உள்ளடக்கத்துக்குச் செல்

ஏறுதழுவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏறு தழுவல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஏறு தழுவல்
ஏறுதழுவல் விளையாட்டு
பிற பெயர்கள்சல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு
முதலில் விளையாடியதுபொ.ஊ.மு. 2000
விளையாட்டைப் பற்றிய குறிப்புகள்
இருபாலரும்இல்லை
பகுப்பு/வகைபாரம்பரிய விளையாட்டு
விளையாடுமிடம்திறந்த மைதானம்
தற்போதைய நிலை
தாயகம்தமிழ்நாடு, இந்தியா
ஒலிம்பிக்இல்லை
இணை ஒலிம்பிக்இல்லை
காளை அடக்குதலில் ஒரு பகுதி
அலங்காநல்லூர் ஏறு தழுவல்

ஏறு தழுவல், மஞ்சு விரட்டு, சல்லிக்கட்டு, அல்லது ஜல்லிக்கட்டு (Jallikattu) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு. சிவகங்கை மாவட்டம் மஞ்சுவிரட்டு "சொர்க்க பூமியாக" கருதப்படுகிறது. தமிழ் நாட்டில் அதிகமாக மஞ்சுவிரட்டு நடைபெறு‌ம் மாவட்டமாக சிவகங்கை உள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு, மதுரை மாவட்டம் அவனியாபுரம் ,அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு எனும் ஊர்களிலும், திருச்சி பெரிய சூரியூர், நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தம், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி , கூலமேடு, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை, வேலூர் மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் புதூர் மற்றும் தேனீமலை, தேனி மாவட்டம் போன்ற ஊர்களில், ஆண்டுதோறும் தை மாதத்தில் பொங்கல் திருநாளையொட்டி நடத்தப் பெறுகின்றன.

இப்போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்கள், போட்டியில் ஆழ்த்தப்படும் விலங்குகள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் இப்போட்டியுடன் தொடர்புடைய காயச் சம்பவங்களும் இறப்புச் சம்பவங்களும் நடந்துள்ளன. இதன் விளைவாக விலங்குரிமை அமைப்புகள் இப்போட்டிக்குத் தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தில் முறையிட, நீதிமன்றம் பல முறை இப்போட்டிக்குத் தடை விதித்தது. இருப்பினும், இந்தத் தடைக்கு எதிர்த்து மக்கள் போராடியதன் விளைவாக இப்போட்டி தொடர ஒரு புதிய சட்டம் 2017-இல் இயற்றப்பட்டது.[1]

பெயர்க்காரணம்

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த 'சல்லிக் காசு' என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் 'சல்லிக்கட்டு' என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து 'ஜல்லிக்கட்டு' ஆனது என்றும் கூறப்படுகிறது.

வகைகள்

சல்லிக்கட்டு தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக நடைபெறுகிறது.

வேலி ஜல்லிக்கட்டு

வேலி மஞ்சுவிரட்டு எனப்படும் விளையாட்டில் ஒரு திடலில் காளைகள் அவிழ்த்துவிடப்படுகின்றன. அவை எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் ஓடுவதும் அவற்றை இளைஞர்கள் விரட்டுவதும் நடைபெறுகிறது.

வாடிவாசல் ஜல்லிக்கட்டு

மதுரை அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமில் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள்.

வடம் ஜல்லிக்கட்டு

வட தமிழகத்தில் வடம் மஞ்சுவிரட்டு என்ற பெயரில், 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளையை ஆண்கள் இழுத்துப் பிடிக்க, ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்கிறார்கள்.

மஞ்சு விரட்டு

மஞ்சு விரட்டு என்பது தமிழகத்தில், குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கொண்டாடப்படும் விளையாட்டு. "மஞ்சி" என்பது தாளை வகை கற்றாழை நார் கொண்டு திரித்து தயாரிக்கப்படும் ஒரு வகை கயிறு ஆகும். "மஞ்சி கயிற்றால்" மாடுகளின் கொம்புகளில் கட்டப்படும் தங்க நாணயங்கள், பணமுடிப்பு, புத்தாடைகள், சலங்கை மணிகள் ஆகியவற்றை எடுப்பதற்காக வீரர்கள் மாடுகளை விரட்டி சென்று பிடிக்கும் விளையாட்டு மஞ்சி விரட்டு விளையாட்டு ஆகும். பிற்காலத்தில் "மஞ்சி" என்ற சொல் மருவி "மஞ்சு விரட்டு" ஆனது.

