உள்ளடக்கத்துக்குச் செல்

கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாணவர்கள் கலந்துரையாடலில் ஈடுபடுகின்றனர்


வாசிங்டன் டி. சியில் இயந்திர மனிதன் உருவாக்கும் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள்
வகுப்பறையில் கற்பித்தல், ஆய்வு உள்ளடக்கத்தில் அரசியல் உள்ளடக்கத்தை இணைத்தல் அல்லது மாணவர்களை கற்பிப்பதற்காக தங்கள் பங்கை துஷ்பிரயோகம் செய்யும் ஆசிரியர்கள் சிந்தனை சுதந்திரம் மற்றும் விமர்சன சிந்தனையை தேடும் கல்வியின் நோக்கங்களுக்கு எதிராக செல்கின்றனர்.

கல்வி (Education) என்பது குழந்தைகளை, உடல் மற்றும் மன வளர்ச்சியில் அறிவு, நல்லொழுக்கம் ஆகிய மதிப்புடன் வளர்க்க உதவும் ஒரு சமூக அமைப்பு ஆகும்.[1] கல்வியாளர்கள் கூற்றின்படி, இளைய தலைமுறையை முறையாக வழி நடத்துவதிலும், சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது. கல்வி என்பது ஒரு சமூக நிறுவனம். அறிவு, திறமை போன்றவற்றையும் தந்து ஒரு புதிய சமூகத்தை உருவாக்கி பண்பாடு, நடத்தை, போன்றவற்றையும் தந்து மனிதனை ஒரு முழுமையான ஆற்றல் உள்ள மனிதனாக மாற்றம் அடைய செய்கிறது. இது சமுதாய நுட்பத் தகைமை ஏற்படுத்துவதையும் கல்வி கற்றலையும், கற்பித்தலையும் குறிக்கும்[2]. இது திறன்கள்,தொழில்கள், உயர்தொழில்கள் என்பவற்றோடு, மனம், நெறிமுறை, அழகியல் என்பவை சார்ந்த வளர்ச்சியையும் சமுதாய வளர்ச்சியில் பங்கு பெறச்செய்யும் அமைப்பு ஆகும்.

கல்வி ஒரு மனிதனின் வாழ்க்கை முழுவதும் வருகிறது.

கல்வி என்ற சொல்லின் பொருள்

[தொகு]

கல்வி என்ற தமிழ்ச் சொல் கல் (ஆய்வு செய்) என்ற வேர்ச் சொல்லில் இருந்து வருகின்றது.[3] கல்வி என்ற சொல்லிற்கான ஆங்கிலச் சொல் Education என்பதாகும். இந்தச் சொல் ēducātiō [4] என்ற இலத்தின் மொழிச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும். இந்த ēducātiō சொல்லானது வளர்த்தல் என்ற பொருளைக் குறிக்கிறது. மேலும் இது கற்பித்தல், பயிற்றுவித்தல் என்னும் பொருளைத் தரும் ēducō [5] என்ற சொல்லை அடிப்படையாகக் கொண்டது. இந்தச் சொல்லிற்கு ஒத்த சொல் வெளிக்கொணரல், உயர்த்திவிடல், முன்னேற்றிவிடல் போன்ற பொருளைத் தரும் ēdūcō என்பதாகும். எனவே கல்வி என்பது தகுந்த சூழ்நிலையை உருவாக்கி மனிதர்களை உள்ளார்ந்த தகுதிகளை வெளியில் கொண்டு வருவது ஆகும்.

கல்வி என்பது புறத்திலிருந்து நம் அகத்திற்கு செல்வது. நம் உடம்பிலுள்ள அறியும் கருவிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி . இவை மூலமாக வெளியிலிருந்து செய்திகள் உள்ளே செல்கின்றன.

வரலாற்றுப் பின்னணி

[தொகு]
பழங்கால இசுலாமியப் பள்ளி , பக்கு, அசர்பைஜான்
நாளந்தா பல்கலைக் கழகம் (கி.பி. 5-ஆம் நூற்றாண்டு), பீகார் மாநிலம், இந்தியா
பிளேட்டோ கல்விக்கூடம், பொம்பெயி, பழங்கால உரோமானிய நகரம்
மட்டேயோ ரிக்கி (Matteo Ricci) (இடது), சு குவாங்கி (Xu Guangqi) (வலது). யூக்ளிட்ஸ் எலமென்ட்ஸ் (Euclid's Elements), சீன மொழிப் பதிப்பு, 1607.

பண்டைக் காலங்களில், மக்கள் ஒருவருக்கொருவர் பார்த்துப் பழகியும், பேச்சு வழக்கிலும், கதைகள் சொல்லியும், கேட்டும் அறிவை வளர்த்துக் கொண்டனர். இந்தப் பின்னணியில் இருந்து கல்வி முறைகள் உருவாயின. எடுத்துக் காட்டாக, கி.மு. 2055-இல், எகிப்தில் பள்ளிக்கூடங்கள் இருந்தன [6]. பிளேட்டோ கிரேக்கத்தில் உள்ள ஏதென்சு நகரத்தில் கி.மு. 387-இல் கல்விக்கூடம் ஒன்றை நிறுவினார். அரிஸ்டாட்டில் (கி.மு.384-கி.மு.322) அங்கு இருபது ஆண்டுக் காலம் பயின்றார். இந்தக் கல்விக்கூடம் தான் ஐரோப்பாவின் முதல் கல்விக் கூடம் ஆகும்.[7] பின், கி.மு.330-இல் அலெக்சாண்டிரியாவில் ஒரு நூலகம் அமைக்கப் பட்டது. உரோமாபுரியின் வீழ்ச்சி (கி.பி. 476), ஐரோப்பாவில் கல்விக்கூடங்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக ஆயிற்று.[8]

சீனாவில், கன்பூசியஸ் (கி.மு.551– கி.மு.479) பரப்பி வந்த கருத்துக்கள் இன்றுவரை சீனா, கொரியா, ஜப்பான், வியட்நாம் ஆகிய நாடுகளில் பின்பற்றப் படுகின்றன.[9]

தென் அமெரிக்காவில், அஸ்டெக் இனத்தவர் (கி.பி. 1300 - கி.பி. 1521 ) தலகாகுஅபகுவாலிஸ்திலி (tlacahuapahualiztli) என்ற ("ஒருவரை அறிவுள்ளவராக ஆக்கும்") முறையைக் கையாண்டு வந்தனர்.[10][11][12] உரோமாபுரியின் வீழ்ச்சிக்குப் பிறகு, கிறித்துவத் திருக்கோவில்கள் கல்வி நிறுவனங்களை அமைத்து நடத்தி வந்தன.[13] பிறகு, அவற்றில் ஒரு சில, பல்கலைக் கழகங்களாக உருவெடுத்தன.[8] கி.பி. 1450-இல் யோகான்னசு கூட்டன்பர்கு(Johannes Gutenberg) என்பவரால் அச்சு எந்திரம் கண்டு பிடிக்கப் பட்ட பிறகு, கல்வி விரைவாகப் பரவலாயிற்று.

