வளி மாசடைதல்
வளி மாசடைதல் (Air pollution) என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட வேதிப்பொருட்கள், துகள் பொருட்கள், உயிரியற் பொருட்கள் போன்றவை வளிமண்டலத்தில் கலந்து காற்றை மாசுபடுத்துதலை இது குறிக்கிறது. காற்று மாசடைதல் என்றும் இதைக் குறிப்பிடுவார்கள். காற்று மாசுபடுவதால் நோய்கள், ஒவ்வாமை, மரணம் கூட ஏற்படலாம். மனித சமுதாயத்திற்கு மட்டுமன்றி விலங்குகள் தாவரங்கள் போன்ற உயிரினங்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. இயற்கையான சுற்றுச் சூழலும் செயற்கையாக உருவாக்கப்பட்ட வாழிடங்களும் இதனால் பாதிக்கப்பட்டு மனிதன் சுவாசிப்பதற்கு தூய்மையான காற்று கிடைக்காமல் போகிறது. பெட்ரோலைப் பயன்படுத்தி வாகனங்களை இயக்குதல், மக்கள் தொகைப் பெருக்கம், மரங்கள் அழிப்பு, அணுகுண்டு தாக்குதல், அமிலம் மற்றும் வேதிப்பொருட்களின் பயன்பாடு போன்ற மனித நடவடிக்கைகளும், எரிமலை வெடிப்பு, கதிரியக்கம், துகள்கள் மற்றும் தூசு போன்ற இயற்கை நடவடிக்கைகளும் காற்று மாசுபடுதலுக்கு காரணங்களாகின்றன.
தூய்மையான பூமியை இலக்காக கொண்டு இயங்கும் பிளாக்சுமித் நிறுவனம் 2008 ஆம் ஆண்டு ஒரு பட்டியலை வெளியிட்டது. உலகின் மிக மோசமான நச்சு மாசுபாடுகள் என்ற இப்பட்டியலில் உட்புற காற்று மாசுபாடும் மோசமான நகர்ப்புற காற்று தரமும் இடம்பெற்றுள்ளன[1]. 2014 உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கையின்படி, 2012 இல் ஏற்பட்ட காற்று மாசுபாடு காரணமாக உலகெங்கிலும் 7 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இறந்துள்ளனர்[2].
சர்வதேச எரிசக்தி முகமையிலிருந்தும் தோராயமாக கணக்கிடப்பட்ட இந்த எண்னிக்கை எதிரொலித்தது[3][4].
மாசுபடுத்திகள்
[தொகு]காற்று மாசுபடுத்தி என்பது மனிதர்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய காற்றில் உள்ள ஒரு மாசுப்பொருளாகும். இப்பொருள் ஒரு திண்மத் துகள்களாக அல்லது திரவத் துளிகளாக அல்லது வாயுக்களாக இருக்கலாம். இவை இயற்கையாகத் தோன்றியவையாகவும் இருக்கலாம் அல்லது மனிதனால் உருவாக்கப்பட்டவையாகவும் இருக்கலாம். இம்மாசுபடுத்திகள் முதன்மை நிலை மாசுபடுத்திகள் இரண்டாம் நிலை மாசுபடுத்திகள் என இரண்டாக வகைப்படுத்தப்படுகின்றன. எரிமலை வெடிப்பு போன்ற இயற்கைச் செயல்முறையிலிருந்து தோன்றும் சாம்பல் போன்ற மாசுக்கள் முதன்மை மாசுபடுத்திகள் ஆகும். மோட்டார் வாகன வெளியேற்றத்திலிருந்து வெளியிடப்படும் கார்பன் மோனாக்சைடு வாயு அல்லது தொழிற்சாலைகளிலிருந்து வெளியிடப்படும் கந்தக டை ஆக்சைடு வாயி போன்றவை மற்ற எடுத்துக்காட்டுகள் ஆகும். இரண்டாம் நிலை மாசுபடுத்திகள் நேரடியாக உமிழப்படுவதில்லை. மாறாக இவை முதன்மை நிலை மாசுபடுத்திகள் வினைபுரிவதால் அல்லது இடைவினை புரிவதால் தோன்றுகின்றன. ஒசோன் வாயு ஒரு முதன்மையான இரண்டாம்நிலை மாசுபடுத்தியாகும். சில மாசுபடுத்திகள் முதன்மை நிலை மற்றும் இரண்டாம் நிலை என்ற இரண்டு வகையிலும் வகைப்படுத்தப்படுகின்றன. இவை நேரடியாகவும் காற்றில் வெளியிடப்படுகின்றன. மற்ற முதன்மை மாசுபடுத்திகள் வினைபுரிவதனாலும் உருவாகின்றன.
