கணுக்காலி
கணுக்காலி புதைப்படிவ காலம்:கேம்பிரியன் – தற்காலம் வரை | |
---|---|
கணுக்காலிகள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
துணைத்திணை: | யூமெட்டாசோவா
|
பெருந்தொகுதி: | எக்டைசோசூவா
|
தொகுதி: | கணுக்காலி லேட்ரெல்லே, 1829
|
துணைத்தொகுதி மற்றும் வகுப்பு | |
|
கணுக்காலிகள் ((ⓘ) (Arthropod) என்பவை விலங்குகளின் பிரிவில் ஒரு மிகப் பெரிய தொகுதி. ஆறு கால்கள் கொண்ட பூச்சிகளும், வண்டுகளும், தேளினங்களும், எட்டுக்கால் பூச்சி, சிலந்திகளும், நண்டுகளும் அடங்கிய மிகப் பெரிய உயிரினப்பகுப்பு. இன்று மனிதர்களால் அறிந்து விளக்கப்பட்ட விலங்குகளில் 80% க்கும் மேல் கணுக்காலிகளைப் பற்றியவைதாம். கணுக்காலிகளை அறிவியலில் ஆர்த்ரோபோடா (Arthropoda) என்பர். இது கிரேக்க மொழியில் உள்ள ἄρθρον ஆர்த்ரோ (= இணைக்கப்பட்ட, கணு) என்னும் சொல்லும் ποδός (போடொஸ் = கால்) என்னும் சொல்லும் சேர்ந்து ஆக்கப்பட்டது. கணுக்காலிகளுக்குக் கடினமான புறவன்கூடு உண்டு. இவற்றின் உடல், பகுதி பகுதியாக, அதாவது கண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள அமைப்பு கொண்டது. இவற்றின் கால்கள் இணை இணையாக ஒவ்வொரு உடற் கண்டத்திலும் உள்ளன. பிப்ரவரி 29, 2016 அன்று, 2013ல் தெற்குச் சீனாவில் கண்டெடுக்கப்பட்ட சுமார் 52 கோடி (520 மில்லியன்) ஆண்டுகள் பழமையான கணுக்காலியின் தொல்படிம மேட்டின் கூடுதல் படிமம் மற்றும் கள ஆய்வில் அதன் வயிற்றின் கீழ்ப்பகுதியில் செல்லும் கயிறு போன்ற ஒன்று அதன் கீழ்நரம்பு வடம் எனப் புரசீடிங்சு ஓப் நேச்சரல் அகாடமி ஆப் சயன்சசு இதழில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். [1]
கணுக்காலிகளில் பிளாங்க்டன் (plankton) வகையைச் சேர்ந்தவையின் 0.25 மி.மீ. அளவில் இருந்து, 20 கிலோ கிராம் எடையுடன் 4 மீட்டர் (12-13 அடிகள்) கால் விரிப்பு அகலம் கொண்ட மிகப்பெரிய நிப்பானிய எட்டுக்கால் நண்டு வரை மிகப்பல வகைகள் உள்ளன.
கணுக்காலிகளை வேறுபடுத்திக் காட்டும் முக்கிய மூன்று இயல்புகள்:
- கைட்டினாலான புறவன்கூடு
- துண்டுகளாலான உடல்
- மூட்டுள்ள தூக்கங்கள் (மூட்டுள்ள கால்கள்)
இவை பார்வைக்காகக் கூட்டுக்கண்களையும் ஒசிலி எனும் பார்வைப் புலனங்கத்தையும் பயன்படுத்துகின்றன. பூச்சிகளில் கூட்டுக்கண்ணே பிரதானமான பார்வைப் புலனங்கமென்றாலும், சிலந்திகளில் ஒசிலிகளே பிரதான பார்வைப் புலனங்கங்களாகும். பூச்சிகளின் ஒசிலிக்களால் ஒளி வரும் திசையை மாத்திரமே கணிக்க முடியும். எனினும் சிலந்திகளின் ஒசிலிக்களால் முழு உருவத்தையும் கணித்துக்கொள்ள முடியும். கேம்பிரியன் காலப்பகுதியிலிருந்து கணுக்காலிகள் பூமியில் உள்ளன. அவற்றின் உடலகக் கட்டமைப்பின் சிறப்புத் தன்மையால், விலங்குகளில் அதிகளவான இனங்களும், அதிகளவான தனியன்களும் கணுக்காலிகளாக உள்ளன. எனவே இவையே விலங்குக் கூட்டங்களுள் அதிக வெற்றியுடைய கூட்டமாக உள்ளன. எனினும் உலகிலுள்ள உயிரினங்களுள் பாக்டீரியாக்களே அதிக இனங்களையும், அதிக தனியன்களையும் கொண்ட கூட்டமாகும்.
