உள்ளடக்கத்துக்குச் செல்

யாழ்ப்பாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யாழ்ப்பாணம்
ஒரு தோற்றம்.
ஒரு தோற்றம்.
மேலிருந்து இடதுபுறமாக: பொது நூலகம், யாழ் பல்கலைக்கழகம், கந்தரோடை தொல்லியல் களம், நல்லூர் கந்தசுவாமி கோவில், 2ம் சங்கிலியின் சிலை, யாழ்ப்பாணக் கோட்டை நுழைவாயில், மந்திரிமனை (நல்லூர்)

யாழ்ப்பாணம்
மாகாணம்
 - மாவட்டம்
வட மாகாணம்
 - யாழ்ப்பாணம்
அமைவிடம் 9°39′50″N 80°00′57″E / 9.663897°N 80.015812°E / 9.663897; 80.015812
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்

 - 0-10 மீட்டர்

கால வலயம் இ.சீ.நே (ஒ.ச.நே + 05:30)
அரச அதிபர் வேதநாயகன்
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 40000
 - +021
 - NP

யாழ்ப்பாணம் (Jaffna, சிங்களம்: යාපනය) என்பது இலங்கைத் தீவின் வடமுனையிலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தின் தலைநகராகும். இது யாழ்ப்பாணக் குடாநாட்டின் தென்மேற்குப் பகுதியில் யாழ்ப்பாண நீரேரியைப் பார்த்தபடி அமைந்துள்ளது. இலங்கையின் தலைநகரான கொழும்பிலிருந்து 396 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்நகரம், 88,138 மக்கட்தொகையினைக் கொண்டு 12வது பெரிய நகரமாக விளங்குகிறது.[1] 1987 ஆம் ஆண்டுக்கு முன்னர் வடமாகாணத்தின் தலைநகரமாக விளங்கிய யாழ்ப்பாணம், அந்த ஆண்டில், தற்காலிகமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களை இணைத்து உருவான வட-கிழக்கு மாகாணசபைக்குத் திருகோணமலையைத் தலைநகரமாக்கியபின், மாகாணத் தலைநகரம் என்ற நிலையை இழந்தது. வடக்குக் கிழக்கு மாகாணம் பிரிக்கப்பட்ட பின்னர் வடமாகாணத் தலைநகராக யாழ்ப்பாணம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.[2]

1981இல் யாழ்ப்பாணத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, யாழ் நகரின் மக்கள்தொகை 118,000 ஆக இருந்தது. 20 ஆண்டுகளின் பின் நாட்டில் 2001ல் கணக்கெடுப்பு நடந்தபோது, யாழ்ப்பாணத்தில் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. எனினும் அவ்வாண்டில் இந்நகரின் மக்கள்தொகை 145,000 ஆக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போர் காரணமாகப் பல வழிகளிலும் பெரிதும் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம், உரிய வளர்ச்சியைப் பெறவில்லை.

1981ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி, தமிழர்கள் பெரும்பான்மையினராக இருந்தபோதும், குறிப்பிடத்தக்க அளவில் முஸ்லிம் மக்களும் வாழ்ந்து வந்தார்கள். சிங்களவர்கள் மிகவும் குறைவே. சமய அடிப்படையில் யாழ்நகரில், இந்துக்களே பெரும்பான்மையினராக உள்ளனர்.

பெயர்க் காரணம்

[தொகு]

தற்காலத்தில் யாழ்ப்பாணம் என்பது, இலங்கையின் வட மாகாணத்தைச் சேர்ந்த 5 மாவட்டங்களில் ஒன்றாக அதன் வட கோடியில் அமைந்துள்ள மாவட்டத்தையும், அம்மாவட்டத்தின் பிரதான நகரத்தையும் குறிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை விட போர்த்துக்கீசர் கைப்பற்றுவதற்கு முன்னர் இலங்கையின் வடபகுதியில், இருந்துவந்த தமிழர் நாடும் யாழ்ப்பாண அரசு என்றே குறிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் என்ற பெயர் வந்த வரலாறு பற்றி, ஆய்வாளர்களிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இலங்கையில் தமிழ், சிங்கள இனங்களுக்கிடையே முரண்பாடுகள் உச்சக்கட்டத்திலிருக்கும் இக்காலத்தில், இரண்டு இனங்களையும் சேர்ந்தவர்கள் தங்கள் தங்கள் கொள்கைகளுக்குப் பொருந்தும் விதத்தில், வெவ்வேறு ஆய்வாளர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறார்கள்.

18ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் இயற்றப்பட்ட யாழ்ப்பாணத்தின் வரலாறு கூறும், யாழ்ப்பாண வைபவமாலை எனும் நூல், முற்காலத்தில் இலங்கையை ஆண்ட அரசனொருவனால், இந்தியாவிலிருந்து வந்த யாழிசையில் வல்ல குருடனான யாழ்ப்பாணன் ஒருவனுக்கு வட பகுதியிலிருந்த மணற்றி (அல்லது மணற்றிடல்) எனும் இடம் பரிசாக அழிக்கப்பட்டதென்றும், அப்பகுதி யாழ்ப்பாணம் என்று பெயர் பெற்றுப்பின்னர் முழுப்பிரதேசத்துக்குமே இப்பெயர் வழங்குவதாயிற்று என்றும் கூறும்.[3] இம்மணற்றி என்னும் பெயர் இறையனார் அகப்பொருள் உதாரணச் செய்யுட்களில் வருகின்றது. அவர்களின் இடமாற்றம் பசையூர் மற்றும் குருநகர் என அறியப்படும் நகரத்தின் பகுதியாகும் என்று நம்பப்படுகிறது.[4] மணவை அல்லது மணற்றி என்ற பெயர் யாழ்ப்பாணக் குடாநாட்டிற்குரிய பொதுப்பெயராக இருந்துள்ளது. அது பின்னர் இன்றைய மேற்குப் பகுதிக்குரியதாக மாறியது. அவ்வாறு மாறிய வேளையில் மணற்றி (மணல் ஊர்) என்ற அர்த்தப்படும் வகையில் வலி (மணல்) கம (ஊர்) எனச் சிங்களப்பெயராக உருமாறியது எனப்பல அறிஞர் கருதுவர்.[5]

கொழும்புத்துறையில் அமைந்துள்ள கொழும்புத்துறை வணிகக் களஞ்சியமும் குருநகர் பகுதியிலுள்ள முன்னர் அமைந்துள்ள "அலுப்பாந்தி " என்றழைக்கப்படும் துறைமுகமும் அதன் ஆதாரங்களாகத் தெரிகிறது.[6]

வேறு சிலர், நல்லூர் என்னும் கருத்தைத் தருகின்ற சிங்களச் சொல்லான, யஹபனே என்பதிலிருந்தோ, அல்லது சிங்கள இலக்கியங்கள் சிலவற்றில், இப்பகுதியைக் குறிக்கப் பயன்பட்ட, யாபாபட்டுன என்ற சொல்லிலிருந்தோ மருவி வந்ததே யாழ்ப்பாணம் என்கிறார்கள். எனினும் யாழ்ப்பாணம் என்ற பெயரில் இருந்தே யஹபனே, யாபாபட்டுன ஆகிய சொற்கள் மருவி வந்ததாகக் கொள்ளப்படுகிறது. வடவிலங்கை இராச்சியத்தை யாழ்ப்பாண அரசு என அழைத்தமை, 15 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னரேயாகும். 1435 இல் திருமாணிக்குழி எனுமிடத்தில் பொறிக்கப்பட்ட விஜயநகரக் கல்வெட்டிலே முதன் முதலாக யாழ்ப்பாணாயன் பட்டினம் என்ற பெயர் வடவிலங்கை இராச்சியத்திற்கும், ஈழம் என்ற பெயர் தென்னிலங்கை இராச்சியத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளன.[5]