மஞ்சு விரட்டு விளையாட்டு, பொதுவாக அறுவடை காலம் முடியும் போது நீர் வற்றிய கண்மாய் உட்புறத்தில் "மஞ்சு விரட்டு தொழு" அமைக்கப்பட்டு அந்தத் தொழுவில் இருந்து காளைகள் கண்மாய்ப் பகுதிக்குள் திறந்து விடப்படும். ஓடும் காளைகளை வீரர்கள் விரட்டிச்சென்று மஞ்சி கயிற்றில் கட்டியுள்ள பரிசுகளை எடுப்பர்.

வரலாறு

ஏறுதழுவலை சித்தரிக்கும் ஒரு கல்வெட்டு

பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன.பண்டைய தமிழ்நாட்டின் 'முல்லை' புவியியல் பகுதியில் வாழ்ந்த ஆயர் பழங்குடி மக்களிடையே இது பொதுவானது.[2][3] ஏறு தழுவுதல் (மஞ்சு விரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது. கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் ‘கொல்லேறு தழுவுதல்’ என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புது தில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை ஒன்றில் ஒரு காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பொ.ஊ.மு. 2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பாண்டியர் ஆட்சியில் ஆயர் குல மரபாக மட்டும் இருந்த ஏறுதழுவல் நாயக்கர் ஆட்சியில் அவர்களும் ஏறுதழுவல் நடத்தினர் மேலும் பல திறந்தவரும் பங்கேற்க தொடங்கினர்.[4]மதுரை, திருநெல்வேலி பகுதிகளில்‌ வசிக்கின்ற கள்ளர்‌ சமூகத்திலுள்ள கன்னிப்பெண்கள்‌ வலிமைமிக்க காளையின்‌ கொம்பில்‌ கட்டப்பட்ட துணியை எவ்விதச்‌ சேதமும்‌ இல்லாமல்‌ அவிழ்த்து எடுத்த ஆடவனையே கணவனாக ஏற்றுள்ளனர்‌. அயர்களிடம்‌ மண உறவுடன்‌ தொடர்புடையதாக இருந்த ஏறுதழுவல்‌; பிற்காலத்தில்‌ கள்ளர்‌ வகுப்பாரிடம்‌ பரவியிருந்தது அறிந்துகொள்ள முடிகின்றது.[5][6]

மாடுபிடிக்‌ கதை பாடல்கள்

முல்லைக்கலி, சிலப்பதிகாரம் இவற்றுக்குப்‌ பிறகு மாடு பிடித்தல்‌ பற்றிய செய்திகள்‌ பிற இலக்கியங்களில்‌ காணப்‌ படவில்லை, பிற்காலத்தில்‌ வாய்மொழி இலக்கியமான கதைப்‌ பாடல்களில்‌ காணப்படுகின்றன. கட்டபொம்மன்‌ கதைப்‌ பாடலில்‌ வெள்ளையத்தேவன்‌ காளையை அடக்கி வெள்ளையம்மானை மணந்த செய்தி காணப்படுகின்றது. மதுரை மாவட்டத்தில் மாடுபிடித்தலை மையமாகக்‌ கொண்டு அழகத்தேவன்‌ கதை, மன்னன்‌ சின்னாண்டி கதை. கருப்பத்தேவன்‌ கதை என்ற மூன்று கதைப்பாடல்கள்‌ அமைந்துள்ளன. இம்மூன்று கதைகளிலும் மாடுபிடிக்கும்‌ வீரர்களாக்‌ காட்டப்‌ படுபவர்கள்‌ கள்ளர்‌ இனத்தைச்‌ சேர்ந்தவர்கள் ஆவர்.[7]

கவனம்பெற்ற போட்டிகள்

ஆண்டுதோறும் நடைபெறும் கவனம் பெற்ற சில ஜல்லிக்கட்டுப் போட்டிகள்

போட்டிகள் மாவட்டம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மதுரை
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மதுரை
பாலமேடு ஜல்லிக்கட்டு மதுரை
சூரியூர் ஜல்லிக்கட்டு திருச்சி
ஆவாரங்காடு ஜல்லிக்கட்டு திருச்சி
கே.ராயவரம் மஞ்சுவிரட்டு புதுக்கோட்டை
வன்னியன்விடுதி ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை
அரளிப்பாறை மஞ்சுவிரட்டு சிவகங்கை சீமை
சிராவயல் மஞ்சுவிரட்டு சிவகங்கை சீமை
ஆர்.டி.மலை ஜல்லிக்கட்டு கரூர் மாவட்டம்
அலங்காநத்தம் ஜல்லிக்கட்டு நாமக்கல்

சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல்

சங்க இலக்கியமான கலித்தொகை

கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.

