உள்ளடக்கத்துக்குச் செல்

செங்கல்பட்டு உழவர் வழக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

செங்கல்பட்டு உழவர் வழக்கு (Chingleput Ryots' Case) பிரித்தானிய இந்தியாவின் சென்னை மாகாணத்தில் 1881-83 காலகட்டத்தில் நடைபெற்ற ஒரு வழக்கு. இதில் சென்னை மாகாண ஆளுனர் எம். ஈ. கிராண்ட் டஃப்பின் நடத்தை மாகாண மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்திய தேசியவாதிகள் காலனிய ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு எடுத்துக்காட்டாக இவ்வழக்கை முன்னிலைப்படுத்தினர்.

1881 இல் செங்கல்பட்டில் சில உழவர்கள் தங்களை ஒரு தாசில்தார் மிரட்டிப் பணம் பிடுங்குவதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதற்கு பதிலடி தரும் வகையில் அத்தாசில்தார் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி அவ்வுழவர்கள் மீது பொய்ச் சான்றளித்ததாக பதில் வழக்குத் தொடர்ந்தார். உழவர்கள் தொடர்ந்த வழக்கில் அரசு ஆவணங்களில் பொய்யான தரவுகளைச் சேர்த்தற்காக இரு ஆண்டுகள் தாசில்தாருக்குக் கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். உயர் நீதிமன்றம் அவரது தண்டனையை ஒரு ஆண்டாகக் குறைத்தது, ஆனால் அவர் குற்றவாளி என்ற தீர்ப்பை ஒத்தி வைக்கவில்லை. தாசில்தார் மீண்டும் மேல்முறையீடு செய்த போது அதனை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. ஆனால் சென்னை ஆளுனர் இதில் தலையிட்டு, தாசில்தாருக்கு எதிராகப் போதிய சாட்சியங்கள் இல்லை என்று காரணம் கூறி அவரை விடுதலை செய்துவிட்டார். வழக்கில் தாசில்தாருக்கு உதவிய மாவட்ட ஆட்சியர் பின்னாளில் ஆளுனரின் வருவாய்த்துறைச் செயலராகப் பதவியேற்றார்.

சென்னை ஆளுனரின் நடத்தை இந்திய ஊடகங்களில் கடுமையாகச் சாடப்பட்டது. உழவர்களின் நிலையை ஆதரித்த த இந்து இதழ் ஆளுனரின் செயல்பாடு “பிரித்தானிய நீதித்துறைக்கு ஏற்பட்ட களங்கம்” என வர்ணித்தது. இச்சம்பவம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]