உள்ளடக்கத்துக்குச் செல்

எகிப்தின் சயீது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எகிப்தின் சயீது
எகிப்து மற்றும் சூடானின் ஆட்சியாளர்
ஆட்சி1854 – 1863
முன்னிருந்தவர்முதலாம் அப்பாசு
பின்வந்தவர்இஸ்மாயில் பாஷா
துணைவர்இஞ்சி ஹனிம்
மெலெக்பர் ஹனிம்
வாரிசு(கள்)மொகமது துசவுன் பாஷா
மக்மூத் பாஷா
அரச குலம்முகமது அலி வம்சம்
தந்தைஎகிப்தின் முகமது அலி
தாய்அய்ன் அல்-ஹயாத் காதின்
பிறப்பு17 மார்ச் 1822
கெய்ரோ, எகிப்து
இறப்பு17 சனவரி 1863 (வயது 40)
கெய்ரோ, எகிப்து
அடக்கம்இமாம் -ஐ ஷாஃபி கல்லறை, கெய்ரோ, எகிப்து

முகமது சயீது பாஷா (Mohamed Sa'id Pasha) (மார்ச் 17, 1822 - சனவரி 17, 1863) இவர் 1854 முதல் 1863 வரை எகிப்து மற்றும் சூடானின் ஆளுநராக இருந்தார். அதிகாரப்பூர்வமாக உதுமானியப் பேரரசின் கீழ் இருந்தாலும், நடைமுறையில் மறைமுகமாக சுதந்திரமாக இருந்தார். முகம்மது அலி பாஷாவின் நான்காவது மகனான இவர் பாரிஸில் படித்தார். மேலும், பிரெஞ்சு மொழியை அறிந்து வைத்திருந்தார். இவரது நிர்வாகக் கொள்கைகள் தனிப்பட்ட நில உரிமையாளரின் வளர்ச்சியை ஊக்குவித்தன. மேலும் ஷேக்குகளின் (கிராமத் தலைவர்கள்) செல்வாக்கைக் குறைத்தன.

இவர் எகிப்தின் ஆளுநராக இருந்த (1805-48) முகம்மது-அலி பாஷாவின் நான்காவது மகனாவார். ஒரு குழந்தையாக இருந்தபோது, எகிப்தில் வசிக்கும் ஐரோப்பிய தூதர்களை தினமும் சந்திக்குமாறு தனது தந்தையால் இவர் நிர்பந்திக்கப்பட்டார். இதன் விளைவாக இவர் பிரெஞ்சு தூதரான பெர்டினாண்ட் டி லெசெப்சுடன் நட்பு கொண்டார்; இவர்களின் நட்பு பல ஆண்டுகளுக்குப் பிறகு சூயஸ் கால்வாய் கட்டுமானத்திற்கு வழிவகுத்தது. இவரது தந்தையின் ஆட்சிக் காலத்தில், இவர் கடற்படையின் தலைவரானார். பரஸ்பர பகைமை இருந்தபோதிலும், இவர் தனது மருமகன் முதலாம் அப்பாசு (1848–54) ஆட்சியின் போது பதவியை தக்கவைத்துக் கொண்டார். பின்னர், அப்பாசுக்குப் பின்னர் எகிப்தின் ஆளுநரானார்.

நிர்வாகம்

[தொகு]

இவரது ஆட்சியின் கீழ் பல சட்டங்களும், நிலம் மற்றும் வரி சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டன. எகிப்திய மற்றும் சூடான் உள்கட்டமைப்பில் மேற்கத்திய பாணியைப் பயன்படுத்தி சில நவீனமயமாக்கல்களும் நிகழ்ந்தன. 1854 ஆம் ஆண்டில் சுயஸ் கால்வாய்க்கான நிலம் ஒரு பிரெஞ்சு தொழிலதிபரும், தூரருமான பெர்டினாண்ட் டி லெசெப்சு என்பவருக்கு வழங்கப்பட்டது. ஒரு பிரெஞ்சுக்காரருக்கு கால்வாயைக் கட்டியெழுப்ப அனுமது வழங்கப்பட்டதை ஆங்கிலேயர்கள் எதிர்த்தனர். மேலும், இந்த அனுமதியை இரண்டு வருடங்களுக்கு நிறுத்தி வைக்க உதுமானியப் பேரரசை நிர்பந்தித்தனர்.