கணுக்காலிகள் மனித வாழ்வில் பல்வேறு தாக்கங்களைக் காட்டுகின்றன. நாம் உண்ணும் உணவில் முக்கியப் பங்கை வகிக்கும் இறால், நண்டு என்பன கணுக்காலிகளே. ஒவ்வொரு வருடமும் பயிர்களின் அறுவடைக்கு முன்னமும் பின்னரும் பயிரையும் விளைச்சலையும் அழித்துப் பல கோடி ரூபாய் நஷ்டத்தை ஏற்படுத்தும் பீடைகளில் அதிகமானவை கணுக்காலிகளே. தாவரங்களின் தேனை உறிஞ்சி அவற்றின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் வண்ணத்துப் பூச்சிகளும், தேனீக்களும் கணுக்காலிகளாகும். எறும்புகளும் இக்கூட்டத்தைச் சேர்ந்தவையே ஆகும். எனவே உயிரினப் பல்வகைமையில் கணுக்காலிகள் முக்கியப் பங்கை வகிக்கின்றன.
இனப்பல்வகைமை
[தொகு]ஒரு கணிப்பின் படி இதுவரை அறியப்பட்ட கணுக்காலி இனங்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 1,170,000 ஆகும். எனினும் புவியில் வாழும் கணுக்காலி இனங்களின் உண்மையான எண்ணிக்கை 5-10 மில்லியன்கள் எனக் கணிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் எண்ணிக்கை ஒரு பிரதேசத்தின் சராசரி இனப்பல்வகைமையைக் கொண்டே கணிக்கப்படுகின்றது. எனினும் துருவப் பிரதேசங்களை விட அயனமண்டலப் பிரதேசங்களின் கணுக்காலி இனங்களின் பல்வகைமை மிக அதிகமாகும். 1992ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் படி கோஸ்டா ரிகா எனும் சிறிய அயன மண்டல நாட்டில் மாத்திரம் 365,000 கணுக்காலி இனங்கள் உள்ளன. எனினும் துருவங்களுக்கருகிலுள்ள மிகப்பெரிய நாடுகளிலும் இவ்வெண்ணிக்கை இதை விடக் குறைவாகவும் காணப்படலாம்.
உடலமைப்பு
[தொகு]கணுக்காலிகளின் மிக முக்கியமான தனித்துவமான இயல்பு மூட்டுள்ள தூக்கங்களைக் கொண்டிருத்தலும், கைட்டினாலான புறவன்கூட்டைக் கொண்டிருத்தலுமாகும். இம்மூட்டுள்ள தூக்கங்கள் கணுக்காலிகளின் இடப்பெயர்ச்சி, உணவுண்ணல், புலனுகர்ச்சி போன்றவற்றிற்கு உதவும். இவை இருபக்கச் சமச்சீருள்ள, முப்படை கொண்ட, அனுப்பாத்து துண்டுபட்ட உடலுடைய விலங்குகளாகும். இவற்றிற்குப் பூரணமான உணவுக்கால்வாய் உண்டு. கணுக்காலிகள் திறந்த குருதிச்சுற்றோட்டத் தொகுதியை உடையவையாகும். இவை ஒடுக்கப்பட்ட உடற்குழியையும் நன்கு விருத்தியடைந்த குருதிக் குழியையும் கொண்டுள்ளன. நன்கு விருத்தியடைந்த வரித்தசை காணப்படும். இக்கூட்டத்தில் தலையாகு செயலும், புறத்தே குறித்த எண்ணிக்கையான உடற்துண்டங்கள் இணைவதன் மூலம் தக்குமா ஆகும் செயலும் சிறப்படைந்து காணப்படுபவை. பூச்சிகளில் தலை, நெஞ்சறை, வயிறு என மூன்று தக்குமாக்களும் (Tagma) நண்டு, இறால் பொன்ற கிரஸ்டீசியன்களில் தலைநெஞ்சு, வயிறு என இரண்டு தக்குமாக்களும் உள்ளன. முளையவிருத்தி இயல்புகளின் அடிப்படையில் கணுக்காலிகள் புரொட்டோஸ்டோம் விலங்குகளாகும். அதாவது இவற்றின் முளைய விருத்தியில் சமிபாட்டுத் தொகுதியில் முதலில் விருத்தியடைவது அவற்றின் வாயாகும். எனினும் முள்ளந்தண்டுளிகள் போன்ற Deutorosome விலங்குகளில் குதமே முதலில் விருத்தியடைகின்றது. வாழும் சூழலுக்கேற்றபடி இனங்களின் சுவாசத்தொகுதியும் இனப்பெருக்க முறையும் வேறுபடுகின்றன. நீரில் வாழும் கணுக்காலிகள் பொதுவாகப் புறக்கருக்கட்டல் முறையையும், நில வாழ் கணுக்காலிகள் அகக்கருக்கட்டல் முறையையும் பின்பற்றுகின்றன.
