உள்ளடக்கத்துக்குச் செல்

படுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(படகர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
படுகர்
படுகர் குடும்ப புகைப்படம், ஆண்டு 1909
வகைப்பாடுபிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
மொழிகள்படுக மொழி
நாடுஇந்தியா
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
நீலகிரி மாவட்டம்
உட்பிரிவுகள்உதயா, அருவா, அதிகாரி, கனகா, படகா, டொரிய

படுகர் (Badagas) அல்லது படகர் எனப்படுவோர், தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டத்தில் வாழும் மக்கள் ஆவர். படகர்கள் எனும் சொல்லிற்கு வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது பொருள்.[1] நீலகிரியில் வாழும் 18 இன மக்களுள் ஓர் இனமான இவர்கள் படுகு என்ற மொழியைப் பேசுகின்றனர். இம்மொழி வரிவடிவம் இல்லாதது.

நீலகிரியில் குடியேற்றம்

படுகர்கள் நீலகிரி மலையில் குடியேறியது ஏறத்தாழ 200 வருடங்களுக்கு முன்பு தான். அதற்கு முன்பு மைசூர் சமவெளிப்பகுதிகளில் வாழ்ந்தவர்கள்.[சான்று தேவை] படுகர்கள் 800 ஆண்டுகளுக்கு முன்னர் நீலகிரியில் குடியேறியவர்கள் என்றும் 12 ஆம் நூற்றாண்டுக்கும் 16 ஆம் நூற்றாண்டுக்கும் இடையே குடியேறியதாகவும், சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பிருந்து பெருமளவில் படுகர்கள் நீலகிரியில் வசிக்க ஆரம்பித்ததாகவும் கருதப்படுகின்றது.[1]

படுகர் இனப் பிரிவுகள்

நீலகிரியில் வாழும் படுகர்களை வடுகர் என்றும் படகர் என்றும் கௌடர் என்றும் கூறுகின்றனர். நீலகிரி படகர் சமுதாயத்தில் 18 பிரிவுகள் உள்ளன.[2] படுகர்களில் உதயா, அருவா, அதிகாரி, கனகா, படகா, டொரிய எனும் பிரிவுகள் உள்ளன.[1]

சங்கநூல் குறிப்பு

மலைபடுகடாம் என்னும் சங்ககால நூலில் (அடி 161) குறிப்பிடப்படும் 'ஆரிப் படுகர்' இவர்களின் முன்னோடிகள் என்பர்.[3]

வரலாறு

ஹத்தை பண்டிகையைக் கொண்டாடும் படுகர்கள்

இவர்கள் கருநாடக மன்னர் ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் காலத்தின்போது, இம்மக்களுக்கு எதிரான அரசியல் சூழ்நிலை காரணமாக, ஐதர் அலியின் படைவீரர்களிடமிருந்து தங்களை காத்துக்கொள்ள வேண்டி, மைசூர் பகுதிகளிலிருந்து வெளியேறி நீலகிரி மலைப்பகுதிகளில் புகலிடம் தேடி இடம்பெயர்ந்தவர்கள். இவ்வினத்தவர்களில் ஐம்பது சதவீதத்தினர், கிறித்துவ மதத்திற்கு மதம் மாறி விட்டனர். இவர்களில் எண்பது சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் கல்வி அறிவுடையவர்கள். பலர் சொந்தமாக தேயிலைத் தோட்டங்கள், காய்கறி தோட்டங்கள் வைத்துள்ளனர். மேலும் அரசுப்பணிகளிலும், தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களிலும் பணி புரிந்து வருகின்றனர். இவர்கள் சமவெளி பகுதி மக்களைப் போல நடை உடை பாவனையுடன், நாகரீக மக்களாக காட்சி தருகின்றனர்.

வாழ்க்கை முறை

நீலகிரி மலைப்பகுதிகளில் ஆதிகாலம் முதல் வாழும் தோடர்கள் போன்றோ அல்லது காடர்கள் போன்றோ அல்லது இருளர்கள் போன்றோ, படுகர்கள் பழங்குடிகள் அல்ல.[4] மேலும் படுகர்கள் அடர்ந்த காடுகளிலும் குடிசை போட்டு பழங்குடியினர் வாழ்க்கை வாழ்வதில்லை. படுகர்கள் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற நகரப்பகுதிகளிலும், கிராமப்பகுதிகளிலும் வாழ்கின்றனர்.