இன்று, பல நாடுகளில், இளைய சமுதாயத்தினருக்குக் கல்வி காட்டாயமாக ஆக்கப் பட்டுள்ளது.

கல்வியில் உள்ள இரு பிரிவுகள்

[தொகு]
  1. முறைசார்ந்த கல்வி
  2. முறைசாராக் கல்வி [14].

முறைசார்ந்த கல்வி

[தொகு]

தொழில்முறையில் உள்ள ஆசிரியர்கள்[15]. கற்பித்தலிலும்,பயிற்சி கொடுப்பதிலும் ஈடுபடுவர். இதில் கற்பித்தல் நுணுக்கங்களையும், பாடத்திட்டத்தையும், அனுபவங்களையும் உள்ளடக்கியிருக்கும். ஒரு சுதந்திரமான கல்வி மரபில், ஆசிரியர்கள் தமது பாடங்களுக்காகப் பல துறை உள்ள அறிவையும், தகவல்களையும் பயன்படுத்துவர். உளவியல், மெய்யியல், தகவல் தொழினுட்பம், மொழியியல், உயிரியல், சமூகவியல் என்பன இவற்றுள் அடங்கும். வானியற்பியல், சட்டம், விலங்கியல் போன்ற சிறப்புத் துறைகளைச் சேர்ந்த ஆசிரியர்கள், குறுகிய அறிவுத்துறை சார்ந்த பாடங்களையே கற்பிப்பர். இவர்கள் பெரும்பாலும் உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவர். குறிப்பிட்ட சில திறன்களைக் கற்க விரும்புபவர்களுக்காகச் சிறப்புக் கல்விநெறிகளும் உண்டு. வானூர்தி ஓட்டுனர் பயிற்சி போன்றவை இத்தகைய கல்விநெறிகளுக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

முறைசாரா கல்வி

[தொகு]

முறைசார்ந்த கல்விக்கு[16] முற்றிலும் மாறுபட்டது முறைசாரா கல்வி இக்கல்வியும் ஒரு வடிவமைப்பு கொண்டது. சில பயிற்சிகளையும், மதிப்புகளையும், அறிவையும் வளர்க்க உதவும் முறைகளும் இந்த கல்வி முறையில் இடம் பெறும். ஒரு குடும்பமும், குழந்தைகளுக்குக் கலாச்சாரம், மொழி ஆகியனவற்றைச் சொல்லிக் கொடுக்கின்றன. செய்வன, இது செய்யக்கூடாதது என அறிவுறுத்தல், மற்றும் பழக்கம் வழக்கம் மூலம் தங்கள் பண்பாட்டையும் சொல்லிகொடுப்பது ஆகியன முறைசாரா கல்வி ஆகும்.

முறைசார்ந்த கல்விக்கு ஒரு குறிப்பிட்ட வயது, காலமுறை உண்டு. ஆனால் எந்த விதமான கட்டுபாடுகள் இல்லாத முறையே முறைசாரா கல்வியாகும். இதில் பெரியவராகி பள்ளியில் படிக்கும் வாய்ப்பை இழந்து இருக்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் வாய்ப்புகளை முறைசாரா கல்வி அளிக்கின்றது. 

முறைசாராக் கல்வி வாய்ப்புக்களும் பல உள்ளன. இந்த வகையில் அறிவைப் பெற்றுக்கொள்வதற்கு அருங்காட்சியகங்கள், நூல்நிலையங்கள் போன்றவை உதவுகின்றன. இதற்காகவே இத்தகைய நிறுவனங்கள் சமுதாயத்தின் மானியங்கள் மூலம் நடத்தப்படுகின்றன. தொழில் செய்யும்போது பெற்றுக் கொள்ளும் அனுபவக் கல்வி உட்பட, ஒருவர் தன் வாழ்க்கைக் காலத்தில் பெறும் பட்டறிவும் முறைசாராக் கல்வியுள் அடக்கம்.

குழந்தைகள் விளையாடுதல்

கற்றல் அனுபவம்

[தொகு]

கல்வியானது கற்றல் அனுபவத்தைத் தருகிறது. ஓர் நபரின் கற்றல் அனுபவம் அது மாணவரின் உடல் வளர்ச்சி, உள்ள வளர்ச்சி, மன வளர்ச்சி,உணர்வுகளின்வளர்ச்சி ஆகியவற்றை உள்ளடக்கிய வளர்ச்சியைப் பெற உதவுகிறது.

கற்றல் அனுபவத்தில் ஒரு நபரின் பங்கேற்பு என்பது படிப்பு, ஆய்வுகள், விளையாட்டு, செயல் திட்டத்தில் ஈடுபடுதல், விவாதத்தில் பங்கேற்பு, குழுவேலை போன்றவற்றில் இருக்கிறது.

ஏனைய கல்வி முறைகள்

[தொகு]

மாற்றுக் கல்வி முறை

[தொகு]

மாற்றுக் கல்வி முறையில் (Alternative Education) கல்வி வேறு முறையில் கற்பிக்கப் படுகின்றது. எடுத்துக் காட்டாக, மாற்றுப் பள்ளிகள் (Alternative Schools), தானே கற்றல் (Self Learning), இல்லப் பள்ளி (Home Schooling), பட்டறிவுக் கல்வி (Unschooling) ஆகியன மாற்றுக் கல்வி முறையில் அறிவைக் கற்பிக்கின்றன. மாற்றுக் கல்வி முறையில் தோன்றும் பயனுள்ள கருத்துக்கள் பொதுக் கல்வியிலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுப் பின், நடை முறைப் படுத்தப்படுகின்றது.

தொல்குடி சார்ந்த கல்வி

[தொகு]
Na Schoolyard.
தொல்குடி சார்ந்த அறிவு, மாதிரிகள், செய்முறைகள் - யன்யான், சிச்சுன், சீனா

தொல்குடி சார்ந்த கல்வி (Indigenous Education) என்பது அந்தந்த நாட்டில் பரம்பரையாக வந்த அறிவு, பண்பாடு ஆகியவற்றையும் கல்வி முறையில் சேர்த்து வழங்குவதாகும். பலவகைப் படை எடுப்புக்களினால் அழிந்து வரும் ஓர் இனத்தின் அடையாளம் இவ்வகைக் கல்வி முறையினால் காக்க வாய்ப்பு உண்டாகும்.[17]

கல்வியின் வளர்ச்சியும் சமூகத்தில் அதன் தாக்கமும்

[தொகு]

ஆரம்ப கால கட்டத்தில் குழந்தை குறைவாகவே கற்றது. மனிதன் நாகரீக வளர்ச்சியில், மற்றும் முன்னேற்றத்தில் சேர்த்து வைத்த அனுபவம், அறிவு, இதானால் கல்வியின் வளர்ச்சியும் அதிகமாக தேவைப்பட்டது.

