உள்ளடக்கத்துக்குச் செல்

தம்பிலுவில் கண்ணகி அம்மன் ஆலயம்

ஆள்கூறுகள்: 7°08′0″N 81°51′0″E / 7.13333°N 81.85000°E / 7.13333; 81.85000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயம்
ஆலயத்தின் தோற்றம்
தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயம் is located in இலங்கை
தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயம்
தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்:7°08′0″N 81°51′0″E / 7.13333°N 81.85000°E / 7.13333; 81.85000
பெயர்
பெயர்:தம்பிலுவில் கண்ணகை அம்மன் ஆலயம்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:கிழக்கு
மாவட்டம்:அம்பாறை
கோயில் தகவல்கள்
மூலவர்:கண்ணகி
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:மடாலயம்
கல்வெட்டுகள்:தம்பிலுவில் கல்வெட்டு

தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயம் இலங்கையின் கீழை மாகாணத்தின், அம்பாறை மாவட்டத்தில், தம்பிலுவில் கிராமத்தில் அமைந்துள்ள ஆலயமாகும். சிலப்பதிகார நாயகியான பத்தினி கண்ணகிக்கு இலங்கையில் அமைந்த ஆலயங்களில் முக்கியமான தம்பிலுவில் ஆலயம், ஈழத்தின் பழைமைவாய்ந்த கண்ணகி ஆலயங்களில் ஒன்றாகவும் கணிக்கப்படுகின்றது.[1][2]

வரலாறு

[தொகு]
செண்பகநாச்சியார் என்றும் நாகமங்கலையார் என்றும் போற்றப்படும் தம்பிலுவில் அம்மன்

பழங்காலத்தில், இவ்வாலயம் அமைந்த பகுதியில் ஈழப்பழங்குடிகளில் ஒருவரான நாகர் செறிந்துவாழ்ந்ததாகவும், அதனால் இப்பகுதி, "நாகர்முனை" எனப்பெயர்பெற்று விளங்கியதாகவும் சொல்லப்படுகின்றது.[3] அந்நாகர்களின் குலதெய்வமாக விளங்கிய "நாகமங்கலை" வழிபாடே, பின்பு அறிமுகமான பத்தினி வழிபாட்டுடன் இணைந்து இன்றுள்ளவாறு கண்ணகியின் வழிபாடாக வளர்ந்துள்ளது என்று அறியமுடிகின்றது.[4]

பாண்டிநாட்டிலிருந்து மூன்று அம்மன் சிலைகள் இலங்கைக்கு கொணரப்பட்டதாகவும், அவற்றில் "செம்பகநாச்சி" என்றழைக்கப்பட்ட ஒரு அம்மை சிலை, தம்பிலுவில் ஊரக்கைவெளிப் பகுதியில் குடியிருத்தப்பட்டு வணங்கப்பட்டதாகவும் ஒரு தொல்லுரை சொல்கின்றது.[5] பின்னாளில் ஏதோ காரணத்தால் அங்கு வழிபாடில்லாமல் போக, அவ்வம்மன் இப்போதைய இடத்துக்குக் கொணரப்பட்டு, ஆலயம் அமைத்து வழிபடப்பட்டிருக்கிறாள். இங்கிருந்து அல்லது, இவ்வூரை அடுத்திருக்கும் பட்டிநகரிலிருந்தே கண்ணகி வழிபாடு, மட்டக்களப்பின் வடபகுதிக்குச் சென்றிருக்கின்றது என்பதற்கு, "அம்மன் பாம்பாய் வடக்கே பறந்துபோனாள்" எனும் மரபுரையை சான்றாகச் சொல்லுவர்.[6]

மட்டக்களப்பு நாட்டுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த சிங்கள அரசர் எல்லோரும் இத்தேவியையும் வழிபடத்தவறவில்லை என்பதற்கு சான்றுகள் பல உண்டு. கோட்டை மன்ன ஏழாம் விஜயபாகுவால் (1507 - 1521) பொறிக்கப்பட்ட தம்பிலுவில் கல்வெட்டும், அவன் கொடை செய்த பொற்சிலம்பு- அம்மானைக்காய்கள் என்பன இக்கோயிலிலேயே கிடைத்திருந்தன.[7] பொ.பி 1635-1687இற்கு இடையே கண்டி அரசை ஆண்ட இரண்டாம் இராஜசிங்கன் மன்னனைப் புகழும் "தம்பிலுவில் மழைக்காவியம்", இவ்வம்மை மீது பாடப்பட்டிருக்கிறது. அதே கண்டி அரசை 1690 முதல் 1739 வரை ஆண்ட நரேந்திரசிங்கன் மீது பாடப்பட்ட "நரேந்திரசிங்கன் பள்ளு" எனும் இலக்கியம் தம்பிலுவில் கண்ணகையைத் துதித்தே ஆரம்பமாகிறது.

ஆலய அமைப்பு

[தொகு]
பரிவார பிள்ளையார் சன்னதியின் தோற்றம்.