படுகர்களின் வீடு ஒரு மாடியுடன், வீட்டைச் சுற்றிலும் சிறிது இடம் விட்டு மண், கருங்கல், செங்கல்லால் கட்டப்பட்டிருக்கும்.[1]

மரணச்சடங்குகள்

மற்ற பழங்குடியினரை விட படுகர்கள் மரணச்சடங்கை விமரிசையாகக் கொண்டாடுவர். முக்கியமான சடங்காக இறந்தவரின் பாவத்தைப் போக்க ஒரு கன்றுக்குட்டியை மக்கள் பாவப்பட்டது என்று முழக்கமிட, அது இறந்தவரின் பாவத்தைச் சுமந்து செல்வதாகக் கருதி மந்திரித்து விரட்டி விடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.[1]

தொழில்

காலனீய ஆதிக்கத்திற்கு முன்பு வரை உழவுத் தொழிலையும், கால்நடைகளையும் நம்பியிருந்த படுகர்கள் ஐரோப்பியர் வருகைக்குப் பின்னர் கல் உடைத்தல், சாலை போடுதல், மரவேலைகள் முதலானவற்றில் பயிற்சி பெற்று தொழிலில் முன்னேறினர்.[1]

பண்டிகை

படுகர்கள் கோயில்

படக இன மக்கள் அனைவரும் சேர்ந்து எத்தை அம்மன் பண்டிகை ஒன்றினை மிக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரிக்கை

1931 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் படுகர்கள் பழங்குடியினர் என்று பட்டியலிடப்பட்டனர். 1941 ஆம் ஆண்டு உலகப்போர் காரணமாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எடுக்கப்படவில்லை. அதன்பின்னர் சுதந்திர இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்போது படுகர்கள் பழங்குடியினர் பட்டியலில் இருந்து காரணம் குறிப்பிடப்படாமல் நீக்கப்பட்டிருந்தனர். 1970 ஆம் ஆண்டு காலகட்ட அளவிலேயே படுகர் மக்கள் இதனை உணர்ந்து மீண்டும் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க போராட ஆரம்பித்தனர். [5]

2011 ஆம் ஆண்டு தமிழக முதல்வர், பிரதம மந்திரிக்கு படுகர் இனத்தவரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக்கோரி பரிந்துரைத்துக் கடிதம் எழுதியிருந்தார்.

படுகர்கள் கருநாடகா சமவெளிப்பகுதியிலிருந்து வெளியேறி, தமிழ்நாட்டின் நீலகிரி மலைப்பகுதிகளில் குடியேறிய ஒரே காரணத்தால் மட்டுமே தங்களையும் ”தோடர்கள்” போன்று (படுகர்களை) பட்டியல் பழங்குடி மக்களுக்கான (Scheduled Tribes) சலுகை கேட்டு தமிழ்நாடு மாநில அரசிடம் தொடர்ந்து போராடி வருகின்றனர். மேலும் படுக இன மக்கள் நீலகிரி மலையில் வாழ்ந்தாலும், அவர்களிடம் பட்டியலிட்ட பழங்குடியினருக்கு (Scheduled Tribes) உரிய எந்த அடையாளமும் காணவில்லை. நடுவண் அரசு வகுத்த பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் தொடர்பான விதிகளின்படி நீலகிரி மலைவாழ் படுகர் இன மக்களுக்கு, அவர்கள் கேட்கும் தகுதி பொருந்தி வராத காரணத்தினால் தமிழ்நாடு அரசு இவர்களுக்கு “பட்டியலிட்ட பழங்குடியினர்”(Scheduled Tribes) என்ற தகுதி வழங்கவில்லை.[6]

மேலும் பார்க்க

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 நீலகிரி சுற்றுலா மலர்; ஆசிரியர் வெ.நிர்மலா; மாஸ் மீடியா குரூப்; 1987
  2. நீலகிரி படகர்கள், டாக்டர் பிலோ இருதயநாத்
  3. 2 பத்துப்பாட்டு செய்தி உரை, பொதுவன் அடிகள் (2009)
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-06. பார்க்கப்பட்ட நாள் 2016-05-18.
  5. "Badagas take fight for scheduled tribe status to Madras high". Times Of India (Nov 13, 2014)
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-06. பார்க்கப்பட்ட நாள் 2016-05-18.
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Badaga people
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=படுகர்&oldid=4055161" இலிருந்து மீள்விக்கப்பட்டது