பூமியின் நிழல்
பூமியின் நிழல் (Earth's shadow) என்பது பூமியே அதன் வளிமண்டலத்தில் வார்க்கும் நிழலைக் குறிப்பதாகும். இது பூமி நிழல் என்றும் சில சமயங்களில் இருண்ட பிரிவு என்றும் அழைக்கப்படுவதுண்டு. பெரும்பாலும் இந்த நிழலை பூமியின் மேற்பரப்பு வானில் கருப்புப் பட்டையாக தொடுவானத்திற்கு அருகில் காணமுடியும். இந்த வளிமண்டல நிகழ்வு சில நேரங்களில் சூரியன் மறைவு மற்றும் சூரியன் எழுச்சி ஆகிய இரண்டு முறையும் காணலாம்.
அதேசமயம், இந்த இரவுநேர நிகழ்வு (பூமியின் நிழல் வார்க்கும் செயல்பாடு) அனைவருக்கும் அறிமுகமான ஒரு நிகழ்வேயாகும். சூழ்நிலையின் மீது பூமியின் நிழல் ஏற்படுத்தும் விளைவு வானத்தில் தெரியக்கூடியதே ஆகும். எனினும் பெரும்பாலும் இரவென்பதால் இந்நிகழ்வு அங்கீகரிக்கப்படாத ஒன்றாகவே செல்கிறது. பூமியின் வளிமண்டலத்தில் விழும் இந்நிழல் அந்தியொளியில் உற்றுநோக்கர்களின் பார்வைக்குத் தெரியும். வானிலை மற்றும் பார்வையாளர் பார்க்கும் புள்ளி போன்றவை அடிவானத்தில் விழும் நிழலை தெளிவாகப் பார்க்க அனுமதிக்கும். ஓர் அடர் நீலம் அல்லது சாம்பல்-நீலத்தில் நீலப்பட்டையாக இந்நிழலைப் பார்க்க முடியும். ஒருவேளை வானம் தெளிவாக இருப்பதாக ஊகித்துக் கொண்டால், பூமியின் நிழலை சூரிய மறைவு அல்லது சூரிய எழுச்சிக்கு எதிராக உள்ள வானத்தின் மற்றொரு பாதியில் தொடுவானத்திற்கு சற்று மேலே அடர்நீலப் பட்டையாகப் பார்க்க முடியும்.
வெள்ளி மண்டலம் அல்லது எதிர் அந்தியொளி வளைவு என்ற நிகழ்வும் இதைபோன்ற இதனுடன் தொடர்புடைய மற்றொரு நிகழ்வாகும். அடர்நீல பூமியின் நிழலுக்கு சற்று மேலாக ஒரு இளஞ்சிவப்பு பட்டை தெரியும். பூமியின் நிழலையும் வெள்ளி மண்டலத்தையும் பிரித்துக்காட்டக்கூடிய வரையறுக்கப்பட்ட கோடு ஏதும் அங்கில்லை. மாறாக ஒரு வண்ணப் பட்டை ஒன்றிலிருந்து மற்றொன்றிற்குள் வளைந்தாற் போல் செல்கிறது.
தோற்றம்
[தொகு]வளிமண்டலத்தில் வார்க்கப்படும் பூமியின் நிழலை, வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் அந்திப்பொழுதுகளில், தொடுவானம் தடையேதுமின்றி மறைக்கப்படாமல் இருந்தால் பார்க்க இயலும். சூரியன் மறையும்பொழுது அதற்கு எதிரில் கிழக்கு திசையில் தொடுவானத்திற்கு சற்று மேலாகப் பார்க்க முடியும். அடர் நீல நிறத்தில் தொடுவானத்திற்கு மேல் 180 பாகைகளில் இந்த இந்நிழல் காணப்படுகிறது. வானக்கோளத்தில் சூரியனுக்கு நேர் எதிராகக் கருதப்படும் கற்பனைப்புள்ளியில் இந்நிழல் மிகவும் கவனிக்கப்படத்தக்கதாகும்.
சூரிய உதயத்தின் போதும், பூமியின் நிழலை இதே வழிமுறையில், ஆனால் மேற்கு வானில் பார்க்க இயலும். கடலுக்கு மேலுள்ள தெளிவான தொடுவானத்தில் இந்நிகழ்வை மிகத்தெளிவாகக் காணமுடியும். கூடுதலாக, தொடுவானத்தை ஓர் உயர்ந்த இடத்திலிருந்து நோக்கும் பார்வையாளர்[1][2] இந்நிழலை மிகவும் கூர்மையாகவும் காணைவியலும்.
சூரிய உதயத்தின் போது பூமியின் நிழலில் சூரியன் தானே உதயமாவது போன்ற காட்சியும், சீரிய மறைவின் போது பூமியின் நிழல் உயர்ந்து சூரியன் கீழே இறங்கி மறைவது போலவும் காட்சிகள் தோன்றுகின்றன[1]
வெள்ளி மண்டலம்
[தொகு]பூமியின் நிழலுக்கு சற்று மேலே உள்ள அடர் நீலப்பட்டையை சரியாகப் பார்க்கும் நிலையில், ஒர் இளஞ்சிவப்பு ( ஆரஞ்சு அல்லது ஊதா) பட்டையை அந்திப் பொழுதில் காணமுடியும். இந்த பட்டையைத்தான் வெள்ளி மண்டலம் அல்லது எதிர் அந்தி வளைவு என்கிறார்கள், வெள்ளி கிரகத்திற்கும் இந்தப் பெயருக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. இது பூமியின் மேல் வளிமண்டலத்தின் ஒரு பகுதியாகும். இப்பகுதி சூரிய மறைவு அல்லது உதயத்தால் ஒளியூட்டப்படுகிறது. சூரியன் வருதற்கு முன்னரோ அல்லது சூரியன் மறைவதற்கு முன்னரோ இப்பட்டையை காணவியலும்[1][2]
பின்னொளிர்வு நிகழ்விலிருந்து வெள்ளி மண்டல நிகழ்வு முற்றிலும் வேறுபட்ட நிகழ்வாகும். பின்னொளிர்வு என்பது வானத்தின் எதிர்ப்பகுதியில் வடிவியலாகத் தோன்றும் ஒரு நிகழ்வாகும்.