இன்றைய யாழ் மருத்துவமனைக்குத் தெற்குப்பக்கமாக உள்ள வணிக நிலையங்கள் மணிக்கூட்டுக் கோபுரம் மற்றும் யாழ் கோட்டை வரைக்கும் பரந்து காணப்படுகின்றது. இந்தப் பகுதி இன்றளவும் ஐநூற்றுவன் வளவு என்று அழைக்கப்படுகிறது.[7] வட மொழியில் ஆரியபுரா என்றும் தமிழில் ஐந்நூற்றுவர் என்றும் அறியப்பட்ட வலிமையான வணிகக் குழு தென்னிந்தியாவில் உருவாகி தென்கிழக்காசியா முழுவதும் பரவியிருந்தனர். இவர்கள் வீர வளஞ்சிய தர்மம் எனப்பட்ட வீர தீர அல்லது உயர் மரபு வணிகச் சட்டத்தின் காவலர்களாயிருந்தனர். இவர்களின் கொடியிற் காணப்பட்ட காளை மாட்டைச் சின்னமாகக் கொண்டிருந்த இவர்கள் தீரமிக்க வணிகர்களாகப் புகழ் பெற்றிருந்தனர். ஜாவகன் சேரி சாவகச்சேரி என மாற்றமடைந்தது போன்றே இவர்களால் உருவாக்கபட்ட பட்டினமாதலால் முன்பு ஐநூற்றுவன் பட்டினம் என்றழைக்கப்பட்டு பின்னர் ஜாழ்ப்பாண பட்டினம் என மருவி இன்று யாழ்ப்பாணம் என வழங்குகின்றது எனலாம். இந்த பெயரே பின்னர் போர்ச்சுகீசர் ஒல்லாந்தர் முதலானோரும் பயன்படுத்தலானர்.[8]

வரலாறு

[தொகு]

யாழ்ப்பாணம் யாழ்ப்பாண மக்களால் ‘மணிபுரம்' எனப்படுகிறது; அங்கு நாகரும் இருந்தமையால் ‘மணி நாகபுரம்' என்னும் பெயர் பெற்றது. இந்தியாவிலிருந்து இலங்கை நோக்கி வருபவர்க்கு யாழ்ப்பாணம் ஒரு போது (போத்து-Sprout) போலக் காணப்படுதலின், அது போது (போத்து) எனப்பட்டது. போது, போத்து, பல்லவம் என்பன ஒரே பொருளைக் குறிப்பன.[9]

தோற்றம்

[தொகு]
இரண்டாம் சங்கிலி மன்னன் சிலை, நல்லூர்
போர்த்துக்கேயர் கால ஞானஸ்நானத் தொட்டி, தொல் பொருட்காட்சிச்சாலை, யாழ்ப்பாணம்
யாழ் நகர மக்களால் கட்டப்பட்ட மணிக்கூட்டுக் கோபுரம், பிரித்தானியர் காலம்

1620 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண அரசு போத்துக்கீசர் வசம் செல்லும் வரையில், அதன் தலைநகரம் என்ற வகையில் நல்லூரே இப் பகுதியில் பிரதான நகரமாக இருந்தது. அக்காலத்தில் இன்றைய யாழ்ப்பாண நகரத்துள் அடங்கும் கொழும்புத்துறையில் ஒரு சிறிய இறங்கு துறையும், பின்னர் போத்துக்கீசரின் கோட்டை இருந்த இடத்தில் முஸ்லிம் வணிகர்களின் இறங்குதுறையும், பண்டசாலைகளும், சில குடியிருப்புக்களும் இருந்ததாகத் தெரிகிறது. 1590 ஆம் ஆண்டில் போத்துக்கீசர் யாழ்ப்பாண அரசனைக் கொன்று அவ்விடத்தில் இன்னொரு அரசனை நியமித்த பின்னர் அவர்களது செல்வாக்கு அதிகரித்தது. தொடர்ந்து சமயம் பரப்புவதற்காக வந்த கிறிஸ்தவப் பாதிரிமார்கள் யாழ்ப்பாணக் கடற்கரையோரத்தில் கத்தோலிக்கத் தேவாலயம் ஒன்றையும், அவர்களுக்கான இருப்பிடங்களையும் கட்டியிருந்தனர். பின்னர் முஸ்லிம் வணிகர்களின் பண்டசாலைகள் இருந்த இடத்தைக் கைப்பற்றிக் கொண்டு அவ்விடத்தில் முன்னரிலும் பெரிதாகக் கட்டிடங்களைக் கட்டியிருந்ததாகத் தெரிகிறது. இக்கட்டிடங்கள் வழிபாட்டிடங்களாகவும், சமயம் பரப்பும் இடங்களாகவும் இருந்தது மட்டுமன்றிச் சில சமயங்களில் போத்தூக்கீசருக்கான ஆயுதக் கிடங்குகளாகவும், பாதுகாப்பு இடங்களாகவும் இருந்தன. வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை யாழ்ப்பாண அரசன் நாவாந்துறைப் பகுதியில் குடியேற்றினான். கரையோரப்பகுதிகளில் மீன்பிடிக் குடியேற்றங்களும் இருந்தன. தற்போதைய யாழ்ப்பாண நகரத்தின் மையப்பகுதி அமைந்துள்ள இடங்கள் அக்காலத்தில் சதுப்பு நிலங்களாகவும், பனங் கூடல்களாகவுமே இருந்ததாகத் தெரிகிறது.

