உள்ளடக்கத்துக்குச் செல்

வாணி அறிவாளன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

முதுமுனைவர் வாணி அறிவாளன் தமிழ்ச் செவ்வியல் இலக்கிய ஆய்வாளரும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித் துறையின் உதவிப் பேராசிரியரும் ஆவார்.1 மேலும் திருக்குறள் ஆய்வு மையத்தின் பொறுப்புத் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.

குடும்பப் பின்னணி

[தொகு]

திருநெல்வேலி மாவட்டம் இராதாபுரம் என்னும் ஊரில் பிறந்தவர். இவரது தந்தை இராதாபுரம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தி.மு.பண்டாரசிவன், தாயார் காந்திமதி ஆவர். இவர் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் க.ப.அறவாணன் - அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் முன்னைத் தமிழ்த்துறைத் தலைவர் தாயம்மாள் ஆகியோரது மருமகள் ஆவார்.

இவரது கணவர் க.அ.அறிவாளன் இயற்பியல் ஆசிரியர் ஆவார். மகன்கள் அருணன், அகிலன் ஆகியோர் மருத்துவப் படிப்பில் உள்ளனர்.

கல்வி நிலை

[தொகு]

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் வாயிலாக இளம் அறிவியல், இளம் கல்வியியல் பட்டங்களைப் பெற்றவர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக இளநிலை இலக்கியம் (தமிழ்) பட்டமும், சமூகவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக முதுகலை (தமிழ்) பட்டம் பெற்றவர்.

பச்சையப்பன் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக விளங்கிய சா.வளவன் அவர்களை நெறியாளராகக் கொண்டு ‘பழந்தமிழ்ப் போர்மறவர்தம் புறவாழ்வும் அகவாழ்வும்’ என்னும் தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனத்தின் வாயிலாகச் சங்க இலக்கியத்தில் முல்லைத்திணை குறித்து ஆய்வு நிகழ்த்தி முதுமுனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.2

ஆசிரியப் பணி

[தொகு]

அறிஞர் அ.மு.பரமசிவானந்தம் அவர்கள் தோற்றுவித்த சென்னை வள்ளியம்மாள் கல்லூரியில் சில ஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.

2014 ஆம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறையில் பணியாற்றி வருகிறார். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைகளின் வரலாற்றில் தமிழ்த் துறைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் பேராசிரியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆய்வுகள்

[தொகு]

தொல்காப்பியம், சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலிய செவ்வியல் இலக்கியங்களில் ஆழமான ஆய்வுகளை நிகழ்த்தி வரும் இவர் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட கருத்தரங்குகளில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். 13 ஆய்வு நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

சங்க இலக்கியத் தேடல் (2008)

வீரம் விளைந்த நிலம் (2010)

புதுநோக்கில் பழம்பாக்கள் (2012)

முல்லை: மண் - மக்கள் - இலக்கியம் (2015)

சங்க இலக்கிய ஐயங்களும் தெளிவுகளும் (2016)

புறத்திணைச் சிந்தனைகள் (2017)

பாலைத்திணை மரபுக் கட்டுடைப்பும் அகநானூற்றுக் கட்டமைப்பும் (2019)

செவ்விலக்கியப் புரிதல்கள் (2020)

ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன் (2020)

செவ்விலக்கியச் சொல்லாய்வுகள் (2021)

ஐந்திரம்: நுண்ணாய்வு (2022)

சிலம்பின் ஆய்வுச் சிலம்பல் (2022)

தொல்காப்பியச் சார்பெழுத்து மூன்றே! ஆனால் அவை... (2023)

விருதுகளும் பரிசுகளும்

[தொகு]

‘இளம் தமிழ் ஆய்வறிஞருக்கான குடியரசுத் தலைவர் விருது’ (2009 - 2010).3 மேனாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களின் திருக்கரங்களால் பெற்றவர்.

தமிழ்நாடு பொன்விழா ஆண்டின் ‘இளம் ஆய்வறிஞர்’ (2018) விருது பெற்றவர்.

தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த ஆய்வு நூலுக்கான விருதை இரண்டு முறை பெற்றவர்.

‘முல்லை: மண் - மக்கள் - இலக்கியம்’, ‘பாலைத்திணை மரபுக் கட்டுடைப்பும் அகநானூற்றுக் கட்டமைப்பும்’ ஆகியவை தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசினைப் பெற்ற நூல்களாகும்.

மேலும் பல தமிழ் அமைப்புகள் வழங்கிய விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.

குறிப்புகள்

[தொகு]
  1. https://www.unom.ac.in/index.php?route=department/department/profile&deptid=67&facultyid=378
  2. https://cict.in/pdf/Post%20Doctoral%20Researches%20today.pdf
  3. https://cict.in/cict2023/home/presidential-awards/
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாணி_அறிவாளன்&oldid=4121293" இலிருந்து மீள்விக்கப்பட்டது