அஞ்சார் கொலை ஏறு கொள்பவர் அல்லாத நெஞ்சிலார் தோய்ப்பதற்கு அரிய - உயிர்துறந்து நைவாரா ஆய மகள் தோள்.[8]

என்றுரைக்கிறது. அதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் உரை: "கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய) கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவனை மறு பிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்." என்பதாகும். பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தைக் கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.

பண்டைக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வேறு தழுவுதல் நடைபெற்று வந்தது. ஆயர் குல இளைஞர்கள் ஊரார் முன்னிலையில் காளையை அடக்குவர். வெற்றி பெற்ற இளைஞர்களில் மனம் கவர்ந்தவனுக்கு மாலை சூட்டுவாள் ஆயர் குலப் பெண்.[9]

ஆயச்சியர் குரவைக் கூத்தும் ஏறு தழுவுதலும்

ஏறு தழுவலுக்கும் குரவைக் கூத்திற்கும் தொடர்பிருந்தது.[10] குரவைக் கூத்து ஏறு தழுவலுக்குரிய நாளுக்கு முதல் நாள் மாலையிலாவது, ஏறு தழுவும் நாளின் மாலையிலாவது ஊர் பொதுமன்றே நிகழும். முதல் நாளாயின் தம் காதலரை ஏறு தழுவுவதற்குத் தூண்டும் பாட்டுகளையும், ஏறுதழுவிய நாளாயின் தம் காதலர் வெற்றியைக் கொண்டாடும் பாட்டுகளையும் ஆயர் குல மகளிர் பாடுவர். ஏறுதழுவுதல் மண வினையுடன் தொடர்புடையதாய் அமைந்திருந்தது. காளையை அடக்கிய மணமாகா இளைஞர் பெண்ணினைப் பரிசாகப் பெறுவதுண்டு. இன்று ஏறு தழுவுதல் என்ற பெயர் வழக்கில் இல்லை. இருப்பினும் ஏறுதழுவலின் எச்சமாக இன்றைய சல்லிக்கட்டு விளங்குகிறது.

ஏறுதழுவுதலும் ஜல்லிக்கட்டும்

ஏறு தழுவுவதற்கும் சல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம்பெற்றது. தற்போது சல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றிப் பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். இருப்பினும் சல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் பெரும்பான்மையாக உள்ளது. சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் சல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சிக் காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.

மற்ற நாடுகளில் காளைப்போர்

எசுப்பானியா, போர்ச்சுகல், மெக்சிகோ நாடுகளில் காளைப் போர் முக்கியமான தேசியப் பொழுதுபோக்கு விளையாட்டாக இன்றும் நடைபெறுகிறது. காளைகளை அரங்கத்திற்குள் விரட்டி, ஆத்திரமூட்டிச் சண்டையிட்டுக் கொல்வதே இக்காளைப் போரின் நோக்கம். இம்மேனாட்டுக் காளைப் போரும் சல்லிக்கட்டும் ஒன்று போலத் தோன்றினாலும், இரண்டும் முற்றிலும் வேறுபட்டவை ஆகும்.

தென்மாவட்டங்களின் பங்கேற்பு

ஏறுதழுவும் விழா

மதுரை மாவட்டத்தில் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், பேரையூர் போன்ற இடங்களிலும், சிவகங்கை மாவட்டம் சிராவயல், சிங்கம்புணரி, புதூர், அரளிப்பாறை போன்ற இடங்களிலும், புதுக்கோட்டைமாவட்டம் நார்த்தாமலை போன்ற இடங்களிலும் சல்லிக்கட்டு நடைபெறுகிறது. மேலும், திருச்சி, தேனி போன்ற தென் மாவட்டங்களிலும் இவ்விளையாட்டு நிகழ்கிறது.

உலக அளவில் சிறப்பு வாய்ந்தது அலங்காநல்லூர் சல்லிக்கட்டு ஆகும். ஆண்டுதோறும் இவ்விழாவைக் காண வெளிநாட்டவர் உட்பட பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் அலங்காநல்லூரில் குவிவது வழக்கம்.

