முந்தைய பாடமான அடிமை வம்சத்தை வாசிக்க இங்கே க்ளிக் செய்யவும்.
கில்ஜி வம்சம்
அடிமை வம்சத்தின் ஆகச்சிறந்த மன்னாக திகழ்ந்த பால்பனின் மகனான கைகுபாத் திறமையற்றவராக இருந்தார். 1290 இல் படைத்தளபதியாய் பணியாற்றிய மாலிக் ஜலாலுதீன் கில்ஜி அரசப்பிரதிநியாகப் (நாயிப்) பெறுப்பேற்றார். சுல்தான் கைகுபாத்தின் பெயரால் அவர் நாட்டையாண்டார். பின்னர் ஒரு நாளில் ஜலாலுதீனால் அனுப்பப்பட்ட அதிகாரி ஒருவரால் கைகுபாத் கொல்லப்பட்டார். அதன் பின்னர் ஜலாலுதீன் முறையே அரியணை ஏறினார். அவரிலிருந்து கில்ஜி வம்சத்தின் ஆட்சி தொடங்கிற்று.
ஜலாலுதீன்– பெரோஸ்– கில்ஜி (கி.பி 1290–1296)
கி.பி. 1290ல் ஜலாலுதீன் ஃபெரோஸ் கில்ஜி டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றினார். இவர் பிற்காலத்தில் அமைதியான முறையில் ஆட்சியை நடத்தினார். மேலும் ரத்தம் சிந்தாத ஆட்சியை வழங்க விரும்பினார். எனவே இவர் 'கருணை உள்ளம் கொண்ட ஜலாலுத்தீன்' என புகழப்பட்டார்.
இவரது ஆட்சியின் போது பல படையெடுப்புகள் நடைபெற்றன. அதில் பெரும்பாலான படையெடுப்புகளுக்கு தலைமையேற்று நடத்தியவர் அவரது சகோதரியின் மகனான அலாவுதீன் கில்ஜி.
ஆட்சிமுறை
பேரரசின் ஒரு பகுதியான காரா என்னுமிடத்தின் நிர்வாகி மாலிக் சஜ்ஜி என்பவர் கலக்கத்தில் ஈடுபட்டார். ஜலாலுதீன் சஜ்ஜுவின் கலக்கத்தை அடக்கி, தனது சகோதரியின் மகனும் மருமகனும் ஆகிய அலாவுதீன் கில்ஜியை காராவின் ஆளுனர் ஆக்கினார். இவரது ஆட்சியில் வழிப்பறியும், திருட்டும் , அதிகம் நடைபெற்றது. எனவே எண்ணற்ற திருடர்களையும் தக்கர்கள் என்ற கொள்ளைக்கூட்டத்தவரையும் சிறையில் அடைத்தார். பின்னர் அவர்களை மன்னித்து விடுதலை செய்து வங்காளத்தில் குடியமர்த்தினார். சத்தி மெலா என்ற மதவாதி, ஜலாலுதீன் ஆட்சியை கைப்பற்ற முயன்றதால் அவரை சிறைப்படுத்தி கொன்றார்.
மங்கோலியர் படையெடுப்பு
கிபி 1292 ல் சூனம் எனும் தமது ஆட்சிப் பகுதியில் ஊடுருவ முயன்ற மங்கோலியர்களைத் தோற்கடித்து கைது செய்தார். சிறைப்பட்டு அவர்களது வேண்டுகோளை ஏற்று விடுதலையும் செய்தார். இந்நிகழ்ச்சிக்குப் பின்னர் சில மங்கோலியர்கள் இந்தியாவிலேயே தங்கிவிட்டனர்.
ஜலாலுதீன் கில்ஜியின் முடிவு
ஜலாலுதீனின் அமைதி கொள்கையை அவரது இளைய தலைமுறையினர் விரும்பவில்லை. அலாவுதீன் கில்ஜி தனது தலைமையில் தேவகிரி யாதவ அரசர் ராமசந்திரனை தோற்கடித்து ஏராளமான செல்வங்களோடு நாடு திரும்பினார். அச்செல்வங்களை ஜலாலுதீன் அரண்மனையில் இருந்த முக்கியமான பிரபுக்களுக்கும் ஏனைய படைத்தளபதிகளுக்கும் கையூட்டாக கொடுத்து தன் வசம் ஈர்த்துக்கொண்டு நயவஞ்சமாக ஜலாலுனைக் கொன்று ஆட்சியைப் பிடித்துக் கொண்டார்.
அலாவுதீன் கில்ஜி (கிபி 1296 முதல் 1316 வரை)
கிபி 1296 ல் அரசு பதவியைக் கைப்பற்றிய அல்லாவுதின் வட இந்தியா முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். மேலும் சில தென்னிந்திய பகுதிகளையும் இவர் வென்றார்.
வட இந்தியப் படை எடுப்புகள்
உலுக்கான், நசரத்கான் என்ற வலிமையான படைத் தளபதிகளை குஜராத் பகுதியைக் கைப்பற்ற அனுப்பிவைத்தார். இப்படைகள் முதலில் ராந்தாம்பூரை வென்று அதன் மன்னர் அமீர்தேவாவை கொன்றது பிறகு சித்தூர், மாளவம், உஜ்ஜெயின், தார், சாந்தேரி, மார்வார், ஜலோர் ஆகிய இடங்களையும் வென்றார்.
