உள்ளடக்கத்துக்குச் செல்

ஹென்றி ஸ்டீல் ஆல்காட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஹென்றி ஆல்காட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஹென்றி ஸ்டீல் ஆல்காட்
Henry Steel Olcott
பிறப்பு(1832-08-02)ஆகத்து 2, 1832
ஒரேஞ்சு, நியூ செர்சி, ஐக்கிய அமெரிக்கா
இறப்புபெப்ரவரி 17, 1907(1907-02-17) (அகவை 74)
அடையாறு, சென்னை, தமிழ்நாடு
தேசியம்அமெரிக்கர்
கல்விநியூயார்க் நகரக் கல்லூரி
கொலம்பியா பல்கலைக்கழகம்
பணிஇராணுவ அதிகாரி
ஊடகவியலாளர்
வழக்கறிஞர்
அறியப்படுவதுபௌத்தத்தை மறுசீராக்கல்
பிரம்மஞான சபை
அமெரிக்க உள்நாட்டுப் போர்
சமயம்பௌத்தம், பிரம்மஞானம்
வாழ்க்கைத்
துணை
மேரி எப்லீ மோர்கன்

கர்னல் ஹென்றி ஸ்டீல் ஆல்காட் (Henry Steel Olcott, 2 ஆகத்து 1832 – 17 பெப்ரவரி 1907) பல முகங்கள் கொண்ட இவர் ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி, பத்திரிக்கையாளர், வழக்கறிஞர் மட்டுமல்லாது இவர் பிரம்மஞான சபையின் நிறுவனர்களின் ஒருவராவார். மேலும் இவரே இந்த குழுமத்தின் முதல் தலைவரும் ஆவார் .

ஐரோப்பிய வேர்களை கொண்ட பிரபலங்களில் முதன் முதலாக முறையாக பௌத்தத்திற்கு மாறிய பெருமை இவரையே சாரும். மேலும் பிரும்மஞான சங்கத்தின் தலைவராக இவர் மிக சிறப்பாக பணியாற்றி பௌத்த மத கூறுகளை புரிந்துகொள்வதில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்தினார். மேற்குலக பார்வையில் பௌத்தத்தை முன்னிறுத்திய இவர் ஒரு நவீன பௌத்த அறிஞராக கருதபடுகிறார்.

இலங்கையில் பௌத்தத்தை மறு சீரமைப்பதில் இவருடய பங்கு முக்கியமானது. இன்றைய இலங்கையின் மத, கலாசார, தேசிய பண்புகளை மறுநிர்மாணம் செய்தவர் என்றும் இலங்கையின் விடுதலைப் போராட்டத்தின் நாயகர்களில் ஒருவர் என்றும் இன்றும் இலங்கையில் இவரின் பால் பெரும் மரியாதையோடு இருக்கின்றனர். மேலும் சில தீவிர விசுவாசிகள் இவரை போதிசத்துவர்களில் ஒருவர் என்றும் நம்புகிறார்கள்.

வாழ்க்கைக் குறிப்பு

[தொகு]

ஹென்றி விகொப் ஆல்காட் மற்றும் எமிலி ஸ்டீல் ஆல்காட் தம்பதியர்களின் ஆறு குழந்தைகளில் மூத்த குழந்தையாக 1832 ஆம் ஆண்டு நியூ ஜெர்சியில் ஆரஞ்சு நகரில் பிறந்தார். அவரது பால்ய பருவம் அவரது தந்தையாரின் பண்ணையில் கழிந்தது[1].

பதின்ம பருவத்தில் அவர் நியூயார்க் நகர கல்லூரியிலும், பின்னர் கொலம்பியா பலகலைக்கழகத்திலும் பயின்றார்[2]. அங்கு பல பிரபலங்கள் இருக்கும் புனித அந்தோணி ஹால் குழுமத்தில் இணைந்தார்[3]. 1851 ஆம் ஆண்டு அவரது தந்தையாரின் வியாபாரம் தோல்வி அடைந்ததால் அவரால் கல்லூரியில் தொடர முடியாமல் போனது.

