சதுர்மகாராசாக்கள்
சதுர்மகாராசாக்கள் என்பவர்கள் பௌத்தத்தில் நான்கு திக்குகளின் பாதுகாவலர்கள் ஆவார். இவர்கள் நால்வரும் முறையே நான்கு திசைகளை பாதுகாக்கின்றனர். இவர்கள் நால்வரும் சதுர்மகாராசிக (चातुर्महाराजिक) உலகில் வாழ்கின்றனர். இந்த உலகம் சுமேரு மலையின் கீழ்ப்பகுதியில் உள்ளது மற்றும் தேவர்கள் வசிக்கும் ஆறு உலகங்களில் மனித உலகத்துக்கு மிகவும் அருகாமையில் உள்ளது. சதுர்மகாராசாக்கள் தீயதை எதிர்த்து போரிட்டு உலகத்தை காப்பாற்றுபவர்கள். அவர்களின் பெயர் வெவ்வேறு மொழிகளில் பின்வருமாறு அறியப்படுகிறது.
- சமசுகிருதம்: சதுர்மகாராஜா (चतुर्महाराज) "நான்கு பேரரசர்கள்" or லோகபாலர்கள் "உலகை காப்பவர்கள்"
- சீன மொழி: டியான்வாங் (天王) "விண்ணரசர்கள்" or ஸி டியான்வாங் (四天王) "நான்கு விண்ணரசர்கள்"
- கொரிய மொழி: சியோன்வாங் (천왕) "விண்ணரசர்கள்" or ஸசியான்வாங் (사천왕) "நான்கு விண்ணரசர்கள்"
- சப்பானிய மொழி: ஷிடென்னோ (四天王) "நான்கு விண்ணரசர்கள்"
- திபெத்திய மொழி: ரஃயல் சென் பிஜி' "நான்கு பேரரசர்கள்"
அவர்களின் வெவ்வேறு கூறுகள் பின்வருமாறு:
சமசுகிருத பெயர் | வைஷ்ரவணன் (குபேரன்) | விருடாகன் | திருதராட்டிரன் | விரூபாக்சன் |
---|---|---|---|---|
பாளி பெயர் | வேஸ்ஸவணன் (குவேரன்) | விரூல்ஹகன் | ததராட்டன் | விரூபக்கன் |
பொருள் | அனைத்தையும் கேட்பவர் | வளர்ச்சியின் புரவலர் | அரசை பராமரிப்பவர் | அனைத்தையும் பார்ப்பவர் |
நிறம் | மஞ்சள் | நீலம் | வெள்ளை | சிவப்பு |
சின்னம் | குடை, கீரிப்பிள்ளை | வாள் | பீபா(சீன குழலிசைக்கருவி) | நாகம், சிறிய ஸ்தூபம் அல்லது முத்து |
கனம் | இயக்கர் | கும்பாண்டர் | கந்தர்வர் | நாகர் |
திசை | வடக்கு | தெற்கு | கிழக்கு | மேற்கு |
இவர்கள் நால்வரும் திராயஸ்திரிம்ச உலகத்து தேவர்களின் தலைவனான இந்திரனின் அதிகாரத்துக்கு உட்பட்டவர்கள். ஒவ்வொரு சந்திர மாதத்தின் எட்டாவது, பதினான்காவது மற்றும் பதினைந்தாவது நாட்களில் நால்வரும் நேரடியாகவோ அல்லது தூதுவர்கள் மூலமோ மனிதர்களின் உலகத்துக்கு சென்று தர்மமும் நியாயமும் எவ்வாறு உள்ளது என தெரிந்து கொள்கின்றனர். பின்பு தாங்கள் தெரிந்து கொண்டதை திராயஸ்திரிம்ச உலகத்து தேவர்களின் அவையில் நிலைமையை தெரிவிக்கின்றனர்.
இந்திரனின் உத்தரவின் படி, அசுரர்கள் தாக்குதல்களில் இருந்து திராயஸ்திரிம உலகத்தை காக்கின்றனர். மேலும் புத்தரையும் தர்மத்தையும் புத்தரை பின்பற்றுபவர்களையும் காப்பதாக இவர்கள் உறுதி பூண்டுள்ளனர். வசுபந்துவின் படி, சதுர்மகாராஜிக உலகில் வசிக்கும் தேவர்கள் கால் குரோசம் (சுமார் 750 அடி) உயரம் உள்ளனர். இவர்களின் ஆயுள் 500 வருடங்கள். அவர்களின் ஒரு நாள் மனித உலகத்தின் 50 வருடங்களுக்கு சமம். எனவே மனித கணக்குப்படி இவர்களின் ஆயுள் 90 லட்சம் வருடங்கள்.
மேற்கோள்கள்
[தொகு]- Chaudhuri, Saroj Kumar. Hindu Gods and Goddesses in Japan. New Delhi: Vedams eBooks (P) Ltd., 2003. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8179360091.
- Nakamura, Hajime. Japan and Indian Asia: Their Cultural Relations in the Past and Present. Calcutta: Firma K.L. Mukhopadhyay, 1961. Pp. 1–31.
- Potter, Karl H., ed. The Encyclopedia of Indian Philosophies, volume 9. Delhi: Motilal Banarsidass, 1970–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120819683, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120803078 (set).
- Thakur, Upendra. India and Japan: A Study in Interaction During 5th cent.–14th cent. A.D.. New Delhi: Abhinav Publications, 1992. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8170172896. Pp. 27–41.