சமூகத்தில் ஓர் ஆற்றல் மிக்க உறுப்பினராக விளங்கவேண்டுமானால் சமூக மதிப்புகள், குறிக்கோள்கள், நம்பிக்கை, விருப்பங்கள், பழக்க வழக்கங்கள் பண்பாடு போன்றவற்றை விதைக்க வேண்டும். அதாவது மனிதன் ஒரு கவிஞனாகவோ, தத்துவமேதையாகவோ, ஒரு நல்ல ஆசிரியாராகவோ, ஒரு திறமை வாய்ந்த மனிதனாகவோ வளரக் கல்வி மிகவும் அவசியம். எனவே, ஒரு சிறந்த சூழ்நிலையை உருவாக்க உடல், உள்ளம், மனவெழுச்சி, சமூக சிந்தனை ஆகிய சிந்தனைகள் வளர கல்வி அவசியம். ஒரு தனி மனிதனின் திறமைகள், அவன் சமுதாயப் பண்பாட்டுச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு உலகில் பங்களிப்பை செய்ய கல்வி துணைபுரியும்.

பள்ளியில் மாணவிகள் கல்வி கற்றல்

கல்வி வழிகாட்டி

[தொகு]

உடல்,[18]. உள்ளம், மனவெழுச்சி, சமூக சிந்தனை ஆகிய ஆன்மிக சிந்தனைகளை வளர்ப்பதில் கல்வி முதன்மையாக உள்ளது. ஒரு தனிமனிதனின் அறிவு, படைப்பாற்றல், மனவெழுச்சி, எதிர் உருவப்படம் பேச்சுவார்த்தை ஆகிய குணங்களை வழிகாட்டியாக இருந்து வளர்ப்பது தேவையாகிறது. வழிகாட்டியாக இருப்பதால்தான் தனிமனிதனின் வாழ்க்கைக்கும், குறிக்கோள்களை அமைக்கவும் பெற்றுக்கொள்ளவும் உதவிகளைப் புரிகிறது. வாழ்கையில் குறிக்கோள்களை அடைய, அவர்களின் சக்தியையும், செயலையும் வழிப்படுத்தும் மனிதனின் அறிவு, படைப்பாற்றல் பிரதிபலிப்பு சக்தி போன்றவற்றைப் பெற கல்வி வழிகாட்டியாக உள்ளது.

குடும்பம் மற்றும் பெண்களின் கல்வி முன்னேற்றம்

[தொகு]

கல்வி பெற்ற கிராம மக்கள் கிராமத்திலிருந்து வெளியேறுவதால் கூட்டுக் குடும்பம் தனிக்குடும்பம் ஆகிறது. இதனால் பெண்களின் தனித்தன்மையின் நிலை உயர்ந்துள்ளது. அதாவது பெண்களும் வேலைக்கு செல்லும் நிலை நகரத்தில் ஏற்படுகிறது. இதனால் பெண்களின் கல்வி நிலை மேம்பாடு அடைந்துள்ளது. இதனால் குடும்பசூழ்நிலையில் ஒருவிதமான மேம்பட்ட நிலையில் அவர்களின் கலாச்சாரம், பொருளாதாரம் போன்றவற்றைக் கல்வி நிர்ணயம் செய்கிறது. எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய்களுக்கு மிகவும் எதிரான ஆயுதம் கல்வியாகும்.[19][19][20][20]

பள்ளி

[தொகு]

பள்ளி[21] என்பது முறையான அமைக்கபட்ட அமைப்பாகும். இதன் வடிவமைப்பில் பள்ளியில் தலைமைஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள், மற்றவர்கள் கூடி பல்வேறுபட்ட பள்ளி செயல்முறைகளில் ஈடுபட்டு குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்கு மற்றும் அமைப்பின் குறிக்கோள் அடையப் பாடுபடுகிறார்கள்.

பள்ளிப்படிப்புக் கல்வி என்பது ஒரு முறையான கல்வித்திட்டம் மூலம் அறிவு, திறமைகள், உடல், உள்ளம், மனவெழுச்சி, சமூக சிந்தனை மற்றும் ஆன்மிகச் சிந்தனைகள் ஆகியவற்றை கல்வி அளிக்கும் இடம் பள்ளிக்கூடம் ஆகும். பள்ளிகள் ஒரு திட்ட வரைவின்படி சிறப்பான பாடப்பிரிவுகள் மூலம் மற்றும் அனுபங்கள், தெரிந்துகொள்ள முடியாதவைற்றை ஒரு அறையில் சொல்லி கொடுக்கும் இடம்தான் பள்ளி. "பள்ளிப்படிப்பு என்பது நீண்ட வாழ்வின் பாடங்களைக் கற்று கொடுப்பது ஆகும். இது குழந்தைப்பருவத்திலிருந்து பள்ளியின் இறுதி வரை செயல்படும்"

முன் தொடக்கப் பள்ளி - குழந்தைப் பருவக் கல்வி

[தொகு]

இந்தக் கல்வி முறையில் 3 வயது முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கல்வி அளிக்கப்படுகிறது. இது குழந்தையின் உடல், உணர்வு மற்றும் அறிவு வளர்ச்சிக்கு முக்கியமானது. இது குழந்தையின் எதிர்காலத்திற்கு ஒரு ஆரோக்கியமான அடிப்படையாக விளங்குகிறது.

தொடக்கக் கல்வி

[தொகு]

தொடக்கக் கல்வி என்பது குழந்தை 5 வயதில் தொடங்கி 10 வயது வரை கல்வி கற்கும் நிலை தொடக்கல்வி ஆகும். இதுதான் குழந்தைக்கு சமூக மதிப்புகள், குறிக்கோள்கள், நம்பிக்கை, விருப்பங்கள், பழக்க வழக்கங்கள் பண்பாடு போன்றவற்றை விதைக்கும் இடம் ஆகும். குழந்தைகளுக்கு முதன்மையான கல்வியை வழங்குவதன் மூலம் முதல் தலைமுறை கற்போருக்கு வாய்புகள் அளிக்கவேண்டும். மற்றும் நாட்டிற்குப் பொறுப்பேற்க, வழிநடத்த, ஒரு குழந்தையைத் தயார் செய்வது இதன் நோக்கம் ஆகும்.

