உள்ளடக்கத்துக்குச் செல்

உயர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஏற்றி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
உயர்த்தி

உயர்த்தி அல்லது தூக்கி (Elevator) என்பது ஆட்களையோ பொருட்களையோ நிலைக்குத்துத் திசையில் தூக்கிச் செல்லும் ஒரு போக்குவரத்துக் கருவியாகும். உயரமாக அமைந்துள்ள பல அடுக்கு மாடிக் கட்டிடங்களுக்கு மனிதர்கள் அல்லது பொருள்களை கொண்டு செல்லப் பயன்படும் ஒரு நவீன சாதனம் ஆகும். பொதுவாக இது மின்சார இயக்கிகள் மூலம் இரும்பு கயிறுகளை இயக்கியோ, விசையியக்கக் குழாய் மூலம் பாய்மத்தின் அளவை உந்து தண்டினுல் உயர செய்தோ இயக்கப்படும்.

வேளான்மை மற்றும் உற்பத்தி துறையில் உயர்த்தி என்பது சேமிப்பு கிடங்கினுள் (களஞ்சியத்தினுள்) பொருட்களை தொடர்ந்து எடுத்து செல்லும் ஒரு கருவியை குறிக்கும்.

வரலாறு

[தொகு]
ஜெர்மானிய வல்லுனர் கொன்ரட் க்யெசெர் (1405) வடிவமைத்த உயர்த்தி

இத்தகைய அமைப்பிலான் ஒரு சாதனத்தைப் பன்னெடுங்காலத்திற்கு முன்பே ரோமானியர்கள் பயன் படுத்தியதாகத் தெரிகிறது. அவர்கள் இவ்வுயர்த்திகளை ஏற்றவும் இறக்கவும் அடிமைகளைப் பயன்படுத்தினார்கள். அதன் பின் 17 ஆம் நூற்றாண்டில் வேலயர் என்ற பிரெஞ்சு நாட்டவர் பறக்கும் நாற்காலி ஒன்றை அமைத்தார். இதன் மூலம் பயணிகள் உயரமான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதை இயக்க பணியாட்களையும் அடிமைகளையும் சில சமயம் விலங்குகளையும் பயன்படுத்தினார். அதன் பின், 19 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நீராற்றலால் இயங்கும் உயர்த்திகள் (Hydraulic Elevators) உருவாக்கப்பட்டுப் பயன்படுத்தப்பட்டன. இவை தொழிற்சாலைகளிலும் சுரங்ககளிலும் அதிக அளவு பொருட்களை எடுத்து செல்ல பயன்படுத்தப்பட்டன. இவை ஒரு நிமிடத்திற்கு 100 அடி முதல் 200 அடிவரை உயர்த்தப்பட்டது. இன்றைய வடிவிலான மின்-உயர்த்தியை 1880 -இல் வெர்னர் சீமன்ஸ் என்பவர் ஜெர்மனி யில் உருவாக்கினார்.

உயர்த்திகள் எளிமையான கயிற்றினால் அல்லது சங்கிலியால் இழுக்கப்படும் தூக்கிகளாகவே ஆரம்பித்தன. 1853 ல், எலிஷா ஒட்டிஸ் என்பவர் தூக்குகின்ற கயிறுகள் அறுந்தாலும் பயணிகள் இருக்குமிடம் விழுவதைத் தடுக்கக் கூடிய பாதுகாப்பான உயர்த்திகளை அறிமுகப்படுத்தினார். மார்ச் 23, 1857 இல், அவரது முதலாவது உயர்த்தி 488 புரோட்வே, நியூயார்க்கில் அமைக்கப்பட்டது.

அதன் பின் சில திருத்தங்களுடன் வில்லியம் பாக்ஸ்டர் என்பவர் அமெரிக்காவில் உருவாக்கிப் பயன்படுத்தினார். இது மின்சார மோட்டாரால் இயக்கப்பட்டது. அதன்பின் பல்வேறு மாற்றுத் திருத்தங்களுக்குப் பிறகு இன்றைய உயர்த்திகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

உயர்த்திகளின் அமைப்பு

[தொகு]

இழுவை வகை

[தொகு]

உயர்த்திகள் அமைக்கப்பட்டுள்ள பல மாடிக்கட்டிடத்தில் உச்சிப்பகுதியில் மின்சார மோட்டார் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். மின்சார மோட்டரை இயக்கினால் அதோடு இணைக்கப்பட்டுள்ள சக்கரம் மெதுவாகச் சுழலும். அப்போது அச்சக்கரத்தின் மீது வலுவான இரும்புக்கயிறு சுற்றிக் கொள்ளும். அக்கயிற்றின் மற்றொரு முனையில் மக்கள் ஏறிச் செல்லும் பெட்டி அமைந்திருக்கும். சக்கரத்தில் இரும்புக்கயிறு சுற்றச்சுற்ற ஆட்கள் ஏறிய பெட்டி மெதுவாக மேலே உயரும். பெட்டியின் மறுமுனையில் பெட்டியை விடச் சற்றுக் கனம் குறைந்த இரும்பு எடை ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். இது எதிர் எடை என்று அழைக்கப்படும். பெட்டி தரையிலிருந்து மேலே தூக்கப்படும்போது இந்த எடை கீழ் நோக்கி இறங்கும். பெட்டி கீழே இறங்கும்போது இந்த எடை மேலே உயரும். இவ்வாறு இந்த எதிர் எடையைப் பயன்படுத்தும் பொழுது அதிக அளவு சக்தியானது உயர்த்தியை இயக்கத் தேவைப்படாது. குறைந்த அளவு சக்தியே போதும். எதிர் எடைக்கும் உயர்த்திப் பெட்டியின் கனத்திற்கும் சிறு வேறுபாடு இருக்கும். இந்த சிறு வேறுபாட்டிற்கேற்ப மின்சக்தி பயன்படுத்தப்பட்டால் போதும்.

