சென்னை மாகாண சட்டமன்றத் தேர்தல், 1937
| |||||||||||||||||||
சட்டமன்றக் கீழவைக்கான 215 இடங்கள் மேலவைக்கான 46 இடங்கள | |||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||||||||||
|
சென்னை மாகாணத்தில் மாநில சுயாட்சி முறை அமல்படுத்தப்பட்ட பின் சட்டமன்றத்திற்கான முதல் தேர்தல் 1937ம் ஆண்டு பெப்ரவரி மாதம் நடை பெற்றது. இந்திய தேசிய காங்கிரசு வெற்றி பெற்று ராஜகோபாலாச்சாரி சென்னை மாகாணத்தின் முதல்வரானார்.
மாநில சுயாட்சி
[தொகு]இந்தியாவில் அரசியல் சீர்திருத்தம் ஏற்படவும் சுயாட்சி வழங்கவும் பிரித்தானிய அரசாங்கம், இந்திய அரசாங்கச் சட்டம், 1935 ஐ இயற்றியது. இதற்கு முன்னர் வழக்கில் இருந்த இரட்டை ஆட்சி முறை ஒழிக்கப்பட்டு, நாட்டின் பாதுகாவல், நிதி போன்ற முக்கிய துறைகள் தவிர மற்ற பொறுப்புகள் இந்தியர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டன. இப்புதிய ஆட்சி முறை மாநில சுயாட்சி என்றழைக்கப்பட்டது. இதன் கீழ் 1937 இல் மத்திய நாடாளுமன்றத்திற்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் முதல் தேர்தல் நடத்தப்பட்டது.
தொகுதிகள்
[தொகு]
|
1937இல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணம், தற்கால தமிழ் நாடு, தெலுங்கானா தவிர்த்த ஆந்திரப் பிரதேசம், கேரளத்தின் மலபார் மாவட்டம், கர்நாடகத்தின் தெற்கு கனரா மாவட்டங்களை உள்ளடக்கிய பிரதேசமாக இருந்தது. இந்திய அரசாங்கச் சட்டம், 1935 இன் படி, சென்னை மாகாண சட்டமன்றத்தில் இரு அவைகள் இருந்தன. அசம்பிளி என்றழைக்கப்பட்ட கீழவையில் 215 உறுப்பினர்களும், கவுன்சில் என்றழைக்கப்பட்ட மேலவையில் 54 முதல் 56 உறுப்பினர்களும் இருந்தனர். இவர்களுள் கீழவையின் அனைத்து உறுப்பினர்களும், மேலவையின் 46 உறுப்பினர்களும் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தொகுதிகளுள் முஸ்லீம்கள், தலித்துகள்., ஐரோப்பியர், பெண்கள், ஜமீன்தார்கள், வணிகர் மற்றும் தொழில் முனைவோர், இந்திய கிருத்துவர்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகிய பிரிவினருக்கு வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு இருந்தது. மக்கள் அனைவரும் வாக்குரிமை பெற்றிருக்கவில்லை. ஒருவரின் சொத்து மதிப்பு அல்லது அவர் கட்டியுள்ள வரியைப் பொறுத்தே வாக்குரிமை அளிக்கப் பட்டது.
அரசியல் நிலவரம்
[தொகு]சென்னை மாகாணத்தில் அப்போது இரு முக்கிய கட்சிகள் இருந்தன – இந்தியாவிற்கு சுதந்திரம் அல்லது சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்று கோரிய இந்திய தேசிய காங்கிரசு, மற்றும் பிராமணரல்லாதோர் நலனுக்காகத் தொடங்கப் பட்ட நீதிக்கட்சி எனப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம். தேசியவாதக் கட்சியான காங்கிரசு, இரட்டை ஆட்சி முறையில் இந்தியர்களுக்கு வழங்கப் பட்ட அரசியல் உரிமைகளால் திருப்தி அடையவில்லை. எனவே தேர்தலில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்தது. ஆனால் காங்கிரசின் ஒரு பிரிவினர் அதை ஏற்காமல் 1922 இல் தனியே பிரிந்து சென்று சுவராஜ் (சுயாட்சி) கட்சி என்ற பெயரில் தனி கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர். தமிழகத்தில் சீனிவாச சாஸ்திரி, சத்தியமூர்த்தி ஆகியோர் சுயாட்சி கட்சிக்கு தலைமை வகித்தனர். நாளடைவில் இருபிரிவினருக்குள் இருந்த வேறுபாடுகள் குறைந்தன. தேர்தலில் போட்டியிடலாம் என்ற நிலை எடுக்கப்பட்டது. 1935ல் சுயாட்சிக் கட்சி காங்கிரசுடன் அதிகாரபூர்வமாக இணைந்து விட்டது.