மனித செயல்பாடுகளால் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் மாசுபடுத்திகள்:
- கார்பன் டை ஆக்சைடு (CO2) – பசுமையக வாயுக்களில் ஒன்றாக இது கருதப்படுவதால் முன்னணி காற்று மாசுபடுத்தியாக கருதப்படுகிறது[5]. இதன் தொடர்ச்சியாக இதை மோசமான காலநிலை மாசுபடுத்தி என்றும் கூறலாம்[6]. கார்பன் டை ஆக்சைடு வாயு வளிமண்டலத்தின் ஓர் இயற்கையான கூறு ஆகும், தாவர வாழ்க்கைக்கு அவசியமான இது மனித சுவாச அமைப்பால் வெளியிடப்படுகிறது [7]. பசுமையாக வாயு என்ற சொல்லாடலில் சில நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. உதாரணமாக வானிலையை உறுதிப்படுத்தும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகளை முறைபடுத்த அமெரிக்கத் தூய காற்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது [8]. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் தொழிற்புரட்சிக்கு முன்பு அடி வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு மில்லியனுக்கு 280 பகுதிகளாக இருந்தது. இன்று இதன் செறிவு அதிகரித்து மில்லியனுக்கு 405 பகுதிகள் என்ற அளவில் உள்ளது [8]. ஒவ்வோர் ஆண்டும் ஆண்டுக்கு பல பில்லியன் மெட்ரிக் டன்கள் கார்பன் டை ஆக்சைடு படிம எரிபொருள்களை எரிப்பதன் மூலமாக உமிழப்பட்டு வருகிறது [9]. வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அதிகரிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது [10].
- கந்தக ஆக்சைடுகள்: SO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கந்தக டை ஆக்சைடு மிக முக்கியமான மாசுபடுத்தியாகும். எரிமலை உமிழ்வுகளாலும் பல்வேறு தொழிற்சாலை செறிவுகளாலும் இவ்வாயு உற்பத்தியாகிறது. நிலக்கரியும் பெட்ரோலும் பெரும்பாலும் கந்தக சேர்மங்களைக் கொண்டுள்ளன. இவை எரியும் போதும் கந்தக டை ஆக்சைடு உற்பத்தியாகிறது. காற்று மாசுபடுதலில் மூன்றில் ஒரு பங்கு இத்தகைய தொழிற்சாலைகளில் இருந்தே வெளியிடப்படுகிறது. மேலும் NO2 வினையூக்கியின் முன்னிலையில் SO2 ஆக்சிசனேற்றப்படும் போது கந்தக அமிலம் உற்பத்தியாகி இதனால் அமில மழையும் பொழிகிறது. இந்த அமிலம் மனித சமுதாயத்திற்கு பெருந் தீங்கை விளைவிக்கிறது. ஆற்றல் மூலங்களாக இத்தகைய எரிபொருட்களைப் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் இத்தகைய ஆபத்துகளை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது.
- நைட்ரசன் ஆக்சைடுகள்: பெரிய மின் உற்பத்தி நிலையங்கள், வெடி மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள், உரத் தொழிற்சாலைகள் போன்றவை இவ்வகை வாயுக்களை அதிக அளவில் வெளியிடுகின்றன. தாவரங்களை எரிக்கும் போதும் இவ்வகை வாயுக்கள் வெளியிடப்படுகின்றன. குறிப்பாக நைட்ரசன் டை ஆக்சைடு உயர் வெப்பநிலை எரிதல் செயல்முறையில் வெளியிடப்படுகிறது. NO2 என்பது நைட்ரசன் டை ஆக்சைடின் மூலக்கூற்று வாய்ப்பாடாகும். நைட்ரசனின் பல ஆக்சைடுகளில் இதுவும் ஒன்றாகும். இடிமின்னலில் மின்சாரம் கடத்தப்படும் போதும் இவ்வாயு வெளியிடப்படுகிறது. செம்பழுப்பு நிறமுடைய இவ்வாயு காற்று மாசுபடுத்திகளில் முக்கியமான மாசுபடுத்தியாகும்.
