குறுங்கோழியூர்க் கிழார்
குறுங்கோழியூர்க் கிழார் என்பவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். 'குறுங்கோழியூர்' என்ற ஊரில் வாழ்ந்தவர். 'கிழார்' என்றால் வேளாண்மைத் தொழில் செய்பவர் என்று பொருள். எந்த அரசர்களையோ வள்ளல்களையோ அண்டி வாழ்ந்தவரல்லர்.
இவர் பாடியதாகப் புறநானூற்றில் மூன்று பாடல்கள் உள்ளன. அவையாவன: 17[1], 20[2], 22[3] என்பன. இம்மூன்றும் சேர மன்னனான யானைக்கண் சேய் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைச் சிறப்பித்துப் பாடிய பாடல்களாகும். இம்மன்னனே ஐங்குறுநூறு தொகுப்பினைத் தொகுப்பித்தவன் என்று கூறுவர். இவன் தலையாலங்கானத்துப் போரைப் பாண்டியன் நெடுஞ்செழியனோடு செய்தபோது, நெடுஞ்செழியனால் சிறையிடப்பட்டவன். சிறையிலிருந்து இவன் தப்பிச் சென்றிருக்கிறான். அகச் சான்றுகளாக இதனைக் குறுங்கோழியூர்க் கிழார் தனது பாடல்களில் சுட்டிக் காட்டுகின்றார்.
பாடல் தரும் செய்திகள்
[தொகு]புறம் 17
[தொகு]சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையை நேரில் கண்டு குறுங்கோழியூர் கிழார் இந்தப் பாடலைப் பாடியுள்ளார். அவனைக் குடவர் கோ என்றும் தொண்டியோர் அடுபொருநன் என்றும் குறிப்பிடுகிறார்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் இந்தச் சேரமன்னனைத் தன் சிறையில் அடைத்திருந்தான். குழியில் விழுந்த ஆண்யானை குழியைத் தூர்த்துக்கொண்டு சென்று தன் இனத்தைச் சேர்வது போலச் சேரன் பாண்டியனின் சிறையை உடைத்துக்கொண்டு சென்று தன் நாட்டுக்கு மீண்டும் அரசனானான்.
பொருண்மொழி
[தொகு]முயன்றால் முடியாதது இல்லை, உரிமை இழந்த மண்ணையும் இழந்த பொருளையும் மீட்டுக்கொள்ள முடியும் என்னும் உண்மையைச் சேரன் மெய்ப்பித்தான் என்று புலவர் குறிப்பிடுகிறார். 'உண்டாக்கிய உயர்மண்ணும், சென்று பட்ட விழுக்கலனும் பெறக்கூடும் இவன்' என்கிறார்.
தமிழக எல்லை
[தொகு]'தென்குமரி வடபெருங்கல் குண குட கடலா எல்லை குன்று தலைமணந்த காடுநாடு' என்றுபட்டு யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை அரசனை வழிமொழிந்து வாழ்ந்தனராம்.
புறம் 20
[தொகு]சேரமான் யானைக்கட்சேய் மாந்தஞ்சேரல் இரும்பொறையைப் புகழ்ந்து பாடும் பாடல் இது.
- அளக்க முடியாதவன்: கடலின் ஆழம், நிலத்தின் பரப்பு, காற்று பரந்துள்ள திசை, ஒன்றுமே இல்லாத காயம்(ஆகாயம்) - இவற்றையெல்லாம் அளந்து அறிந்தாலும் இவனை அளந்து பார்க்க முடியாதாம்.
- சோறாக்கும் தீ, ஞாயிற்று வெயில் அல்லாமல் இவன் நாட்டு மக்கள் சூடு என்பதையே அறியாதவர்களாம்.
- கருவுற்றிருக்கும் மகளிர் தம் வயா வேட்கையால் உண்டால் ஒழியப் பகைவர் யாரும் இவன் நாட்டை உண்ண முடியாதாம்.
- வானவில் அல்லாமல் இவன் நாட்டு மக்கள் கொலைவில் அறியாதவர்களாம்.