சித்தூர் முற்றுகை 1303
வடமேற்கு இந்தியாவில் மேவார் நாடு, மற்ற இராசபுத்திரர்களின் நாடுகளைவிட அதிக வலிமை மிக்கது. மேவார் நாட்டு மன்னர் பெயர் இரத்தன் சிங். அவரது பட்டத்து அரசியின் பெயர் பத்மாவதி என்ற பத்மினி ஆவார்.
பட்டத்து அரசி பத்மினியின் அழகை கேள்விப்பட்டு, மேவார் கோட்டை மீது அலாவுதீன் கில்சி 1303 ல் படை எடுத்த விவரங்கள் ''மாலிக் முகமது செய்சி'' என்பவர் 'அவதி' மொழியில் 1540ல் ’ பத்மாவதி ’ எனும் தலைப்பில் கவிதை நூல் இயற்றியுள்ளார்.
சுல்தான் அலாவுதீன் கில்சி 1303 ல் மேவார் நாட்டின் சித்தூரிலுள்ள கோட்டையை முற்றுகையிட்டார் அலாவுதீன் கில்ஜி. மேவார் கோட்டையை பல மாதங்களாக முற்றுகையிட்டு, வெளியில் இருந்து கோட்டைக்குள் செல்லும் குடிநீர் மற்றும் உணவுப் பொருட்களை தடுத்து நிறுத்தினார் கில்ஜி.
எனவே வேறு வழியின்றி மேவாரின் படைகள் கோட்டையை திறந்து கொண்டு வெளியே வந்து கில்ஜி படைகளுடன் நேருக்கு நேர் மோதிக்கொண்டு போரிட்டனர். மிகக் கடுமையான போரில் மேவார் நாட்டு அரசர் இரத்தன் சிங் மற்றும் தலைமைப் படைத்தலைவர்கள் போரில் மாண்டனர். இதை அறிந்த பட்டத்தரசி பத்மினி உட்பட அனைத்து இராசபுத்திரகுலப் பெண்கள் சத்திரிய குல மரபுப்படி, கூட்டாகத் தீக்குளித்து (Jauhar) மாண்டனர். எஞ்சிய மேவார் நாட்டுப் படைவீரர்கள் இறக்கும் வரை போரிட்டு மாண்டனர். போரில் தோற்ற மேவார் நாட்டை தன் தில்லி சுல்தானகத்துடன் இணைத்துக் கொண்டார் கில்ஜி.
தென்னிந்திய படையெடுப்புகள்
டெல்லி சுல்தான்கள் இல் முதன் முதலில் தென்னிந்திய படையெடுப்புகளை மேற்கொண்டவர் அலாவுதீன் கில்ஜி ஆவார். தமது நம்பிக்கைக்குரிய தளபதி மாலிக் கபூரை இந்திய அரசுகளுக்கு எதிராக அனுப்பினார். தென்னிந்தியாவைச் சார்ந்த தேவகிரி ஆண்ட யாதவ அரசர் ராமச்சந்திர தேவன், அரசர் இரண்டாம் பிரதாபருத்ரன் மற்றும் ஹொய் சாலா அரசர் மூன்றாம் வீரபல் லாளன் தோற்கடிக்கப்பட்ட டெல்லி சுல்தானிய ஆதிக்கத்தை செலுத்தும் அரசர்கள் ஆனார்கள்.
பாண்டியப் பேரரசில் நிகழ்ந்த அந்த வாரிசு உரிமைப் போரில் மாலிக்கபூர் தலையிட்டு வீரபாண்டியனுக்கு எதிராக சுந்தர பாண்டியனுக்கு உதவியோடு சுந்தரபாண்டியனை பாண்டிய அரியணையில் அமரச் செய்தார். பின்னர் ராமேஸ்வரம் வரை சென்று அங்கு ஒரு பள்ளிவாசலைக் கட்டினார். தென்னிந்திய படையெடுப்பின் விளைவாக தென்னிந்திய அரசுகள் அலாவுதீன் கில்ஜியின் மேலாண்மையை ஒப்புக்கொண்டு திரை செலுத்தத் தொடங்கின.
மங்கோலியர்களைத் தடுத்தல்
அலாவுதீன் கில்ஜி சுமார் 12 முறைக்கு மேலாக மங்கோலிய படையெடுப்புகளை தடுத்தார். தம் எல்லைக்குட்பட்ட இடங்களில் உள்ள கோட்டைகளையும் படைமுகாம்களையும் செப்பனிட்டார். புதிய கோட்டைகளை கட்டியதோடு அவைகளை பாதுகாத்தார்.
