யோகநரசிம்மர் கோயில் என்பது இந்தியாவின்கர்நாடக மாநிலத்தில் தும்கூருக்கு அருகில் உள்ள தேவராயனதுர்கம் மலை உச்சியில் அமைந்துள்ள ஒரு நரசிம்மர் கோயிலாகும். இதைச் சுற்றி மலைகளும், காடுகளும் சூழ்ந்துள்ளன. இந்த கோவில் நரசிம்மர் மற்றும் லட்சுமி கடவுளுக்காக அமைக்கபட்டுள்ளது. கோயிலுக்கு அருகில் கல்யாணி தீர்த்தக் குளம் உள்ளது. [1] இக்கோயில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்திருக்கும்.
இந்த மலையின் அடிவாரத்தில் போக நரசிம்மருக்கு கோயில் உள்ளது. யோகநரசிம்மர் 1,204 மீட்டர் உயரமுள்ள குன்றின் உச்சியில் உள்ளது. இந்தக் குன்றின் உச்சியில் உள்ள கோயிலை அடைய 1000 படிக்கட்டுகள் ஏறிச் செல்லவேண்டும்.
மலை உச்சியில் உள்ள நரசிம்மர் கோயில் முகப்பில் ஐந்து நிலைகள் கொண்ட இராச கோபுரம் திராவிடக் கட்டடக்கலையில் அமைக்கபட்டுள்ளது. இக்கோயிலின் வாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் நரசிம்மர் தன் மடியில் இலட்சுமியை அமர்த்தியவாறு உள்ளார். இவர் உக்கிரமானவர் என்பதை காட்டும் விதமாக இந்த நசிம்மரின் மீசை மேல் நோக்கி அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் அனுமன், இராமானுசர், நம்மாழ்வார் ஆகியோருக்கு சிற்றாலயங்கள் உள்ளன.
இங்கு நரசிம்ம செயந்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதம் முழுநிலவு நாளில் இங்கு தேரோட்டம் நடக்கிறது. தேர் புறப்படும் முன்னர் வானில் கருடன் மூன்றுமுறை சுற்றிவருவது காலம் காலமாக நடந்துவரும் ஒரு நிகழ்வு ஆகும். அவ்வாறு கருடன் சுற்றியபிறகே தேர் தன் நிலையிலிருந்து புறப்படும். அத்திருவிழாவின்போது கருதபுதி என்னும் பிரசாதம் வழங்க்கப்படுகிறது. அதை குழந்தைப் பேறு இல்லாத இணையர் வாங்கி உண்டால் குழந்தைப் பேறு உண்டாகும் என்ற நம்பிக்கை உள்ளது. இதனால் தேர்த்திருவிழாவின் போது குழந்தைப் பேறு இல்லாத இணையர் வந்து பிரசாதத்தை வாங்கி உண்கின்றனர்.[2]