நெகேமியா (நூல்)
விவிலியத்தின் |
பழைய ஏற்பாட்டு நூல்கள் |
---|
கிறித்தவம் வலைவாசல் விவிலியம் வலைவாசல் |
நெகேமியா (Nehemiah) என்பது கிறித்தவ மற்றும் யூதர்களின் திருநூலாகிய திருவிவிலியத்தில் (பழைய ஏற்பாடு) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.[1][2][3]
நூலின் பெயர்
[தொகு]எஸ்ரா என்னும் இந்நூல் "எஸ்ரா" நூலைப் போன்று "குறிப்பேட்டின்" தொடர்ச்சியாகும். எபிரேய மொழியில் நெகேமியா (נְחֶמְיָה) என்றால் "இறைவனே எனக்கு ஆறுதல்" என்பது பொருள்.
நெகேமியா நூலின் பின்னணியும் பொருளும்
[தொகு]நெகேமியா என்பவர், பாரசீகத் தலைநகரான சூசாவில் மன்னர் அர்த்தக்சசுத்தாவுக்குப் பானப் பணிவிடைக்காரராக இருந்தார். சொந்த நாடு திரும்பிய இசுரயேல் மக்களின் இழிநிலையைக் கண்டு வருத்தமுற்றார். பாரசீக மன்னரால் யூதா நாட்டின் ஆளுநராக நியமனம் பெற்றார். பாழடைந்து கிடந்த எருசலேம் நகரின் மதிலைப் பல எதிர்ப்புகளுக்கிடையே மனம் தளராது கட்டியெழுப்பினார். சமய, சமூக சீர்திருத்தங்களை இசுரயேல் மக்களிடையே செய்தார்.
நெகேமியா காலத்தில் சட்டவல்லுநரான எஸ்ரா திருச்சட்டத்தை மக்கள் முன் வாசிக்க, மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு, உடன்படிக்கையின்படி வாழ உறுதி பூண்டனர். இறைவனின் உதவியின்றித் தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை நெகேமியா உணர்ந்திருந்தார். எனவே, அவர் பலமுறை இறைவனிடம் மன்றாடினார். கி.மு. 538இல் பாரசீக மன்னர் சைரசு பாபிலோனியாவைக் கைப்பற்றினார். அதே ஆண்டில் அவர் இசுரயேல் மக்களுக்கு விடுதலை அளித்து யூதாவுக்குத் திரும்பிச் செல்ல அனுமதித்தார். செருபாபேலின் தலைமையில் இசுரயேல் மக்களுள் ஒரு பகுதியினர் முதலில் திரும்பி வந்தனர். திரும்பிவந்த இசுரயேலர் எருசலேமில் அழிந்திருந்த கோவிலைத் திரும்பவும், 515இல் கட்டியெழுப்பிப் புனிதப்படுத்தினர். மீண்டும் அங்கு வழிபாடு நடத்தினர்.
சில ஆண்டுகளுக்குப் பின் எஸ்ராவின் தலைமையில் இசுரயேல் மக்களுள் மற்றொரு பகுதியினர் திரும்பி வந்தனர்.
எஸ்ரா ஒரு குரு; திருச்சட்ட வல்லுநர். உடன்படிக்கையின் மக்களாகவும், இறைவனின் புனித மக்களாகவும் தேர்ந்துகொள்ளப்பட்ட இசுரயேல் மக்களின் சிறப்பு நிலையைக் காக்குமாறு அவர்களின் மறைவாழ்விலும், சமூக வாழ்விலும் எஸ்ரா மறுமலர்ச்சி ஏற்படுத்தினார்.
மேலும் எஸ்ரா "இறையாட்சி" இசுரயேல் மக்களிடையே நிலவுமாறு அரசியல், மறை ஆகியவற்றின் பொறுப்பைக் குருக்களிடமே ஒப்படைத்து, அவற்றிற்கான சட்டதிட்டங்களை வகுத்துத் தந்தார்.
இந்நூலின் பெரும் பகுதி எபிரேயத்திலும், சிறு பகுதி (4:8-6:18, மற்றும் 7:12-16) அரமேயத்திலும் எழுதப்பட்டுள்ளன.
நெகேமியா நூலின் உட்கிடக்கை
[தொகு]பொருளடக்கம் | அதிகாரம் - வசனம் பிரிவு | 1995 திருவிவிலியப் பதிப்பில் பக்க வரிசை |
---|---|---|
1. நெகேமியா எருசலேமுக்கு வருதல் | 1:1 - 2:20 | 730 - 732 |
2. எருசலேம் நகரின் மதில்கள் திரும்பக் கட்டப்படுதல் | 3:1 - 7:73 | 732 - 740 |
3. திருச்சட்டம் வாசிக்கப்பட்டு உடன்படிக்கை புதுப்பிக்கப்படுதல் | 8:1 - 10:39 | 740 - 746 |
4. நெகேமியாவின் பிற செயல்பாடுகள் | 11:1 - 13:31 | 746 - 752 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Albright, William (1963). The Biblical Period from Abraham to Ezra: An Historical Survey. Harpercollins College Div. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-06-130102-7.
- ↑ Paul Cartledge, Peter Garnsey, Erich S. Gruen (editors), Hellenistic Constructs: Essays In Culture, History, and Historiography, p. 92 (University of California Press, 1997). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-520-20676-2
- ↑ Graham, M.P, and McKenzie, Steven L., The Hebrew Bible Today: An Introduction to Critical Issues (Westminster John Knox Press, 1998) p. 202