தற்காலச் சிக்கல்கள்

ஏறுதழுவல் விலங்குகளைத் துன்புறுத்துவதாகக் கருதுவோரும் தேவையற்ற உயிரிழப்பும் காயங்களும் ஏற்படுவதாகக் கருதுவோரும் அண்மைய ஆண்டுகளில் சல்லிக்கட்டைத் தடை செய்யக் கோரி இந்திய நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வருகின்றனர். விலங்குகள் நல ஆர்வலர்கள், இந்திய விலங்கு நல வாரியம், பீட்டா (PETA), இந்திய நீலச் சிலுவைச் சங்கம் போன்ற அமைப்புகளும் இதில் அடக்கம். இந்திய விலங்கு வதைத் தடுப்புச் சட்டம், 1960 இனை சல்லிக்கட்டு நிகழ்வுகள் மீறுகின்றன என்பது இவர்களது குற்றச்சாட்டு. 2008 முதல் ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்காடி வருகின்றனர்.[11][12] ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு நிபந்தனைகளுடன் சல்லிக்கட்டு நடைபெற நீதிமன்றங்கள் அனுமதி அளித்து வருகின்றன.[13]

2011 ஆம் ஆண்டு நடந்த அலங்காநல்லூர் சல்லிக்கட்டில் கிட்டி வாசலில் இருந்து சீறி வரும் காளையை அடக்கிப் பிடிக்கும் வீரர்.

ஆதரிப்போர் கருத்து

சல்லிக்கட்டை ஆதரிப்போர் அது தமிழர்களின் பண்பாடாகக் கருதப்படுவதாகவும் அதை அழியவிடக் கூடாது என்றும் கூறுகின்றனர். மேலும், அவர்கள் கூறுவது: சல்லிக்கட்டுக் காளையை உழவுக்குப் பயன்படுத்துவது இல்லை. கன்றில் இருந்தே சிறப்பாக வளர்க்கப்பட்டுக் கோவில் மாடாக வழிபட்டு சல்லிக்கட்டுக்கு மட்டும் பயன்படுத்த வளர்க்கப்படுகிறது. ஒன்றிய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு யானைக்குக் கூட இல்லை. கேரளத்தில் யானையை வைத்துப் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.[14]

எதிர்ப்போர் கருத்து

சல்லிக்கட்டை எதிர்ப்போர் கூறும் முதன்மையான வாதம் விலங்கு வதை. உழவுக்குப் பயன்படுத்தாமல் பாராட்டி சீராட்டி வளர்ப்பது அந்தக் காளையை ஆண்டின் ஒரு நாளில் உடல், மன அழுத்தங்களுக்கு உட்படுத்த முடியும் என்ற உரிமையை வளர்ப்பவருக்குக் கொடுத்து விடாது என்பது சல்லிக்கட்டை எதிர்ப்பவர்களின் வாதம். கேரளாவில் இன்னொரு விலங்கை மனிதனின் களியாட்டங்களுக்கு பாவிப்பதையும் சில ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் இதைவிட கடுமையான நிகழ்வுகளையும் தடை செய்தால்தான் இதையும் தடைசெய்ய முடியும் என்ற சல்லிக்கட்டு ஆதரவாளர்களின் நிலைப்பாட்டையும் இவர்கள் மறுக்கின்றார்கள். ஒரு பண்பாட்டு நிகழ்ச்சி அடிப்படையிலேயே தவறாக இருப்பதால் அதை விட்டுக்கொடுத்து விலங்குகளின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார்கள். அது மட்டுமன்றி சல்லிக்கட்டு என்பது ஒட்டு மொத்த தமிழ் நாட்டின் பண்பாடு அல்லாது ஒரு சில மாவட்டங்களிலுள்ள சில மக்கட்பிரிவின் அடையாளம் என்ற வாதமும் இவர்களால் முன்வைக்கப்படுகிறது.