1620ல் யாழ்ப்பாண அரசை மீண்டும் தாக்கிய போத்துக்கீசர் அதனைக் கைப்பற்றித் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். இதனைத் தொடர்ந்து நல்லூர் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை என உணர்ந்த அவர்கள் தங்கள் நிர்வாகத்தை யாழ்ப்பாணத்துக்கு மாற்றினர்.

போத்துக்கீசரின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண நகரம்

[தொகு]

யாழ்ப்பாணத்தைத் தங்களுடைய நிர்வாக மையம் ஆக்கிய போத்துக்கீசர், முன்னர் தங்களுடைய தேவாலயம் அமைந்திருந்த இடத்தில் சதுர வடிவில் அமைந்த பெரிய கோட்டையொன்றைக் கட்டினார்கள். மதிலால் சூழப்பட்டிருந்த இக் கோட்டையுள் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும், வேறு நிர்வாகக் கட்டிடங்களும் அமைந்திருந்தன. கோட்டைக்கு வெளியே போத்துக்கீசரின் இருப்பிடங்களோடுகூடிய யாழ்ப்பாண நகரம் அமைந்திருந்தது. யாழ்ப்பாண நகரில் அமைந்திருந்த கட்டிடங்களுள் கோட்டையையும் அது சார்ந்த கட்டிடங்களையும் தவிர, அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் மதப்பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கத்தோலிக்க மடங்களைச் சேர்ந்த பெரிய கட்டிடங்களும் இருந்ததாகத் தெரிகிறது.

உள்ளூர் மக்களின் குடியிருப்புக்கள் இக்காலத்திலும், பெரும்பாலும் நல்லூரை அண்டியே இருந்திருக்கக்கூடும். இன்றைய யாழ்ப்பாண நகரத்துள் அடங்கும் சோனகத்தெரு என்று அழைக்கப்படும் இடத்தில் சிறிய அளவில் முஸ்லிம் வணிகர்களின் குடியிருப்புக்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. இன்றைய கரையூர், பாசையூர் ஆகிய இடங்களை அண்டிச் சிறிய சிறிய மீன்பிடிக்குடியிருப்புக்களும் இருந்ததாகத் தெரிகிறது.

போத்துக்கீசர் யாழ்ப்பாணத்தில் 40 ஆண்டுகளுக்கும் குறைவான காலமே ஆட்சி செலுத்தினர் இதனால் யாழ்ப்பாண நகரம் பெருமளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கக்கூடிய சாத்தியங்கள் இல்லை. எனினும், இன்று யாழ்ப்பாண நகரத்துள் பெரிய அளவில் மக்களால் பின்பற்றப்படும் கத்தோலிக்க சமயமும், நிர்வாகம் தொடர்பான சில இடப்பெயர்களும் போத்துக்கீசர் தொடர்பை இன்றும் எடுத்துக்காட்டுகின்றன. 1658 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண நகரம் ஒல்லாந்தரிடம் வீழ்ச்சியடைந்தது

ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண நகரம்

[தொகு]

1658 முதல் 1795 முடிய ஏறத்தாழ 140 ஆண்டுகள் ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தை ஆண்டனர்.[10]இதனால் அவர்களின் சுவடுகளை இன்றும் யாழ்ப்பாண நகரத்தில் காணமுடியும். போத்துக்கீசர் கட்டிய கோட்டையை இடித்துவிட்டு, புதிய கோட்டையொன்றை ஒல்லாந்தர் கட்டினர். இன்று பறங்கித் தெரு என்று அழைக்கப்படும் இடத்திலேயே ஒல்லாந்தருடைய குடியிருப்புக்கள் அமைந்திருந்தன. மிக அண்மைக்காலம் வரை இப்பகுதியில் ஒல்லாந்தர் காலக் கட்டிடக்கலையைக் காட்டும் பல கட்டிடங்கள் இருந்தன. அண்மைக்காலத்தில் இடம்பெற்ற போர் நடவடிக்கைகளால் இவற்றுட் பல அழிந்துபோய் விட்டன.

இவர்களுடைய காலத்தில் யாழ்ப்பாண நகரம் ஓரளவுக்கு விரிவடைந்தது என்று சொல்லமுடியும். பறங்கித் தெருப் பகுதியைத் தவிர, வண்ணார்பண்ணை போன்ற பகுதிகள் நகரத்தின் உள்ளூர் மக்களுக்குரிய பகுதிகளாக வளர்ச்சி பெற்றன.

இவர்களுடைய ஆட்சியின் இறுதிக் காலத்தில் இந்து சமயம் தொடர்பான பிடிவாதம் தளர்ந்ததைத் தொடந்து முக்கியமான இந்துக் கோயில்கள் சில இன்றைய யாழ்ப்பாண நகரத்தின் எல்லைக்குள் அமைந்தன. பிற்காலத்தில் இப்பகுதிகள் சைவ சமயத்தவரின் பண்பாட்டு மையங்களாக உருவாக இது வழி சமைத்தது. நல்லூர் கந்தசுவாமி கோயில், வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயில், யாழ் பெருமாள் கோயில் என்பன இவற்றுள் முக்கியமானவை. இது போன்றே, அடக்கி வைக்கப்பட்டு இருந்த கத்தோலிக்க மதமும் புத்துயிர் பெறலாயிற்று.

பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் யாழ்ப்பாண நகரம்

[தொகு]
வீரசிங்கம் மண்டபம்
சுப்பிரமணியம் பூங்கா

பிரித்தானியர் ஆட்சி யாழ்ப்பாணத்தில் 152 ஆண்டுகாலம் நீடித்தது. இக் காலத்தில் யாழ்ப்பாணம் முன்னெப்போதும் இல்லாத வகையில் சமூக, பொருளாதார மற்றும் பௌதீக வளர்ச்சிகளைப் பெற்றது. தற்காலத்து யாழ்ப்பாணக் கல்வி மேம்பாட்டுக்கு அச்சாணியாக விளங்கிய பாடசாலைகள் அனைத்தும் இக்காலத்தில் உருவாக்கப்பட்டவை. யாழ்ப்பாண நகரத்திலிருந்து குடாநாட்டின் பல பகுதிகளையும் இணைக்கும் வீதிகள் அமைக்கப்பட்டன. அத்துடன், யாழ்ப்பாணத்துடன் கண்டி,கொழும்பு போன்ற தென்னிலங்கை நகரங்களுக்கான வீதிகளும் உருவாகின.

யாழ்ப்பாண நூலகம்

[தொகு]
யாழ் நகரத்தோற்றம்

1935இல் உருவான யாழ்ப்பாணப் பொது நூலகம் இலங்கைத் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமாக விளங்கியது. 1981இல் இந்நூல் நிலையம் சிங்கள வன்முறைக் கும்பல் ஒன்றினால் 97,000 அரிய நூல்களுடன் முழுவதும் எரியூட்டி அழிக்கப்பட்டது.[11][12][13] இன்று இதன் கட்டிடம் மீளமைக்கப்பட்டுப் புதிய நூல்கள் சேர்க்கப்பட்டிருப்பினும், பல வரலாற்று நூல்களும், பழமைவாய்ந்த கையெழுத்துப் பிரதிகளும், வேறு பல ஆவணங்களும் அழிந்து போயின.

