உள்ளடக்கத்துக்குச் செல்

பெரியாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரியாறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்அரபிக்கடல்
நீளம்300 கி.மீ (கேரளத்தில் 244 கி.மீ)

பெரியாறு அல்லது பேரியாறு[1] என்பது இன்றைய கேரள மாநிலத்தின் மிகவும் நீளமான ஓர் ஆறு ஆகும். இதன் நீளம் 300 கி.மீ, இதில் 244 கி.மீ கேரளாவிலும், 56 கி.மீ தமிழ்நாட்டிலும் உள்ளது. இது தமிழகத்திலுள்ள சிவகிரி மலையின் சுந்தரமலை பகுதியில் உற்பத்தியாகிறது.[2][3] இதற்கு சூர்ணியாறு என்று வடமொழிப் பெயரும் ஒன்று உள்ளது.

வரலாறு

[தொகு]

சங்க இலக்கிய காலம் தொட்டு அன்றைய சேர நாட்டில் ஓடிய முதன்மை ஆறாக இந்த ஆறு விளங்குகிறது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பேரியாற்றை பெரியாறு எனும் ஒலிக்குறிப்போடு அழைத்தும், எழுதியும் வந்ததால் தற்காலத்தில் இது பெரியாறு என அழைக்கப்படுகின்றது.[4] இது வற்றாத ஆறாக இருப்பதால் கேரளத்தின் உயிர்நாடி எனவும் அழைக்கப்படுகிறது. இது கேரளத்தின் பெரிய நகரங்களுக்கு நீர் ஆதாரமாக விளங்குகிறது. இடுக்கி அணை இவ்வாற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. இது மாநிலத்திற்கு குறிப்பிடத்தக்க அளவு மின்வசதி வழங்குகிறது. இதன் மொத்த நீர்பிடிப்பு பகுதி 5396 சதுர கிமீ ஆகும். இதில் கேரளாவில் 5284 சதுர கி.மீ பகுதியும், தமிழகத்தில் 112 சதுர கி.மீ பகுதியும் உள்ளது. முல்லைப்பெரியாறு அணையும் இதன் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும்.

பேரியாறு மேற்குக் கடலில் விழுந்த இடத்தில் சேரர்களின் முசிறித்[5] துறைமுகம் அமைந்திருந்தது. இந்தப் பேரியாற்றின் கரையிலே சேரன் செங்குட்டுவன் தன் சுற்றத்துடன் தங்கி இயற்கைக் காட்சியைக் கண்ட செய்தியைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.[6]

“நெடியோன் மார்பில் ஆரம் போன்று
பெருமலை விலங்கிய பேரியாற் றடைகரை
இடுமணல் எக்கர் இயைந்தொருங் கிருப்ப”

என்பது சிலப்பதிகாரம். (காட்சிக்காதை. 21-23)

வணிகம்

[தொகு]

ஆஸ்திரியா நாட்டின் தலைநகர் வியன்னாவில் உள்ள அருங்காட்சியகத்தில் சேரர் காலத்து ஒப்பந்தம் ஒன்று இருப்பது சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் நகல் தற்பொழுது கரூர் அருங்காட்சியகத்திலும் உண்டு. இந்த ஒப்பந்தம் சேர நாட்டில் பேரியாறு (இன்றைய பெரியாறு) முகத்துவாரத்தில் இருந்த முசிறி (கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கொடுங்ஙல்லூர் அருகே இருக்கும் இன்றைய பட்டணம்) நகர வணிகருக்கும் எகிப்து நாட்டின் நைல் நதியின் முகத்துவார கிரேக்க வணிகருக்கும் போடப்பட்ட வணிக ஒப்பந்தம் ஆகும். கிரேக்க மொழியில் இரு பக்கங்களில் எழுதப்பட்டுள்ள அந்த ஒப்பந்தத்தில் தமிழ் வணிகர் கையெழுத்திட்டுள்ளார்.

அந்த ஒப்பந்தத்தின்படி பேரியாறு வழியாக முசிறி துறைமுகத்தில் இருந்து மரக்கலங்களில் சரக்குப் பொதிகள் ஏற்றப்பட்டு அவை செங்கடலில் எகிப்து நாட்டில் இருந்த மியோஸ் கார்மோஸ் (Myos Harmos) என்கிற துறைமுகத்துக்கு சென்றுள்ளன. அங்கே இருந்து கழுதைகள் மூலம் சரக்குகள் கிழக்கு சகாரா பாலைவனத்தை கடந்து நைல் நதிக் கரையில் இருந்த பண்டைய காப்போடோஸ் (Copotos) நகரை அடைந்தன. அங்கிருந்து நைல் நதி வழியாக அலெக்சாண்டாரியா நகரை அடைந்தன. அந்தப் பொதிகளின் மதிப்பு அலெக்சாண்டாரியாவின் ஒரு நீர்வழிச் சாலையை அமைக்க போதுமானது என்கிறது ஒப்பந்தக் குறிப்பு[7].

பின்வரும் அகப்பாடல் சிறப்பாகக் கட்டப்பட்ட யவனர்களின் கலங்கள் பேரியாற்றின் வெண்நுரை கலங்க பொன் சுமந்து வந்து மிளகு கொண்டு[8] செல்ல இறங்கிய பெருமை கொண்டது என சேரர்களின் முசிறித் துறைமுகத்தின் சிறப்பையும் பேரியாற்றின் சிறப்பையும் குறிப்பிடுகின்றது.

"அத்தம் நீளிடைப் போகி நன்றும்
அரிதுசெய் விழுப்பொருள் எளிதினிற் பெறினும்
வாரேன் வாழியென் நெஞ்சே சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்

பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிறி ஆர்ப்பெழ வளைஇ (அகநானூறு. 149-7)[9]

இதனையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=296&pno=256
  2. "A Poisoned River Means a Dying Population".
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2020-01-15. பார்க்கப்பட்ட நாள் 2012-01-06.
  4. https://books.google.co.in/books?id=wMNSDwAAQBAJ&pg=PT22&lpg=PT22&dq=பேரியாறு&source=bl&ots=1MTG2A6QJV&sig=ztzOYjm0E-qg3hGK4w8e6OPRVOM&hl=en&sa=X&ved=2ahUKEwjU-66ZlNrdAhUFWCsKHSTeC1MQ6AEwCHoECAMQAQ#v=onepage&q=%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81&f=false
  5. http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=296&pno=97
  6. http://www.tamilvu.org/slet/ln00101/ln00101pag.jsp?bookid=296&pno=256
  7. https://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7010492.ece
  8. http://www.tamilvu.org/slet/l1281/l1281pd2.jsp?bookid=28&page=453
  9. http://www.tamilvu.org/slet/l1270/l1270exp.jsp?x=339&y=195&bk=82&z=l1270634.htm

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரியாறு&oldid=3565034" இலிருந்து மீள்விக்கப்பட்டது