ஒருமைய வலய மாதிரி
ஒருமைய வலய மாதிரி (Concentric zone model) என்பது நகர்ப்புற சமூகப் பரம்பலை விளக்கும் மிகமுந்திய கோட்பாட்டு மாதிரி ஆகும். 1924 ஆம் ஆண்டில் சமூகவியலாளரான ஏர்னஸ்ட் பர்கெசு (Ernest Burgess) என்பவரால் இது முன்வைக்கப்பட்டதால் இதை பர்கெசு மாதிரி என்றும் அழைப்பது உண்டு.
மாதிரி
[தொகு]மானிடச் சூழலியலை அடிப்படையாகக் கொண்டு பர்கெசு உருவாக்கி சிக்காகோ நகர அமைப்புத் தொடர்பில் பயன்படுத்திப் பார்க்கப்பட்ட இந்த மாதிரியே நகரங்களில் காணப்படும் சமூகக் குழுக்களின் பரம்பல் குறித்த முதல் விளக்கம் ஆகும். இது நகர்ப்புற நிலப் பயன்பாட்டை ஒருமைய வளைய அமைப்பில் தருகிறது. இதன்படி மைய வணிகப் பகுதி நகரின் மையப் பகுதியில் இருக்க, நகரின் விரிவாக்கம் வெவ்வேறு நிலப் பயன்பாடுகளுக்கு உரிய வளையங்கள் வடிவில் இடம்பெறுகிறது. இந்த மாதிரியை, ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் வொன் துனென் (Von Thunen) என்பவர் உருவாக்கிய பிரதேச நிலப் பயன்பாட்டு மாதிரியின் நகர்ப்புற வடிவம் எனக் கொள்ளலாம்.
நகரங்களில் காணப்படுபவை என இந்த "மாதிரி" அடையாளம் கண்ட வலயங்கள் வருமாறு:
- மைய வணிகப் பகுதி. நகரின் மையப் பகுதியில் அமைவது.
- தொழிற்சாலை வலயம்
- மாறுநிலை வலயம். கலப்புக் குடியிருப்புப் பகுதிகளையும், வணிக பகுதிகளையும் கொண்டது.
- தொழிலாள வகுப்பினர் வலயம். தொழிலாள வகுப்பினர் வாழும் குடியிருப்புப் பகுதிகளைக் கொண்டது. பிற்காலங்களில் இதை கட்டற்ற தொழிலாளர் வீட்டு வலயம் என்கின்றனர்.
- குடியிருப்புப் பகுதி. இது பெரும்பாலும் நடுத்தர வகுப்பினர் வாழும் பகுதி. நல்ல தரத்தில் அமைந்த வீடுகளைக் கொண்டது.
- பயணம் செய்வோர் வலயம். இது அன்றாடம் வேலைத் தலங்களுக்குப் பயணம் செய்வோர் வாழும் புறநகர்ப் பகுதிகளை உள்ளடக்கியது.
முன்னர் நகரை கீழ்-இடை-மேல் என்னும் பிரிவுகளாகப் பிரித்தனர். இதன்படி மைய வணிகப் பகுதி கீழ்நகரம் என்றும், வசதி படைத்தவர்கள் வாழும் குடியிருப்பு வெளிப் பகுதி மேல் நகரம் என்றும், இரண்டுக்கும் இடையில் காணப்படும் பகுதிகள் இடை நகரம் என்றும் கொள்ளப்பட்டன. மேற் சொன்ன பிரிப்பு முறையை விட ஒருமைய வலய மாதிரி விரிவானது.
பர்கெசின் ஆய்வு வாடகைக் கேள்வி வளைவை அடிப்படையாகக் கொண்டது. இக் கோட்பாட்டின் கூற்றுப்படி, ஒருமைய வளையங்கள், மக்கள் நிலத்துக்குக் கொடுக்க விரும்பும் பணத்தின் அளவை அடிப்படையாகக் கொண்டவை. மேற்படி நிலத்தின் மதிப்பு அந்நிலத்தில் இடம்பெறக்கூடிய வணிக முயற்சியில் இருந்து கிடைக்கக்கூடிய இலாபத்தின் அளவில் தங்கியுள்ளது. நகரின் மையப்பகுதி அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் என்பதால் சில்லறை வணிக முயற்சிகளுக்கு இப்பகுதி அதிக இலாபம் தரக்கூடியது. உற்பத்தி நடவடிக்கைகள் சற்றுக் குறைவான தொகையையே நிலத்துக்குத் தர விரும்புவர். தொழிலாளர்கள் இலகுவாக அணுகத் தக்கதாகவும், பொருட்களை இலகுவாக உள்ளே கொண்டுவரவும், வெளியே கொண்டு செல்லவும் கூடியதாகவும் இருப்பது உற்பத்தி முயற்சிகளுக்கு முக்கியமானது. நிலத்துக்குக் குறைவான விலையையே கொடுக்கக்கூடிய குடியிருப்பு நடவடிக்கைகள் இவற்றுக்கு வெளியே உள்ள பகுதிகளை எடுத்துக்கொள்கின்றன.
குறை நிறைகள்
[தொகு]பல புவியியலாளர்கள் இந்த மாதிரி குறித்துக் கேள்வியெழுப்பி உள்ளனர். முதலாவதாக, இந்த மாதிரி ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியேயுள்ள நகரங்களுக்குப் அவ்வளவு ஏற்புடையதாக இல்லை. முக்கியமாக பல்வேறு வரலாற்றுப் பின்னணிகளின் கீழ் வளர்ச்சியடைந்த நகரங்களுக்கு இம்மாதிரி பொருத்தமாக இல்லை. ஐக்கிய அமெரிக்காவில் கூட, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பவை காரணமாகத் தற்காலத்தில் நகரங்கள் தற்காலத்தில் தெளிவான வலயங்களாக ஒழுங்கமைவதில்லை.
- இது விசித்திரமான ஐக்கிய அமெரிக்க நகரங்களையே விவரிக்கிறது. இங்கே உள்நகரங்கள் ஏழ்மையாகவும், புறநகர்கள் செல்வம் மிகுந்தவையாகவும் உள்ளன. ஏனைய இடங்களில் இது மறுதலையாக உள்ளது.
- இது நிலப்பகுதி ஒருதன்மைத்தான, மாறுபாடுகளற்ற நிலத்தோற்ற அமைப்புடன்கூடிய சம இயல்புகளைக் கொண்டிருப்பதாக எடுத்துக்கொள்கிறது.
- சில இயற்பிய அம்சங்கள், குன்றுகள், நீர்நிலைகள் போன்றவை குடியிருப்புக்களுக்கு வாய்ப்பாக அமையக்கூடும்.