கணுக்காலிகளின் புறவன்கூடு ஓரளவுக்கு மிகவும் பலமானதாகும். இது அவற்றை அதிக வெப்பநிலை, நீரிழப்பு, பாதகமான கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கின்றது. எனினும் இவ்வாறு உறுதியான புறவன்கூட்டுடன் கணுக்காலியொன்றால் வளர்ச்சியடைய முடியாது. எனவே இவற்றின் வளர்ச்சிக்காலத்தில் புறவன்கூட்டை அகற்றிய பின்னரே வளர்கின்றன. வளர்ந்த பின்னர் புதிய உறுதியான புறவன்கூட்டை ஆக்குகின்றன. அடுத்த வளர்ச்சிக் கட்டத்தில் மீண்டும் இவ்வாறு தோல் கழற்றப்படும். எனவே இவற்றின் வளர்ச்சியொழுங்கு நேரியதாகக் காணப்படாது. புறத்தோலை அகற்ற முன்னர் இவை உணவுண்பதை நிறுத்தி விடும். பின்னர் நொதியங்களைச் சுரந்து புறவன்கூடு உடலுடன் பொருந்தியுள்ள பகுதியை நீக்கி விடுகின்றன. அதிகளவான வளியையும், நீரையும் உடலினுள் எடுத்து உடலை ஊதச் செய்து பழைய புறவன்கூட்டை உடைத்து நீக்கி விடுகின்றன. அனேகமான கணுக்காலிகள் தங்களது நீக்கப்பட்ட பழைய புறவன்கூட்டை உண்டு விடுகின்றன. பழைய புறவன்கூட்டை நீக்கும் போதே மெல்லிய உறுதியற்ற புதிய புறவன்கூடு உருவாகியிருக்கும். எனினும் இது உறுதி பெறும் வரை கணுக்காலிக்குச் சிறந்த பாதுகாப்பை அளிக்காது. எனவே வளர்ச்சியடையும் காலத்திலேயே அனேகமான கணுக்காலிகள் ஊனுண்ணிகளால் தாக்கப்பட்டு இறக்கின்றன.
இனப்பெருக்கமும் விருத்தியும்
[தொகு]அனேகமான நீர்வாழ் கிரஸ்டேசியன்களில் புறக்கருக்கட்டல் நிகழும். அனைத்து நிலவாழ் கணுக்காலிகளிலும் அகக்கருக்கட்டலே நிகழ்கின்றது. அதாவது சூழ் பெண்ணங்கியின் உடலினுள்ளேயே இருக்கும் படியாக அசையும் விந்துக்கள் மூலம் கருக்கட்டப்படுவது. சில அங்கிகளில் மாத்திரம் கன்னிப்பிறப்பு காணப்படுகின்றது. அதாவது ஆணங்கியின் துணையின்றி சந்ததியை உருவாக்கல். கருக்கட்டலின் பின்னர் அனேகமான கணுக்காலிகள் முட்டையீனுகின்றன. சில தேள் இனங்கள் மட்டும் சூற்பிள்ளையீனல் (முட்டை தாயினுள்ளேயே பொரித்து குட்டி ஈனப்படல்) காணப்படுகின்றது. பல கணுக்காலிகள் உருமாற்ற விருத்தியைக் காண்பிக்கின்றன. சில குடம்பிப் பருவமுள்ள நிறையுருமாற்றத்தையும், சில அணங்குப் பருவமுள்ள குறையுருமாற்றத்தையும் காண்பிக்கின்றன. கிறஸ்டேசியன்களில் பொதுவாக முட்டையிலிருந்து நோப்பிளியஸ் எனும் குடம்பிப் பருவம் வெளிவரும். சில கணுக்காலிகளில் நேர்விருத்தி (முட்டையிலிருந்து சிறிய நிறையுடலி வெளிவரல்) முறையும் உள்ளது.
வகைப்பாடு
[தொகு]கணுக்காலிகள் ஐந்து பிரதான உபகணங்களுக்குள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒரு கணம் இனமழிந்த உயிரினங்களை உள்ளடக்கியதாகும்.[2]
- திரில்லோபைட்டுக்கள்: பேர்மியன் காலத்து உயிரினங்கள்; தற்போது அழிவடைந்துள்ளன.
