உள்ளடக்கத்துக்குச் செல்

அனுசுக்கா செட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அனுஷ்கா ஷெட்டி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அனுஷ்கா செட்டி
பிறப்புநவம்பர் 7, 1980 (1980-11-07) (அகவை 44)
மங்களூர்,கர்நாடகா இந்தியா
பணிநடிகை, யோகாசன ஆசிரியை, பின்னணிப் பாடகி

அனுஷ்கா ஷெட்டி ( ஸ்வீட்டி ஷெட்டி, பிறப்பு: நவம்பர் 7, 1980 ) இந்திய திரைப்பட நடிகையாவார். தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் மட்டும் நடித்துவருகிறார். இவர் நடித்த சில திரைப்படங்கள் மலையாளத்திலும், இந்தியிலும் மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டுள்ளது.[1][2][3]

2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் - நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படமாகும். 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். கடந்த பத்து வருடங்களில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

துவக்கத்தில் ஒரு சராசரி கவர்ச்சி நாயகியாக அறியப்பட்ட இவர், அருந்ததி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத் திறனை நன்கு வெளிப்படுத்தினார். இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.

அதன் பின், இவரது திரை வாழ்க்கை முற்றிலும் மாறியது. மாறுபட்ட கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து, அதற்காக முழு சிரமத்தை எடுத்து நடித்து வருகிறார்.

இளமைக்கால வாழ்க்கை

[தொகு]

அனுஷ்கா ஷெட்டி 1980-ம் ஆண்டு நவம்பர் மாதம் 7-ம் தேதி, இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூரில் பிறந்தார். இவரது தந்தை ஏ.என்.விட்டல் ஷெட்டி, ஒரு பொறியாளர். தாய் ஃபிரபுல்லா, இல்லத்தரசி. இவருக்கு இரண்டு அண்ணன்மார்கள் இருக்கிறார்கள். மூத்தவர் சாய் ரமேஷ் ஷெட்டி ஒரு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுனர். இளையவர் குணா ரஞ்சன் ஷெட்டி. திராவிட கிளை மொழியான துளு-ஐ தாய் மொழியாகக் கொண்டவர்கள். தற்போது பெங்களூரில் வசிக்கின்றனர். இவர்களுக்கு சொந்தமான ஓர் உணவகம் பெங்களூர் நகரில் உள்ளது.

அனுஷ்கா பெங்களூரில் உள்ள மெளண்ட் கார்மேல் பள்ளியில் கல்வி பயின்றார். பின் கணினி பாடத்தில் இளங்கலை பட்டமும் பெற்றார். தான் கல்வி பயின்ற பள்ளியிலேயே ஓராண்டு பூகோள ஆசிரியையாகவும் பணி செய்துள்ளார்.

யோகா பயின்றதும், பயிற்றுவித்ததும்

[தொகு]

தனது தந்தையின் வற்புருத்தலின் பேரில், விடுமுறைக்கால யோகா பயிற்சி வகுப்புகளில் கலந்துக்கொண்டவர், யோக முறைகளினால் கவரப்பட்டு முழு ஈடுபாட்டுடன் பயிற்சியை எடுத்துக்கொண்டார். பின்னர், மும்பையில் யோகா ஆசிரியர் பரத் தாகூரிடம் யோக கலையை முழுமையாக பயின்று, தீட்சை பெற்று யோகாவை பயிற்றுவிக்கும் பயிற்றுநர் ஆனார்.

திரைப்பட வாய்ப்பு

[தொகு]

இவரது யோகா குரு பரத் தாகூரின் மனைவி புகழ்பெற்ற நடிகை பூமிகா என்பதால், அவர்களின் திரையுலக நண்பர் ஈஸ்வர் நிவாஸ் மூலம் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அனுஷ்காவிற்கு தேடிவந்தது. ஆரம்பத்தில் நடிப்பதில் விருப்பமில்லாத அனுஷ்கா வந்த வாய்ப்புகளை தட்டிக்கழித்தார்.

பின் தனது குரு பரத் தாகூரின் அறிவுரையின் பேரில், தெலுங்கு திரைப்பட இயக்குநர் பூரி ஜகன்நாத்தை மும்பையில் சந்தித்து அவர் கேட்டுக்கொண்டதற்காக ஹைதராபாத்திற்குச் சென்று புகைப்பட ஒத்திகையில் கலந்துக்கொண்டார்.

அதில் தேர்வு செய்யப்பட்ட அனுஷ்கா, 2005-ம் ஆண்டு தனது முதல் திரைப்படமாக பூரி ஜகன்நாத் இயக்கத்தில் அக்கினேனி நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்தார். இத்திரைப்படம் 2005 ஜூலை மாதத்தில் வெளியானது. இத்திரைப்படம் பெரிய வெற்றியைக் கொடுக்கவில்லை என்றாலும் ஒரு நல்ல துவக்கத்தை அனுஷ்காவிற்கு கொடுத்தது.

வெற்றியும், தோல்வியும்

[தொகு]

அதே ஆண்டில் அனுஷ்கா நடித்த இரண்டாவது திரைப்படம் மகாநந்தி வெளியானது. இந்த திரைப்படமும் சராசரி திரைப்படமாகவே அமைந்தது. இருப்பினும் அனுஷ்காவிற்கு நடிப்பதில் ஒரு படி முன்னேற்றம் கிடைத்தது.