உயர்நிலை கல்வி

[தொகு]

உலகின் பெரும்பாலான நாடுகளில் இடைநிலைக்கல்வி முறையானது இளம் பருவத்தில் ஏற்படுகின்ற கல்வி முறை ஆகும். இது வயது வந்தோருக்கான வளரிளம் விருப்பமான, தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாம் நிலை, (அல்லது) "உயர்" கல்வி. எ.கா. பல்கலைக்கழகம், தொழிற்கல்வி பள்ளி என அழைக்கபடுகிறது. இந்த கல்விக்கு ஏற்ப, விரிவான கல்வியாக மாற்றம் ஏற்படுகிறது. இந்த காலகட்டத்திற்கான பாடசாலைகள் அல்லது அதன் ஒரு பகுதியாக இரண்டாம் நிலை அல்லது உயர்நிலைப் பள்ளிகள், நடுத்தரப் பள்ளிகள், கல்லூரிகள் அல்லது தொழில்சார் பள்ளிகள் என்று அழைக்கப்படலாம். இந்த விதிமுறைகளின் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்விக்கும் ஓர் நாட்டிலிருந்து மற்றோர் நாட்டிற்கு வேறுபடுகின்றன, ஆனால் முக்கியமாக இளம் வயதிலேயே (5-10) இந்த கல்வி ஏற்படுகிறது. அமெரிக்காவில, கனடாவிலும், ஆஸ்திரேலியாவிலும் முதன்மை மற்றும் இரண்டாம் நிலை கல்வியானது சில நேரங்களில் K-12 கல்வி என அழைக்கப்படுகிறது, இந்தியாவில் இரண்டாம்நிலை கல்விக்கான நோக்கம் பொதுவான அறிவை வழங்குவது, உயர்கல்விக்கு, தயாராக்குவது, அல்லது உயர்நிலைப் பள்ளிக் கல்வி மாணவர்களுக்கு ஒரு தொழில் கல்விக்கு நேரடியாக பயிற்சியளிப்பது.

மேல்நிலைக் கல்வி

[தொகு]

இது இரண்டு ஆண்டு கல்வி முறை ஆகும். ஒரு மாணவனின் உயர் கல்விக்கு பிறகு அவனுடைய திறன்களை கண்டு அறிந்து, அவனது திறனுக்கு ஏற்ப திசையில் மாற்றிவிட வேண்டும். இது பெரிய அளவில் அவன்னுடைய வாழ்க்கை முனேற்றத்திற்கு வழிவகுக்கும். மொழி, வரலாறு, புவியியல், பொருளாதாரம், உளவியல், மனவியல், சமுதாயவியல், கலை, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், மண்ணியல், உடற்கல்வி,[22] கலையும் கைத்தொழில் போன்ற பாடப் பிரிவுகளை உள்ளடக்கியது ஆகும்.

சிறப்பு கல்வி

[தொகு]

கடந்த காலத்தில், உடல்ஊனமுற்ற நபர்கள் பெரும்பாலும் படிப்பது இல்லை. குறைபாடுகள் உள்ள குழந்தைகள் மருத்துவர்களால் அல்லது சிறப்பு ஆசிரியாரால் சிறப்பு கல்வி அளிக்கப்படுகின்றனர். இந்தக் கல்வியில் மிகுந்த அக்கறை கொண்ட ஆரம்ப கால மருத்துவர்கள் (இடிர்ட், சேய்கின், ஹோவ், கல்லுடெட் போன்றவர்கள்) இன்று இருக்கும் சிறப்பு கல்விக்கான அடித்தளத்தை அமைத்துள்ளனர். அவர்கள் தனிப்பட்ட அக்கறை, அறிவுறுத்தல்கள் மற்றும் செயல்பாட்டுத் திறமைகளில் கவனம் செலுத்தினார்கள். ஆரம்பகாலங்களில், கடுமையான குறைபாடுகள் கொண்டவர்களுக்கு சிறப்பு கல்வி வழங்கப்படவில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே சிறப்பு கல்வி வழங்கப்பட்டது, ஆனால் சமீபத்தில் இந்த கடினமான கற்றல் அனுபவம் அனைவருக்கும் கிடைக்குமாறு சூழ்நிலை உருவாகியுள்ளது.

பல்கலைக்கழக கல்வி அல்லது தொழிற்கல்வி

[தொகு]

இந்த நிலை மாணவர்கள் மேற்படிப்பு அல்லது தொழிற்கல்வியாக அமையலாம். இக்கல்வி அவர்களுக்கு உண்மையான மற்றும் பழமையான அறிவு, மற்றும் நம்பிக்கையை உண்டு பண்ணுதல் போன்ற ஊக்குவிக்கும் கல்வியாக அமைக்கிறது. பல்கலைக்கழகங்களில் மாணவர்களின் தனித்திறமையை வெளிக்கொண்டுவந்து அவர்களை சமுதாயத்தில் சிறந்த முறையில் சேவைகள் செய்திட வழிவகுக்க்கப்படுகிறது. அதாவது அவர்களின் கண்டுபிடிப்புகள், வேளாண்மை, மருத்துவம், தொழினுட்பம் போன்ற துறைகளில் ஈடுபட வழிவகை செய்யப்படுகிறது.

கல்வித் துறை

[தொகு]
பெய்ஜிங் பொது பல்கலைக் கழகம் (Beijing Normal University) - இங்கு பல்வேறு வகையான கல்வித் துறைகள் சேர்ந்து கூட்டுழைப்போடு கல்விக்கூடத்தை நடத்துகின்றன.

கல்வித் துறை (Education sector) என்பது கல்வியுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களைக் குறிக்கும்; அதாவது, இதில் அரசாங்கத்தின் கல்வித் துறை, கல்வி அதிகாரிகள், பயிற்சி நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியன அடங்கும். இதன் முதல் நோக்கம் இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் கல்வி அறிவைக் கொடுப்பது ஆகும். பாடத் திட்டங்களை உருவாக்குவோர், கல்விக்கூடங்களை நடத்த தலைமை ஆசிரியர்கள், துணை வேந்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் போன்றோர் பலரின் துணை கொண்டு கல்வி அறிவைச் சமுதாயத்திற்குக் கொடுக்கும் பணி நடைபெறுகின்றது.[23]

பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு என்ற நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் படி, அரசாங்கம், கல்வி நிறுவனங்களில் தலை இடாமல், பொறுப்பு முழுவதும் அந் நிறுவனங்களின் முதல்வர்களிடம் கொடுக்கப்பட்டு இருந்தால், கல்வியின் தரம் உயர்ந்திருக்கும் என அறியப்பட்டு உள்ளது.[24] பாடத் திட்டங்களில், பாலுறவைப் பற்றி சரியான புரிதல் மாணவர்களுக்கு வர தேவையான கருத்துக்களைச் சேர்க்க வேண்டுமென ஐக்கிய நாடுகளின் துணை நிறுவனங்கள் பல பரிந்துரை செய்துள்ளன.[25]