- கார்பன் மோனாக்சைடு: CO என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட இவ்வாயு நிறமற்றது மற்றும் நெடியற்றது ஆகும். நச்சுத்தன்மை கொண்ட இவ்வாயு எரிச்சலூட்டாது. இயற்கை எரிவாயு, நிலக்கரி அல்லது மர எரிபொருள்கள் எரியும் போது இவ்வாயு உற்பத்தியாகிறது. 80% மோட்டார் வாகனங்கள் எரிபொருளை அரைகுறையாக எரித்து வெளியிடும் புகையில் இவ்வாயு காற்றில் கலந்து அதை மாசுபடுத்துகிறது [11]. ஏனைய 20% கார்பன் மோனாக்சைடு சுரங்கங்கள், தொழிற்சாலைகளில் உருவாகின்றன. கொடிய நச்சுத்தன்மை வாய்ந்த இவ்வாயுவை சுவாசித்தால் தலைவலி, கண்பார்வை பாதிப்பு, பக்கவாதம், செயலின்மை போன்ற நோய்கள் தோன்றுகின்றன. இவ்வாயுவும் ஆக்சிசனைப் போலவே நுரையீரலுக்குள் உறிஞ்சப்படுகிறது. இதனால் சுவாசம் பாதிக்கப்பட்டு மரணமே கூட நிகழலாம்.
- ஓசோன்: நைட்ரசனின் ஆக்சைடுகள் போன்ற ஒளிவேதிப் பொருட்கள்சிதைவடைவதால் ஓசோன் உண்டாகிறது. வளிமண்டலத்தில் மனித குலத்துக்கு ஒரு நண்பனாக நின்று சூரியனது புற ஊதா கதிவீச்சில் இருந்து பாதுக்காக்கின்றது. புவியின் மேற்பரப்பில் மனித குலத்துக்கு எதிரியாகவும் செயல்படுகிறது.
குளிர்விப்பான்களில் பயன்படுத்தும் சி.எப்.சி எனப்படும் குளோரோபுளோரோ கார்பன்கள் வளிமண்டலத்திலுள்ள ஓசோனின் அளவை மிக வேகமாக குறைக்கின்றன. இதனால் பூமியில் தட்பவெப்பநிலை மாறுபட்டு சீர்கேடு அடைகிறது. இதனால் தலைவலி, கண் எரிச்சல் இருமல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
- ஆவியாகும் கரிம சேர்மங்கள்: நன்கு அறியப்பட்ட எளிதில் ஆவியாகும் கரிமச் சேர்மங்களும் காற்றை மாசுபடுத்துகின்றன. மீத்தேன் அல்லது மீத்தேன் அல்லாத வாயுக்கள் இம்மாசுபாட்டிற்கு முக்கியமான காரணியாக உள்ளன. காற்றை மாசுபடுத்தும் பசுமையக வாயுக்களில் மீத்தேன் மிக முக்கியமானது ஆகும். இதர ஐதரோகார்பன்களும் காற்றை மாசுபடுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன, அரோமாட்டிக் ஐதரோகார்பன்கள் புற்று நோயை உருவாக்குகின்றன. பென்சோபைரீன் என்ற ஐதரோகார்பன் சிகரெட் புகையில் உள்ளது. இது நுரையீரல் புற்று நோயை உண்டாக்குகிறது. 1,3 பியூட்டா டையீன் என்ற ஐதரோகார்பன் மற்றொரு அபாயகரமான கரிமச் சேர்மமாகும்.
- ஐதரசன் புளோரைடு: HF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு வாயுவாகும். அலுமினியம் மற்றும் வேதிப்பொருட்கள் தயாரிக்கும் தொழிசாலைகளில் இருந்து பெருமளவில் இவ்வாயு வெளியிடப்படுகிறது. இவ்வாயு கலந்த காற்று சுவாசிக்கப்பட்டால் மூச்சுக்குழல் பாதிக்கப்படுவதோடு எலும்பு, பற்களும் பாதிக்கப்படுகின்றன. மேலும் இவ்வாயு தாவரங்களையும் பாதிக்கிறது.
- ஐதரசன் சல்பைடு: H2S என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட இவ்வாயுவை பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையங்கள் பெருமளவில் வெளியிடுகின்றன. சுவாச நோய், பக்கவாதம் போன்ற நோய்களுக்கு இவ்வாயு காரணமாகிறது. சாயங்களை அரிக்கும் தன்மையும் கொண்டுள்ளது.
காற்று மாசுபடுதலைக் கட்டுபடுத்தும் வழிகள்:
காற்று மாசுபாட்டை குறைப்பதற்கு பல்வேறு காற்று மாசு கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்கள் மற்றும் உத்திகள் உள்ளன[12][13]. அதன் அடிப்படையில் நில பயன்பாட்டுக்கு திட்டமிடல் மண்டல மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்புக்கு திட்டமிடல் போன்றவை சம்பந்தப்பட்டிருக்கின்றன. பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் நிலப் பயன்பாட்டு திட்டமிடல் என்பது சமூகக் கொள்கையின் ஒரு முக்கிய பகுதியாகும், பரந்த பொருளாதார மற்றும் மக்கள் நலனுக்காக, சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக நிலத்தை திறமையாகப் பயன்படுத்துதல் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் தொடர்ச்சியாக பின்வரும் கருத்துகளும் கவனத்தில் கொள்ளப்படுகின்றன.