நிறம்
[தொகு]சூரியன் மறையும் அல்லது சூரிய உதயம் நேரத்தில் சூரியன் தொடுவானத்திற்கு அருகே இருக்கும் போது, சூரியனிலிருந்து வரும் ஒளி சிவப்பாக இருக்கிறது. ஏனெனில் பார்வையாளரை அடையும் ஒளி அடர்த்தியான வளிமண்டலத்தின் வழியாக ஊடுருவி வருகிறது. இதனால் அனைத்து நிற ஒளிகளும் வடிகட்டப்பட்டு சிவப்பு நிறம் மட்டும் பார்வையாளரை அடைகிறது.
பார்வையாளர் கண்ணோட்டத்தில், சூரியனுக்கு எதிர்திசையில் உள்ள வானத்தில் சிவப்பு நிற சூரிய ஒளி நேரடியாக கீழ் வளிமண்டலத்திலுள்ள சிறிய துகள்களை ஒளியூட்டுகிறது. பார்வையாளருக்கு சிவப்பு ஒளி மீள்சிதறல் மூலம் திருப்பப்படுகிரது. இதனாலேயே வெள்ளி மண்டலம் இளஞ்சிவப்பு நிறத்தில் தோன்றுகிறது.
சூரியன் கீழாக மறைந்து செல்லச் செல்ல பூமியின் நிழலுக்கும் வெள்ளி மண்டலத்திற்குமான எல்லை தெளிவற்றதாக மாறுகிறது. ஏனெனில் மறையும் சூரியன் மேல் வளிமண்டலத்தின் மெல்லிய அடுக்கை ஒளியூட்டுகிறது. குறைவான துகள்கள் இருப்பதால் இங்கு சிவப்பு ஒளி சிதறடிக்கபடுவதில்லை. காற்று மூலக்கூறுகளில் உண்டாகும் ரேலெய்க் சிதறல் காரணமாக கண்கள் சாதாரணமான நீல வானத்தைக் காண்கின்றன. பூமியின் நிழலும் வெள்ளி மண்டலமும் இறுதியில் அடர்ந்த இருளுக்குள் கலந்து இரவு வானத்தில் மறைந்து போகின்றன.
சந்திர கிரகணத்தின் நிறம்
[தொகு]பூமியில் உள்ளது போல் வளைந்திருக்கும் பூமியின் நிழல் அல்லது அகநிழல் விண்வெளியில் 1.4 மில்லியன் கிலோமீட்டர்கள் வரை நீட்டித்துள்ளது. சூரியன், பூமி, சந்திரன் மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி இருக்குமாறு (கிட்டத்தட்ட நேர்க்கோட்டில்) வரும்போது பூமியின் நிழல் நிலவின் மேற்பரப்பு மீது விழுகிறது. இந்நிழல் பூமியின் இருண்ட பக்கத்தின் மீது விழுகிறது. பார்வையாளர்கள் நிழலை சிறிது சிறிதாக காண்கின்றனர். படிப்படியாக பிரகாசமான முழு நிலவு வெளிப்படத் தொடங்கி வெளிச்சமாகி சந்திர கிரகணம் நிகழ்கிறது.
சந்திர கிரகணம் நிகழும் போது, சூரிய வெளிச்சத்தின் மிக சிறிய அளவு சந்திரனை எட்டுகிறது. பூரண சந்திர கிரகணம் நிகழும் போது கூட இதுவே நிகழ்கிறது. இந்த ஒளியே பூமியின் வளிமண்டலத்தின் வழியாக வளைந்து அல்லது ஒளிவிலகல் அடைந்து செல்கிறது. பூமியின் வளிமண்டலத்தில் உள்ள தூசு சுரிய ஒளியை சிதறடிக்கிறது. இதனால் ஒளி சிவப்பு நிறமாகத் தெரிகிறது. இதே நிகழ்வு முறைதான், சூரிய உதயம் அல்லது சூரிய மறைவின் போதும் வானம் சிவப்பாகத் தெரிவதற்குக் காரணமாகும். இந்த பலவீனமான சிவப்பு வெளிச்சம், சந்திர கிரகணத்தை மங்கலான சிவப்பு அல்லது செம்பு நிற தோற்றத்தில் இருக்குமாறு காட்டுகிறது[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Les Cowley. "Earth's shadow". www.atoptics.co.uk. Archived from the original on 2020-12-19. பார்க்கப்பட்ட நாள் 2017-01-12.
- ↑ 2.0 2.1 "What causes layers in the sunrise and sunset?". earthsky.org. Archived from the original on 2020-06-26. பார்க்கப்பட்ட நாள் 2017-01-12.
- ↑ David K. Lynch, William Charles Livingston (July 2001). Color and light in nature. Cambridge University Press; 2 edition. p. 38,39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-77504-5.
புற இணைப்புகள்
[தொகு]- Definition of "dark segment"
- Image showing a much larger segment of the sky with dark segment and Belt of Venus
- Shadow of Earth, Belt of Venus as seen over Half Dome, Yosemite National Park, displayed in an interactive panorama. Scroll to the very bottom of the post to view, after all other Yosemite panoramas. பரணிடப்பட்டது 2017-03-27 at the வந்தவழி இயந்திரம்