தமிழ்நாடு அரசு இலச்சினை
தமிழ்நாடு அரசு இலச்சினை | |
---|---|
விவரங்கள் | |
பயன்படுத்துவோர் | தமிழ்நாடு அரசு |
உள்வாங்கப்பட்டது | 1949 |
விருதுமுகம் | திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் |
குறிக்கோளுரை | Truth alone triumphs (ஆங்கில மொழி) (வாய்மையே வெல்லும்) |
தமிழ்நாடு அரசு இலச்சினை (Emblem of Tamilnadu) என்பது இந்தியாவின், தமிழ்நாடு மாநில அரசால் அலுவல் ரீதியாக அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்படும் சின்னம் அல்லது இலச்சினை ஆகும். இந்த இலச்சினை தமிழ்நாடு அரசின் அலுவல்முறை கடித முகப்புகளிலிலும், அரசு உயர் அலுவலக கட்டிட முகப்புகளிலும் இடம்பெறுகிறது. மேலும் தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் தலைவர், தமிழ்நாடு அரசின் கீழ் அலுவல் புரியும் செயலாளர் மட்டத்திலான இந்திய ஆட்சிப்பணி அலுவலர்கள் உள்ளிட்டோரின் வாகன முகப்புகளிலும் இந்த இலச்சினை இடம் பெற்றிருக்கும்.
வரலாறு
[தொகு]இந்தியா சுதந்திரம் பெற்ற போது தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகம் ஆகியவை சென்னை மாகாணமாக இருந்தது.[1] சென்னை மாகாண முதல்வராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (1947–1949) இருந்த போது இந்த இலச்சினை பற்றிய முன்மொழிவு இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டு, அது தமிழ்நாட்டின் அரசு இலச்சினையாக 1949 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு இந்திய பிரதமராக இருந்த போது ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த இலச்சினை மதுரையைச் சேர்ந்த ஓவியரான ஆர். கிருஷ்ணராவ் என்பவரால் வரையப்பட்டது.[2]
அமைப்பு
[தொகு]தமிழ்நாடு அரசின் இலச்சினை வட்ட வடிவில் காணப்படுகிறது. வட்ட வடிவ மேற்புற பட்டையில் தமிழ்நாடு அரசு என்றும் வட்ட அமைப்பிற்கு வெளிப்புறத்தின் கீழே ”வாய்மையே வெல்லும்” எனும் குறிக்கோளுரையும் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது. இலச்சினையின் மையமாக தமிழர் கட்டிடக்கலை, தமிழ்க் கலாச்சாரத்தையும் எடுத்துக்கூறும் வகையில் அடர்மஞ்சள் நிறத்தில் ஒரு கோபுரம் காணப்படுகிறது. இந்த கோபுரம் விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின், ஸ்ரீவடபத்திரசாயி பெருமாளுக்கு அர்பணிக்கப்பட்ட 11 அடுக்கு கோபுரத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்படவிருந்தது. ஆனால் ஓவியர் மதுரை மீனாட்சி கோயிலின் மேற்கு கோபுரத்தை அடிப்படையாக வைத்து வடிவமைத்தார்.[2] அதன் கீழ்புறத்தில் இந்திய தேசிய இலச்சினையில் உள்ள நான்கு சிங்க முகம் காணப்படுகிறது. இதன் பின்னணியில் இருபுறமும் இந்திய தேசியக் கொடிகள் காணப்படுகிறது. இது போன்று இந்திய தேசியக்கொடி வேறு எந்த மாநில இலச்சினைகளிலும் இல்லை.
வழக்கு
[தொகு]மதச்சார்பற்ற நாட்டில் மதரீதியான இடங்களை, முத்திரையில் வைக்கக் கூடாது என்று கோரி 2013இல் தொடுத்த பொது நல மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.tn.gov.in/tamilnadustate
- ↑ 2.0 2.1 "Which Tamil Nadu temple is the state emblem? - Times of India".
- ↑ "ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் கோபுரம் மதச்சின்னமல்ல". பிபிசி. 19 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 12 அக்டோபர் 2013.
{{cite web}}
: Check date values in:|date=
(help)