2006-ம் ஆண்டில் அனுஷ்கா நடித்த நான்கு திரைப்படங்கள் வெளியானது. முதலாவது, தொடர் வெற்றிப்படங்களை கொடுக்கும் இயக்குநர், திரு.ராஜ மெளலியின் இயக்கத்தில், ரவி தேஜாவுடன் இணைந்து நடித்த விக்ரமார்க்கடு. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றித்திரைப்படமாக அமைந்தது. இந்த திரைப்படத்தில் அனுஷ்கா ஒரு கவர்ச்சி நாயகியாகவே சித்தரிக்கப்பட்டார். நடிப்புத்திறனை வெளிக்காட்டும் அளவிற்கு அழுத்தமான கதாபாத்திரமாக இத்திரைப்படம் அமையவில்லை. இரண்டாவதாக அஸ்திரம் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படமும் சராசரி திரைப்படமாகவே அமைந்தது. மூன்றாவதாக, சி.சுந்தர் இயக்கத்தில், மாதவனுடன் இணைந்து நடித்த ரெண்டு எனும் தமிழ் திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் அனுஷ்கா முழுவதும் கவர்ச்சி நாயகியாகவே சித்தரிக்கப்பட்டார். குறிப்பாக பாடல் காட்சிகள், ( மொபைலா, யாரோ எவரோ ) அனுஷ்காவின் உடல் கவர்ச்சியை வெளிக்காட்டவே எடுக்கப்பட்டதாக இருந்தது. எனினும், இத்திரைப்படம் இளைஞர்களை கவர்ந்த அளவிற்கு மற்றவர்களை கவரவில்லை. நான்காவதாக, ஸ்டாலின் திரைப்படத்தில் கெளரவ வேடம்.

2007-ம் ஆண்டில் அனுஷ்காவின் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியானது. முதலாவது லக்ஷ்யம், இரண்டாவது ராகவா லாரன்ஸின் டான் திரைப்படம். லக்ஷ்யம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றித்திரைப்படமானது. டான் மசாலா திரைப்படமாகவே அமைந்தது. இந்த இரு படங்களிலும் அனுஷ்கா கவர்ச்சி நாயகியாகவே சித்தரிக்கப்பட்டார்.

2008-ம் ஆண்டில் அனுஷ்கா நடித்த ஆறு திரைப்படங்கள் வெளியானது. முதலாவது, ஒக்கமகடு. நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் நடித்தது. இரண்டாவது, ஜகபதி பாபுவுடன் இணைந்து நடித்த ஸ்வாகதம். மூன்றாவது ரவி தேஜாவுடன் இணைந்து நடித்த பாலதூர். நான்காவது கோபி சாந்துடன் இணைந்து நடித்த செளரியம். ஐந்தாவது சிந்தகாயல்யா. ஆறாவது, கெளரவ தோற்றத்தில் கிங் திரைப்படம். இந்த ஆறு திரைப்படங்களில் செளரியம் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கொடுத்தது. மற்ற திரைப்படங்கள் சராசரியாகவே இருந்தது. இந்த திரைப்படங்கள் எதிலும் அழுத்தமான கதாபாத்திரங்கள் இல்லாமல் சராசரி நாயகியாகவே அனுஷ்கா வந்துச்சென்றார்.

வரலாறு படைத்தது

[தொகு]

2009-ம் ஆண்டு அனுஷ்கா நடித்த மூன்று திரைப்படங்கள் வெளியானது. முதலாவது, மூன்று ஆண்டு தயாரிப்பில் எடுக்கப்பட்ட அருந்ததி திரைப்படம்.( தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியானது ). இந்த திரைப்படத்தில் அனுஷ்கா இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். இரு வேடங்களும் அழுத்தமான கதாபாத்திரங்கள். அவருடைய முழு நடிப்புத்திறனையும் வெளிக்காட்டும்படியாக அமைந்தன. குறிப்பாக முரசு நடன பாடல் காட்சி. ஒரு மாதகாலம் படப்பிடிப்பு நடத்தி எடுக்கப்பட்டது. இந்த பாடல் காட்சி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. மேலும், இத்திரைப்படத்தின் கதையாக்கம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களையும் மிகவும் கவர்ந்திருந்ததால் பட்டிதொட்டியெங்கும் சிறப்பான ஒரு வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபீசிலும் மிகப்பெரிய வசூல் செய்தது. சுமார் 17 கோடியில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் 73 கோடிகளை வசூலித்தது. இந்த திரைப்படம் வெளியான பின் அனுஷ்காவின் பெயர் மாறி அருந்ததி என்றே அழைக்கப்பட்டார். தெலுங்கு திரைப்பட வரலாற்றில் ஒரு முக்கியமான இடத்தை இத்திரைப்படம் பெற்றதுடன் அனுஷ்காவிற்கு நந்தி விருதையும், தமிழகத்தில் கலைமாமணி விருதையும் பெற்றுத்தந்தது. அனுஷ்காவின் திரை வாழ்வில் முதல் மைல் கல்லாக அமைந்த திரைப்படம்.

இரண்டாவதாக வெளியான பில்லா திரைப்படம். இது தமிழில் 1980-ல் ரஜினிகாந்த் நடித்ததும், 2007-ல் அஜீத்குமார் நடிப்பில் மீண்டும் எடுக்கப்பட்ட திரைப்படத்தின் தெலுங்கு மறு உருவாக்கம். இந்த திரைப்படத்தில் ரெபல் ஸ்டார் என்று அழைக்கப்படும் பிரபாஸ்ஸுடன் இணைந்து நடித்திருந்தார். மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் பாக்ஸ் ஆபீசிலும் நல்ல வசூல் செய்தது. இந்த திரைப்படத்தில், தனது தங்கையைக் கொன்ற ஒரு கொடூரமான கொலை மற்றும் கொள்ளைக்காரனை பழிவாங்க முற்படும் கதாபாத்திரத்தில் அனுஷ்கா தனது நடிப்பை வெளிப்படுத்தினார். கவர்ச்சியான கதாநாயகி பாத்திரமாக இருப்பினும், அனுஷ்காவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது இந்த திரைப்படம்.