முன்னேற்றத்திற்கான இலக்குகள்

[தொகு]
உலக வரைப் படம்: கல்வி குறியீட்டெண் (2007/2008 மனிதவள மேம்பாட்டு அறிக்கை)

முன்னேற்றத்திற்கான இலக்குகள் (Development goals) என்பது கல்வி என்னென்ன இலக்குகளை நோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றது என்பதைப்   பற்றியதாகும். கல்வி சமுதாயத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்; பொருளாதார மேம்பாட்டினை உறுதி செய்ய வேண்டும்; ஒவ்வொரு பிரிவினருக்கும் தங்கள் இலக்குகளை தாங்கள் விரும்பிய படி நாடிச் செல்ல வாய்ப்புக்கள் உருவாக்க வேண்டும்.[26] ஐக்கிய நாடுகள் சபை, 17 வகையான குறிக்கோள்களைப் (வளங்குன்றா வளர்ச்சிக் குறிக்கோள்கள்) பரிந்துரை செய்துள்ளது.[27][28]

சரியான கல்வித் திட்டங்களைச் செயல் படுத்தி மேற்பார்வை இட்டு வந்தால், சமுதாயத்தின் பல கூறுகளிலும் அதன் பயன் சென்று அடையும் என UNESCO நிறுவனம் ( UNESCO International Institute for Educational Planning) கூறியுள்ளது.[29] ஆனால், இப்பயன் நீடித்து இருக்க வேண்டுமாயின், அதிகாரிகள் அவ்வப்போது சரியான முறையில் தலையிட்டுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும்.[29] தலையீட்டின் போது கடைபிடிக்க வேண்டிய விதி முறைகள்:[29]

  • தேசீய தலைமை, உடைமை முறை ஆகியன சிறப்பாக அமைதல் வேண்டும்.
  • செய்யும் ஒவ்வொன்றும் அப்போதுள்ள சூழ்நிலைக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும்.
  • ஒரு தலையீடு மற்ற தலையீட்டுக்குப் பொருந்தி வர வேண்டும்.
  • தொலை நோக்குப் பார்வையுடன் செயலாற்றும் திறமை வேண்டும்.
  • வெளியிலிருந்து ஏதேனும் தலையீடுகள் இருக்குமாயின், அதற்கு நிபந்தனைகள் போட வேண்டும்.

கல்விக் கோட்பாடுகள்

[தொகு]
வகுப்பு மாணவர் எண்ணிக்கை ஆய்வு: தொடக்கப் பள்ளிகளில் வகுப்பில் மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்த போது, அதில் படித்த மாணவர்கள் மீண்டும் வந்து உயர்நிலைக் கல்வி பெற்றனர். இந்த மாணவர்கள் குறைந்த வருமானம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் ஆவார்.[30]

கல்விக் கோட்பாடுகள் (Educational theory) என்பது பல கருத்துக்களைக் கொண்டது. அதில் ஒரு சில கீழே கொடுக்கப் பட்டுள்ளன.

கல்வி உளவியல்

[தொகு]
அறிவு வளர்ச்சி நாள் கொண்டாட்டம், டோனிதாஸ்க்கு, உக்ரைன், 2013

கல்வி உளவியல் (Educational psychology) என்பது கற்பவர்கள், கொடுக்கப்பட்ட சூழ்நிலையில், எவ்வாறு கற்கின்றனர்; கற்பிப்பதில் உள்ள உளவியல் சிக்கல்கள்; கற்கும்போது குறுக்கிட்டுச் சரி செய்தல்; கல்விக்கூடங்களில் சமுதாய உளவியல் சிக்கல்கள் ஆகியன பற்றி ஆராயும் துறை ஆகும். எடுத்துக் காட்டாக, உயர்திறன் வாய்ந்த குழந்தைகள், பிறவிக் குறைகள் உள்ள குழந்தைகள் ஆகியோரின் தேவைகளை அறிந்து செயலாற்றுவது எப்படி என்பன போன்றவற்றை அலசிப் பார்ப்பது கல்வி உளவியலில் நோக்கமாகும். கல்வி உளவியலில் கண்டறியப் படும் உண்மைகளைப் பயன்படுத்தி எவ்வாறு பாடத்திட்டங்களைச் சரியான முறையில் அமைப்பது, தொழில் நுட்பங்களை எவ்வாறு புகுத்துவது, வகுப்பறையை எவ்வாறு ஆளுவது, ஊனம் உள்ளவர்களுக்கு எவ்வாறு கல்வி கொடுப்பது போன்ற பிரச்சினைகளுக்கு நல்ல தீர்வு கொடுக்க இயலும் (Lucas, Blazek, & Raley, 2006)

அறிவு நுட்பமும் கல்வியும்

[தொகு]

ஒரு மாணவர் அறிவு நுட்பத்திற்கு (intelligence) ஏற்றார்ப் போல, கல்வி முறையில் அவர் கற்கும் அளவு வேறுபடுகின்றது. அறிவு நுட்பம் மிக்கவர்கள் கல்வியில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று கல்லூரிகளில் மேல் படிப்பு படிக்கச் செல்கின்றனர்.[31] கல்வி அறிவு நுட்பத்தைக் கூட்டுகிறது.[32] கல்வியினால் ஒருவர் அறிவுக் கூர்மை அதிகரிக்கின்றது என்றாலும், 53-ஆம் அகவையில் அவர்தம் அறிவுக் கூர்மை, அவர் படித்த படிப்பைச் சார்ந்திருப்பதை விட, 8-ஆம் அகவையில் இருந்ததைச் சார்ந்து இருக்கும் என எதிர்பார்க்கலாம்.[33]

கல்வி கற்கும் வழிமுறைகள்

[தொகு]

கடந்த 20 ஆண்டுகளாக, கல்வியை ஒருவருக்கு எவ்வாறு வழங்குவது (Learning modalities) என்பதில் பல மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. கீழ்க் கண்ட வழிமுறைகள் பெரிதும் வழக்கில் உள்ளன:

  • காட்சிவழிக் கல்வி (visual learning)
  • செவிவழிக் கல்வி (auditory learning)
  • செயல்வழிக் கல்வி (kinesthetic learning)

இத்துடன், இசைவழிக் (musical) கல்வி, மாந்தர்வழிக் (interpersonal) கல்வி, சொல்வழிக் (verbal) கல்வி, ஏரணவழிக் (logical) கல்வி மற்றும் தனக்குள் நிகழும் (intrapersonal) கல்வி ஆகியனவும் பயன்பாட்டில் உள்ளன. ரீட்டா டன் (Rita Dunn), கென்னத் டன் (Kenneth Dunn) என்ற இரு ஆய்வாளர்கள், ஒரு மாணவன் கல்வி கற்பதற்குத் தூண்டுகோலாக உள்ளவை யாவை என்ற கேள்விக்கு கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிட்டுள்ளனர்:[34][35]