- செலிசரேட்டா: சிலந்தி, தேள், உண்ணி போன்ற வகுப்பு அரக்னிடா அங்கிகளை உள்ளடக்கியது. இவற்றின் வாய்க்கு அருகில் கொடுக்குக் கொம்பு (செலிசரேட்) எனும் தூக்கம் இருக்கும். இவற்றின் உடல், தலை, முற்பகுதி, பிற்பகுதி என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதில் முற்பக்கத்தில் 4 சோடிக் கால்கள் காணப்படும். இவற்றில் உணர்கொம்புகள் காணப்படுவதில்லை. சுவாசம் ஏட்டு நுரையீரல் மூலம் மேற்கொள்ளப்படும். கழிவகற்றல் மல்பீசியன் சிறுகுழாய்கள் மூலம் நிகழும். இவற்றில் கழிவுப் பொருளாக யூரிக்கு அமிலம் வெளியேற்றப்படும். அனேகமானவை ஊனுண்ணிகளாகவும் சில ஒட்டுண்ணிகளாகவும் உள்ளன. இவற்றில் முன்சோடிக் கால்கள் புலனுறுப்பாக உணரடியாகத் திரிபடைந்திருக்கும். அரக்னிட்டுக்களில் எளிய கண்கள் பார்வைக்காக உள்ளன. தேளில் வாலில் நச்சுக் கொடுக்கு உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
- பலகாலி *மைரியபோடா): மரவட்டை, பூரான் போன்ற உயிரினங்களை உள்ளடக்கியது. இவற்றின் உடல் பல துண்டங்களாலானது. ஒவ்வொரு துண்டமும் ஒரு சோடி அல்லது இரு சோடி தூக்கங்களைக் கொண்டிருக்கும். உதாரணமாக மரவட்டையில் (வகுப்பு திப்லோபோடா) துண்டத்துக்கு இரு சோடி தூக்கங்களும் (துண்டத்துக்கு 4 கால்கள்), பூரானில் (வகுப்பு கைலோபோடா) துண்டத்துக்கு ஒரு சோடி தூக்கங்களும் காணப்படும். அனைத்திலும் மல்பீசியன் சிறுகுழாய்கள் மூலம் கழிவகற்றல் மேற்கொள்ளப்படும். இவற்றில் ஒரு சோடி உணர்கொம்புகளும், இரு சோடி எளிய கண்களும் புலனுறுப்புகளாக உள்ளன. வாதனாளித் தொகுதி மூலம் மூச்சு மேற்கொள்ளப்படும்.
- கிரசிட்டேசியன்கள்: பொதுவாக நீர்வாழ் உயிரினங்கள். நண்டு, இறாள், பர்னக்கிள் மற்றும் மேலும் பலவற்றை உள்ளடக்கிய உபகணம். இவற்றில் புலனங்கங்களாக இரு சோடி உணர்கொம்புகளும், காம்புடைய ஒருசோடி கூட்டுக்கண்களும் உள்ளன. இவற்றில் இரண்டாம் சோடி சிறிய உணர்கொம்பிற்குக் கீழுள்ள பசுஞ்சுரப்பியினால் கழிவகற்றல் மேற்கொள்ளப்படும். அனேகமாக கழிவுப் பொருளாக அமோனியா காணப்படுகின்றது. பூக்கள் மூலம் சுவாசம் மேற்கொள்ளப்படும். நண்டுகளின் புறவன்கூட்டில் கைட்டினுடன் வலுவூட்டுவதற்காக சுண்ணாம்பும் சேர்க்கப்பட்டிருக்கும். இவற்றில் நோபிளியசு எனும் குடம்பிப் பருவம் வாழ்க்கை வட்டத்தில் உருவாக்கப்படுகின்றது. இவற்றின் உடலானது தலை-நெஞ்சு, வயிறு என இரு பகுப்புகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.
- அறுகாலிகள்: பூச்சிகளையும், பூச்சி போன்ற வேறு ஆறு கால் கணுக்காலிகளையும் உள்ளடக்கிய துணைத்தொகுப்பு.
|
கிரஸ்டேசியா |
படத்தொகுப்பு
[தொகு]-
கணுக்காலிகள் பெரும் பிரிவைச்சேர்ந்த ஓர் உயிரினம்-மெக்சிகோ தொராண்டூலா என்னும் சிலந்தி
-
கரும்பு வேர்வண்டு (டையப்ரிபெசு அப்பிரிவேட்டசு) ஒரு வகை கணுக்காலி
-
எறும்புகளும் கணுக்காலிகள் தொகுப்பைச் சேர்ந்த உயிரினங்கள்தாம். படத்தில் உள்ளது ஆத்திரேலியாவைச் சேர்ந்த ஊன் உண்ணும் ஒருவகை எறும்பு (Iஇரிடோமைர்மெக்சு பர்பூரெசு)
-
எட்டுக்கால் பூச்சி, தமிழ்நாடு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ https://www.sciencenews.org/article/fossil-reveals-ancient-arthropods-nervous-system
- ↑ "Arthropoda". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் August 15, 2006.