மூன்றாவதாக, தமிழில் வெளியான வேட்டைக்காரன். விஜய்யுடன் இணைந்து நடித்தது. இத்திரைப்படம் விஜய் பார்முலா படம் என்பதால் அதில் கதாநாயகிக்கு என்ன பங்கு உண்டோ அதை அனுஷ்கா சிறப்பாக செய்திருந்தார். குறிப்பாக, “கரிகாலன்” மற்றும் “என் உச்சி மண்டையிலே” பாடல் காட்சிகளில் விஜய் மற்றும் அனுஷ்காவின் நடிப்பும், நடனமும் குறிப்பிடும்படியாக இருந்தது. இந்த திரைப்படம், அனுஷ்காவிற்கு தமிழில் மறுபிரவேசம் செய்ய உதவியாக இருந்தது.

தொடர் வெற்றிகள்

[தொகு]

2010-ல் எட்டு திரைப்படங்கள் அனுஷ்காவின் நடிப்பில் வெளியானது.. முதலாவது சிங்கம்-1, நடிகர் சூர்யாவுடன் இணைந்து நடித்தது. இது ஒரு வெற்றிப்படமாக அமைந்தது. பாடல்கள் மற்றும் பாடல் காட்சிகள் சிறியவர்கள் மற்றும் இளைய தலைமுறையினருக்கு விருந்து படைத்தது. குறிப்பாக “என் இதயம்”, “ காதல் வந்தாலே காலு ரெண்டும் தன்னாலே ”, “ அவள் என் இதயத்தைத் திருடினாள் ” ஆகிய மூன்று பாடல்களும் ஒலிக்காத இடமே இல்லை. மேலும், பாக்ஸ் ஆபீசிலும் சாதனை படைத்தது. 18 கோடியில் எடுக்கப்பட்ட திரைப்படம் 79 கோடிகளை வசூலித்தது.

இரண்டாவதாக கிரிஸ் இயக்கத்தில் வெளியான வேதம் திரைப்படம்.

இந்த திரைப்படம் ஐந்து கிளைக் கதைகளைக் கொண்டிருந்தாலும், அனுஷ்கா ஏற்று நடித்த விலைமாது கதாபாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததுடன் அனுஷ்காவிற்கு, அருந்ததி திரைப்படத்திற்கு கிடைத்தது போன்றே பாராட்டும், நற்பெயரும், விருதுகளும் கிடைத்தது. திரைப்படமும் வெற்றி பெற்றதுடன், பாக்ஸ் ஆபீசிலும் நல்ல வசூலைக்கொடுத்தது. 14 கோடியில் எடுக்கப்பட்ட திரைப்படம் 25 கோடியை வசூலித்தது. அனுஷ்காவின் திரை வாழ்வில் இரண்டாவது மைல் கல்லாக அமைந்த திரைப்படம்.

மூன்றாவதாக வெளியான பஞ்சாக்ஸ்ரி திரைப்படம். இதில் மீண்டும் இரட்டை வேடம் ஏற்று நடித்திருந்தார். பெண்ணை மையப்படுத்திய ஒரு குடும்ப சித்திரம். தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது.

நான்காவதாக, மகேஷ்பாபுவுடன் இணைந்து நடித்த கேலிஜா திரைப்படம். அனுஷ்கா இந்த திரைப்படத்தில் வழக்கமான நாயகியாகவே வந்துச்சென்றார். சராசரியாக அமைந்த திரைப்படம்.

ஐந்தாவதாக நாகவல்லி திரைப்படம். தமிழில் ரஜினி நடித்து பெறிய வெற்றியை பெற்ற திரைப்படத்தின் தெலுங்கு மறுஉருவாக்கம். ரஜினியின் பாத்திரத்தை தகுபதி வெங்கடேஷூம், ஜோதிகாவின் பாத்திரத்தை அனுஷ்காவும் செய்திருந்தனர். இத்திரைப்படம் ஒரு வெற்றித் திரைப்படமாகவும், பாக்ஸ் ஆபீஸில் சராசரி வசூலையும் கொடுத்தது. ஆறாவதாக, கிங் நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த ரகதா திரைப்படம். மாமூல் மசாலா. நாயகிக்கு உண்டான பாத்திரத்தை அனுஷ்கா நன்றாக செய்திருந்தார். மற்ற இரண்டு திரைப்படங்கள் கேடி மற்றும் தகிட தகிட சிறப்புத்தோற்றம்..

2011-ம் வருடம் இரண்டு திரைப்படங்கள் மட்டுமே வெளியானது. முதலாவது கிரிஸ் இயக்கத்தில் வெளியான வானம் திரைப்படம். இத்திரைப்படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற வேதம் திரைப்படத்தின் தமிழ் உருவாக்கம். தெலுங்கு படத்தில் நடித்தவர்களே பெரும்பாலோர் இத்திரைப்படத்திலும் நடித்தனர். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடித்த பாத்திரத்தை தமிழில் சிலம்பரசன் செய்திருந்தார். தெலுங்கைப்போன்றே தமிழிலும் இத்திரைப்படம் வெற்றி பெற்றதுடன் அனுஷ்காவிற்கு நற்பெயரையும், விருதுகளையும் பெற்றுத்தந்தது.

இரண்டாவதாக, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகள் திரைப்படம். நடிகர் விக்ரம் இத்திரைப்படத்தில் மனவளர்ச்சிகுன்றிய ஒரு தகப்பனாக, தன் மகளின் வளர்ப்பு உரிமைக்காக நீதிமன்றத்தில் போராடும் பாத்திரத்தில் நடித்திருந்தார். அனுஷ்கா வழக்குரைஞர் பாத்திரத்தில், தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தினார். இத்திரைப்படம் பெரிய வெற்றியை கொடுத்ததுடன், இதில் நடித்த அனைவருக்கும் நற்பெயரையும், விருதுகளையும் பெற்றுத்தந்தது. இத்திரைப்படத்தில் வரும் “விழிகளில் ஒரு வானவில்” எனும் பாடல் காட்சியில் அனுஷ்கா ஒரு தேவதையாகவே காட்சிப்படுத்தப்பட்டார். 20 கோடி செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 45 கோடிகளை வசூலித்தது. பின்னர் இத்திரைப்படம் தெலுங்கிலும், மளையாளத்திலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் அனுஷ்காவிற்கு, அதிக அளவில் மலையாள மொழி ரசிகர்களை பெற்றுத்தந்தது. மேலும், அனுஷ்காவின் திரை வாழ்வில் குறிப்பிடும்படியான ஒரு திரைப்படமாகவும் அமைந்தது.