- நிலத்தை உழும் நாஞ்சில் அல்லது இவன் நாட்டுமக்களுக்கு வேறு படைக்கலம் தெரியாதாம்.
- அம்பு துஞ்சும் அரண் அமைத்து நாட்டைக் காத்தானாம்.
- அறம் துஞ்சும்படி செங்கோல் நடத்தினானாம்.
- கால நிகழ்வுகளின் நிமித்தம் காட்டும் புதுப்புள் வந்தாலும், பழைய புள் பறந்துபோனாலும் மக்கள் கவலையில்லாமல் இருக்கும் வகையில் இவன் மக்களைக் காத்துவந்தானாம்.
புறம் 22
[தொகு]இப்பாடலில் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை அரவையில் இருக்கும் கோலம் பாராட்டப்பட்டுள்ளது.
இவன் யானை
[தொகு]- அயறு = யானையின் காதிலிருந்து ஒழுகும் மதம்
கை தொங்கும். நடை ஓங்கும். மணி ஒலிக்கும். தந்தம் உயர்ந்து நிற்கும். நெற்றி, பிறை போன்று இருக்கும். பார்வையில் சினம் தெரியும். அடி பரந்திருக்கும். எருத்து என்னும் கழுத்தின் பின்பகுதி பருத்திருக்கும். தேனைச் சிதைத்தது போல அதன் மதத்தில் மிஞிறு இன வண்டு மொய்க்கும்.
இவன் வீற்றிருக்கும் பாங்கு
[தொகு]வெண்கொற்றக் குடை
[தொகு]சோர்ந்த கதிர் வீசும் நிலா போன்று மக்களுக்குக் குளுமை தரும்.
வாள்வீரர்
[தொகு]வாளேந்திய மெய்க்காப்பாளர் காக்கவேண்டிய நிலை இல்லாமல் உறங்குவர்.
வெறிக்குரவை
[தொகு]நெல்லந் தாளாலும், கருப்பஞ் சருகாலும் வேயப்பட்ட வேறுவேறு கூரையில் காய்க்கும் கொடிகள் படர்ந்திருக்கும். அங்கு விழா கொண்டாடுவோர் போன்று களிப்புடன் தும்பைப் பூ சூடிக்கொண்டும், பனையோலை('பனைப்போழ்') செருகிக்கொண்டும் சினம் கொண்ட போர் வீரர்கள் குரவை ஆடுவர்.
வேந்தர் பணி திரை
[தொகு]வாயிலுக்குக் காவல் இல்லாத இவனது பாசறைக்கு வந்து வேந்தர்கள் திறை நல்குவர்(கப்பம் பட்டுவர்).
கொடை
[தொகு]வேந்தர் தந்த திறைப்பொருள்களை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து அவர்களை நிறைவடையச் செய்வான். புலவர்கள் பிறரை நாடாவண்ணம் அவர்களுக்கு மிகுதியாக நல்குவான்.
புத்தேள் உலகம்
[தொகு]தேவர்கள் தேவை ஏதும் இல்லாமல் வாழ்வதாகக் கருதப்படும் கற்பனை உலகம் புத்தேள் உலகம். இவன் காப்பில் உள்ள நாடு தன்னிறைவு பெற்றுப் புத்தேள் உலகம் போல இருந்ததாம்.
பெயர் விளக்கம்
[தொகு]'வேழ நோக்கின் விறல் வெஞ்சேய்' என்று இப்பாடலில் இவன் பாராட்டப்படுவதிலிருந்து இவனது பெயருக்கு முன் உள்ள 'யானைக்கண்' என்னும் அடைமொழி இவன் யானைக்கண் போலச் சிறுமையும் கூர்மையும் கொண்ட கண்ணைப் பெற்றிருந்தமையால் என்பதனை விளங்கிக்கொள்ள முடிகிறது.
உசாத்துணை
[தொகு]- இரா. வடிவேலன், இலக்கிய வரலாற்றுச் சிந்தனைகள் (2003), சென்னை: அருணோதயம்.