குதுலுன்
குதுலுன் | |
---|---|
முழுப் பெயர் | ஐகியர்னே |
இயற்பெயர் | ஐயுருக் |
பிறப்பு | கோதோல் திசகான் 1260 |
இறப்பு | 1306 (அகவை 45–46) |
குடும்பம் | ஒக்தாயி குடும்பம் |
தந்தை | கய்டு கான் |
பணி | மங்கோலிய இளவரசி, கய்டுவின் மகள் |
குதுலுன் (Khutulun, அண். 1260 – அண். 1306) என்பவர் ஒரு மங்கோலிய உயர்குடியினப் பெண் ஆவார். இவர் ஐகியர்னே,[1] ஐயுருக், கோதோல் திசகான் அல்லது அய் யருக்[2] (பொருள். நிலவொளி)[1] ஆகிய பெயர்களாலும் அழைக்கப்படுகிறார். குப்லாய் கானின் உறவினரான கய்டுவின் மகள்களிலேயே மிகவும் பிரபலமானவர் இவர் ஆவார். மார்க்கோ போலோ[1] மற்றும் ரசீத்தல்தீன் அமாதனி ஆகிய இருவருமே தாங்கள் குதுலுனைச் சந்தித்ததாக பதிவிட்டுள்ளனர்.
வாழ்க்கை
[தொகு]குதுலுன் 1260ஆம் ஆண்டு வாக்கில் பிறந்தார்.[3] 1280ஆம் ஆண்டு வாக்கில், இவரது தந்தை கய்டு நடு ஆசியாவின் மிக சக்தி வாய்ந்த ஆட்சியாளர் ஆனார். மேற்கு மங்கோலியா முதல் ஆமூ தாரியா வரையிலும், மையச் சைபீரிய உயர்நிலத்திலிருந்து இந்தியா வரையிலுமான பகுதிகளை ஆண்டார்.
வரலாற்று நூல்களில் குதுலுன் ஒரு வலிமையான போர் வீரம் கொண்ட இளவரசியாக குறிப்பிடப்படுகிறார். நடு ஆசியாவில் மங்கோலிய இராணுவ நடவடிக்கைகளில் இவர் பங்கெடுத்துள்ளார். மங்கோலியர்களின் மூன்று திறமைகளான வில் வித்தை, மல்யுத்தம் மற்றும் குதிரையேற்றம் ஆகியவற்றை தன் குழந்தைப் பருவம் முதலே கற்று வந்தார். பின்னர், இவர் வளர்ந்து வந்த போது, பாரம்பரிய மல்யுத்தப் போட்டிகளில் மிகச் சிறந்த போர் வீரர்களை தோற்கடிக்கும் அளவுக்கு திறமையான மல்யுத்த வீராங்கனையாக உருவானார். குதுலுன் ஒரு கதாநயகியாகப் பார்க்கப்படுகிறார். பல நடுக் கால வரலாற்றாளர்கள் குதுலுனைக் குறித்து எழுதியுள்ளனர். அதில் ஒருவர் மார்க்கோ போலோ ஆவார். [4]
இவரது கணவரின் அடையாளம் குறித்து நூல்கள் வேறுபட்ட தகவல்களைக் கொடுக்கின்றன. சில நூல்கள் இவரது தந்தையை அரசியல் கொலை செய்ய வந்து தோல்வியடைந்த ஓர் அழகான மனிதன் இவரது கணவர் என்ற குறிப்பிடுகின்றன. அவன் கைதியாகப் பிடிக்கப்பட்ட பிறகு இவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டான். பிற நூல்கள் சோரோசு என்னும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கய்டுவின் ஆதரவாளர் இவரது கணவர் என்று குறிப்பிடுகின்றன. பாரசீகத்தின் மங்கோலிய மன்னனான கசனுடன் குதுலுன் காதலில் விழுந்தார் என ரசீத்தல்தீன் அமாதனி எழுதியுள்ளார். எனினும், இவர் நூல்களில் சித்தரிக்கப்பட்டுள்ளதுடன் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடியதாக இந்தத் தகவல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. மாறாக இவர் என்றுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. இவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக இவருடன் மல்யுத்தம் நடத்திய ஒவ்வொரு ஆணையும் இவர் தோற்கடித்தார். அவர்களது குதிரையை அவர்கள் தோற்ற பிறகு இவருக்கு உரிமையாக்கிக் கொண்டார். இவ்வாறாக இவர் 10,000 குதிரைகளுடன் இறந்தார் என்று ஒரு வதந்தி உள்ளது.