2012-ம் ஆண்டில் அனுஷ்காவின் மூன்று திரைப்படங்கள் வெளியானது. முதலாவது, சகுனி திரைப்படத்தில் சிறப்புத்தோற்றம். இரண்டாவதாக, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வெளியான தாண்டவம் திரைப்படம். ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அனுஷ்காவின் இரண்டாவது திரைப்படம். நடிகர் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படமும் கூட. அனுஷ்காவிற்கு ஒரு சிறப்பான இடத்தை ரசிகர்கள் மனதில் உண்டாக்கிய திரைப்படம். திரைக்கதை மற்றும் பாடல் காட்சிகளில் அனுஷ்காவை ஒரு புதிய பரிமாணத்தில் தோன்றச்செய்தது. இந்த திரைப்படத்தில் வரும், “அநிச்சம் பூவழகி”, “ அதிகாலை பூக்கள் ”. “ஒரு பாதி கதவு நீயடி”, “உயிரின் உயிரே” ஆகிய நான்கு பாடல் காட்சிகள் மூலம், அனுஷ்கா ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சராசரியாகவே இருந்தது. காரணம், இத்திரைப்படத்தில் அனுஷ்கா குண்டு வெடிப்பில் பலியாவதாக சித்தரிக்கப்பட்டதால், மறுமுறை பார்க்கும் ரசிகர்களை இந்த திரைப்படம் இழந்தது. இருப்பினும் அனுஷ்காவின் திரை வாழ்வில் குறிப்பிடும்படியான ஒரு திரைப்படமாக அமைந்தது.

மூன்றாவதாக, நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த மாயாஜால திரைப்படம் தமார்க்கும். வழக்கமான மசாலாவுடன் மாயாஜாலத்தையும் சேர்த்து எடுத்திருந்தார்கள். அனுஷ்காவிற்கு நடிப்பதற்கான வாய்புகள் இல்லாமல் சராசரியாகவே அமைந்தது. இருப்பினும் பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்றது. 48 கோடியில் எடுக்கப்பட்ட திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூலித்தது.

2013-ம் ஆண்டில் அனுஷ்காவின் நடிப்பில் நான்கு திரைப்படங்கள் வெளியானது. முதலாவது, கார்த்தியுடன் நடித்த அலெக்ஸ் பாண்டியன் (திரைப்படம்). மாமூல் மசாலா. இது ஒரு தோல்விப்படமானது. இரண்டாவது, நடிகர் பிரபாஸூடன் இணைந்து நடித்த மிர்ச்சி திரைப்படம். மசாலா திரைப்படமாகவும், குடும்பச்சித்திரமாகவும் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் மாபெரும் வெற்றியைக்கொடுத்தது. இத்திரைப்படத்தில், அனுஷ்கா வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில், படித்துவிட்டு கிராமத்தில் சுட்டித்தனம் செய்துக்கொண்டிருக்கும் ஒரு இளமங்கையாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். இத்திரைப்படத்தில் வரும் பாடல் காட்சிகளில் பிரபாஸ் மற்றும் அனுஷ்காவின் நடிப்பு அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்வதாக இருந்தது. குறிப்பாக “ பண்டகதா ”, “ ஏதோதோ பாகுந்தி ”, “டார்லிங்கே” அகிய பாடல் காட்சிகள். இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீசிலும் மிகப்பெரிய வெற்றியைப்பெற்றது. 30 கோடி செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 90 கோடிகளை வசூலித்தது. இத்திரைப்படம் அனுஷ்காவின் திரை வாழ்வில் குறிப்பிடும்படியான ஒரு திரைப்படமாகவும் அமைந்தது.

மூன்றாவது திரைப்படம்,ஹரி இயக்கத்தில் முன்பே வெளியான சிங்கம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம். சிங்கம் திரைப்படம் போன்றே மசாலா திரைப்படம். அனுஷ்கா நன்றாக நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை. “ சிங்கம் டான்ஸ் ” மற்றும் “ வச்சுக்கவா ” ஆகிய இரண்டு பாடல் காட்சிகளில் மட்டும் சூர்யாவுடன் இணைந்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் பெரிய வெற்றியை கொடுத்தது. சுமார் 45 கோடியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 122 கோடிகளை வசூலித்தது.

நான்காவது, வர்ணஜால இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் சுமார் இரண்டு ஆண்டுகள் எடுக்கப்பட்ட, இரண்டாம் உலகம் திரைப்படம். அனுஷ்கா மூன்றாவது முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். முதலாவது பாத்திரம், சென்னைப்பட்டிணத்தில் ஒரு மருத்துவராகவும், இரண்டாவது பாத்திரம் இணை உலகத்தில் வர்ணா என்கிற பழங்குடி இனத்துப்பெண்ணாகவும் நடித்திருந்தார். இரண்டு கதாபாத்திரங்களுமே அனுஷ்காவிற்கு சவாலான பாத்திரங்களாக இருந்தது. இரண்டையும் சிறப்பாக செய்திருந்தார். இத் திரைப்படத்தில் வரும் “ ஒரு காதல் தீ ”, “ கனிமொழியே ”, “ கள்ளா விஷமுள்ளா ”, “ என் மன்னவனே ” ஆகிய நான்கு பாடல்களும், பாடல்களை காட்சிப்படுத்திய விதமும் அருமையாக இருந்தது. அனுஷ்கா, இத்திரைப்படத்திற்காக வால் பயிற்சியை எடுத்துக்கொண்டு, சண்டைக்காட்சிகளில் சிறப்பாக நடித்திருந்தார். மேலும், இத்திரைப்படத்தில் அனுஷ்காதான் ஹீரோ என்று தன்னுடன் நடித்த ஆர்யாவால் புகழப்பட்டார். இத்திரைப்படம் வர்த்தக ரீதியில் சராசரியாகத்தான் இருந்தது என்றாலும், அனுஷ்காவின் திரை வாழ்வில் மூன்றாவது மைல் கல்லாக அமைந்தது.