2008-11

சல்லிக்கட்டில் காளைகள் கொடுமை செய்யப்படுவதாகப் புகார் சொல்லி, விலங்குகள் நல வாரியம் மூலம் 2008 சனவரியில் பொங்கல் விழாவுக்குச் சில நாட்களுக்கு முன் மேனகா காந்தி வழக்கு தொடர்ந்தார். இந்திய உச்ச நீதிமன்றம் சல்லிக்கட்டு நடத்துவதற்கு இடைக்காலத் தடையுத்தரவு விதித்தது. ஒருசில கட்டுப்பாடுகளின் அடிப்படையில் சல்லிக்கட்டு நடத்த ஒப்ப வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மறுமுறையீடு செய்தது. பின்னர் இச்சிக்கலை எதிர்கொள்ள ”தமிழ்நாடு சல்லிக்கட்டு ஒழுங்குமுறை சட்டம், 2009” இனை இயற்றியது. இச்சட்டம் சல்லிக்கட்டு நடத்துபவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளைப் பட்டியலிட்டது. தமிழக அரசு, தடையை எதிர்த்து இந்திய உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து சல்லிக்கட்டு நடைபெற மீண்டும் அனுமதி பெற்றது. இச்சட்டம் சரிவர செயல்படுத்தப்படுவதில்லை என விலங்கு நல ஆர்வலர்கள் தொடர்ந்து நீதிமன்றங்களை அணுகினர்.[15][16][17]

உச்ச நீதிமன்றத்தில் இந்திய விலங்கு நல வாரியம் சல்லிக்கட்டு தொடர்பாக முன்வைத்த சில ஆலோசனைகள்:

  • ஒரு மாவட்டத்தில் ஓராண்டில் மூன்று சல்லிக்கட்டுகளுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது.
  • குறைந்த அளவாக ரூ.20 இலட்சத்தை வைப்புநிதியாக சல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட ஆட்சியரிடம் செலுத்த வேண்டும். போட்டியின்போது காயமடைபவர்களின் நலனுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட வேண்டும்.
  • தகுந்த மருத்துவத் துணைக்கருவிகள், மருந்துகளுடன் கால்நடை மருத்துவர் ஒருவரும் போட்டியின்போது பணியில் இருக்க வேண்டும்.
  • ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஐந்து பேருக்கு மேல் காளையை அடக்க அனுமதிக்கக் கூடாது.
  • ஏற்கனவே உள்ள சல்லிக்கட்டு முறைப்படுத்துதல் சட்டத்தை மீறுபவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், ரூ. ஒரு இலட்சம் தண்டமும் விதிக்கும் வகையில் சட்டத்தின் ஏழாவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது போன்ற பல நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 2011 பொங்கல் திருவிழாவை ஒட்டி சல்லிக்கட்டை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதித்தது. 2011 இல் சல்லிக்கட்டு நிகழ்வுகளால் ஏற்பட்ட இறப்புகளும் காயமடைந்தோர் எண்ணிக்கையும் முந்தைய ஆண்டுகளை விடக் குறைவாக இருந்தன.[18] பொங்கல் முடிந்த பின்னரும் 2011 இல் விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. மார்ச் 2011 இல் சல்லிக்கட்டு நடத்துவதற்கு கூடுதல் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கு ஆணையிட்டது.[19] சல்லிக்கட்டை எதிர்த்து 2011 இல் உச்சநீதிமன்றத்தில் மேலுமொரு மனு பெடா அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டது.[20] 2011, சூலை மாதம் மத்திய வனம் மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ் ஓர் உத்தரவு பிறப்பித்தார். சிங்கம், புலி, கரடி, குரங்கு போன்ற காட்டு விலங்குகளைக் கூண்டில் அடைத்தோ பொது இடங்களில் வைத்தோ வித்தை காட்டக் கூடாது என ஏற்கனவே உள்ள சட்டத்தில் "காளை" புதிதாகச் சேர்க்கப்பட்டது. இந்த உத்தரவு சல்லிக்கட்டுக்கு நேரடியாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகத் தடைவிதித்தது போல் ஆனது.

2012

ஒன்றிய அரசின் மேற்கூறிய கட்டுப்பாடு நடப்பில் இருந்தாலும், உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி 2012 இல் சல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி வழங்கியது. 2012 ஆம் ஆண்டு பொங்கலை ஒட்டி, உச்ச நீதிமன்றத்தின் 77 நிபந்தனைகளுக்கு உட்பட்டு சல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் நடந்தன. காளைகளைப் பதிவு செய்வதற்காகக் கால்நடை மருத்துவர்களிடம் உடல் தகுதிச் சான்று பெறப்பட்டது. மாடுபிடி வீரர்களுக்கு முதன்முறையாகப் பயிற்சி முகாம் மதுரையில் மாவட்ட ஆட்சியாளர் தலைமையில் சனவரி 7ஆம் நாள் நடந்தது. நாட்டுப்புறச் சல்லிக்கட்டு விழாக் குழுவினர் சீருடை தைப்பது, பரிசுப் பொருட்களைத் தயார் செய்வது, விழா அழைப்பிதழ் வழங்குவது, சல்லிக்கட்டுக் காளைகளுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.[21]