கய்டுவின் அனைத்து குழந்தைகளிலும் குதுலுனே அவரது விருப்பத்துக்குரிய குழந்தையாக இருந்தார். குதுலுனிடமே கய்டு பெரும்பாலும் ஆலோசனையையும், அரசியல் ஆதரவையும் வேண்டிப் பெற்றார். சில நூல் குறிப்புகளின் படி, தனக்குப் பின் கானரசின் அடுத்த ஆட்சியாளராக குதுலுனின் பெயரைக் குறிப்பிட கய்டு முயற்சித்தார். அதற்கு முன்னரே 1301ஆம் ஆண்டு கய்டு இறந்து விட்டார். எனினும், தேர்ந்தெடுத்த நிகழ்வானது இவரது ஆண் உறவினர்களால் மறுக்கப்பட்டது. கய்டு இறந்த போது தன்னுடைய சகோதரன் ஓருசுடன் கய்டுவின் சமாதியைக் குதுலுன் பாதுகாத்தார். இவரது பிற சகோதரர்களான சபர் மற்றும் உறவினர் துவா ஆகியோரின் ஆட்சிக்கு வரும் நிகழ்வை இவர் எதிர்த்ததால் குதுலுனுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. குதுலுன் 1306ஆம் ஆண்டு இறந்தார்.
பிரபலப் பண்பாட்டில்
[தொகு]துரந்தோத் எனும் கதாபாத்திரத்துக்கு அடிப்படையாக குதுலுன் இருந்தார் என்று எண்ணப்படுகிறது. ஒரு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மேற்குலக நூல்களில் முக்கியக் கதாபாத்திரமாக இந்தக் கதாபாத்திரம் இருந்துள்ளது. மங்கோலியப் பண்பாட்டில் ஒரு பிரபலமான விளையாட்டு வீராங்கனை மற்றும் போர் வீரம் கொண்ட பெண்ணாக இவர் நினைவுபடுத்தப்படும் அதே நேரத்தில் மேற்குலகக் கலைச் சித்தரிப்புகளில் கடைசியில் காதலில் விழும் ஒரு பெருமை கொண்ட பெண்ணாக இவர் சித்தரிக்கப்பட்டுள்ளார்.
பிராங்கோயிசு பெட்டிசு டி லா குரோயிக்சு 1710ஆம் ஆண்டு நூலான ஆசியக் கதைகள் மற்றும் நீதிக் கதைகள் என்ற நூலானது குதுலுனை துரந்தோத் என்றும் அழைக்கப்படும் கதாபாத்திரத்தில் ஒரு கதையைக் கொண்டுள்ளது. துரந்தோத் (துரந்தோக்த் توراندخت) என்பது ஒரு பாரசீகச் சொல்லாகும். இதன் பொருள் "நடு ஆசிய மகள்" என்பதாகும். இதில் சீனாவின் மங்கோலியப் பேரரசன் அல்தன் கானின் 19 வயது மகளாக இவர் குறிப்பிடப்பட்டிருந்தார். பெட்டிசு டி லா குரோயிக்சின் கதையில் எனினும் இவர் தன்னை மணம் புரிய வருபவர்களுடன் மல்யுத்தம் புரியவில்லை. அவர்கள் தங்களது குதிரைகளை பந்தயம் வைப்பதில்லை. மாறாக, அவர்கள் மூன்று விடுகதைகளுக்குக் குதுலுனிடம் பதில் கூற வேண்டும். அந்த மூன்று விடுகதைகளுக்குப் பதில் கூறா விட்டால் அவர்கள் மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
இத்தாலிய நாடக ஆசிரியரான கார்லோ கோசி தன்னுடைய சொந்தத் தழுவலை 50 ஆண்டுகள் கழித்து எழுதினார். இது ஒரு மேடை நாடகமாகும். "உறுதி குறையாத பெருமையை உடைய புலி போன்ற பெண்ணாக" இந்நாடகத்தில் இவர் சித்தரிக்கப்பட்டுள்ளார். பிரெடிரிக் சில்லர் இந்த நாடகத்தை மொழி பெயர்த்துச் செருமானிய மொழியில் துரந்தோத், பிரின்செசின் வான் சீனா என 1801ஆம் ஆண்டு நடத்தினார்.