அமெரிக்க உள்நாட்டுப் போர் ஒரு பருத்தி பஞ்சத்தைக் கொண்டுவந்தபோது, இவரது ஆட்சியின் போது எகிப்திய பருத்தியின் ஏற்றுமதி அதிகரித்து ஐரோப்பிய ஆலைகளுக்கு முக்கிய ஆதாரமாக அமைந்தது. 1863 இல் இரண்டாம் மெக்சிகன் இராச்சியத்திற்கு எதிரான கிளர்ச்சியைத் தணிக்க மூன்றாம் நெப்போலியனுக்கு உதவுவதற்காக இவர் சூடான் படையின் ஒரு பகுதியை அனுப்பினார். இவரது ஆட்சியிலேயே பல ஷேக்குகளின் செல்வாக்கு தடை செய்யப்பட்டது.

அடிமை வியாபாரம்

[தொகு]

தனது இராணுவத்திற்கான அடிமைகளை பெறுவதற்காக சூடான் 1821 ஆம் ஆண்டில் இவரது தந்தையால் கைப்பற்றப்பட்டு எகிப்திய இராச்சியத்துடன் இணைக்கப்பட்டது. அடிமை வியாபாரம் சூடானுக்கு அப்பால் கோர்டோபனிலும், எத்தியோப்பியாவிலும் பரவியது. சூடானில் எகிப்திய அடிமை வியாபாரத்தை இரத்து செய்ய ஐரோப்பியர்களின் அழுத்தத்தை எதிர்கொண்ட சயீது, அடிமை வியாபாரத்தைத் தடைசெய்தார். ஆனாலும் ஒருசில அடிமை வர்த்தகர்கள் இவரது ஆணையை புறக்கணித்தனர்.

பணிகள்

[தொகு]

1854 இல் இவர் எகிப்து வங்கியை நிறுவினார். அதே ஆண்டில் நைல் மற்றும் அலெக்சாந்திரியா ஆகியவற்றுக்கிடையே எகிப்தின் முதல் இருப்புப்பாதை போடப்பட்டது. [1]

குடும்பம்

[தொகு]

இவர் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். முதல் மனைவிக்கு அகமது செரீப் பாஷா என்ற ஒரு மகனும், இரண்டாவது மனைவிக்கு முகமது துசௌன் பாஷா, மகமூத் பாஷா என்ற இரு மகன்களும் இருந்தனர். சயீதுவின் வாரிசான அகமத் ரிபாத் 1858 ஆம் ஆண்டில் நடந்த ஒரு இரயில் விபத்தில் நைல் நதியில் மூழ்கி இறந்து போனார். [2]

இறப்பு

[தொகு]

சனவரி 1863 இல் இறந்த சயீதுவின் உடல் எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் உள்ள இமாம் ஐ-ஷாஃபியின் கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. இவருக்குப் பிறகு இவரது மருமகன் இசுமாயில் பாஷா என்பவர் பதவிக்கு வந்தார்.

கௌரவங்கள்

[தொகு]

மத்திய தரைக்கடல் துறைமுகத்திற்கு இவரது பெயரிடப்பட்டது.

  •  பெல்ஜியம்: அரசின் சார்பில் லியோபோல்ட் ஒழுங்கு விருது 1855 இல் வழங்கப்பட்டது. [3]
  • உதுமானியப் பேரரசின் மகிமைக்கான ஒழுங்கு
  • உதுமானியப் பேரரசின் ஒழுங்கின் சிறப்பு வகுப்பு
  • உதுமானியப் பேரரசின் பிரபுக்களின் ஒழுங்கின் சிறப்பு வகுப்பு - 1853
  • பிரான்சின் செவாலியே விருது - 1863

குறிப்புகள்

[தொகு]
  1. Hugh Hughes (1981). Middle East Railways. Continental Railway Circle. p. 13. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-9503469-7-7.
  2. Hughes, 1981, page 17
  3. Le livre d'or de l'ordre de Léopold et de la croix de fer, Volume 1 /Ferdinand Veldekens

மேலும் படிக்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Sa'id of Egypt
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=எகிப்தின்_சயீது&oldid=3070823" இலிருந்து மீள்விக்கப்பட்டது