காட்டுப்பன்றி
காட்டுப்பன்றிகள், திருநெல்வேலி புதைப்படிவ காலம்:Early Pleistocene – Recent | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | எசு. சுக்ரோஃவா (S. scrofa)
|
இருசொற் பெயரீடு | |
சுசு சுக்ரோஃவா (Sus scrofa) லின்னேயசு, 1758 |
காட்டுப்பன்றி என்பது வீட்டுப்பன்றியின் முன்னோர் என கருதப்படுகிறது. இதன் உடல் சிறியதாகவும், இதன் தலை பெரியதாகவும், இதன் கால்கள் சிறிதாகவும் இருக்கும். இதன் ரோமம் மிகவும் மென்மையாக இருக்கும். இதன் பல் (எயிறு) வளர்ந்து கொண்டே போகும் தன்மையுடையது. காட்டுப்பன்றியின் எயிறு அதன் தற்காப்புக்கு பயன்படுகின்றது.
தோற்றம்
[தொகு]வீடுகளில் வளர்க்கப்படும் பன்றிகளின் முன்னோர்களாக கருதப்படுவதுதான் காட்டுப் பன்றிகள் (Wild Boar) ஆகும். இவை உலகம் முழுவதும் காணப்படுகின்றன. சுமார் 65 - 58 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இவை பூமியில் தோன்றியதாக கணக்கிடப்பட்டுள்ளன. பன்றிக் குடும்பத்தில் 4 பேரினங்களும் 16 இனங்களும் உள்ளன. மண்டை ஓட்டின் உயரம் மற்றும் முகத்தில் உள்ள லாகிரிமல் எலும்பின் (Lacrimal bone) நீளம் ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. காட்டுப் பன்றிகள் முதன் முதலாக தெற்கு ஆசியப்பகுதியில் தோன்றி உலகம் முழுவதும் பரவியது.
இந்திய காட்டுப் பன்றி
[தொகு]மனிதனுக்கும் காட்டுப் பன்றிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மனிதன் புதிய கற்காலத்திலிருந்து வீடுகளில் பன்றிகளை வளர்த்து வருகிறான். பல ஆயிரம் ஆண்டுகளாக காட்டுப் பன்றிகளுடன் கலப்பு செய்து வீட்டுப் பன்றிகளை உருவாக்கியுள்ளான். மனித தலையீடுகள் மூலம் உலகம் முழுவதும் பன்றிகள் வளர்க்கப்படுகின்றன. பாலூட்டி விலங்கு பட்டியலில் மிக அதிகமாக வனங்களில் வாழும் விலங்குகளில் நான்காவது இடத்தில் இருப்பவை காட்டுப் பன்றியாகும். இந்திய காட்டுப் பன்றி (Indian wild boar), மோபின் பன்றி (Moupin pig) அல்லது அந்தமான் பன்றி (Andamanese pig) எனவும் அழைக்கிறார்கள். இந்தியா முதல் நேபாளம், பர்மா, மேற்கு தாய்லாந்து மற்றும் இலங்கை வரை இந்தியக் காட்டுப் பன்றிகள் வாழ்கின்றன. இதன் விலங்கியல் பெயர் சுஸ் இண்டிக்கஸ் (Sus Inidcus) என்பதாகும். இதனை 1839 ஆம் ஆண்டில் வாக்னர் (Wagner) என்பவர் அறிவியல் பூர்வமாக விவரித்து எழுதினார்.
உடல் அமைப்பு
[தொகு]வீட்டுப் பன்றிகளை விட இது சிறியது. இதன் தலை பெரியதாகவும், உடல் சிறியதாகவும் இருக்கும். இதன் கால்கள் குட்டையானவை. காட்டுப் பன்றிகளுக்கு பார்க்கும் திறன் குறைவு. இதற்கு காதுகள் சிறியது. ஆகவே கேட்கும் திறன் மிகவும் குறைவு. இதனை ஈடு செய்யும் வகையில் நுகர்வு ஆற்றல் அதிகம் உண்டு. அதாவது மற்ற விலங்ககளை விட காட்டுப் பன்றிகளுக்க மோப்பத்திறன் அதிகம்.
பெரும்பாலும் தலையை குனிந்து தரையை முகர்ந்தபடியே நடந்து செல்லும். உடல் சாம்பல் கலந்த கருமை நிறம் உடையது. உடல் முழுவதும் குட்டையான முரட்டு முடிகள் உள்ளன. பிடரி பகுதி முடி சிலிர்த்து கம்பி போல் கெட்டியாக நிமிர்ந்து நிற்கும். வால் 1 அடி நீளமும் பெரிய குஞ்சமும் உண்டு. இவை கூட்டமாகவே வாழும். ஆண் பன்றிகள் மட்டுமே தனியாகத் திரியும். பெண்ணை விட ஆண் பன்றிகள் உருவத்தில் பெரியவை. இந்தியக் காட்டுப் பன்றிகள் 80 – 90 கிலோ எடை வரை வளரும்.
