மெர்டேக்கா சதுக்கம்
விடுதலை சதுக்கம் என்ற பொருள்படும் மெர்டெக்கா சதுக்கம் (மலாய்: Dataran Merdeka) மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் அமைந்துள்ளது. சுல்தான் அப்துல் சமத் கட்டிடத்தின் எதிரே அமைந்துள்ளது. ஆகத்து 31, 1957 அன்று விடுதலை பெற்ற நள்ளிரவு 12 மணிக்கு இங்குதான் ஐக்கிய இராச்சியத்தின் கொடி இறக்கப்பட்டு முதன்முதலாக மலேசியக் கொடி ஏற்றப்பட்டது. அந்த நாள்முதல் ஆண்டுதோறும் இங்கு மெர்டெக்கா பேரணி எனப்படும் தேசிய நாள் அணிவகுப்பு நடத்தப்படுகிறது.
வரலாறு
[தொகு]முன்னதாக சிலாங்கூர் கிளப் படாங் அல்லது சுருக்கமாக படாங் என்று அழைக்கப்பட்டது. சிலாங்கூர் கிளப்பின் (தற்போது ரோயல் சிலாங்கூர் கிளப்) துடுப்பாட்ட மைதானமாக இருந்தது.
இதற்கு முன்பாக கம்பீரமாக எழுந்து நிற்கும் சுல்தான் அப்துல் சமது கட்டிடம் பிரித்தானியர்களால் கட்டப்பட்ட குறிப்பிடத்தக்க கட்டிடங்களில் ஒன்றாகும். இந்திய மொகலாய கட்டிட வடிவமைப்பால் ஈர்க்கப்பட்ட ஏ. சி. நார்மன் வடிவமைத்த இந்தக் கட்டிடம் 1897ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது. சிலாங்கூர் மாநில தலைமைச் செயலகமும் பின்னர் உச்சநீதி மன்றமும் இயங்கிய இக்கட்டிடம் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாது இருந்தது. தற்போது பாரம்பரியம்,பண்பாடு மற்றும் கலைக்கான அமைச்சகம் இங்கு இயங்கி வருகிறது.
விடுதலைச் சதுக்கத்தைச் சுற்றியள்ள மைதானத்திற்கு தடரன் மெர்டெக்கா என்று சனவரி 1, 1990இல் பெயரிடப்பட்டது.
அண்மையில்
[தொகு]விடுதலைச் சதுக்கத்தை சுற்றி வரலாற்றுச் சிறப்புமிக்க பல கட்டிடங்கள் உள்ளன. ஒரு பக்கத்தில் அரச சிலாங்கூர் மன்றத்தின் வளாகம் அமைந்துள்ளது. சுல்தான் அப்துல் சமாட் கட்டிடம், தேசிய வரலாற்று அருங்காட்சியகம் (முன்பு சார்ட்டர்டு வங்கி கட்டிடமாக இருந்தது), 1909-இல் கட்டப்பட்ட நினைவக நூலகம், நூறாண்டுகளுக்கும் மேலான கோதிக் வடிவமைப்பில் கட்டப்பட்ட புனித மேரி ஆங்கிலேய தேவாலயம், கோலாலம்பூரின் முதல் தொடர்வண்டி நிலையம், 102 ஆண்டுகள் பழைமையான சுகாதாரத்துறை நீரூற்று மற்றும் தற்கால வடிவமைப்பில் அமைந்துள்ள தயாபூமி வளாகம் ஆகியவை இந்த சதுக்கத்தை அண்மித்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடங்களாகும்.
கறுப்பு பளிங்கினாலான அடித்தளம் தாங்கும் உலகிலேயே உயரமான 95 மீட்டர் கொடிக்கம்பம் இந்த சதுக்கத்தை அடையாளப்படுத்துகிறது. சதுக்கத்தின் தென்முனையில் இந்தக் கம்பம் அமைந்துள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ SkyscaperPage http://www.skyscraperpage.com/cities/?buildingID=2342. Extracted March 30, 2006
மேலும் பார்க்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் டாத்தாரான் மெர்டேகா தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.