ஆட்சிமுறை
அலாவுதீன் கில்ஜி தம்மை கடவுளின் பிரதிநிதியாக கருதினார். நாட்டில் தொடர்ந்து கலகம் நடப்பதை தடுக்க நான்கு சட்டங்களை ஏற்படுத்தினார். அச்சட்டங்கள் இன் வழியாக சமய உடைகளையும் இலவசமாக வழங்கப்பட்ட நிலங்களையும் பறிமுதல் செய்தார். ஒற்றர் முறையை மறுசீரமைப்பு செய்தார். சமுதாயக் குழுக்கள் கூடுவதை தடுத்தார். மக்கள் மது அருந்திட தடை செய்தார்.
அலாவுதீன் நிரந்தரமான ஒரு பெரும் படையை உருவாக்கினார். படைப்பிரிவில் குதிரைகளுக்கு தாக் எனும் சூடு போடும் முறையை கொண்டு வந்தார். படைவீரர்களுக்கு ஹூலியா எனும் பெயர் பட்டியல் ஒன்றை ஏற்படுத்தி ராணுவத்தில் நடைபெற்ற ஊழல்களை ஒழித்தார்.
வாழ்க்கைக்குத் தேவைப்படும் பொருட்களின் விலைகளை நிர்ணயித்தார். அலாவுதீன் கில்ஜி எண்ணெய் விலைகள் அங்காடி விலைகளை விட குறைவாகவே இருந்தன.
நியாய விலையிலேயே பொருட்களை தனது ஆட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் விற்கச் செய்தார். அங்காடிகளை கட்டுப்படுத்தினார். கள்ளச்சந்தை முற்றிலும் ஒழித்தார். வரிகளை பொருளாக செலுத்தும் முறையை கொண்டு வந்தார். அதிக அளவில் உரிமை படை வீரர்களையும் எழுத்தர்களையும் நியமித்தார். அஞ்சல் முறையை மேம்படுத்தினார். இந்துக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தார். ஜிசியா வரி, மேய்ச்சல் வரி, வீட்டு வரி போன்ற பல வரிகளை அவர்கள் மீது திணித்தார்.
பெரிய அளவிலான ஒரு நிரந்தர படையை உருவாக்கிய முதல் சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஆவர். விந்திய மலையைக் கடந்து சென்ற தென் இந்தியாவையும் வென்றார். பாமத் கான மசூதி, அலைதர்வாசா, சீரிக்கோட்டை, ஆயிரம் தூண்கள் அரண்மனை போன்றவற்றை கட்டினார். இவர் சிறந்த ஒரு வெற்றியாரும் நிர்வாகியும் ஆவார். உறுதியான கொள்கையை உடையவராக அலாவுதீன் செயல்பட்டார்.
சுல்தான் அலாவுதீன் கில்ஜி ஒரு குறிக்கோளுடன் கூடிய உறுதி மிக்க ஆட்சியாளர். தனது வெற்றியின் அடித்தளத்திற்கு வலுவான, நிலையான படைகளை நாடெங்கும் நிலை நிறுத்தினார்.
சந்தைப் பொருள்களுக்குச் சரியாகக் கணக்கிட்டு விலை விதித்து, அதற்கான விதிகள் இயற்றினார். அதனைக் கண்காணிக்க அரசு அலுவலர்களை நியமித்தார். பெருஞ் சந்தைகளில் விளைபொருள்களுக்கு சரியான விலையில் விற்கப்படுவதை கண்காணிக்க அரசு மேற்பார்வையாளர்களை நியமித்தார்.
கூடுதல் விலையில் விளைபொருள்களை விற்கும் வணிகர்கள் மீது கடும் தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் சரியான விலை கொடுத்து மக்கள் பொருள்கள் வாங்கினர்.
தேவைக்கு அதிகமான விளைபொருள்கள் அரசு கிடங்குகளில் சேமிக்கப்பட்டது. இதனால் வறட்சிக் காலத்தில் விளைபொருள்கள் பற்றாக்குறை சமாளித்தார்.
கில்ஜி மரபின் முடிவு
அலாவுதீன் கில்ஜி 1316 ஆம் ஆண்டு இறந்து போகிறார். அதற்குப் பின் அவருடைய வழித்தோன்றல்கள் கில்ஜி வம்சத்தை தக்க வைத்துக்கொள்ளும் ஆற்றலை பெற்றிருக்கவில்லை.
குஸ்ரு–ஷா (கி.பி. 1320) ஆகியோர் பதவி ஏற்றார். ஆயினும் திறமையற்ற இவர்களது ஆட்சியினால் கில்ஜி மரபு கி.பி. 1320 முடிவுக்கு வந்தது. தொடர்ச்சியாக பஞ்சாபின் ஆளுநர் காசி மாலிக் உயர்குடியினர் உதவியுடன் கியாசுதீன் துக்ளக் என்ற பெயரில் டெல்லியைக் கைப்பற்றி துக்ளக் வம்சத்தை தோற்றுவித்தார்.
கில்ஜி வம்சம் பாடத்தை நன்றாகப் படித்துவிட்டீர்களா? இதிலிருந்து 10 வினாக்களைக் கேட்டால் உங்களால் சரியான பதிலைச் சொல்ல முடியுமா? யோசிக்க வேண்டாம்.. உடனுக்குடன் சுய பரிசோதனை செய்து பார்க்க TOUCH HERE