மதுபானி ஓவியப் பாணி
மதுபானி ஓவியப் பாணி அல்லது மிதிலா ஓவியப் பாணி என்பது, இந்தியாவின், பீஹார் மாநிலத்தின் மதுபனி மாவட்டத்தில் தோன்றிய ஓவியப் பாணி என்பதால் இப்பெயர் பெற்றது.[1] இந்த மதுபனி மாவட்டம் நேபாள எல்லைப் பகுதியில் இருக்கிறது.
தோற்றம்
[தொகு]மதுபானி ஓவியப் பாணி மிகவும் பழமையானது. இதன் தோற்றம் பற்றித் தெரியவில்லை. மரபுவழிக் கதைகள் இதை, இராமாயண காலத்துடன் தொடர்பு படுத்துகின்றன. ஜனகரின் மகளான சீதையின், திருமணத்துக்காக, ஒவியர்களை ஜனகர் அமர்த்தியதாக அவை கூறுகின்றன.
மதுபானி ஓவியங்கள், மிதிலாவில் உள்ள மதுபானி என்னும் தற்கால நகரை அண்டி அமைந்துள்ள ஊர்களில் பெண்களாலேயே வரையப்பட்டு வந்தது. மரபு முறையில், இவ்வோவியங்கள் புதிதாக மெழுகப்பட்ட மண் சுவர்களிலேயே வரையப்பட்டன. தற்காலத்தில், துணி, [கடதாசி], கன்வாஸ் போன்றவற்றிலும் வரையப்படுகின்றன. இந்த ஓவியப்பாணி, ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதிக்குள் அடங்கி இருப்பதனாலும், இதன் நுணுக்கங்கள், தலைமுறைகள் ஊடாகக் குடும்பங்களுக்கு உள்ளேயே இருந்து வருவதனாலும், இப்பாணி அதிகம் மாற்றம் அடையாமலேயே உள்ளது. மதுபானி ஓவியங்களில் தாவரங்களில் இருந்து பெறப்படும் நிறங்களைப் பயன்படுத்துகிறார்கள்.[2]
இந்த மதுபனி ஓவியக் கலை மற்ற நாட்டுப்பறு ஓவியக் கலையகளைப் போன்றே முழுக்க முழுக்கப் பெண்களால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட கலையாகும். மதுபனி பகுதியில் வாழும் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள் கூடித் தங்கள் வீட்டுச் சுவர்களில் மதச் சடங்குகள், பண்டிகைகள், குடும்ப விழாக்கள் போன்ற நிகழ்வுகளை முன்னிட்டு ஓவியங்களை வரைந்துள்ளனர்.
மதுபானி ஓவியங்கள் இயற்கை மற்றும் தொன்மங்கள் சார்ந்த நிகழ்வுகளை அடைப்படையாகக் கொண்டு வரையப் படுகின்றன. ஓவியங்களுக்குரிய கருப்பொருள்கள் பெரும்பாலும், இந்துக் கடவுளரான, கண்ணன், இராமன், சிவன், துர்க்கை, இலக்குமி, சரஸ்வதி போன்றவர்களைக் குறிப்பதாகவே பெரிதும் காணப்படுகின்றன. இயற்கைப் பொருட்களான ஞாயிறு, மதி போன்றவையும், துளசிச் செடி போன்ற மதத் தொடர்பு கொண்ட செடிகளும் இவ்வகை ஓவியங்களில் கருப்பொருளாக அமைந்திருப்பதைக் காண முடியும். இவற்றைவிட அரசவைக் காட்சிகள், திருமணம் போன்ற சமூக நிகழ்வுகள் என்பனவும் மதுபானி ஓவியங்களில் இடம்பெறுகின்றன. மேலும் ஓவிய உருவங்களுக்கு இடையில் வெறுமனே இடைவெளி விடாமல் முழுவதும் பூ உருவங்களை வரைகிறார்கள். இதுவே இந்த ஓவிய்களுக்குத் தனி அழகைத் தருகிறன.
புத்தாக்கம்
[தொகு]1934 ஆண்டில் ஆண்டு மதுபானி மாவட்டப்பகுதியில் பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்க சேதத்தை பார்வையிட அப்போதைய பிரித்தானிய அரசில் ஆட்சியராக இருந்த வில்லியம் ஜி.ஆர்ச்சர் என்பவர் வந்தார். அப்போது இடிபாடுகளுக்கு உள்ளான வீடுகளின் சுவர்களிலிருந்த மதுபனி ஓவியங்களைப் பார்த்து வியந்து அக்கலை பற்றி விசாரித்து அறிந்துகொண்டு, இந்த மதுபனி ஓவியங்கள் குறித்துக் கட்டுரைகள் எழுதி அனைவரும் அறியும்படிச் செய்தார். மேலும் இந்த ஓவியங்கள் மேற்குலக ஓவியரான பிக்காசோவின் ஓவியங்களுடன் ஒப்பிடத்தக்க ஆற்றல் கொண்டவை என குறிப்பிட்டார். இவரின் இந்த முயற்சிக்குப் பிறகு இந்தக் கலை புத்தாக்கம் பெற்றது.[3]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nirala, Narendra Narayan Sinha (2010). "Madhubani: A Contemporary History (1971-2011)". Proceedings of the Indian History Congress 71: 1243–1250. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/44147593.
- ↑ "தீபாவளிக்கும் ஒரு சுற்றுலா உண்டு". தமிழ் தினசரி. 9 November 2015. பார்க்கப்பட்ட நாள் 9 April 2016.
- ↑ "சுவர் ஓவியம் 3 - பெண்கள் வளர்த்த ஓவியக் கலை". தி இந்து (தமிழ்). 9 April 2016. பார்க்கப்பட்ட நாள் 9 April 2016.