உள்ளடக்கத்துக்குச் செல்

திக்கற்ற பார்வதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திக்கற்ற பார்வதி
இயக்கம்சிங்கீதம் சீனிவாசராவ்
தயாரிப்புஎன். லக்ஸ்மிகாந்தா ரெட்டி
நவதராங்
எச். வி. சஞ்சீவ ரெட்டி
கதைராஜாஜி
இசைசிட்டி பாபு
நடிப்புஸ்ரீகாந்த்
லட்சுமி
ஒளிப்பதிவுமங்கடா இரவி வர்மா
வெளியீடுசூன் 14, 1974
நீளம்3048 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திக்கற்ற பார்வதி 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சக்கரவர்த்தி இராசகோபாலாச்சாரியின் "திக்கற்ற பார்வதி" என்ற புதினத்தைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தை சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கினார்.[1][2] இப்படமே அவரது முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தில் ஸ்ரீகாந்த், லட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு காரைக்குடி நாராயணன் திரைக்கதை, வசனம் எழுதினார். இது தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றது.[3] அதே நேரத்தில் லட்சுமி தனது நடிப்பிற்காக பல பாராட்டுகளை வென்றார். இப்படத்தின் வெளிப்புறப் படபிப்பிடிப்பு முழுவதும் இராஜாஜியின் சொந்த ஊரான இப்போதைய கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூருக்கு அருகில் உள்ள தொரப்பள்ளி மற்றும் ஒசூரைச் சுற்றியுள்ள இடங்களிலுமே நடந்தது. துணை நடிகர்களாக ஒசூரில் உள்ளவர்களே நடித்தனர்.

கதை

[தொகு]

படத்தின் கதை குடிப்பழக்கத்தால் விளையும் தீமைகளை காட்டுவதாக உள்ளது. பார்வதிக்கும் ( லட்சுமி ) கருப்பனுக்கும் (ஸ்ரீகாந்த் ) திருமணம் நடக்கிறது. அன்பான மாமியார், மாமனார், கணவருடன் அவரின் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது. பின்னர் அவளுக்கு குழந்தைப் பேறும் உண்டாகிறது. கருப்பன் தனது வருவாயை அதிகரிக்க விரும்பி மாட்டு வண்டியை வாங்க முடிவு செய்கிறான். பார்வதிக்கு அதில் விருப்பமில்லை. உள்ளதை வைத்து திருப்தி அடைவதே மகிழ்ச்சி என்கிறாள். இருப்பினும் கருப்பனின் விருப்பத்துக்கு இணங்கி தன் சேமிப்பை வழங்குகிறாள். கூடுதலாக தேவைப்பட்ட பணத்தை கடன் வாங்கி வண்டி வாங்குகிறான். முதலில் எல்லாம் சிறப்பாகவே போகிறது. ஆனால் கருப்பன் வீட்டிற்கு வரும் வழியில் கள்ளுக் கடைகளைக் கடக்க நேரிடுகிறது. மெதுவாக, அவன் குடிக்கத் துவங்குகிறான் விரைவில் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகிறான். பார்வதியின் வாழ்க்கை துண்பமும் துயரமும் நிறைந்த ஒன்றாக மாறுகிறது. கருப்பனின் அலட்சியத்தால் குழந்தையின் மரணம் ஏற்படுகிறது. பார்வதியின் வாழ்க்கை சோகமாகிறது. கருப்பனால் கடனை அடைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. கருப்பனின் அருவருப்பான அணுகுமுறையை பணத்தைக் கடன் கொடுத்தவரின் மகன் பயன்படுத்திக் கொள்கிறான். பார்வதி உதவியற்றவளாகப் கடன் கொடுத்தவரின் மகனின் ஆசைக்கு அடிபணிகிறாள். இதைக் கண்டுப்பிடித்த கருப்பன், கடன் கொடுத்தவரின் மகனை அரிவாளால் வெட்டுகிறான். அவன் படுகாயம் அடைகிறான். கருப்பன் கைது செய்யப்படுகிறான். பார்வதியை அவளது உறவினர்கள் நிராகரிக்கிறார்கள். அவள் தன் கணவனை விடுவிக்க தனியாக போராடுகிறாள். வழக்கறிஞரின் ஆலோசனையின் பேரில், அவள் தன் கணவரின் விடுதலையை எளிதாகும் என்று நினைத்து, நடந்ததை நீதிமன்றத்தில் கூறுகிறாள். கருப்பன் விடுவிக்கப்படுகிறான். ஆனால் ஒப்புதலால் கோபமடைந்து, அவளை நிராகரிக்கிறன். இதனால் மனமுடைந்த பார்வதி மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

நடிகர்கள்

[தொகு]

தயாரிப்பு

[தொகு]