இத்தேர்தல் நடைபெற்ற காலத்தில் பெரும் பொருளியல் வீழ்ச்சியின் தாக்கம் சென்னை மாகாணத்தில் கடுமையாக இருந்தது. பிராமணரல்லாதோர் அனைவருக்குமான இயக்கமாக தொடங்கப்பட்ட நீதிக்கட்சி காலப்போக்கில் தலித்துகள், முஸ்லிம்கள், தொழிலாளர்கள் என பல சமூகத்தவரின் ஆதரவை இழந்து, பணக்காரர்கள், ஜமீன்தார்களின் நலனை மட்டும் பாதுகாக்கும் கட்சியாக மாறியிருந்தது. 1930 களில் உலகைப் பீடித்த பெரும் பொருளியல் வீழ்ச்சியினால் கடும் பாதிப்புக்குள்ளான சென்னை மாகாண மக்கள் நீதிக்கட்சி அரசின் மேல் கடும் அதிருப்தியில் இருந்தனர். மேலும் விடுதலைப் போராட்டம் தீவிரமடைந்ததால், மக்களிடையே தேசிய உணர்வு மிகுந்திருந்தது. நீதிக் கட்சியின் பிரித்தானிய ஆதரவுப் போக்கு மக்களின் அதிருப்தியை அதிகப் படுத்தியது. பிரித்தானிய அரசை எதிர்த்துப் போராடி வந்த இந்திய தேசியக் காங்கிரசு, மக்களிடையே பெரும் ஆதரவைப் பெற்றிருந்தது. காங்கிரசின் சத்தியாக்கிரகம், சட்ட மறுப்பு இயக்கம், நிலவரி குறைப்புப் போராட்டம், நெசவாளர்கள் கூலி உயர்வு போராட்டம் ஆகியவை மக்களின் ஆதரவை பெற்றிருந்தன. நீதிக்கட்சித் தலைவரும் முதல்வருமான பொபிலி அரசரும் அவரது அமைச்சர்களும், தங்களது அலட்சிய சர்வாதிகாரப் போக்கால், மக்களிடம் வெறுப்பை சம்பாத்திருந்தனர். அவர்கள் மீது பொதுமக்களுக்கிருந்த கோபத்தைப் பற்றி செய்தி வெளியிட்ட “ஜமீன் ரயாட்” இதழ், “கிராமங்களில் கிழவிகள் கூட பொபிலி அரசு எப்பொழுது ஒழியும்” என்று ஏங்குவதாகக் கூறியது. பெரியாரின் சுய மரியாதை இயக்கம், நீதிக்கட்சியை ஆதரிக்கும் வெகுஜன இயக்கங்கள் மிகச் சிலவற்றுள் ஒன்றாக இருந்தது. 1930-34 இல் பெரியாருக்கும் நீதிக்கட்சிக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் 1934 இல் சரியானது. கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கம் காட்டி வந்த பெரியார், கம்யூனிஸ்ட் கட்சி 1934 இல் தடை செய்யப்பட்டதாலும், அரசு தந்த நெருக்கடிகளாலும், வெளிப்படையான பொதுவுடமைக் கொள்கையை கைவிட்டு நீதிக்கட்சியுடன் மீண்டும் நெருக்கமானார். அவரது ஆதரவைப் பெறுவதற்காக நீதிக்கட்சி பொதுவுடமை அம்சங்கள் நிறைந்த அவரது “ஈரோடு திட்ட” த்தை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக்கொண்டது.[3][4][5][6]
தேர்தலில் நீதிக்கட்சியால் வெற்றி பெற இயலாது என்பதை அறிந்த அதன தலைவர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேறி காங்கிரசில் இணைந்தனர். கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு, வெங்கடகிரி குமாரராஜா போன்றவர்கள் புதிய கட்சி தொடங்கினர். மிகவும் பலவீனமான நிலையிலேயே நீதிக்கட்சி தேர்தலை சந்தித்தது. காங்கிரசு கட்சி பலம் பொருந்தி இருந்தாலும் கோஷ்டிப் பூசல்களால் பாதிக்கப்படிருந்தது. தேர்தலுக்கு சிறிது காலம் முன்வரை சத்தியமூர்த்தியே கட்சியின் தலைவராகவும் முதல்வர் பதவிக்கு கட்சியின் தேர்வாகவும் கருதப்பட்டார். ஆனால் காங்கிரசின் தேசியத் தலைமை முதல்வர் பதவிக்கு ராஜாஜி வரவேண்டும் என்று விரும்பினார்கள். அவர்கள் உத்தரவின்படி சத்தியமூர்த்தி ராஜாஜிக்கு தலைவர் பதவியை விட்டுக் கொடுத்து விலகினார். ஆனால் தேர்தல் பிரச்சாரத்தை அவரே தலைமையேற்று நடத்தினார்.