பொங்கல் திருநாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் சனவரி 16ஆம் நாள் பாலமேட்டிலும், 17ஆம் நாள் அலங்காநல்லூரிலும் சல்லிக்கட்டு விழா நடைபெற்றது. இதற்காகக் கால்நடைப் பராமரிப்புத் துறை, காவல் துறை, தீயணைப்புத் துறை, உள்ளாட்சி நிர்வாகம், வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினர் சல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாகத் தங்களுக்கு உச்ச நீதிமன்றம் விதித்த உத்தரவுப்படி பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர். இந்நிகழ்வுகளில் கடுமையான விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டிருந்தன. காளைகளுக்கு மருத்துவ சோதனை நடத்தப்பட்டது; கூர்மையான கொம்புகளைக் கொண்ட மாடுகள் போட்டியிலிருந்து விலக்கப்பட்டன.[22][23][24]

உச்ச நீதிமன்றம் இட்ட 77 கட்டளைகளுள் சில:

  • காளைகளும் மாடுபிடி வீரர்களும் முறைப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.
  • காளைகளுக்கும் வீரர்களுக்கும் மருத்துவரிடம் தகுதிச் சான்று பெறப்பட வேண்டும்.
  • காளைகளின் பிறப்புறுப்பில் மிளகாய்ப் பொடி தூவுதல், சேறு, சகதி பூசி வெறியூட்டுதல் கூடாது.
  • ஒரு காளையை ஒரே நேரத்தில் நான்கு பேருக்கு மேல் அடக்கக் கூடாது.
  • காளைகளை அடிப்பதோ வாலைப்பிடித்துத் திருகுவதோ வேறு விதமான கருவிகளைக் கொண்டு துன்புறுத்துவதோ கூடாது.
  • காளைகள் ஓடவும், வீரர்கள் அடக்கவும் போதிய இட வசதி களத்தில் இருக்க வேண்டும்.

2014

மே 7 , 2014 இல் சல்லிக்கட்டு நடத்த தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காளைகள் துன்புறுத்தப்படுவதால் சல்லிக்கட்டு நடத்தக் கூடாது என அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது. சல்லிக்கட்டுக்கு முழுமையாகத் தடை விதிக்கக் கோரி விலங்குகள் நல அமைப்பு சார்பில் தொடரப்பட்ட பொது நல வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே. எஸ். ராதாகிருஷ்ணன், பினாகி சந்திர கோஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, ஒன்றிய அரசு, சல்லிக்கட்டுப் பேரவை மற்றும் விலங்குகள் நல வாரியம் ஆகியோர் சார்பாக வாதங்கள் முன்வைக்கப்பட்டன. சல்லிக்கட்டுப் போட்டிகளைக் கண்காணிக்கவும் காளைகள் துன்புறுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும் விலங்குகள் நல வாரியத்தின் அதிகாரிகள் கொண்ட குழுவை நியமிக்கலாம் என ஒன்றிய அரசு சார்பில் விவாதம் நடந்தது. ஆனால், போட்டிகளின் போது கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படாததால், காளைகள் துன்புறுத்தப்படுவதாகச் சல்லிக்கட்டிற்குத் தடைவிதிக்க வேண்டும் என விலங்குகள் நல வாரியத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த நிலையில் காளைகள் துன்புறுத்தப்படுவதாலும், அதனைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்பதாலும் சல்லிக்கட்டு நடத்தத் தடை விதிக்கப்படுவதாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டது.[25][26] இதனை எதிர்த்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மக்கள் கருப்புக் கொடி ஏந்தி போராடினர். இதனையடுத்து தமிழக அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்தது . தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் யோகேசு கண்ணா மனு தாக்கல் செய்தார்.[27]

2016

ஏறுதழுவுதலுக்கு இருந்த தடையை 2011ஆம் ஆண்டின் சுற்றுச்சூழல் துறையின் அறிக்கையை மாற்றி இந்திய ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது.[28] இந்திய விலங்குகள் நல வாரியம் ஏறுதழுவுதலுக்கான தடையை நீக்கவில்லை என்றும் ஏறுதழுவலுக்கான அனுமதியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லுவதாக பெட்டா அமைப்பு கூறியது.[29] பெட்டா அமைப்பு சல்லிக்கட்டை நடத்தலாம் என்ற அரசு அனுமதியை எதிர்த்து திங்கள் கிழமை இந்திய உச்ச நீதிமன்றம் சென்று மீண்டும் உச்ச நீதிமன்றம் மூலம் செவ்வாய் 01-12-2016 அன்று தடைவாங்கியது.[30][31]

