உள்ளடக்கத்துக்குச் செல்

பழுப்புமஞ்சள் புள்ளி பொன்முதுகு மரங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பழுப்புமஞ்சள் புள்ளி பொன்முதுகு மரங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
பிசிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
கிரைசோகோலாப்டெசு
இனம்:
கி. லுசிடசு
இருசொற் பெயரீடு
கிரைசோகோலாப்டெசு லுசிடசு
(இசுகோபோலி, 1786)
     பரவல்

பழுப்புமஞ்சள் புள்ளி பொன்முதுகு மரங்கொத்தி (Chrysocolaptes lucidus) என்பது பிசிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவையாகும். இது பிலிப்பீன்சு தீவுகளான போகொல், லெய்டே, சமர், பிலிரான், பனான், மிண்டனாவோ, பாசிலன், சமல் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இது சில நேரங்களில் பெரிய பொன்முதுகு மரங்கொத்தியின் துணையினமாகக் கருதப்படுகிறது.

விளக்கம்

[தொகு]

புறாவை விடப் பெரியதான இப்பறவை சுமார் 31 செ. மீ. நீளம் இருக்கும். இதன் அலகு கொம்பு நிறமான பழுப்பு நிறத்திலும், விழிப்படலத்தின் வெளி வட்டம் சிவப்பாகவும் உள்வட்டம் இளமஞ்சள் கலந்த இளஞ்சிவப்பாக இருக்கும். கால்கள் கருஞ்சாம்பல் தோய்ந்த பசுமையாக இருக்கும். இந்த மரங்கொத்தியின் உச்சந்தலை கொண்டை ஆழ்ந்த சிவப்பாக இருக்கும். பிடரியும், பின் கழுத்தும் வெள்ளையாக இருக்கும். முதுகும் தோள்பட்டையும் பொன்நிறந்தோய்ந்த ஆலிவ் நிறமாக இருக்கும். பிட்டம் ஆழ்ந்த சிவப்பாக இருக்கும். வால் மேல் போர்வை இறகுகளும் வாலும் கறுப்பு நிறமாக இருக்கும். கன்னங்களும் மோவாயும் வெண்மை நிறமாக இருக்கும். கன்னங்களின் மீது இரு கறுப்புக் கோடுகள் தொடங்கி அவை தொண்டையின் பக்கங்களில் சேரும். மோவாய் முன் கழுத்து வழியாக அகன்ற கறுப்புக் கோடு செல்லக் காணலாம். பெண் பறவை தோற்றத்தில் ஆண் பறவையை ஒத்திருக்கும் என்றாலும் உச்சந்தலையும் கொண்டையும் மட்டும் கறுப்பாக வெண்புள்ளிகளோடு காட்சியளிக்கும்.[2]

பரவலும் வாழிடமும்

[தொகு]

பழுப்புமஞ்சள் புள்ளி பொன்முதுகு மரங்கொத்தியானது தென்னிந்தியாவிலும், இலங்கையிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் காணப்படுகிறது. தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகள் சார்ந்த பகுதிகளில் பசுமை மாறாக் காடுகளிலும், புதர் காடுகளிலும், சிறு காடுகளிலும் காணப்படுகிறது. கடற்கரை ஒட்டிய பகுதிகளில் காணப்படுவதில்லை.[2]

நடத்தை

[தொகு]

பழுப்புமஞ்சள் புள்ளி பொன்முதுகு மரங்கொத்தியானது இணையாக இரைதேடி பறந்து திரியும். மரத்திற்கு மரம் விரைவாக சத்தமிட்டவாறு பறக்கும். கூச்ச சுபாவமுள்ள இது மரங்களில் மறைந்து இருக்கும் என்பதால் இதனைக் காண்பது அரிது. மரங்களின் பின்னால் ஒளிந்து கொண்டு தலையையும், கழுத்தையும் காட்டக்கூடியது. இதன் கன்னங்களில் காணப்படும் வெண்கோடுகளைக் கொண்டு அடையாளம் காண இயலும். பூச்சிகளையும், அவற்றின் முட்டைகளையும் உணவாக கொள்ளும். அலறும் குரலில் சிரிப்பதுபோலக் கத்தக்கூடியது.[2]

இவை பொதுவாக திசம்பர் முதல் மார்ச் வரை இனப்பெருக்கம் செய்கின்றன. தரையில் இருந்து இரண்டு மீட்டர் முதல் 20 மீட்டர் உயரம் வரையில் மரங்களில் பொந்து அமைக்கும். பொந்தானது எட்டு செ. மீ. விட்டத்தில் நீள் வட்டமாக இருக்கும். பொந்து முதலில் நீளவாக்கில் சென்று பின்னர் கீழ் நோக்கித் திரும்பி சுமார் 30 செ.மீ. ஆழம் கொண்டதாக இருக்கும். பொதுவாக இரு ஒரு வெள்ளை முட்டையை இடும். அரிதாக இரண்டு முட்டைகளை இடுவதும் உண்டு.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. BirdLife International (2016). "Chrysocolaptes lucidus". IUCN Red List of Threatened Species 2016: e.T22726539A94924653. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22726539A94924653.en. https://www.iucnredlist.org/species/22726539/94924653. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. 2.0 2.1 2.2 2.3 க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. pp. 333–334.

பொதுவகத்தில் Chrysocolaptes lucidus பற்றிய ஊடகங்கள்