தேர்தல் முடிவுகள்
[தொகு]தேர்தல் முடிவுகள்:[5][7][8][9][10][11]
கீழவை
[தொகு]காங்கிரசு | இடங்கள் | நீதிக்கட்சி | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
இந்திய தேசிய காங்கிரசு | 159 | நீதிக்கட்சி | 18 | முஸ்லிம் லீக் | 11 |
தென்னிந்திய வர்த்தக சபை | 1 | நாட்டுக்கோட்டை நகரத்தார் சங்கம் | 1 | ஐரோப்பிய வணிகர்கள் | 3 |
நீதிக்கட்சி ஆதரவாளர்கள் | 2 | ஆங்கிலோ இந்தியர்கள் | 2 | ||
முஸ்லிம் முற்போக்குக் கட்சி | 1 | ||||
சென்னை மக்கள் கட்சி | 1 | ||||
மற்றவர்கள் | 1 | ||||
சுயேட்சைகள் | 15 | ||||
மொத்தம் (1937) | 160 | மொத்தம் (1937) | 21 | மொத்தம் (1937) | 34 |
மேலவை
[தொகு]காங்கிரசு | இடங்கள் | நீதிக்கட்சி | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
காங்கிரசு | 27 | நீதிக்கட்சி | 7 | முஸ்லிம் லீக் | 3 |
முஸ்லிம் சுயேட்சைகள் | 3 | ||||
கிருத்துவ சுயேட்சைகள் | 2 | ||||
இந்து சுயேட்சைகள் | 2 | ||||
ஐரோப்பியர்கள் | 1 | ||||
மற்றவர்கள் | 1 | ||||
மொத்தம் (1937) | 27 | மொத்தம் (1937) | 7 | மொத்தம் (1937) | 12 |
ஆட்சி அமைப்பு
[தொகு]இந்திய தேசிய காங்கிரசு 64.5 % வாக்குகளை பெற்று பெறும்பான்மையான தொகுதிகளில் வென்றது. முதல்வர் பொபிலி அரசர் உட்பட பல நீதிக்கட்சித் தலைவர்கள் தோல்வி அடைந்தனர். ஆனால் காங்கிரசு 1935 அரசாங்கச் சட்டத்தில் சட்டமன்றத்தின் முடிவுகளை ரத்து செய்ய கவர்னருக்கு அளிக்கப் பட்டிருந்த உரிமைகளை கண்டித்து பதவி ஏற்க மறுத்தது. சென்னை ஆளுனர் எர்ஸ்கைன் பிரபு நீதிக்கட்சியின் கூர்ம வெங்கட ரெட்டி நாயுடு தலைமையில் ஒரு இடைக்கால அரசை அமைத்தார். இந்த இடைக்கால அரசு இரண்டரை மாத காலம் ஆட்சி செய்தது. பின்னர் வைஸ்ராய் லின்லித்க்ளோ அளித்த வாக்குறுதியை ஏற்று காங்கிரசு ஆட்சி அமைக்க ஒப்புக் கொண்டது. ராஜகோபாலாச்சாரி சென்னை மாகாணத்தின் முதல் காங்கிரசு முதல்வரானார்.[1][12][13][14]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "The State Legislature - Origin and Evolution:Brief History Before independence". Archived from the original on 2010-04-13. பார்க்கப்பட்ட நாள் 2010-09-01.
- ↑ "Tamil Nadu Legislative Assembly". Indian Government. Archived from the original on 2 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 25 November 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ S. Krishnaswamy (1989). The role of Madras Legislature in the freedom struggle, 1861-1947. People's Pub. House (New Delhi). pp. 215–219.
- ↑ Saroja Sundararajan (1989). March to freedom in Madras Presidency, 1916-1947. Madras : Lalitha Publications. pp. 347–350.
- ↑ 5.0 5.1 Rajaraman, P. (1988). The Justice Party: a historical perspective, 1916-37. Poompozhil Publishers. pp. 212–220.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help) - ↑ Manikumar, K. A. (2003). A colonial economy in the Great Depression, Madras (1929-1937). Orient Blackswan. pp. 184–198. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8125024565, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125024569.
- ↑ Manikumar, K. A. (2003). A colonial economy in the Great Depression, Madras (1929-1937). Orient Blackswan. p. 197. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8125024565, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125024569.
- ↑ More, J. B. Prashant (2006). Religion and society in South India: Hindus, Muslims, and Christians. Institute for Research in Social Sciences and Humanities. p. 216. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8188432121, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788188432127.
- ↑ The Statesman's year-book. St. Martin's Press. 1937. pp. xxxiii.
- ↑ Natesan, G. A. (1937). The Indian review, Volume 38. G.A. Natesan & Co. p. 151.
- ↑ Rudner, David West (1994). Caste and Capitalism in Colonial India: The Nattukottai Chettiars. University of California Press. pp. ch.7.
- ↑ Ramanathan, K. V. (2008). The Satyamurti letters: the Indian freedom struggle through the eyes of a parliamentarian, Volume 1. Pearson Education India. pp. 301–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8131714888, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788131714881.
- ↑ Menon, Visalakshi (2003). From movement to government: the Congress in the United Provinces, 1937-42. Sage. p. 75. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0761996206, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780761996200.
- ↑ Nagarajan, Krishnaswami (1989). Dr. Rajah Sir Muthiah Chettiar: a biography. Annamalai University. pp. 63–70.