நீரியல் வகை

[தொகு]

இவ்வகை உயர்த்திகள் தரைக்கு மேல் அல்லது கீழே உள்ள ஒரு உந்துத் தண்டின் மேல் அழுத்தம் ஏற்படுத்தி பெட்டியை நகர்த்துகின்றன. நீரியல் வகை உயர்த்திகள் பெரும்பாலும் இழுவை வகை உயர்த்திகளை விட மெதுவாக செயல்படும்.

உயர்த்தி கதவுகள்

[தொகு]

உயர்த்தி கதவுகள் உயர்த்தியில் பயணம் செய்வோர் தவறி விழுவதை தடுக்க பயன்படுகின்றன. பெரும்பாலும் இடையில் கூடி பிரியும் இரு தகடுகளை கொண்டு இது சாத்தியமாகிறது. சில உயர்த்திகளில் இரு கதவுகளும் ஒன்றன் பின் ஒன்று சரிந்து செல்லும் வகையிலும் அமைக்க பெற்றிருக்கும். ஒரு சில எளிமையான உயர்த்திகளில், வீடுகளில் உள்ளது போல சாதாரண ஒற்றை கதவு பொருத்த பட்டிருக்கும்.

உயர்த்திகளை இயக்குதல்

[தொகு]

மக்கள் ஏறிச் செல்லும் உயர்த்திகளில் மின்சார மோட்டாரை இயக்கும் பொத்தன்கள் பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் மாடிகளின் எண்களைக் குறிக்கும் பொத்தான்களும் இருக்கும். நாம் உயர்த்தியில் நின்றபடி எந்த மாடிக்குச் செல்ல வேண்டுமோ அந்த மாடி எண்ணுள்ள பொத்தனை அழுத்தினால் குறிப்பிட்ட அந்த மாடியில் சென்று உயர்த்தி நிற்கும். இதனால் நாம் விரும்பும் மாடிக்கு மேலோ கீழோ சென்றுவர இயலும். ஆட்கள் இல்லாத உயர்த்தியை நாம் எந்த மாடிக்கும் பொத்தானை அழுத்தி வரவழைத்து ஏறிச் செல்ல முடியும். தற்போது ஒற்றைப் படை, இரட்டைப்படை எண்ணுள்ள மாடிகளுக்கெனத் தனித்தனியே உயர்த்திகள் அமைக்கப்பட்டு இயக்கப்படுகின்றன.

உயர்த்தி கட்டுபாட்டு பலகை

உயர்த்தி படிமுறை

[தொகு]

உயர்த்தி படிமுறை என்பது ஒரு உயர்த்தி மேலே அல்லது கீழே சென்று கொண்டிருக்கும்பொழுது அது எந்தெந்த தளங்களில் நிற்க வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் படிமுறை ஆகும். அதன் தொகுப்பு இங்கு கொடுக்கப்பட்டுள்ளது:

இங்கு வேண்டுகோள் என்பது பொத்தானை அழுத்தி உயர்த்தியை வரவழைப்பதை குறிக்கும்.

  • ஒரு திசையில் சென்று கொண்டிருக்கும்பொழுது அத்திசையில் எஞ்சிய வேண்டுகோள் இருந்தால் தொடர்ந்து அத்திசையிலேயே செல்ல வேண்டும்.
  • அத்திசையில் மேலும் வேண்டுகோள் இல்லையெனில், நின்று அடுத்த வேண்டுகோளுக்கு காத்திருக்க வேண்டும். அல்லது எதிர் திசையில் வேண்டுகோள் இருந்தால் அங்கு செல்ல வேண்டும்.

உயர்த்தி படிமுறை ஆனது கணினி இயக்கு தளத்தில் வன்தட்டு நிலை நினைவக வேண்டுகோள்களை (Hard disk requests) பட்டியலிட பயன்படுகிறது. அண்மைக் கால உயர்த்திகள் பட்டறிவுசார் படிமுறைகளை பயன்படுத்துகின்றன.

சேரிட கட்டுப்பாட்டு முறை

[தொகு]

வானளாவி போன்ற உயர்ந்த கட்டிடங்களில், சேரிட கட்டுப்பாட்டு முறையும் பயன்படுத்தபடுகிறது. இம்முறையில், நாம் எந்த தளத்திற்கு செல்ல விரும்புகிறோமோ அதை பதிவு செய்திட வேண்டும். உடனே நாம் எந்த உயர்த்தியில் பயணிக்க வேண்டும் என்பதை கணினி கணக்கிட்டு சொல்லி விடும். அனைத்து உயர்த்திகளும் அனைத்து தளங்களிலும் நின்று செல்ல வேண்டாம் என்பதால் பயண நேரம் குறையும். ஆனால் பயணிகளின் காத்திருப்பு நேரம் உயர வாய்ப்புள்ளது.

உயர்த்திகளின் வகைகள்

[தொகு]

பொதுவாக, மூன்று வகை உயர்த்திகள் உண்டு:

  1. இழுவை வகை
  2. நீரியல் வகை
  3. சுற்றுயர்த்திகள்

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=உயர்த்தி&oldid=3711429" இலிருந்து மீள்விக்கப்பட்டது