ஆட்சி

[தொகு]

யாழ்ப்பாண மாநகரசபை யாழ் நகரை ஆட்சி செய்கின்றது. இது 1865 மாநகர சபைகளின் அவசரச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. பிரித்தானியர் அதிகாரத்தைப் பகிர விரும்பாததால் யாழ் நகர் பல வருடங்களாக யாழ் நகர் மாநகர சபை தேர்வு செய்யப்படாமல் இருந்தது.[14] முதலாவது தெரிவு செய்யப்பட்ட மாநகர முதல்வர் கதிரவேலு பொன்னம்பலம் ஆவார்.[15]

இலங்கை உள்ளூராட்சி சபைத் தேர்தல் 11 வருடங்களின் பின் 2009 இல் இடம்பெற்றது. மாநகர சபை 29 உறுப்பினர்களைக் கொண்டது.[16]

புவியியல் மற்றும் காலநிலை

[தொகு]

யாழ் ஏரியினால் நகரம் சூழப்பட்டுக் காணப்படுகின்றது. யாழ் தீபகற்பம் சுண்ணாம்புக் கல்லைக் கொண்டு காணப்படுகின்றது. முழு நிலமும் தட்டையாகவும் கடலிலிருந்து உயர்ந்தும் காணப்படுகின்றது. பனை மரங்கள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. தளை அலரி போன்ற மரங்களும் அதிகம் காணப்படுகின்றன.[17]

யாழ்ப்பாணம் வெப்பமண்டல மழைகாட்டு காலநிலையைக் கொண்டு மிக வறட்சியான காலநிலையுடைய மாதம் அற்றுக் காணப்படுகின்றது. யாழ்ப்பாணம் இலங்கையில் அதிகளவு சராசரி வெப்ப நிலையான 83 °F (28 °C)க் கொண்டுள்ளது. வெப்பம் ஏப்ரல், மே, ஆகஸ்து, செப்டெம்பர் மாதங்களில் உயர்ந்து காணப்படும். திசம்பர், சனவரி மாதங்களில் குளிர்ச்சியாகக் காணப்படும். வடகிழக்கு பருவப் பெயர்ச்சிக் காற்றினால் வருடாந்த கிடைக்கின்றது. இடத்துக்கிடம் வருடத்திற்கு வருடம் இது வேறுபடும். யாழ் தீபகற்பத்தின் மேற்குப் பகுதி சராசரி மழை வீழ்ச்சி 5 அங்குலம் ஆகும்.[17]

தட்பவெப்ப நிலைத் தகவல், யாழ்ப்பாணம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
தினசரி சராசரி °C (°F) 25
(77)
26
(79)
28
(82)
29
(84)
29
(84)
28
(82)
28
(82)
28
(82)
28
(82)
27
(81)
25
(77)
24
(75)
27
(81)
பொழிவு mm (inches) 70
(2.76)
30
(1.18)
20
(0.79)
50
(1.97)
40
(1.57)
10
(0.39)
20
(0.79)
30
(1.18)
60
(2.36)
230
(9.06)
380
(14.96)
260
(10.24)
1,270
(50)
ஆதாரம்: Weatherbase[18]

மக்கள் தொகையியல்

[தொகு]

வரலாற்று அடிப்படையில் யாழ் நகரில் தமிழர், இலங்கைச் சோனகர், பறங்கியர் வாழ்ந்து வந்தனர்.[19]

1880 முதல் 2010 வரையான சனத்தொகை[19][20][21][22]
ஆண்டு 1880 1891 1901 1911 1921 1931 1946 1953 1963 1971 1981 1994 2007 2010
சனத்தொகை 4,000 43,179 33,879 40,441 42,436 45,708 62,543 77,811 94,670 107,184 118,224 149,000 83,563 84,416
தரம் - 2வது 3வது 2வது 2வது 2வது 2வது 3வது 3வது 3வது 4வது - - 14வது
கணக்கெடுப்புகளிலிருந்து அலுவல்முறையான எண்ணிக்கை.