இதன் உயரம் 55 முதல் 120 செ.மீ. வரை இருக்கும். மேலும் 90 முதல் 200 செ.மீ நீளம் வரை வளரும். இதன் கீழ்த்தாடையில் இரண்டு கோரப்பற்கள் வளைந்து வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். இதனை எயிறு (Tusk) என்கின்றனர். யானைக்கு தந்தம் எப்படி வளர்கிறதோ அதுபோல் இதற்கு பற்கள் பின்னோக்கி வளர்கின்றன. இந்த எயிறு உறுதியானது. இது தற்காப்பிற்கு உதவுகிறது. இந்த எயிறின் உள் பகுதியில் துவாரம் உள்ளது. இந்த எயிறானது கத்தி போல் கூர்மையாக இருக்கிறது.
கட்டுப் பன்றிகள் அனைத்து காலங்களிலும் இனப்பெருக்கம் செய்யும். கருத்தரிப்பு காலம் 115 நாட்களாகும். ஒரு சமயத்தில் 4 முதல் 8 குட்டிகள் ஈனும். இளம் குட்டிகளின் மீது வெண்மையான கோடுகள் காணப்படும். பெண் பன்றிகள் அனைத்தும் குட்டிகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றன.
நடத்தை
[தொகு]இது ஒரு அனைத்துன்னி (omnivorus) விலங்காகும். அடர்ந்த காட்டில் பதுங்கி இருக்கும். கோடை காலத்தில் சேற்றில் புரளும். கிழங்கு, வேர், புல், பூண்டு, முட்டை, பழங்கள் என உண்ணும். அதே சமயத்தில் இறைச்சியையும் உண்ணும். குள்ள நரி, குரங்கு, பாம்பு போன்றவற்றை வேகமாக தாக்கி, அதன் இறைச்சியை விரைவில் உண்ணும். ஓநாய், சிறுத்தைப் புலி, புலி, நரி போன்றவை இதன் எதிரிகளாகும். அவைகளை எதிரத்து சண்டையிடும். தனது தந்தம் போன்ற பற்களால் எதிரியை குத்தி, கிழித்து கொன்று விடும். இது எல்லாக் காட்டு மிருகங்களிலும் மிகுந்த துணிச்சலுடையது. காட்டுப்பன்றிகள் புத்திசாலித்தனம், துணிவு, உறுதி கொண்டவை. மேலும்கொடிய சண்டையிடும் விலங்கு. கரடியை வேட்டையாடுவதை விட இதனை வேட்டையாடுதல் என்பது மிகவும் சிரமம் என வேட்டைக்காரர்கள் குறிப்பிடுகின்றனர். ஆண் பன்றிகள் ஒற்றையடிப் பாதையில் செல்லும் போது மனிதர்கள் எதிர்பட்டால் அவர்களைத் தாக்கும்.
பாதுகாப்பு
[தொகு]காட்டுப் பன்றிகளால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். வனப்பகுதியில் போதிய உணவு கிடைக்காதக் காரணத்தால் அவை வனத்தை ஒட்டிய விவசாய நிலத்தில் இரவில் புகுந்து பயிர்களை நாசம் செய்கின்றன. கடலை, மரவள்ளிக் கிழங்கு, மக்காச்சோளம், சோளம், நெல் போன்ற பயிற்களை மேய்ந்து சேதம் விளைவிக்கிறது. ஆகவே வெடி வைத்தும், விஷம் வைத்தும் இதனை கொல்கின்றனர். இறைச்சிக்காகவும் இதனை வேட்டையாடுகின்றனர். இதன் தந்தப் பற்களைக் கொண்டு அணிகலன்களும் செய்கின்றனர். பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) செம்பட்டியலில் 2008 ஆம் ஆண்டு இது காப்பு நிலை குறைந்த இனமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய வனவிலங்குப் பாதுகாப்பு சட்டம் 1972 இன் கீழ் வேட்டையாடுதல் மற்றும் கொல்லுதல் தண்டனைக்குரிய குற்றமாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Sus scrofa". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes a brief justification of why this species is of least concern.
உசாத்துணை
[தொகு]- மேனன், விவேக் (2014). இந்தியப் பாலூட்டிகள் (in ஆங்கிலம்). குருகிராமம்: ஆச்செட்டு. p. 204-205. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789350097601.