2017

சில விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளின் விளைவாக தமிழகத்தில் சல்லிக்கட்டு நடத்த தடை விதிக்கப்பட்டது அதனை எதிர்த்து, சல்லிக்கட்டிற்கு ஆதரவாக தமிழ்நாட்டிலும், தமிழ்நாட்டுக்கு வெளியேயும் 2017 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் போராட்டங்கள் நடந்தன. தமிழகம் முழுவதும் ஆங்காங்கு மக்கள் கூடி தங்களது ஆதரவினைத் தெரிவித்தனர். இந்தப் போராட்டங்கள் தைப் புரட்சி, மெரீனாப் புரட்சி, இளைஞர்கள் புரட்சி சிறப்புப் பெயர்களால் ஊடகங்களாலும், சில அரசியல் கட்சித் தலைவர்களாலும் குறிப்பிடப்பட்டன. இது ஒரு எழுச்சிப் போராட்டமாக இருந்தமையால், தை எழுச்சி, இளைஞர்கள் புரட்சி எனவும் அறியப்படுகிறது.

இந்த போராட்டத்தினை அடக்க போலிசார் நடவடிக்கை எடுத்தபொது ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து ஆராய நீதிபதி எஸ். ராஜேஸ்வரன் தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டது.

ஏறுதழுவல் விளையாட்டில் ஏற்படுகின்ற காயங்கள்

ஏறுதழுவல் விளையாட்டில் காளைகளும் வீரர்களும் இறக்கக் கூடும் அல்லது காயமடையக் கூடும். கடந்த காலத்தில் இறப்புகள் நிகழ்ந்திருக்கின்றன[32].

சிறு அளவிலோ பெரும் அளவிலோ காயங்கள் ஏற்படுவது வழமை. ஒவ்வொரு ஆண்டும் சல்லிக்கட்டின் போதும் அதைத் தொடர்ந்தும் காயமுற்ற 80 முதல் 100 பேர் மதுரை இராசாசி மருத்துவ மனையில் சிகிச்சை பெறுகிறார்கள். சிறு காயமுற்றோர் சல்லிக்கட்டு நடைபெறுகின்ற அவனியாபுரம், பாலமேடு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குப் போகிறார்கள்.

சல்லிக்கட்டு நிகழ்ச்சியின்போது மாடுபிடி வீரர்களுக்குப் பல விதங்களில் காயம் ஏற்படக்கூடும்.

  • தலை: காளையைப் பிடிக்கும் முயற்சியில் கீழே விழுவதால், அல்லது தூக்கி எறியப்படுவதால் தலையில் அடிபடுதல்; முகத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்படுதல்.
  • கழுத்து: காளையின் கொம்பு குத்துவதன் விளைவாக மூச்சுக்குழாயில் துளை ஏற்படுதல்.
  • தண்டுவடம்: கீழே விழுவதாலோ, காளையால் குத்தப்படுவதாலோ தண்டுவடம் சேதமடைதல்; முதுகின் கீழ்ப்புறத் தசை இறுக்கமுறுதல்.
  • நெஞ்சு: நெஞ்சில் அடிபடுவதால் நுரையீரல் சேதமடைதல்; விலாவெலும்பு முறிதல்; நுரையீரல் திரைப்பகுதியில் இரத்தம் கட்டுதல்.
  • அடிவயிறு: காளை முட்டுவதால் மாடுபிடிவீரரின் அடிவயிற்றில் பலத்த காயம் ஏற்படுவது கூடுதலாக நிகழ்கிறது (75 விழுக்காடு); குடல் துளைபட்டுச் சரிதல், கல்லீரல், மண்ணீரல், வயிற்றுப்பகுதி சேதமுறுதல்.
  • பிறப்புறுப்புப் பகுதி: ஆண் பிறப்புறுப்புப் பகுதியில் மாடுபிடி வீரர்களுக்கு சேதம் ஏற்படுவது வழக்கமாக நிகழ்கிறது. இதனால் சிலர் ஆண்மை இழப்பதும் உண்டு. மேலும் இடுப்பெலும்பு முறிவும் ஏற்படலாம்.
  • கால்கள்: தொடையெலும்பு மற்றும் காலெலும்பு முறிவோ கீறலோ ஏற்படக்கூடும்.