- எரிபொருட்களை தேவையான அளவு காற்றுடன் கலந்து எரிப்பதன் மூலம் தடுக்க முடியும்.
- எரிபொருட்களை உயர்ந்த வெப்பநிலையில் எரிக்க வேண்டும்
- எரிபொருட்களை சீராக தொடர்ந்து நிரப்புதல் மூலமாகவும் புகை உண்டாவதை தடுக்க முடியும்.
- தூசு நீக்கும் அறை, கழிவறை, படியவைக்கும் அறை போன்றவற்றை பயன்படுத்துவதால் தூசு உருவாதலை தடுக்க இயலும்.
- சில வேதிவினைகளைக் கொண்டும் காற்று மாசுபடுதலை குறைக்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Reports". WorstPolluted.org. Archived from the original on 11 August 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-08-29.
- ↑ "7 million premature deaths annually linked to air pollution". WHO. 25 March 2014. பார்க்கப்பட்ட நாள் 25 March 2014.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2019-10-11. பார்க்கப்பட்ட நாள் 2018-03-24.
- ↑ "Study Links 6.5 Million Deaths Each Year to Air Pollution". த நியூயார்க் டைம்ஸ். 26 June 2016. https://www.nytimes.com/2016/06/27/business/energy-environment/study-links-6-5-million-deaths-each-year-to-air-pollution.html. பார்த்த நாள்: 27 June 2016.
- ↑ "Air Pollution Causes, Effects, and Solutions". National Geographic. 9 October 2016. Archived from the original on 21 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 24 மார்ச் 2018.
{{cite web}}
: Check date values in:|access-date=
and|archive-date=
(help) - ↑ Vaidyanathan, ClimateWire, Gayathri. "The Worst Climate Pollution Is Carbon Dioxide" (in ஆங்கிலம்). Scientific American.
- ↑ Johnson, Keith (18 April 2009). "How Carbon Dioxide Became a 'Pollutant'". Wall Street Journal.
- ↑ 8.0 8.1 Barbalace, Roberta C. (November 7, 2006). "CO2 Pollution and Global Warming: When does carbon dioxide become a pollutant?". environmentalchemistry.com.
- ↑ "How much of U.S. carbon dioxide emissions are associated with electricity generation?". பார்க்கப்பட்ட நாள் 2016-12-16.
- ↑ "Full Mauna Loa CO2 record". Earth System Research Laboratory. பார்க்கப்பட்ட நாள் 10 January 2017.
- ↑ “Vehicles, Air Pollution, and Human Health.” Union of Concerned Scientists, www.ucsusa.org/clean-vehicles/vehicles-air-pollution-and-human-health
- ↑ J. C. Fensterstock, J. A. Kurtzweg & G. Ozolins (1971): Reduction of Air Pollution Potential through Environmental Planning, Journal of the Air Pollution Control Association, 21:7, 395-399
- ↑ Fensterstock, Ketcham and Walsh, The Relationship of Land Use and Transportation Planning to Air Quality Management, Ed. George Hagevik, May 1972.
புற இணைப்புகள்
[தொகு]வளி மாசடைதல் பற்றிய நூலக ஆதாரங்கள் |
- Global real-time air quality index map
- Air Quality Index (AQI) Basics
- AQI Calculator AQI to Concentration and Concentration to AQI for five pollutants
- International Conference on Urban Air Quality பரணிடப்பட்டது 2008-12-16 at the வந்தவழி இயந்திரம்.
- UNEP Urban Issues பரணிடப்பட்டது 2010-03-29 at the வந்தவழி இயந்திரம்
- European Commission > Environment > Policies > Air >Air Quality
- Database: outdoor air pollution in cities from the World Health Organisation
- World Health Organization Fact Sheet on Air quality and health
- Impact assessment of the mortality effects of longer-term exposure to air pollution: exploring cause-specific mortality and susceptibility பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம் by BG Miller. Institute of Occupational Medicine Research Report TM/03/01
- The Mortality Effects of Long-Term Exposure to Particulate Air Pollution in the United Kingdom, UK Committee on the Medical Effects of Air Pollution, 2010.
- Ozone Pollution at EPA.gov
- Tips and Reviews for Healthy Air Life - AirBetter.org