உள்ளடக்கத்துக்குச் செல்

அங்காரகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(செவ்வாய் (நவக்கிரகம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அங்காரகன்
அங்காரகன்
தேவநாகரிमंगल
வகைநவக்கிரகம்
இடம்செவ்வாய் லோகம்
கிரகம்செவ்வாய்
மந்திரம்ஓம் அங்காரகாய நமக
துணைமங்களா தேவி

அங்காரகன் என்பவர் இந்துத் தொன்மவியலில் கூறப்படும் நவக்கிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் அதிபதி ஆவார். அங்காரகன் என்றால் சிவப்பு நிறத்தவன் என்று பொருள். இந்து தொன்மவியலின்படி, இவர் ஒரு போரின் கடவுளும் பிரம்மச்சாரியும் ஆவார். இவர் பூமாதேவியின் மகனாக கருதப்படுகின்றார். சோதிடத்தின் படி செவ்வாய் பகவான், மேடம் மற்றும் விருச்சிகம் ஆகிய இராசிகளுக்கு சொந்தக்காரர் ஆவார்.

செவ்வாய் அவதார வரலாறு

[தொகு]

முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், ‘இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும்’ என்று வேண்டினான். பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான்.

வரம் பெற்ற அரக்கனுக்கு ஆணவம் தலை தூக்கியது. மமதையில் தன் நிலை மறந்து உஜ்ஜைனி நகரில் இருந்த முனிவர்கள், ரிஷிகள், மக்கள் என பேதம் பார்க்காமல், அனைவருக்கும் துன்பம் விளைவித்தான். அவனது செய்கையால் நிலைகுலைந்து போன முனிவர்கள், சிவபெருமானை நோக்கி வழிபாடு நடத்தினர். பக்தர்களின் துயர் களைய பரமேஸ்வரன் முன் வந்தார். அதன்படி அந்தகாசுரனுடன் போரிட முடிவுசெய்தார்.

ஒருநாள் இரவு அவர் சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரம்பொருள் என்று அறியாத அசுரன், சிவனை எதிர்த்துத் தாக்கினான். இரு வருக்கும் இடையே வானத்தில் கடுமையான போர் நடந்தது. இந்த யுத்தம் பல ஆண்டுகள் நீடித்தது. போர் முடிவடையும் நேரத்தில் சிவபெருமானின் உடலில் இருந்து வியர்வையின் சொட்டுகள் நிலத்தில் விழுந்தன.

அது நிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, செவ்வாய் கிரகம் பிறந்தது. அரக்கன் அந்தகாசுரனின் உடலில் இருந்து விழுந்த ரத்தத் துளிகளை செவ்வாய் கிரகம் உள்வாங்கி அதை பூமியில் விழாமல் தடுத்தது. இதைத் தொடர்ந்து சிவபெருமான் அந்தகாசுரனை சூலாயுதத்தால் அழித்தார். தேவர்களும், முனிவர்களும் ஆனந்தம் அடைந்தனர். இந்த வரலாறு கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அரக்கனின் ரத்தத்தை செவ்வாய்க்கிரகம் உள்வாங்கி கொண்டதால் அது சிவப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.[1]

மேற்கோள்களும் குறிப்புகளும்

[தொகு]
  1. "செவ்வாய் ஸ்தலமான உஜ்ஜைனி மங்களநாதர் கோவில்". Archived from the original on 2019-05-30. பார்க்கப்பட்ட நாள் 2018-07-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்காரகன்&oldid=3869215" இலிருந்து மீள்விக்கப்பட்டது