இவற்றையும் பார்க்க

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Jallikattu
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

உசாத்துணை

  1. Safi, Michael (2017-01-23). "Tamil Nadu passes order to lift bull-taming ban after angry protests" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/world/2017/jan/23/tamil-nadu-passes-order-lift-jallikattu-bull-taming-ban-india-protests. 
  2. "'ஜல்லிக்கட்டு' ஆன 'சல்லிக்கட்டு'... தொன்மையும்‌ வரலாறும்‌ - ஒரு பார்வை". www.puthiyathalaimurai.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
  3. "ஈராயிரம் ஆண்டுகளைக் கடந்து தமிழர் வாழ்வில் அங்கமாக திகழும் ஜல்லிக்கட்டு - வரலாறு என்ன?". www.tamil.news18.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-01-17.
  4. "சிந்துவெளி நாகரிகத்தில் ஏறுதழுவலுக்கான சான்று". Archived from the original on 2011-11-03. பார்க்கப்பட்ட நாள் 2012-01-18.
  5. சல்லிக்கட்டு - மதுரை மாவட்டம். 2001. pp. 25.
  6. ஆய்வுக்கோவை தொகுதி - 3. 1986. pp. 119.
  7. ஆய்வுக்கோவை தொகுதி - 3. 1986. pp. 115.
  8. கலித்தொகை, முல்லைக் கலி, பாடல் 103, வரிகள் 63-64
  9. மலைபடுகடாம் 330-335, முதல் ஏழு முல்லைக்கலிப் பாடல்களில் ஆறாம் பாடலைத் தவிர மற்ற பாடல்கள்
  10. சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை: 17-18
  11. For animal lovers and activists, a ban remains an elusive dream
  12. "ஜல்லிக்கட்டு கொடூரமானது". Archived from the original on 2012-01-21. பார்க்கப்பட்ட நாள் 2012-01-14.
  13. High Court grants permission for jallikattu
  14. "சல்லிக்கட்டு" - தினகரன், சனவரி 8, 2012, பக். 7 (நாகர்கோவில் பதிப்பு)
  15. "TN: HC Allows Holding of 'Jallikattu' on Pongal". Archived from the original on 2012-01-17. பார்க்கப்பட்ட நாள் 2012-01-23.
  16. Tamil Nadu Regulation of Jalli Kattu Act 2009
  17. SC lifts ban on Jallikattu
  18. "Progress against public bull fighting". Archived from the original on 2011-10-02. பார்க்கப்பட்ட நாள் 2012-01-23.
  19. Supreme Court imposes fresh guidelines on jallikattu[தொடர்பிழந்த இணைப்பு]
  20. "Supreme Court admits petition challenging jallikattu law". Archived from the original on 2011-08-15. பார்க்கப்பட்ட நாள் 2012-01-23.
  21. "அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு" - தினகரன், சனவரி 8, 2012, பக். 5 (நாகர்கோவில் பதிப்பு)
  22. "பாலமேடு சல்லிக்கட்டு - 2012, சனவரி 16". Archived from the original on 2012-01-18. பார்க்கப்பட்ட நாள் 2012-01-18.
  23. In Alanganallur Jallikattu, it is fight or flee
  24. TN govt permits jallikattu in Madurai
  25. ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை
  26. "ஜல்லிக்கட்டுக்கு தடை". தீக்கதிர். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2014.
  27. "சல்லிக்கட்டுக்கு தடை கூடாது தமிழக அரசு மறு சீராய்வு மனு தாக்கல் :". தீக்கதிர். 20 மே 2014. Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 20 மே 2014.
  28. "Centre lifts ban on Jallikattu, TN politicians welcome move". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2016.
  29. "Jallikattu: No clearance given, says AWBI; will move SC says PETA India". indianexpress. பார்க்கப்பட்ட நாள் 8 சனவரி 2016.
  30. "Jallikattu: India court says Tamil Nadu bullfighting ban remains". பிபிசி. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2016.
  31. "After Centre allowed Jallikattu, Supreme Court stops it, Jayalalithaa asks Modi for ordinance". இந்தியன் எக்சுபிரசு. பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2016.
  32. சல்லிக்கட்டில் சாவு, காயம் ஏற்படல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏறுதழுவல்&oldid=4138130" இலிருந்து மீள்விக்கப்பட்டது