இத்திரைப்படம் இராஜாஜி பிறந்த ஊரான தொரப்பள்ளியில் 28 நாட்கள் ஒரே கட்டத்தில் படமாக்கப்பட்டது.[4] தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக ஒசூர் மற்றும் சென்னை நீதிமன்றத்தில் நீதிமன்றக் காட்சிகள் படமாக்கப்பட்டன. படக் காட்சிகளில் உள்ளூர் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.[5][6] படத்தின் தயாரிப்பு செலவான ₹2.5 லட்சத்தில் (2021 மதிப்பில் ₹3.3 கோடி) 80 விழுக்காடு நிதியை இந்திய திரைப்பட நிதிக் கழகம் வழங்கியது (பின்னர் அது இந்திய தேசியத் திரைப்பட வளர்ச்சிக் கழகம் என பெயர் மாற்றப்பட்டது) ஒரு முன்னுதாரணமாக அமைந்தது.[4][5] தயாரிப்பாளர்களும், இயக்குனரும் கடனை அடைக்க செலுத்த முடியாத நிலையில், அப்போதைய தமிழ்நாட்டு முதல்வர் ம. கோ. இராமச்சந்திரன், அந்தத் தொகையை செலுத்தி, தமிழக அரசுக்கு படத்தை வாங்கினார்.[7] திரைப்பட வரலாற்றில் ஒரு மாநில அரசு திரைப்படம் வெளியான பிறகு அதை வாங்கியது இதுவே முதல் முறை.[5] இப்படத்திற்கான வசனங்களை காரைக்குடி நாராயணன் எழுதினார்.

ராஜாஜியின் படைப்புகளை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஒரே படம் இதுவாகும். சிங்கீதம் சீனிவாச ராவுக்கு கொடுக்கப்பட்ட அனுமதிக் கடிதத்தில் இடப்பட்ட இராஜாஜியின் கையெழுத்தே அவரது வாழ்நாளின் கடைசிக் கையெழுத்தாகும்.[4][5]

விருதுகள்

[தொகு]

இசை

[தொகு]

இப்படத்திற்கு பிரபல வீணை இசைக்கலைஞர் சிட்டி பாபு இசையமைத்தார். படத்தில் இரு பாடல்கள் இடம்பெற்றன. ஒரு பாடலுக்கு இராஜகோபாலாச்சாரியின் வரிகளும் மற்றொரு பாடலுக்கான வரிகளை கண்ணதாசன் எழுத, இரு பாடல்களையும் வாணி ஜெயராம் பாடினார்.

  1. "ஆகாயம் மழை பொழிந்தால்" - வாணி ஜெயராம்
  2. "என்ன குற்றம் செய்தேனோ" - வாணி ஜெயராம்

வரவேற்பு

[தொகு]

கல்கி இதழில் விமர்சகர் காந்தன் படத்தின் நடிகர்கள், உரையாடல், இசை, ஒளிப்பதிவு ஆகியவற்றின் செயல்திறனைப் பாராட்டிய அதே வேளையில், அசல் பொருளின் ஆன்மாவைத் தக்கவைத்ததற்காக திரைப்படத்தைப் பாராட்டினார்.[10]

குறிப்புகள்

[தொகு]
  1. "Singeetham Srinivasa Rao's gems before Christ - Rediff.com".
  2. "Flair for the unusual". தி இந்து. 6 April 2001 இம் மூலத்தில் இருந்து 24 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161124223542/http://www.thehindu.com/2001/04/06/stories/09060221.htm. 
  3. "ராஜாஜியின் கதை திக்கற்ற பார்வதி: 20 வயதில் வசனம் எழுதினார் காரைக்குடி நாராயணன்". மாலை மலர். 6 September 2012. பார்க்கப்பட்ட நாள் 2 August 2013.
  4. 4.0 4.1 4.2 Rangan, Baradwaj (28 June 2014). "Four decades later, a flashback". The Hindu. https://www.thehindu.com/features/metroplus/four-decades-later-a-flashback/article6157589.ece. 
  5. 5.0 5.1 5.2 5.3 "Celebrating a Rajaji classic - The Hindu". தி இந்து.
  6. "திரையுலகில் ராஜாஜி". கல்கி. 9 December 1979. pp. 6–7. பார்க்கப்பட்ட நாள் 2023-03-14.
  7. "Dikkatra Parvathi Screening | Silverscreen India".
  8. "21st National awards for films" (PDF). Directorate of Film Festivals. Archived from the original (PDF) on 28 September 2011. பார்க்கப்பட்ட நாள் 4 June 2011.
  9. 9.0 9.1 The Times of India directory and year book including who's who. Times of India Press. 1984.
  10. காந்தன் (24 February 1974). "திக்கற்ற பார்வதி". [[கல்கி (இதழ்)|Kalki]]. p. 11. Archived from the original on 27 July 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்கற்ற_பார்வதி&oldid=4118727" இலிருந்து மீள்விக்கப்பட்டது