2014-ம் வருடம் அனுஷ்காவின் நடிப்பில் ஒரே ஒரு திரைப்படம் வெளியானது. நடிகர் ரஜினியுடன் நடித்தது லிங்கா திரைப்படம். வழக்கமான ரஜினி திரைப்படம். இந்த திரைப்படத்தில் இரண்டு கதாநாயகிகள். தனக்கு வழங்கப்பட்ட பாத்திரத்தை நன்றாக செய்திருந்தார். குறிப்பாக “ மோனோ கஸோலினா ” பாடல் காட்சி சிறப்பாக அமைந்தது.

2015-ம் வருடம் அனுஷ்காவின் திரை வாழ்வில் ஒரு சாதனை ஆண்டாக அமைந்தது. மொத்தம் நான்கு திரைப்படங்கள் வெளியானது. முதலாவது, கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படம். இந்த திரைப்படத்தில் அனுஷ்கா, முதன் முறையாக அஜீத்துடன் இணை சேர்ந்து நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் இரண்டு நாயகிகள். இரண்டு பேருக்கும் நடிப்பதற்கு சமமான வாய்புகள் வழங்கப்பட்டிருந்தது. தனக்கு வழங்கப்பட்ட தேன் மொழி கதாபாத்திரத்தில், ஒரு இயல்பான நடிப்பை, மிகையில்லாமல் சிறப்பாக செய்திருந்தார். திரைப்படம் பார்க்கும் போது, அவர் நம்முடன் வாழ்வதாகவே ஒரு உணர்வு ஏற்படுத்தியது. இத்திரைப்படத்தில் அனுஷ்காவின் கண்களும், முக பாவனைகளும், உடல் மொழியும் ஓராயிரம் கதைகள் பேசின. ஒரு மார்டன் பெண்ணாக “அம்மம் மரகதம்” பாடலிலும், ஒரு தோழியாக “இதயத்தில் ஏதோ ஒன்று” பாடலிலும், அனுஷ்காவின் நடிப்பு அசத்தலாக இருந்தது. இத்திரைப்படம், பாக்ஸ் ஆபீசிலும் வெற்றி பெற்றது. சுமார் 50 கோடி செலவில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் 100 கோடிக்கும் மேலாக வசூலித்தது. மேலும், இத்திரைப்படம் அனுஷ்காவின் திரை வாழ்வில் குறிப்பிடும்படியான ஒரு திரைப்படமாக அமைந்தது.

இரண்டாவதாக, சுமார் இரண்டு வருட கடின உழைப்பில் வெளியான வெற்றி இயக்குநர் ராஜ மெளலியின் பாகுபலி திரைப்படம். இந்திய திரைப்பட வரலாற்றில் ஓர் புதிய சகாப்தத்தையும், சாதனையையும் உண்டாக்கிய திரைப்படம். உலக அளவில் பாராட்டுதல்களைப்பெற்றது. இந்த திரைப்படத்தில் நடித்தவர்கள் அனைவரும் தமது பாத்திரங்களை சிறப்பாக செய்திருந்தார்கள். அனுஷ்காவும் தனக்கு வழங்கப்பட்ட அடிமை பாத்திரத்தை வெகு சிறப்பாக செய்திருந்தார். ஆனால், அனுஷ்காவின் ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்த ஒரு திரைப்படமாக இருந்தது. காரணம் திரைப்படம் முழுவதும் தங்களுக்கு அபிமானமான ஒருவர் அடிமையாக சித்தரிக்கப்பட்டதை ஏற்கமுடியவில்லை. மற்றபடி, இத்திரைப்படம் பாக்ஸ் ஆபீசில் புதிய சாதனை படைத்தது. 120 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் 600 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

மூன்றாவதாக வெளியான ருத்திரமாதேவி. கலைத்திரைப்படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து இயக்கும் குணசேகரின் வாழ்நாள் கனவுத்திரைப்படம். அனுஷ்காவின் மூன்று வருட கடின உழைப்பில் வெளியானது. இந்த திரைப்படத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை மாறாக, ருத்திரமாதேவியாகவே வாழ்ந்திருந்தார். இந்த திரைப்படத்தில் வரும், “பெளர்னமி பூவே”, “உன்னால், உன் முன்னால்”, “அந்தப்புரத்தில்” ஆகிய மூன்று மெலடி பாடல்களும், பாடல்களை காட்சிப்படுத்திய விதமும் ஒரு கலைக்காவியமாகவே இருந்தது.. இத்திரைப்படம் அனுஷ்காவின் திரை வாழ்வில் நான்காவது மைல் கல்லாக அமைந்தது. என்றாலும் பாக்ஸ் ஆபீசில் சாதனை நிகழ்த்தவில்லை. சுமார் 80 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம், முதல் நாள் மட்டும் 32 கோடிகளை வசூலித்து ஒரு புதிய சாதனை படைத்தது என்றாலும், பின்னர் படிப்படியாக வசூல் குறைந்தது. காரணம், ரசிகர்கள் பாகுபலி திரைப்படத்துடன் இந்த திரைப்படத்தை ஒப்பிட்டு பார்த்ததே. பாகுபலி திரைப்படத்திற்கு முன்பே இந்த திரைப்படம் வெளியாகியிருந்தால் வசூலிலும் பெரிய சாதனை படைத்திருக்கும். எனினும், இறுதியாக சுமார் 86 கோடிகளை இந்த திரைப்படம் வசூலித்தது..( உறுதிப்படுத்தப்படாத தகவலின் படி 110 கோடி வசூல் )சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு

நான்காவதாக, தமிழில்- இஞ்சி இடுப்பழகி என்றும், தெலுங்கில் – “சைஸ் ஸீரோ” என்றும் வெளியான திரைப்படம்.. இந்திய திரைப்பட வரலாற்றில், ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காகவே சுமார் 18 கிலே உடல் எடையைக்கூட்டி நடித்த நடிகை அனுஷ்கா ஒருவர்தான். வேறு யாரும் இதுவரை செய்ததில்லை. இனியும் செய்யப்போவதில்லை. ஒருவர் நிஜ வாழ்வில் எத்தனை உணர்ச்சிகளை வெளிப்படுத்துவாரோ அத்தனை உணர்ச்சிகளையும் அனுஷ்கா இந்த ஒரு திரைப்படத்தில் வெளிக்காட்டி நடித்திருந்தார். வேறு ஒருவரால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு சாதனையை, இந்த திரைப்படத்தின் மூலம் அனுஷ்கா செய்துள்ளார். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபீசிலும் ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்துள்ளது. சுமார் 10 கொடி செலவில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படம் 45 கோடிகளை வசூலித்துள்ளது. இந்த திரைப்படம் அனுஷ்காவின் திரை வாழ்வில் ஐந்தாவது மைல் கல்லாக அமைந்தது.

2016-ம் ஆண்டு இறுதியில், இவர் நடித்த இரண்டு படங்கள் திரையிடுவதாக இருந்தது. எதிர்பாராத சில நிகழ்வுகளால், திரையிடுவது தள்ளிப்போடப்பட்டது.

 2017-ம் ஆண்டு இவர் நடித்த திரைப்படம், இந்திய திரைப்பட வரலாற்றில் ஓர் புதிய சாதனையை நிகழ்த்தும் வண்ணம் அமைந்தது. இந்த ஆண்டில், இவரது நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகிது.

ஆண்டு துவக்கத்தில், அடுத்தடுத்து வெளியான இரண்டு திரைப்படங்கள். முதலாவது, ஹரி இயக்கத்தில் தொடர் வெற்றிகளை கொடுத்த சிங்கம் வரிசை திரைப்படங்களில் மூன்றாவது படம் – சிங்கம் 3. முந்தைய இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாக வரும் கதையமைப்பு. விருவிருப்பான திரைப்படம். கதாநாயகன் சூரியாவிற்கு, மனைவி பாத்திரம். திரைப்படம் முழுவதும், அவ்வப்போது வந்து செல்லும் பாத்திரம். ஆங்காங்கே பாசம், நேசம், பரிவு, காதல், சோகம் போன்ற உணர்வுகளை நன்கு வெளிப்படுத்தினார். குறிப்பாக, முதல் முறையாக எனும் பாடல் காட்சியில், தன்னுடைய ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் வெளிவந்தது. பாக்ஸ் ஆபீஸிலும், இத்திரைப்படம் ஒரு வெற்றித் திரைப்படமாக அமைந்தது. சுமார் 80 கோடி செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம், சுமார் 130 கோடிகள் வரை வசூலித்தது.

 இரண்டாவது, ஓம் நமோ வெங்கடேசாய எனும் தெலுங்கு மொழித் திரைப்படம். பின்னர் தமிழ் மொழியில், அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகா எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டது. இந்த திரைப்படத்தை, பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய ராகவேந்திர ராவ் இயக்கியிருந்தார். வெங்கடேச பெருமாளை, மானசீகமாக விரும்பும் முதிர் கன்னி வேடத்தில் நடித்திருந்தார். பாத்திர அமைப்பில் இவர் ஒரு பெண் துறவியாகவும், பாடல் காட்சிகளில் இவரது உடை அலங்காரம் மற்றும் சிகை அலங்காரம் ஆகியவை, இவரை ஒரு பெண் தெய்வமாகவும் தோன்றச்செய்தது. இத்திரைப்படமும், இவரது திரை வாழ்கையில் ஒரு குறிப்பிடும்படியான இடத்தை கொடுத்துள்ளது.

மூன்றாவது, பாகுபலி -2 திரைப்படம். பாகுபலி முதல் பாகத்தில், வயதான ஒரு அடிமைப்பெண் வேடத்தில் நடித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர், இந்த திரைப்படத்தில், மூன்று கால கட்டங்களை தன்னுடைய நடிப்பால் மட்டுமல்ல, உடல் அளவிலும் முழுமையான மாற்றங்களை வெளிப்படுத்தி இருந்தார். முதலாவது, இளவரசியாக ஒரு தோற்றம். நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்த தோற்றம்.அதில் துடிப்பான ஒரு இளவரசியாக சண்டைக்காட்சிகளிலும், அழகு மங்கையாக பாடல் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டி இருந்தார். குறிப்பாக, கண்ணா நீ தூங்கடா... பாடல் காட்சியில், தனது காதலை மிக அழகாக ஒரு நாட்டிய மங்கையின் அபிநய நளினங்களுடன் வெளிப்படுத்தினார். இரண்டாவது, கர்பிணிப்பெண்ணாக ஒரு தோற்றம். இந்த தோற்றத்தில் ஓர் கர்பிணிப்பெண்ணுக்கு ஏற்படும் முக மற்றும் உடல் மாற்றங்களை அப்படியே தன்னுடைய முகத்திலும், உடலிலும் தத்ரூபமாக வெளிப்படுத்தி இருந்தார். மூன்றாவது, வயதான தாய் வேடம் . இதில் அடிமையாக, தான் அனுபவிக்கும் சித்திரவதைகளையும், தன்னுடைய கோபத்தையும், தாயாக மகன் மீது காட்டும் பாசத்தையும் நன்கு வேறுபடுத்தி, தன் திறமையை நிரூபித்திருக்கிறார். இந்த திரைப்படத்தில் இவர் நடித்தார் என்பதை விட, திரைப்பாத்திரமாகவே வாழ்ந்தார் என்பதே சரி. இந்த திரைப்படம், இந்திய அளவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபீசிலும், சுமார் 250 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு, சுமார் 1700 கோடிகள் வரை வசூலித்தது. இந்திய திரைப்படம் ஒன்று, இத்தனை கோடிகளை வசூலிப்பது இதுவே முதன் முறையாகும். இந்த திரைப்படமும், இவரது திரை வாழ்க்கையில் மேலும் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