கேரளப்பாணியில் அமைந்த ஓட்டு மடாலயமாகவே இவ்வாலயம் அமைந்து விளங்குகின்றது. பிள்ளையார், வைரவர், நாகதம்பிரான் ஆகியோருக்கு மூன்று பரிவார சன்னதிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆலயத்தின் முதலாம் வீதியைச் சுற்றி, அட்டதிக்குப் பாலகருக்கான எட்டு பலிபீடங்கள் அமைந்துள்ளன. அம்மன் ஆலயம் வடக்கு நோக்கியதாக அமைக்கப்பட்டிருக்கிறது. கருவறை, அர்த்தமண்டபம் ஆகியவற்றின் திருக்கதவுகள், விழாக்காலம், தைப்பொங்கல் தவிர்ந்த நாட்களில் திறக்கப்படுவதில்லை. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இடம்பெறுகின்ற வாரப்பூசைகள், மூடிய கதவின் முன்னுள்ள அம்மையின் திரைச்சீலை ஓவியத்துக்கே நிகழ்த்தப்படுகின்றது. ஆலயத்திலிருந்து வடக்கே சில நூறு மீற்றர் தள்ளி, கோவலனுக்காக அமைக்கப்பட்டிருந்த வடசேரிக்கோயில் இப்போது, தம்பிலுவில் சித்திவிநாயகர் ஆலயமாக விளங்குகின்றது. வடசேரிக்கோவிலுக்கும் அம்மன் கோவிலுக்கும் இடையே உள்ள திறந்தவெளியான 'கொம்புவம்மியடி'யில் அல்லது கொம்புச்சந்தியடியில், இலங்கையின் தனித்துவமான கலையாடல்களில் ஒன்றான கொம்புமுறி பன்னெடுங்காலமாக இடம்பெற்று வருகிறது.

வைகாசிச் சடங்கு

[தொகு]

எல்லாக் கிழக்கிலங்கை கண்ணகி அம்மன் கோயில்களும் போலவே, வைகாசி மாதத்தில் நிகழும் இவ்வாலய விழாவும் வைகாசிச்சடங்கு அல்லது குளித்தில் அல்லது கதவு திறத்தல் என்றே சொல்லப்படுகின்றது. வைகாசிப் பூரணையை அண்டி வரும் திங்கட்கிழமை ""வைகாசி விசாகப்பொங்கல்" இடம்பெறும் வண்ணம், அதற்கு முந்தைய செவ்வாய்க்கிழமை, ஆலயக்கதவு திறக்கப்பட்டு, ஏழு நாட்கள் காலை - இரவுப் பூசையும் அம்மன் திருவுலாவும் நிகழ்கின்றது. ஏழாம் நாள் ஞாயிற்றுக்கிழமை அம்மன் ஊர்வலமும், அடுத்தநாள் திருக்குளிர்த்தி உற்சவமும் இடம்பெறும். பேசும் தெய்வமாக பயபக்தியோடு நோக்கப்படும் தம்பிலுவில் கண்ணகைக்கு, பல ஊர்களிலிருந்தும் மக்கள் திரண்டுவந்து, நேர்த்திக்கடன் செலுத்துவது வழமை. வைகாசிப்பொங்கலன்று, ஆலயத்திருவீதிகளில் ஆயிரக்கணக்கில் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் தீர்ப்பதும் கண்கொள்ளாக்காட்சி.

ஆலய நிர்வாகம், மட்டக்களப்பு நாட்டின் பூர்வீக வழக்கமான குடிவழி வண்ணக்கர் பாரம்பரியத்தின் படி இடம்பெறுகிறது. தம்பிலுவில் வேளாளரும் விஸ்வப்பிரம குலத்தினரும் குருக்கள் குலத்தாரும் (வீரசைவ சங்கமர்) கோவில் பரிபாலனத்தில் இடம்பிடித்திருக்கிறார்கள். வண்ணக்கர் எனும் தலைமைப்பதவி கட்டப்பத்தன் குடி வேளாளருக்கு உரியது. சமீப காலமாக சிங்களக்குடியிலிருந்து தலைவரையும், வேடக்குடியிலிருந்து செயலாளரையும் கோரைக்களப்புக்குடியிலிருந்து பொருளாளரையும் தெரிவுசெய்து வழக்கமான நிர்வாகமும் இடம்பெற்று வருகிறது. அறுபதுமுன்னங்கைச் சவடிக்குடியினர், விஸ்வப்பிரமகுலத்தினர், குருக்கள் குலத்தின் ஒரு தத்தியினர்ஆகியோர் நிர்வாகத்தில் பங்குவகிக்கும் ஏனைய குடிகளும் குலங்களும் ஆவர். ஏனைய வேளாளக்குடிகளும் முக்குவரும் முன்பு வடசேரிக்கோவிலை நிருவகித்து வந்தனர்.

மேலும் காண்க

[தொகு]

உசாத்துணைகள்

[தொகு]
  1. Hugh, Nevill. (1888), The Taprobanian, A Dravidian Journal of Oriental Studies in and around Ceylon, in Natural History, archaeology, Philology, Hostory, &c, Volume 1, Education Society Press,.
  2. History of Pattini Kannaki in Sri Lanka, 2015, Invoking the Goddess
  3. கமலா கமலநாதன், வித்துவான் கமலநாதன். (2005), மட்டக்களப்புப் பூர்வ சரித்திரம், குமரன் புத்தக இல்லம்,, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-9429-66-3.
  4. துலாஞ்சனன்.வி, (2015), "தம்பிலுவில் கண்ணகி வழிபாடு - ஒரு வரலாற்றுநோக்கு", கூடல் (4), மட்டக்களப்பு கண்ணகி கலை இலக்கியக் கூடல், பப.22 - 26.
  5. கந்தையா, வீ.சீ. (1983), மட்டக்களப்புச் சைவக் கோவில்கள் I, கூடல் வெளியீடு, பப. 49-64.
  6. நா.நவநாயகமூர்த்தி, (1998), தம்பிலுவில் கண்ணகி வழிபாடு.
  7. பத்மநாதன், சி (2013), இலங்கைத் தமிழ்ச் சாசனங்கள் II, இலங்கை இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.

வெளி இணைப்புகள்

[தொகு]