யாழ் புறநகர்ப்பகுதி

[தொகு]

யாழ்ப்பாண புறநகர்ப்பகுதிகள் பின்வருமாறு:

பின்வருவனவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "Sri Lanka: largest cities and towns and statistics of their population". World Gazetteer. Archived from the original on 2012-06-19. பார்க்கப்பட்ட நாள் 2013-04-07.
  2. "Sri Lanka Districts". பார்க்கப்பட்ட நாள் 31 December 2015.
  3. Rasanayagam, C.; Rasanayagam, Mudaliyar C. (1993-01-01). Ancient Jaffna: Being a Research Into the History of Jaffna from Very Early Times to the Portuguese Period (in ஆங்கிலம்). Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120602106.
  4. Rasanayagam, C. (1993-01-01). Ancient Jaffna: Being a Research Into the History of Jaffna from Very Early Times to the Portuguese Period (in ஆங்கிலம்). Asian Educational Services. p. 211. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120602106. {{cite book}}: |first2= missing |last2= (help)
  5. 5.0 5.1 குணராசா, க. (1996-01-01). ஈழத்தவர் வரலாறு (கி.மு.ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து கி.பி.1621 ஆம் ஆண்டுவரை) (in ஆங்கிலம்). PSridhersingh, Poobalasingam Book Depot, 340, Sea Street, Colombo. p. 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788120602106. {{cite book}}: |first2= missing |last2= (help)
  6. ICTA. "Jaffna Divisional Secretariat – Overview". www.jaffna.ds.gov.lk (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2017-08-12. பார்க்கப்பட்ட நாள் 2017-08-12.
  7. THE JAFFNA FORT AS A SYMBOL OF COLONLISM: A HISTORICAL VIEW
  8. "யாழ்". Archived from the original on 2022-01-10. பார்க்கப்பட்ட நாள் 2022-01-10.
  9. மா. இராசமாணிக்கனார் (முதற் பதிப்பு 1944; மறு அச்சு 2000). பல்லவர் வரலாறு (PDF). சென்னை: தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். p. 26. {{cite book}}: Check date values in: |year= (help)
  10. யாழ்ப்பாணமும் ஒல்லாந்தர் ஆட்சியும் - 1658-1795
  11. "Destroying a symbol" (PDF). IFLA. பார்க்கப்பட்ட நாள் February 14, 2007.
  12. நீலவண்ணன். "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகிறது". பார்க்கப்பட்ட நாள் 31 மே 2016.
  13. யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு
  14. Sabaratnam 2001, ப. 101
  15. "Stamp to honour Cathiravelu Sittampalam". The Associated Newspapers of Ceylon Ltd [Daily News]. 26 February 2004. Archived from the original on 26 மே 2005. பார்க்கப்பட்ட நாள் 1 March 2008.
  16. "Jaffna Municipal Council election to be held soon". தமிழ்நெட். 28 May 2009. பார்க்கப்பட்ட நாள் 15 January 2011.
  17. 17.0 17.1 "Yarl-Paanam". Eelavar Network. Archived from the original on 10 ஜூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 29 January 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  18. "Jaffna, Sri Lanka Travel Weather Averages". Weatherbase. பார்க்கப்பட்ட நாள் 2013-02-03.
  19. 19.0 19.1 Library 1880, ப. 221
  20. "Jaffna". The World Gazetteer. 2010. Archived from the original on 2013-02-09. பார்க்கப்பட்ட நாள் 22 January 2011.
  21. "2.4 Population of principal towns by sex, census years". Statistical Abstract 2009 (PDF). Department of Census and Statistics.
  22. "Basic Population Information on Jaffna District – 2007" (PDF). Department of Census and Statistics, Sri Lanka. Archived from the original (PDF) on 2018-11-23. பார்க்கப்பட்ட நாள் 2013-04-14.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=யாழ்ப்பாணம்&oldid=3855854" இலிருந்து மீள்விக்கப்பட்டது