  • சுற்றுப்புறச் சூழ்நிலை
  • மாணவனின் உணர்வுகள்
  • சமுதாய சக்திகள்
  • உடல் தொடர்பான பிரச்சினைகள்
  • உளவியல் சார்ந்த சிக்கல்கள்

அதே கால கட்டத்தில், ஜோசப் ரென்சுல்லி (Joseph Renzulli) என்பாரும் ஒரு புதிய வகையான கல்வி கற்கும் முறையை முன்மொழிந்தார்.[36] ஓவார்டு கார்ட்னர் (Howard Gardner) என்பவர் பன்முக அறிவு நுட்பக் கோட்பாடு (Multiple Intelligences theory) என்னும் கருத்தை முன்மொழிந்து, அறிவு நுட்பம் என்பது பல கூறுகளைக் கொண்டது என வாதிட்டார். இவர் கூற்றுப்படி, அறிவு நுட்ப நிலை என்பது எட்டு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.[37]

ஒவ்வொரு கல்வி கற்கும் வழிமுறையிலும் ஒருவருக்குக் கற்கும் வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு சிலர் கூற, மற்றும் சிலர் கற்பவர், தம் நிலையைப் பொறுத்து, தமக்கென ஒத்து வரும் வழிமுறையில்தான் சரியாகக் கற்க முடியும் என்று கூறுகின்றனர்.[38][39] கிளாக்ஸ்டன் (Guy Claxton) போன்றோர் கல்வியை காட்சிவழிக் கல்வி, செவிவழிக் கல்வி, செயல்வழிக் கல்வி என்றெல்லாம் பிரிக்கக் கூடாது; ஏனெனில், இது அடிப்படையில் மாணவர்களை பிரிப்பதாகி விடும் என்று கூறுகின்றனர்.[40][41]

மனம், மூளை, கல்வி

[தொகு]

மனமும், மூளையும் கல்வியில் எவ்வாறு செயல் படுகின்றன என்று ஆராயும் துறை கல்விசார் நரம்பு அறிவியல் (Educational neuroscience) ஆகும். இதில் அறிவு-உணர்வு சார்ந்த நரம்பு அறிவியல் (cognitive neuroscience), வளர்ச்சிசார்ந்த அறிவு-உணர்வு நரம்பு அறிவியல் (developmental cognitive neuroscience), கல்விசார்ந்த உளவியல் (educational psychology), கல்விசார்ந்த தொழினுட்பம் (educational technology), கல்விக் கோட்பாடுகள் (education theory) ஆகிய துறைகளில் இருந்து கல்வித் துறைக்கு என்னென்ன கருத்துக்களைக் கடன் வாங்கி, கல்வியை மேம்படுத்தலாம் என்று ஆய்வு நடத்தப் படுகின்றது. [42][43][44][45]

மேலும், கல்விசார் நரம்பு அறிவியலில், ஒருவர் படிக்கும் போதும்,[44], கணிதத்தைப் பற்றிய சிந்தனைகள் தோன்றும் போதும்,[46] ஒன்றைக் கூர்ந்து கவனிக்கும் போதும் மூளையில் என்னென்ன நடக்கின்றன என்று ஆய்வு நடத்தப் படுகின்றது. இத்துடன், வாசிப்புக் குறைபாடு (Dyslexia),[47][48] கணிதம்-கற்றல் குறைபாடு (dyscalculia),[49] கவனக்குறைவு மிகைஇயக்க குறைபாடு (ADHD - Attention Deficit Hyperactivity Disorder) போன்ற சிக்கல்களையும் இது ஆராய்கின்றது.

கல்வியின் நோக்கம்

[தொகு]

கற்றுக் கொடுக்கப் படுகின்ற கல்வி எதற்காக, கல்வியின் நோக்கம் என்ன என்பன பற்றிய கருத்துக்கள் பலவாக இருக்கின்றன. அறிவாற்றல், மன விடுதலை, பண்பாட்டு அடையாளம், வேலை வாய்ப்பு, வாழ்க்கையைச் சரியாக அமைத்துக் கொள்வது போன்றவை கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும் என ஒரு சாரார் கருதுகின்றனர். மற்றும் சிலர், கல்வியின் நோக்கம் ஒருவரை சமுதாயத்தில் நல்ல குடிமகனாக ஆக்க வேண்டும்; அவர் சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், பண்பாட்டு மேம்பாட்டுக்கும் பாடு பட உதவ வேண்டும் என்றும் கருதுகின்றனர்.[50]

கல்வியும், பொருளாதாரமும்

[தொகு]
பள்ளி செல்லும் சிறார்கள், ஆக்கா, சின் மாநிலம், மியன்மார்

கல்வியினால் ஒரு நாட்டின்   பொருளாதார நிலையில் மாற்றம் ஏற்படுகின்றது. அது போலவே, பொருளாதார நிலையும் கல்வியின் தரத்தைக் கட்டுப்படுத்துகின்றது. அனைவருக்கும் தரமான கல்வி அளித்தால், அது நல்ல பொருளாதார வளர்ச்சியை உருவாக்கும் என்று கூறப்படுகின்றது.[51] ஏழை நாடுகள் கல்வியின் மீது கவனம் செலுத்தினால், பொருளாதாரத்தில் விரைவில் மேம்பாடு அடையலாம்; எவ்வாறு எனில், முன்னேறிய நாடுகளில் கிடைக்கும் கல்வி அறிவு, தொழில் நுட்பங்கள் ஆகியனவற்றை இறக்குமதி செய்து, முன்னேற்றுத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், இது எளிதான காரியம் அல்ல என்பது பிறகு தெரிய வந்தது. நல்ல கல்விக்கும், தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்துவதற்கும் நல்ல திறமையுள்ள மனித வளமும், அதை ஊக்குவிக்கும் பொருளாதார நிறுவனங்களும் வேண்டும்.[52][53]

மின்சர் (Jacob Mincer) என்ற ஆய்வாளர், ஒருவரின் சம்பாதிக்கும் திறமை அவர் பெற்ற கல்வி, அவருக்குள்ள அறிவாற்றல், செயல்திறன் ஆகியனவற்றைப் பொறுத்து அமைகிறது என்று வாதிட்டுள்ளார்.[54] ஆனால், இந்தக் கருத்துக்கு ஒரு சிலர் எதிர் கருத்துக்கள் வைத்துள்ளனர். அதாவது, ஒருவர் கற்ற கல்வியின் பயன் இது என்று எவ்வாறு வரையறுப்பது என்பது ஒரு எதிர் கருத்து.[55][56] பொருளாதார ஏந்துகள் இல்லாத இளைஞர்கள், அறிவாற்றல், திறமை மிக்கவர்களாக இருந்தாலும், அவர்கள் சம்பாதிக்கும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்று வாதிடப்படுகின்றது.[57]