விளம்பர துவராக

[தொகு]

ஹெட் & ஷோல்டர்ஸ், கோல்கேட் ஆக்டிவ் சால்ட் , இன்டெக்ஸ் ஸ்மார்ட்போன், சென்னை சில்க்ஸ், பாண்டிச்சேரி ஸ்ரீ லக்ஷ்மி ஜூவல்லர்ஸ் மற்றும் சில்வர்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு அனுஷ்கா விளம்பர தூதுவராகவும் செயல்பட்டிருக்கிறார்.

சமூகநல செயல்பாடுகள்

[தொகு]

TeachAIDS-எனப்படும் அமெரிக்க தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் ஏய்ட்ஸ் விழிப்புணர்வு பிரச்சாரப் பணிகளிலும் தனது பங்களிப்பை செய்து வருகிறார்.

2014-ம் வருடம், ஆந்திராவில் வீசிய “ஹூட் ஹூட்” புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரண நிதி திரட்டுவதற்காக தன்னுடைய திரைப்படக்குழுவினருடன் பல நிகழ்ச்சிகள் நடத்தி, கணிசமான நிதியை அரசிடம் ஒப்படைத்தார்கள்.

மேலும், 2015-ம் வருடத்தின் துவக்கத்தில் Meelo Evaru Koteeswaradu – Season -2, Episode-36, 37 –ல் கலந்துக்கொண்ட, அதில் தான் வெற்றி பெற்ற பத்து லட்ச ரூபாய் பரிசுத்தொகையை, Teach for India எனும் தொண்டு நிறுவனத்திற்கு வழங்கினார்.

சமூக ஊடகங்களில்

[தொகு]

அனுஷ்காவின் பெயரில், அவரது ரசிகரும் நலவிரும்பியுமான திரு.ஹேம்சாந் என்பவரால், பேஸ்புக் பக்கம் ஒன்று துவங்கப்பட்டு சுமார் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஹேம்சந்த்தாலேயே நிர்வகிக்கப்பட்டு வந்தது. இந்த முகநூல் பக்கத்தை அனுஷ்கா 2013-ம் ஆண்டு நவம்பார் மாதம் 7-ம் தேதி தனது பிறந்த நாள் அன்று, சிறிய பெயர் மாற்றத்துடன் தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டார். அப்போது வரை சுமார் பத்து லட்சம் பேர் அந்த பக்கத்தில் இணைந்திருந்தனர்.

அனுஷ்கா தன் முகநூல் பக்கத்தை தானே எடுத்துக்கொண்டு நிர்வகிக்க ஆரம்பித்தவுடன், லட்சக்கணக்கில் அவரது ஆதரவாளர்கள், தங்களை இணைத்துக்கொண்டனர். தற்போது வரை, அனுஷ்காவின் முகநூல் பக்கத்தில் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை, ஒரு கோடியே நாற்பத்தாறு லட்சத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. தென்னிந்திய திரைப்படத்துறையில் வேறு யாருக்கும் இத்தனை எண்ணிக்கையில் முகநூல் ஆதராவாளர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்களை பகிர்ந்துக்கொள்ளும் மற்றொரு இணையதளமான இன்ஸ்டாகிராமில் 2015-ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் அனுஷ்கா ஒரு கணக்கை துவங்கினார். அதில் தற்போது வரையில் இருபது லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளனர்.

தனிப்பட்ட வாழ்கை

[தொகு]

அனுஷ்கா எல்லோருடனும் சகஜமாக பழகும் இயல்பை கொண்டுள்ளார். இவரிடம் பேசிப்பழகியவர்கள், இவரது அன்பில் கட்டுண்டு இருக்க வேண்டியதுதான். அவருடன் ருத்திரமாதேவியில் இணையாகவும், பாகுபலி திரைப்படத்தில் எதிர் நாயகனாகவும் நடித்த ராணா, பாகுபலி திரைப்படத்தின் வெளியீட்டு விழாவின் போது பின் வருமாறு கூறினார். “அனுஷ்காவிடம் ஒரு சிறப்பு குணம் ஒன்று உள்ளது. அது, தனது அன்பால் யாவரையும் கொலை செய்வதுதான். அவர் யாரிடம் பழகினாலும், தனது நற்குணங்களால் அவரை கொன்றுவிடுவார்”.

துவக்கத்தில் அனுஷ்காவின் குணநலன்களை அறியாத செய்தி ஊடகங்கள், தங்களுடைய தவறான அனுமானத்தினால், அவருக்கு ஐந்து முறை திருமணம் நடத்தி வைத்தார்கள். பின்னர், அனுஷ்காவின் குணங்களை அறிந்ததும் தவறாக செய்தி வெளியிடுவதை நிறுத்திக்கொண்டார்கள்.

அனுஷ்கா, தனது திருமணம் பற்றி செய்தியாளர்களிடம் கூறும்போது.. “ திருமணம் என்பது, மிகவும் அற்புதமான ஒன்று, நான் நிச்சயம் திருமணம் செய்துக்கொள்ளுவேன். என்னுடைய விருப்பப்டிதான் கணவரை தேர்ந்தெடுப்பேன். அது எப்போது நிகழும் என்பது எனக்கு தெரியவில்லை. அதுவரையில் நல்ல நல்ல திரைக்கதைகளாக தேர்வு செய்து, அதில் நடிப்பதில் தான் எனது கவனம் முழுவதும் உள்ளது”- என்று தெரிவித்துள்ளார். மேலும், பிரென்ச்சு மொழி திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்கின்ற தனது விருப்பத்தையும் தெரிவித்துள்ளார். காரணம் பிரென்ச்சு மொழி திரைப்படங்கள் மிகுந்த கதை அம்சமுள்ளது என்பதால்.

