வெள்ளியைத் திரும்பப் பெறுதல்
எக்சு படத்தாளினை மேம்படுத்தும் (developing) போது கதிர்களால் தாக்கப்பட்ட வெள்ளி புரோமைடு உலோக வெள்ளியாக மாற்றப்படுவதும் நிலைப்படுத்தும் (fixing) போது கதிர்களால் தாக்கப்படாத வெள்ளி புரோமைடு படிகங்கள் நிலைப்படுத்தும் கரைசலில் முழுவதும் கரைந்து விடுவதும் நிகழ்கிறது. எனவே X கதிர் படத்தில் படமுள்ள பகுதியிலும் நிலைப்படுத்தும் கரைசலில் AgBr கரைந்து இருப்பதும் தெரிகிறது. வெள்ளி மதிப்புள்ள ஒரு பொருளாகும். எனவே கரைசலிலிருந்து வெள்ளியைத் திரும்பப் பெறுதல் (recovery of silver) சில வழிமுறைகளில் கையாளப்படுகின்றது.
வெள்ளி புரோமைடு, சோடியம் தயோசல்பேட்டு சேர்வையில் கரையும் போது வெள்ளி தயோசல்பேட்டு தோற்றுவிக்கப்படுகிறது. பலமுறை பல படங்களை நிலைப்படுத்தும் போது அதன் செறிவு கொஞ்சம் கொஞ்சமாக நீர்மத்தில் கூடுகிறது. பெரிய மருத்துவமனைகளிலுள்ள கதிரியல் துறைகளில் வெள்ளியை எளிய, அதிகச் செலவில்லாத முறையில் திரும்பப் பெறமுடியும்.
வெள்ளியை மீளப் பெறும் முறைகள்
[தொகு]வெள்ளியைத் திரும்பப்பெறுவது மின்பகுப்பு முறையிலும் வேதியியல் முறையிலும் நடைபெறுகிறது.
மின்பகுப்பு முறையில், 25 mA நேர்மின்னோட்டம் மிகவும் குறைந்த மின்னழுத்த வேறுபாட்டில் 20 முதல் 40 mV நீர்மத்தில் தொங்க விடப்பட்டுள்ள இரு தகடுகளுக்கிடையே செலுத்தப்படுகிறது. போதுமான வெள்ளி படிந்தபின் எதிர்முனையினை அகற்றி அதில் படிந்துள்ள வெள்ளி அகற்றப்படுகிறது.
மின்பகுப்பு முறையில் வெள்ளியினை பெறும்போது தொடர்ந்து வெள்ளி கிடைப்பதுடன் நிலைப்படுத்தும் நீர்மமும் நல்ல நிலையில் இருப்பதால் அதற்கு நீண்ட பயன்படும் வாழ்நாளையும் கொடுக்கிறது. நிலைப்படுத்தும் நீர்மம் பயன்படாத காலங்களிலும் (பொதுவாக இரவு முழுவதும்) மின்னோட்டம் பாயுமாறு செய்யப்படுகிறது. மின்னோட்டம் பாயும் போது நிலைப்படுத்தும் நீர்மம் அவ்வப்போது கலக்கப்படுகிறது. இதனால் அதிக அளவு வெள்ளி கிடைக்கிறது. நீர்மத்தினை மறுபடியும் பயன்படுத்தும் போது மின்முனைகள் வெளியே எடுத்துவிடப் படுகின்றன.
தொடர்ந்து மின்சாரத்தைப் பாய்ச்சி வெள்ளியினைப் பெறும் முறையும் உள்ளது. கரைசல் உள்ள தொட்டியில் சரியான மின்முனைகள், தொட்டியின் ஓரங்களில் இருக்குமாறு அமைத்து மின்சாரம் தொடர்ந்து பாய்ச்சப்படுகிறது.