விக்கிப்பீடியா:இணக்க முடிவு
தமிழ் விக்கிபீடியாவின் கொள்கைகள் |
---|
ஐந்து தூண்கள் |
தமிழ் விக்கிபீடியாவின் உள்ளடக்கம் |
நடுநிலை நோக்கு |
தமிழ் விக்கிபீடியாவில் பங்கேற்புச் சூழல் |
கண்ணியம் |
இணக்க முடிவு என்பது, ஒரு குழு முடிவெடுக்கும் முறை ஆகும். ஒரு குழுவின் அனைத்துநபர்கள் அல்லது பலரின் இணக்கத்தோடு எடுக்கப்படும் முடிவே, `இணக்க முடிவு` ஆகும். இம் முறையைத் தேர்தல் முடிவு, தனியொருவர் முடிவு ஆகியவற்றுடன் ஒப்பிட்டு வேறுபாட்டை வரையறுக்கலாம்.
இதுவரை, தமிழ் விக்கிப்பீடியா ஒரு சிறிய (<40) பயனர் குழுவினாலேயே முன்னெடுக்கப்பட்டதாலும், தெளிவான குறிக்கோளும் புரிந்துணர்வும் நம்மிடம் இருப்பதாலும் மிகப்பல விடயங்களுக்கு இணக்க முடிவு எட்டமுடிகின்றது. இப்போது, தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியானது, இணக்க முடிவின் தேவையையும் வழிமுறையையும் தெளிவாக்கிச் செழுமைப்படுத்த உந்தியிருக்கின்றது.
எங்கே இணக்கமுடிவு தேவை?
[தொகு]முக்கிய சிக்கலான முடிவுகளுக்கே நாம் பாடு்பட்டு இணக்க முடிவு காண வேண்டியிருக்கும். இது வரை, த.விக்கிப்பீடியாவில் பெரும்பாலும் ஒத்துப்போகும் தன்மை இருக்கின்றது. த.வி. கட்டமைப்பை, தொடரும் செயற்பாட்டை, குறிக்கோளுக்கு இடையூறு தரக் கூடிய விடயங்கள், எதிர்காலத் திட்ட முடிவுகள், மேல்-நிலை இணக்க முடிவுகள் தேவைப்படும் முடிவுகள், நிர்வாக முடிவுகள் ஆகியவற்றுக்கு `இணக்கமுடிவு` தேவைப்படும்.
எங்கே இணக்கமுடிவுகள் தேவையில்லை?
[தொகு]- மேல்-நிலை இணக்க முடிவின்கீழ்த் தேர்தல்வழி முடிவு எடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்ட விடயங்களில்.
- அவசர முடிவுகள் தேவைப்படும்பொழுது, எ.கா. விசமிகள் தாக்குதல்.
- தெளிவான, அதிக முக்கியத்துவம் இல்லாத கீழ்நிலை முடிவுகளுக்கு, எ.கா. பரிசோதனை இடுகைகளை நீக்குதலில்.
- ஒரு குறிப்பிட்ட விசயத்துக்கு ஆதரவு திரட்ட விக்கிக்குப் `புறத்தள`ங்களிலிருந்து ஆதரவு திரட்டி கையாட்களை ஒருவர் விக்கிக்கு அழைத்துவரும் சூழ்நிலையில்
இணக்க முடிவு தமிழ் விக்கிபீடியாவிற்கு ஏன் உகந்தது
[தொகு]- தமிழ் விக்கிபீடியா ஒரு குழுச் செயற்பாடு. இங்கே நமக்கு ஒரு தெளிவான குறிக்கோள் உண்டு. எளிய தமிழில், தரமான கலைக்களஞ்சியத்தை உருவாக்குவதே அந்தக் குறிக்கோள். அக்குறிக்கோளைச் செயலாக்கும்பொழுது எழும் சிக்கல்களை அல்லது பிரச்சினைகளை தீர்க்க நாம் முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கின்றது. அது இணக்க முடிவாக அமையும்பொழுது, நாம் பிளவுபடாமலும் முரண்படாமலும் முன்னேற்றப் பாதையில் செல்வதை உறுதிசெய்யக் கூடியதாக இருக்கின்றது.
- தமிழ் விக்கிப்பீடியா இன்னும் ஒரு பெரிய குழுவாக இல்லை. எனவே, விரைவாக இணக்கமுடிவுகளை எட்டுவது நடைமுறையில் இயலுகின்றது.
- நிர்வாகிகள், அதிகாரிகள் என்று பொறுப்புகளை ஏற்றுப் பயனர்கள் மேலதிக அனுகூலங்களுடன் செயற்பட்டாலும், அனைவரும் தன்னார்வப் பயனர்களே. இங்கு மேல்-கீழ் அடுக்கமைவுக் கட்டமைப்பு கிடையாது. அதிகாரம் செலுத்தும் தலைமைத்துவமும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை. நல்லுறவோடு நம்பிக்கையின் அடிப்படையிலான செயற்பாட்டிலேயே த.வி. செயற்பாடுகள் தங்கியுள்ளன. இந்தச் சூழமைவு, இணக்கமுடிவுக்கு உகந்தது.
- இணக்கமுடிவு வழிமுறை, பயனர்களுக்கிடையான தொடர்புகளையும், புரிதல்களையும் பலப்படுத்தி விரிவாக்க உதவும்.
இணக்கமுடிவு வழிமுறை
[தொகு]- முடிவு எடுக்கப்படவேண்டிய ஒரு கருத்தை அல்லது சிக்கலை விவரித்தல்.
- எடுக்கப்படக் கூடிய அனைத்து முடிவுகளையும் அலசுதல்.
- அனைவருடைய பார்வைகளும் கருத்துகளும், இயன்றவரை முன்வைக்கப்படுதலையும் கேட்கப்படுதலையும் உறுதிசெய்தல்.
- ஒவ்வொரு முடிவின் நன்மைதீமைகளையும் அல்லது வரவுசெலவுகளையும் ஆராய்ந்து, மறுப்புகள் மாற்றுக் கருத்துக்கள் இருந்தால் திருத்தி சிறந்த முடிவுகளைத் தெரிவு செய்தல்.
- பாரிய எதிர்ப்பு அல்லது மறுப்புகள் இல்லாவிட்டால் ஒத்துழைப்பைக் கோருதல்.
- இணக்கத்தை உறுதிப்படுத்தல்.
இணக்க முடிவு நோக்கி விமர்சனங்கள்
[தொகு]- சிறுபான்மையாக உள்ள ஒத்துப்போகாதோரால் அல்லது தனிநபர்களால் கூடப் பெரும்பான்மையினரின் முயற்சிகள் தடைப்பட்டு போகக்கூடிய சாத்தியக்கூறு.
- இணக்க முடிவுக்கு அதிக நேரம் தேவைப்படுவதால், அதிகநேரம் செலவழிக்க கூடியவர்களே பங்களிக்ககூடியதாக இருக்கும். இது ஜனநாயகப் போக்குக்குச் சார்பான செயற்பாடு அன்று.
- `ஒத்துப்போகவேண்டும்` என்ற போக்கு இருப்பதால், கருத்து வேறுபாடுகள் ஆரோக்கியமான விமர்சனங்கள் தடைப்படக்கூடிய சாத்தியக்கூறு.
- இணக்கமுடிவு வழிமுறையானது, சிறுபான்மைக் கருத்துக்கள் நீண்டகாலமாகப் பெரும்பான்மையினரின் செயல்திட்டங்களை இழுபறி செய்யவே வழி செய்கின்றது.