இவர் நடித்துள்ள திரைப்படங்கள்

[தொகு]
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்புகள்
2005 சூப்பர்(Super) சாஷா தெலுங்கு
2005 மகாநந்தி நந்தினி தெலுங்கு
2006 விக்ரமர்குடு(Vikramarkudu) நீரஜா கோஸ்வாமி தெலுங்கு
2006 அஸ்திரம்(Astram) அனுஷா தெலுங்கு
2006 ரெண்டு ஜோதி தமிழ்
2007 லக்க்ஷ்யம்(Lakshyam) இந்து தெலுங்கு
2007 டான்(Don) பிரியா தெலுங்கு
2008 ஒக்க மகாடு(Okka Magaadu) பவானி தெலுங்கு
2008 ஸ்வாகதம்(Swagatham) சைலு தெலுங்கு
2008 பாலடூர்(Baladoor) பாணுமதி தெலுங்கு
2008 சௌர்யம்(Souryam) சுவேதா தெலுங்கு
2008 சிண்டகயல ரவி(Chintakayala Ravi) சுனிதா தெலுங்கு
2008 கிங்(King) தெலுங்கு கவுரவ தோற்றம்
2009 அருந்ததி(Arundhati) அருந்ததி தமிழ், தெலுங்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு
2009 பில்லா மாயா தெலுங்கு
2009 வேட்டைக்காரன் (2009 திரைப்படம்) சுசீலா தமிழ் விஜய் விருதுகள் (விருப்பமான நாயகி)
2010 சிங்கம் காவ்யா மகாலிங்கம் தமிழ் பரிந்துரைக்கப்பட்டார்—விஜய் விருதுகள் (விருப்பமான நாயகி)
2010 வேடம்(Vedam) சரோஜா தெலுங்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு
2010 பஞ்சக்ஷரி(Panchakshari) பஞ்சக்ஷரி,
ஹணி
தெலுங்கு
2010 தகிட தகிட(Thakita Thakita) தெலுங்கு கவுரவ தோற்றம்
2010 காலேஜா(Khaleja) சுப்பலட்சுமி தெலுங்கு
2010 நாகவள்ளி(Nagavalli) சந்திரமுகி தெலுங்கு பரிந்துரைக்கப்பட்டார்—சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு
2010 ரகட(Ragada) சிரிஷா தெலுங்கு
2011 வானம் சரோஜா தமிழ்
2011 தெய்வத்திருமகள் அனுராதா இரகுநாதன் தமிழ் விஜய் விருதுகள் (விருப்பமான நாயகி)
பரிந்துரைக்கப்பட்டார்—விஜய் விருதுகள் (சிறந்த நடிகை) - தமிழ் (மாற்றுப் பயன்பாடுகள்)
பரிந்துரைக்கப்பட்டார்-SIIMA விருது சிறந்த நடிகைக்கான
ஜெயா விருதுகள்-பிடித்த கதாநாயகி
2012 சகுனி அனுஷ்கா[4] தமிழ்

கவுரவ தோற்றம்

2012 தமருகம்(Damarukam) மகேசுவரி தெலுங்கு
2012 தாண்டவம் மீனாட்சி தமிழ்
2013 அலெக்ஸ் பாண்டியன் திவ்யா தமிழ்
2013 மிர்ச்சி(Mirchi) வெண்ணிலா தெலுங்கு
2013 இரண்டாம் உலகம் ரம்யா / வர்ணா தமிழ்
2013 சிங்கம் 2 காவ்யா துரைசிங்கம் தமிழ்
2014 லிங்கா லட்சுமி தமிழ்
2015 என்னை அறிந்தால் தேன்மொழி தமிழ்
2015 ருத்ரமாதேவி ருத்ரம தேவி தமிழ்,
தெலுங்கு
சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது - தெலுங்கு
2015 பாகுபலி தேவசேனா தமிழ்,
தெலுங்கு
2015 இஞ்சி இடுப்பழகி / சைஸ் சீரோ ஸ்வீட்டி தமிழ், தெலுங்கு
2016 சோக்காதீ சின்னிநாயனா கிருஷ்ணகுமாரி தெலுங்கு குணச்சித்திரப் பாத்திரம்
2016 தோழா / ஊப்பிரி நந்தினி தமிழ் குணச்சித்திரப் பாத்திரம்
2016 சி3 காவியா தமிழ்
2017 ஓம் நமோ வெங்கடேசாய கிருஷ்ணம்மா தெலுங்கு
2017 பாகுபலி 2 தேவசேனை தமிழ்,
தெலுங்கு
ஏப்ரல் 28 வெளியீடு
2017 பாக்மதி - தெலுங்கு

தமிழ்

ஆகஸ்ட்
2018 சங்கமித்ரா சங்கமித்ரா தமிழ்

தெலுங்கு

-

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Sweety "is a boring person, that's why I become Anushka for my fans: Anushka Shetty". indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 30 June 2017.
  2. "'Baahubali' "actress Anushka Shetty celebrates her 34th birthday!". dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 30 June 2017.
  3. "Anushka Shetty Biography, Age, Career and Profile". Ganga News English. 18 June 2023. https://english.ganganews.com/people/anushka-shetty/. 
  4. http://www.indiaglitz.com/channels/tamil/article/82817.html

வெளியிணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Anushka Shetty
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுசுக்கா_செட்டி&oldid=4150911" இலிருந்து மீள்விக்கப்பட்டது