துரந்தோத் கதாபாத்திரத்தின் மிகப் பிரபலமான தழுவல் ஜாக்கோமோ புச்சீனியின் முடிக்கப்படாத இசை நாடகத் தழுவலாகும். 1924ஆம் ஆண்டு அவர் இறந்த போது இந்த நாடகத்தை நடத்துவதற்கான பணிகளைச் செய்து கொண்டிருந்தார்.
மங்கோலிய எழுத்தாளர்கள் குதுலுன் குறித்து பல கதைகள் மற்றும் புதினங்களை வெளியிட்டுள்ளனர். அதில் குறிப்பிடத்தக்கவை பூரேவ் சஞ்சின் கோதோலோன், சஞ்சிவ்தோர்சின் கய்டுவின் மிகச் சிறந்த மகள் குதுலுன், ஒயூன்கெரேல் திசேதேவ்தம்பாவின் கோதோல் திசகான், பத்சர்கல் சஞ்சாவின் கய்டு கானின் கதை, மற்றும் சுதேர்செத்செக்கின் இளவரசி குதுலுன் ஆகியவையாகும்.
நெற்ஃபிளிக்சு தொடரான மார்க்கோ போலோவில் குதுலுனின் கதாபாத்திரத்தில் கிளாடியா கிம் நடித்திருந்தார்.[5]
ஆத்திரேலியாவில் ஒரு பிரபலமான பந்தைய குதிரைக்கு குதுலுன் என்ற பெயர் வைக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. கிராண்ட் சிண்டிகேட் என்ற நிறுவனத்தால் வெறும் 16,000 ஆத்திரேலிய டாலர்களுக்கு ஒக்குதிரை வாங்கப்பட்டது. இறுதியாக இக்குதிரை பரிசுப் பணமாக கிட்டத்தட்ட 5,00,000 கஆத்திரேலிய டாலர்களை வென்றது.
3 திசம்பர் 2021, அன்று சுதேர் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஊ பிராட்காஸ்டிங் ஆகிய நிறுவனங்கள் இளவரசி குதுலுன் என்ற திரைப்படத்தை வெளியிட்டன. மங்கோலிய எழுத்தாளர் பாதர்சுரேன் சுதேர்செத்செக்கின் கோதோல் திசகான் கஞ்ச் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திரைப்படம் தயாரிக்கப்பட்டிருந்தது. யுவான் அரசமரபின் காலத்தின் போது கதை அமைக்கப்பட்டிருந்தது.[6] நடிகை திசேதூ முங்பத் குதுலுனாக இதில் நடித்திருந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Polo, Marco (1982). Editori Riuniti. . Il Milione. L'Unità –
- ↑ Bernardini, Michele; Guida, Donatella (2012). I Mongoli. Espansione, Imperi, Eredità. Turin: Einaudi. p. 184. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-88-06-20596-6.
- ↑ Jack Weatherford – The Wrestler Princess in Lapham’s Quarterly
- ↑ Bakalov, Georgi (2011). Middle ages and the modern times, p. 114: "Nomadic societas and Byzantine empire" (in பல்கேரியன்). Sofia University "St Kliment Ohridski". பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-954-07-2935-0.
- ↑ Barrett-Ibarria, Sofia (2014-12-12). "Netflix's 'Marco Polo' Stars Joan Chen, Zhu Zhu, & Claudia Kim on Playing History's Most Powerful Women". Bustle. பார்க்கப்பட்ட நாள் 2015-03-24.
- ↑ "History in Yuan Dynasty first shown in 'Khutulun Princess' film". MONTSAME News Agency (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-19.
மேலும் படிக்க
[தொகு]- Jack Weatherford – The Secret History of the Mongol Queens
- "Warriors: Asian Women in Asian Society" from Colorq.org
- "Heroines: Mongolian Women" from Womeninworldhistory.com
- Rossabi, Morris; Khubilai Khan; pp. 104–105, 252; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-06740-1
- மார்க்கோ போலோ. மார்க்கோ போலோவின் பயணங்கள், The Venetian: Concerning the Kingdoms and Marvels of the East. 2nd ed. Trans. Colonel Henry Yule. Vol. 2. London: John Murray, 1875. 461–464. Print.