாநாயகியாக நடத்தவர் பிரபல நடிகை கீர்த்திசுரேசின் தாயார் மேனகாதான்) இங்கு அதிக அளவில் படமாக்கப்பட்டது.

அந்த படத்தின் வசனத்தில் தோரணமலை என்று குறிப்பிட்டு பேசுவார்கள். அதேபோல் டெலிவிஷன் தொடர்களும் இங்கே படமாக்கப்பட்டன. அதிலும் தோரணமலை பெயர் இடம்பெறும்.

இப்படி தோரணமலையில் பெயர் நாலாபுறமும் பரவியதால் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் பலர் வரத்தொடங்கினர். கிராமவாசிகள் மட்டும் வந்தகாலம் போய் நகரவாசிகளும் வந்த வண்ணம் இருந்தனர்.

அவர்களால் மலையில் எளிதாக ஏறமுடியவில்லை. அப்போதுதான் ஆதிநாராயணன் அவர்கள் பக்தர்கள் எளிதாக மலைமீது ஏற படிக்கட்டுக்கள் அமைக்க வேண்டும் என்று எண்ணினார். இதற்காக பலரை சந்தித்து உதவி கேட்டார். அப்போதும் பணத்தை தாருங்கள் என்று யாரிடமும் கேட்கவில்லை. உங்களால் இயன்ற படிக்கட்டுகளை கட்டித்தாருங்கள் என்றுதான் வேண்டினார்.

இந்த நிலையில்தான் ஆவுடையானூர் டாக்டர் முருகனின் அருளால் ஈர்க்கப்பட்டார். அவர் அடிக்கடி தோரணமலைக்கு வருவார். அவரது திருப்பணி மிகவும் மகத்தானது. அவரது முயற்சியால் பல படிக்கட்டுகள் முழுமை அடைந்தன. அதோடு வழியில் உள்ள லட்சுமி தீர்த்தத்தை புதுப்பித்து அங்கே பக்தர்கள் நீராட வசதி செய்து கொடுத்தார். இதற்காக அந்த டாக்டரே தன் தலையில் செங்கற்களை சுமந்த சம்பவங்களும் உண்டு. அதோடு பண உதவி செய்ய இயலாத பாமர ஏழை பக்தர்களும் திருப்பணி செங்கற்களை கொண்டு சென்றனர்.

ஆதிநாராயணன் அவர்கள் இந்த திருப்பணியை தொடங்கி ஐம்பது ஆண்டுகள் ஆகிறது. இந்த வயதிலும் அவருடைய எண்ணங்கள் அனைத்தும் தோரணமலை முருகனையே வலம் வந்து கொண்டிருக்கிறது. மோட்டார் சைக்கிள்களும், கார்களும் பெருகி விட்ட இந்த காலத்திலும் தனது திருப்பணிக்கு உதவிய மிதிவண்டியை அவர் இன்றும் மறக்கவில்லை. இயக்குவார் யாரும் இல்லை என்றாலும் அந்த மிதிவண்டி முருகனின் பெயரை சொல்லும் காட்சி பொருளாக அவரது வீட்டில் நின்று கொண்டிருக்கிறது.

வயது முதுமை காரணமாக ஆதி நாராயணன் அவர்களுக்கு அவரது மூத்த மகன் செண்பகராமன் உதவியாக இருக்கிறார். சென்னை உள்பட முக்கிய நகரங்களில் தோரணமலையின் பெருமையை பறைசாற்றி வருகிறார். அவரது சீரிய முயற்சியின் பேரில் வருகிற 21&ந்தேதி (திங்கட்கிழமை) தைபூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. அன்று வள்ளி&தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானுக்கு (உற்சவர்) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. மேலும் வீதிஉலாவும் நடத்தப்படுகிறது.

இதைத் தொடர்ந்து கோயில் திருப்பணி தொடங்க உள்ளது. இதில் கற்களால் ஆன புதிய கட்டிடங்கள், அலங்கார தோரணங்கள் இடம் பெறும். பணி நிறைவு அடைந்தவுடன் குடமுழுக்கும் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இதில் பக்தர்களும் தொழில் அதிபர்களும் உதவி செய்து முருகப்பெருமானின் அருளை பெறலாம். கடந்த காலத்தில் திருப்பணியில் உதவியவர்கள் நல்ல வளர்ச்சி அடைந்து தொடர்ந்து மலைக்குகை நாயகனாம் தோரணமலை முருகப்பெருமானை வந்து தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர். அதேபோல் திருப்பணிக்கு உதவி செழுமையாய் வாழ முருகப்பெருமான் அருள்புரிவார்.