தலைவலியாக மாறிய தலைப்பு... ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல் - டைட்டில் மாற்றமா?
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் தலைப்பை மாற்றக்கோரி அக்கட தேசத்தில் இருந்து வந்துள்ள கோரிக்கையால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் முத்துவேல் பாண்டியன் என்கிற சிறை வார்டன் கதாபாத்திரத்தில் ரஜினி நடித்திருக்கிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, மோகன்லால், ஷிவ ராஜ்குமார், ஜாக்கி ஷெராப், தமன்னா, சுனில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.
ஜெயிலர் படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படத்தில் இருந்து இதுவரை ஒரு பாடல் மட்டும் வெளியாகி உள்ளது. அனிருத் இசையில் வெளியான காவாலா என்கிற அப்பாடல் தான் தற்போது பட்டிதொட்டி எங்கும் டிரெண்டாகி வருகிறது. இப்பாடலுக்கு தமன்னா ஆடி உள்ள நடனம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனதால், இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் அப்பாடலுக்கு ரீல்ஸ் செய்து வருகின்றனர். இதனால் திரும்பிய பக்கமெல்லாம் தற்போது காவாலா மோகம் தான்.
இதையும் படியுங்கள்... சிம்புவின் தந்தை டி.ஆரின் தாடிக்கு பின்னணியில் இருக்கும் லேடி யார் தெரியுமா? பிரபலம் மூலம் வெளிவந்த சீக்ரெட்
இன்று ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடலான ஹுகூம் வெளியாகிறது. ஜெயிலர் படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால், அப்படத்தின் அப்டேட்டுகளும் ஒவ்வொன்றாக வெளியாகி வரும் இந்த வேளையில், தற்போது அப்படத்திற்கு புது சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தின் தலைப்பை மாற்றக்கோரி கேரளாவில் இருந்து கோரிக்கை வந்துள்ளது. இதற்கு காரணம், அங்கும் ஜெயிலர் என்கிற பெயரில் ஒரு படம் தயாராகி உள்ளதாம்.
கேரளாவில் தியான் ஸ்ரீனிவாசன் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் கதைக்கும் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின் கதைக்கும் சுத்தமாக சம்பந்தம் இல்லை என்றாலும், இரு படங்களும் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆவதால், அது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறி, கேரளாவில் மட்டும் ஜெயிலர் படத்தை வேறு தலைப்பில் வெளியிடுமாறு தமிழ் ஜெயிலர் குழுவுக்கு கேரளா ஜெயிலர் படக்குழு கோரிக்கை வைத்துள்ளதாம். ஆனால் ரஜினியின் ஜெயிலர் படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனமோ, படத்தின் தலைப்பை மாற்ற முடியாது என கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ்சுக்கு பிறகும் தொடர்ந்த உறவு.. 15 பேரை ஏமாற்றிய விக்ரமன் - புகார்களை அடுக்கும் இளம் பெண் கிருபா!