அமெரிக்கக் கல்விமுறையில் அடிப்படையிலேயே ஒரு முரண்பாடு உள்ளது என பவுலசு (Samuel Bowles), சிண்டிசு (Herbert Gintis) ஆகிய பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அதாவது, அனைவருக்கும் சமமான கல்வி என்று ஒரு புறம் கூறிவிட்டு, மற்றொரு புறம் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும் முதலாளித்துவம் நடைமுறை படுத்தப்படுகின்றது என கூறுகின்றனர்.[58]

கல்வியின் எதிர்காலம்

[தொகு]

உலகம் மிக வேகமாக மாறி வருகின்றது. அதனால், நம் பழைய அறிவு புதிய காலத்திற்குப் பயனற்றதாகப் போய் விடுகின்றது. பல்வேறு நாடுகள் பழைய கல்வி முறைகளை மாற்றி, புதுக்கல்வி கொள்கைகளை வகுத்து கொள்கின்றன. பின்லாந்து போன்ற நாடுகளில் வழக்கமான பாடத் திட்டங்களில் இருந்து விலகி, நடைமுறையில் காணும் நிகழ்வுகளை வைத்து குழந்தைகளுக்கான அறிவு புகட்டப்படுகின்றது. எடுத்துக்காட்டாக, தட்பவெப்ப நிலை எவ்வாறு மாறுகிறது என்பதைப் பற்றி சிறுவர்கள் கற்கின்றனர்.[59]

மேலும், கல்வி என்பது இளைஞர்களுக்கு மட்டுமல்ல, அது பெரியவர்களுக்கும் ஆனது என்ற கருத்து வலுப்பெற்று வருகின்றது.[60] பின்லாந்து நாட்டில், கல்வி வாழ்நாள் முழுவதற்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.[61]

குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. UNESCO(1975)A Systems Approach to Teaching And Learning Procedures:A Guide for Educators in Developing countries,Paris
  2. Kulkarni,S.S (1986): Introduction to Educational Technology, Bombay: Oxford and IBH Publishing co
  3. செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி. p. 504.
  4. educatio
  5. educo
  6. Assmann, Jan (2002). The Mind of Egypt: History and Meaning in the Time of the Pharaohs. p. 127.
  7. "Plato". Encyclopædia Britannica. (2002). 
  8. 8.0 8.1 Geoffrey Blainey; A Very Short History of the World; Penguin Books, 2004
  9. "Why Is Confucius Still Relevant Today? His Sound Bites Hold Up". 2015-03-25. https://news.nationalgeographic.com/2015/03/150325-confucius-china-asia-philosophy-communist-party-ngbooktalk/. 
  10. Colin, Ernesto (2014). Indigenous Education through Dance and Ceremony: A Mexica Palimpsest. New York: Palgrave Macmillan. p. 65. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781349470945.
  11. León-Portilla, Miguel (2012). Aztec Thought and Culture: A Study of the Ancient Nahuatl Mind. Norman: University of Oklahoma Press. pp. 134–35. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0806105697.
  12. Reagan, Timothy (2005). Non-Western Educational Traditions: Alternative Approaches to Educational Thought and Practice. Mahwah, NJ: Lawrence Erlbaum Associates, Publishers. p. 108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0805848571.
  13. "Science owes much to both Christianity and the Middle Ages : Soapbox Science". blogs.nature.com (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-10-21. பார்க்கப்பட்ட நாள் 2018-10-06.
  14. Dagar,B.S,(1995)Distance Education and Rural Development (in Bakshish Singh),(ed), New Horizons in Distance Education, Uppal Publishing House,NewDelhi
  15. கோகிலா தங்கசாமி,(2000):குழந்தைமையைக் கல்வியும் தமிழ் கற்பித்தலும், அனிச்சம் புளும்ஸ்: காந்திகிராமம்
  16. Indira Gandhi National open University(2005):Teachers and school BlocK 1,New Delhi
  17. May, S.; Aikman, S. (2003). "Indigenous Education: Addressing Current Issues and Developments". Comparative Education 39 (2): 139–45. doi:10.1080/03050060302549. 
  18. Musgrave,P.W.(ed.)(1970)ː sociology, History and Education, Methuen & co.Ltd.,Londoɳ
  19. 19.0 19.1 Divisions of HIV/AIDS Prevention (2003). "HIV and Its Transmission". Centers for Disease Control & Prevention. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  20. 20.0 20.1 San Francisco AIDS Foundation (2006-04-14). "How HIV is spread". Archived from the original on 2011-08-22. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.
  21. Dewey,John (1963).Democracy and Education.macmillan new york
  22. Dewey, John (1965).problems of men philosophical library new york
  23. UNESCO (2016). Out in the Open: Education sector responses to violence based on sexual orientation and gender identity/expression (PDF). Paris, UNESCO. p. 54. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-3-100150-5.
  24. "School Governance, Assessments and Accountability" (PDF). Programme for International Student Assessment. OECD. 2013. பார்க்கப்பட்ட நாள் 25 June 2017.
  25. International technical guidance on sexuality education: An evidence-informed approach (PDF). Paris: UNESCO. 2018. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-3-100259-5.
  26. Chimombo, Joseph (2005). "Issues in Basic Education in Developing Countries: An Exploration of Policy Options for Improved Delivery". Journal of International Cooperation in Education 8 (1): 129–152. https://home.hiroshima-u.ac.jp/cice/wp-content/uploads/2014/03/8-1-11.pdf. பார்த்த நாள்: 2019-01-09. 
  27. Transforming our World: the 2030 Agenda for Sustainable Development Goals. New York: UN. 2016.
  28. Cracking the code: girls' and women's education in science, technology, engineering and mathematics (STEM). Paris: UNESCO. 2017. p. 14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789231002335.
  29. 29.0 29.1 29.2 de Grauwe, A. (2009). Capacity development strategies (Report). Paris: UNESCO-IIPE. Archived from the original on 5 மே 2010. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2010..
  30. Finn, J. D.; Gerber, S. B.; Boyd-Zaharias, J. (2005). "Small classes in the early grades, academic achievement, and graduating from high school". Journal of Educational Psychology 97 (2): 214–33. doi:10.1037/0022-0663.97.2.214. http://www.apa.org/pubs/journals/releases/edu-972214.pdf. 
  31. Butler, S.; Marsh, H.; Sheppard, J. (1985). "Seven year longitudinal study of the early prediction of reading achievement". Journal of Educational Psychology 77 (3): 349–61. doi:10.1037/0022-0663.77.3.349. https://archive.org/details/sim_journal-of-educational-psychology_1985-06_77_3/page/349. 
  32. Baltes, P.; Reinert, G. (1969). "Cohort effects in cognitive development in children as revealed by cross sectional sequences". Developmental Psychology 1 (2): 169–77. doi:10.1037/h0026997. https://archive.org/details/sim_developmental-psychology_1969-03_1_2/page/169. 
  33. Richards, M.; Sacker, A. (2003). "Lifetime Antecedents of Cognitive Reserve". Journal of Clinical and Experimental Neuropsychology 25 (5): 614–24. doi:10.1076/jcen.25.5.614.14581. பப்மெட்:12815499. 
  34. "Dunn and Dunn". Learningstyles.net. Archived from the original on 2009-02-03. பார்க்கப்பட்ட நாள் 2009-04-20.
  35. https://medium.com/love2learnidaho/do-you-know-the-5-elements-of-a-learning-style-7721c10e358c
  36. "Biographer of Renzulli". Indiana.edu. பார்க்கப்பட்ட நாள் 2009-04-20.
  37. Thomas Armstrong's website பரணிடப்பட்டது 2009-03-21 at the வந்தவழி இயந்திரம் detailing Multiple Intelligences
  38. Barbe, W. B., & Swassing, R. H., with M. N. Milone. (1979). Teaching through modality strengths: Concepts and practices. Columbus, OH: Zaner-Bloser
  39. "Learning modality description from the Learning Curve website". Library.thinkquest.org. Archived from the original on 4 ஏப்பிரல் 2008. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2010.
  40. "Guy Claxton speaking on What's The Point of School?". dystalk.com. பார்க்கப்பட்ட நாள் 2009-04-23.
  41. J. Scott Armstrong (1983). "Learner Responsibility in Management Education, or Ventures into Forbidden Research (with Comments)". Interfaces 13 இம் மூலத்தில் இருந்து 20 June 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100620230019/http://marketing.wharton.upenn.edu/documents/research/Learner%20Responsibility.pdf. 
  42. Ansari, D; Coch, D (2006). "Bridges over troubled waters: Education and cognitive neuroscience". Trends in Cognitive Sciences 10 (4): 146–51. doi:10.1016/j.tics.2006.02.007. பப்மெட்:16530462. 
  43. Coch, D; Ansari, D (2008). "Thinking about mechanisms is crucial to connecting neuroscience and education". Cortex 45 (4): 546–47. doi:10.1016/j.cortex.2008.06.001. பப்மெட்:18649878. 
  44. 44.0 44.1 Goswami, U (2006). "Neuroscience and education: from research to practice?". Nature Reviews Neuroscience 7 (5): 406–11. doi:10.1038/nrn1907. பப்மெட்:16607400. 
  45. Meltzoff, AN; Kuhl, PK; Movellan, J; Sejnowski, TJ (2009). "Foundations for a New Science of Learning". Science 325 (5938): 284–88. doi:10.1126/science.1175626. பப்மெட்:19608908. Bibcode: 2009Sci...325..284M. 
  46. Ansari, D (2008). "Effects of development and enculturation on number representation in the brain". Nature Reviews Neuroscience 9 (4): 278–91. doi:10.1038/nrn2334. பப்மெட்:18334999. 
  47. McCandliss, BD; Noble, KG (2003). "The development of reading impairment: a cognitive neuroscience model". Mental Retardation and Developmental Disability Research Review 9 (3): 196–204. doi:10.1002/mrdd.10080. பப்மெட்:12953299. https://sacklerinstitute.org/cornell/people/bruce.mccandliss/publications/publications/McCandliss.Noble.2003.pdf. பார்த்த நாள்: 24 October 2017. 
  48. Gabrieli, JD (2009). "Dyslexia: a new synergy between education and cognitive neuroscience". Science 325 (5938): 280–83. doi:10.1126/science.1171999. பப்மெட்:19608907. Bibcode: 2009Sci...325..280G. http://www2.cs.uidaho.edu/~tsoule/neuro508/Gabrieli_2009_Dyslexia.pdf. 
  49. Price, GR; Holloway, I; Räsänen, P; Vesterinen, M; Ansari, D (2007). "Impaired parietal magnitude processing in developmental dyscalculia". Current Biology 17 (24): R1042–43. doi:10.1016/j.cub.2007.10.013. பப்மெட்:18088583. Bibcode: 1996CBio....6.1213A. 
  50. Christopher Winch and John Gingell, Philosophy of Education: The Key Concepts (2nd edition). London:Routledge, 2008. pp. 10–11.
  51. Eric A. Hanushek (2005). Economic outcomes and school quality. International Institute for Educational Planning. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-92-803-1279-9. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011.
  52. Daron Acemoglu; Simon Johnson; James A. Robinson (2001). "The Colonial Origins of Comparative Development: An Empirical Investigation". American Economic Review 91 (5): 1369–401. doi:10.2139/ssrn.244582. http://economics.mit.edu/files/4123. பார்த்த நாள்: 2019-01-09. 
  53. Eric A. Hanushek; Ludger Woessmann (2008). "The role of cognitive skills in economic development". Journal of Economic Literature 46 (3): 607–08. doi:10.1257/jel.46.3.607 இம் மூலத்தில் இருந்து 5 January 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110105125552/http://edpro.stanford.edu/hanushek/admin/pages/files/uploads/Hanushek_Woessmann_2008_JEL_46.pdf. 
  54. Jacob Mincer (1970). "The distribution of labor incomes: a survey with special reference to the human capital approach". Journal of Economic Literature 8 (1): 1–26. https://archive.org/details/sim_journal-of-economic-literature_1970-03_8_1/page/1. 
  55. David Card, "Causal effect of education on earnings," in Handbook of labor economics, Orley Ashenfelter and David Card (Eds). Amsterdam: North-Holland, 1999: pp. 1801–63
  56. James J. Heckman, Lance J. Lochner, and Petra E. Todd., "Earnings functions, rates of return and treatment effects: The Mincer equation and beyond," in Handbook of the Economics of Education, Eric A. Hanushek and Finis Welch (Eds). Amsterdam: North Holland, 2006: pp. 307–458.
  57. "Why a high IQ doesn't mean you're smart" (in en). Yale School of Management. 2009-11-01. https://som.yale.edu/news/2009/11/why-high-iq-doesnt-mean-youre-smart. 
  58. Samuel Bowles; Herbert Gintis (18 October 2011). Schooling In Capitalist America: Educational Reform and the Contradictions of Economic Life. Haymarket Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60846-131-8. பார்க்கப்பட்ட நாள் 21 October 2011.
  59. "Finnish National Agency for Education - Curricula 2014". www.oph.fi. Archived from the original on 2017-09-01. பார்க்கப்பட்ட நாள் 2019-01-09.
  60. "For many people, flexibility at work can be a liberation".
  61. "Could compulsory education last a lifetime? - Sitra".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்வி&oldid=4059575" இலிருந்து மீள்விக்கப்பட்டது