போரோ பட்டகம்
ஒளியியலில் போரோ பட்டகம் என்பது, இதனை உருவாக்கிய இக்னாஸியோ போரோ (Ignazio Porro) என்பவரின் பெயரால் அறியப்படும் ஒரு வகைத் தெறிப்புப் பட்டகம் ஆகும். இது ஒரு விம்பத்தின் திசையை மாற்றுவதற்கு, ஒளியியல் கருவிகளில் பயன்படுத்தப்படுகிறது.[1][2][3]
இது, செங்கோண முக்கோண வெட்டுமுகத்துடன் கூடிய, செங்கோண வடிவவியல் பட்டகத்தின் (geometric prism) வடிவில் அமைந்த ஒரு கண்ணாடிக் குற்றியாகும். பட்டகத்தின் பெரிய நீள்சதுரப் பக்கத்தின் வழியாக உட்செல்லும் ஒளி, ஏனைய இரண்டு பக்கங்களில் முழுவுட் தெறிப்படைந்து (total internal reflection) மீண்டும் உட்புகுந்த பக்கம் வழியாக வெளியேறும். ஒளி பக்கத்துக்குச் செங்குத்தாகவே உட்புகுந்து, வெளியேறுவதன் காரணமாகப் பட்டயம் ஒளியைச் சிதறச் செய்வதில்லை.
போரோ பட்டகத்தினூடாகச் செல்லும் விம்பம்மொன்று 180° ஆல் சுழற்றப்படுவதுடன், உட்புகுந்த திசைக்கு எதிர்த் திசையாகச் சென்று புகுந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளியுள்ள புள்ளியூடாக வெளியேறுகிறது. விம்பம் இருமுறை தெறிக்கப்படுவதனால் விம்பம் பக்கம் மாறாமல் இருக்கும்.
போரோ பட்டகங்கள் பெரும்பாலும் இரட்டைப் போரோ பட்டக வடிவில் சோடியாகவே பயன்படுத்தப் படுகின்றன. முதலாவது பட்டகத்துக்குச் சார்பாக 90° ஆல் சுழற்றப்பட்ட இரண்டாவது பட்டகம், ஒளி இரண்டு பட்டகங்களின் ஊடாகவும் செல்லத்தக்க வகையில் வைக்கப்பட்டிருக்கும். இந்தக் கூட்டுப் பட்டகத்தின் இறுதி விளைவானது, ஒளி உள்ளே சென்ற அதே திசையில் அதற்குச் சமாந்தரமாக ஆனால் சற்று விலகிச் செல்லும். அத்துடன் விம்பம் முன்னைப் போலவே பக்கமாற்றம் இல்லாமல் 180° சுழற்றப்பட்டிருக்கும்.
இரட்டைப் போரோ பட்டயங்கள் சிறிய ஒளியியல் தொலை நோக்கிகளில் தலைகீழான விம்பமொன்றை தலைமேலாகச் செய்வதற்குப் பயன்படுகிறது. பொதுவாக இரட்டைப் போரோ பட்டகத்தின் இரண்டு கூறுகளும் ஒன்றுடனொன்று பொருத்தப்பட்டிருக்கும். அத்துடன் அளவையும் நிறையையும் குறைப்பதற்காக தேவையற்ற பகுதிகள் நீக்கப்பட்டிருக்கும்
போரோ - அபே பட்டகம், இரட்டைப் போரோ பட்டகத்தின் ஒரு வேறுபாடாகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Heinz Haferkorn: Optics - physical-technical basics and applications. Barth, Leipzig 1994, ISBN 3-335-00363-2, p. 485.
- ↑ OPTI 421/521 – Introductory Optomechanical Engineering 5. Prisms, page 10
- ↑ U-boat binoculars and other naval binoculars of World War II