1881 இல் பம்பாய் நகரில் எலனா பிளவாத்ஸ்கி அம்மையார் ஹென்றி ஒல்கொட்டின் (நடுவில் அமர்ந்திருப்பவர்) பின்னால் நிற்கிறார். அவருக்கு இடப் பக்கத்தில் இருப்பவர் தாமோதர் கே. மாவலங்கார்.

1858-1860 காலகட்டங்களில் நியூயார்க் டிரிபியுன் மற்றும் தி மார்க் லேன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கைகளின் வேளாண்மைத் துறை நிருபராக பணியாற்றினார். சில நேரங்களில் வேறு துறைகள் சார்ந்த கட்டுரைகளையும் அவ்வப்பொழுது பதித்து வந்தார். அவருடைய வம்ச விருட்சத்தை கண்டடைந்து அதையும் பதிப்பித்தார். அவருடைய முன்னோர்களில் ஒருவர் தாமஸ் ஆல்காட், அவர் ஹார்ட்போர்ட் நகரை 1636 ஆம் ஆண்டில் உருவாக்கியவர் ஆவார்.

1860 ஆம் ஆண்டு நியுயோர்க் - நியு ரோசேல் உள்ள ட்ரினிட்டி சர்ச்சின் நிர்வாகியின் புதல்வியான மேரி எப்லீ மோர்கனை திருமணம் செய்தார். நான்கு குழந்தைகள் பிறந்தது, அதில் இரண்டு குழந்தைகள் குழந்தை பருவத்திலயே இறந்து விட்டன.

பின்னர் அமெரிக்க உள்நாட்டு போரின் காலங்களில் அவர் ராணுவத்தில் இணைந்தார். நியூயோர்க்கின் போர்ப் பிரிவில் சிறப்பு ஆணையராக பதவி வகித்தார். பின்னர் அவரை கர்னலாக பதவி உயர்த்தி வாஷிங்டனில் உள்ள அமெரிக்க கப்பல் படைக்கு அனுப்பினர். 1865 ஆம் ஆண்டு லிங்கன் கொல்லபட்டார், இவர் அந்த விசாரணையில் பங்கேற்றார்.

1868 ஆம் ஆண்டு அவர் வழக்கறிஞர் பட்டம் முடித்தார். காப்பீடு, வருவாய் மற்றும் அதில் நடக்கும் தில்லுமுல்லுகள் அவரின் சிறப்பு துறையாக இருந்தது.

1874 ஆம் ஆண்டு வேர்மொன்ட் எட்டி சகோதரர்கள் பற்றி அறிகிறார். அவர்கள் ஆவிகளுடன் உரையாடும் திறமை கொண்டவர்கள் என்று நம்பப்பட்டது. அவர்களது பண்ணைக்கு சென்று இதைப் பற்றி ஆர்வத்தோடு அவதானித்து அமெரிக்கப் பத்திரிக்கைகளில் ஒரு தொடர் எழுத தொடங்கினார். "பீப்பிள் ப்ராம் தி அதர் வேர்ல்ட்" எனும் அந்த பிரபலமான தொடர் ஆவிகளை பற்றியும் அது மனிதர்களோடு கொள்ளும் தொடர்பை பற்றியும் விரிவாக பேசியது.

அதே ஆண்டு எட்டியின் பண்ணையில் ஒத்த பார்வைகள் கொண்ட எலனா பிளவாத்ஸ்கி என்பவரைச் சந்திக்கிறார். அவர்களுக்கு ஏற்பட்ட இணக்கமும் ஆவிகள் பற்றிய அவரது இயல்பான ஆர்வமும் அவருக்கென்று ஒரு ஆன்மிகத் தத்துவத்தை உருவாக்கியது. பின்னர் அமெரிக்கர்களில் முதலாவதாக பௌத்தத்தை தழுவியவர் எனும் பெருமையை அடைந்தார்[4]. அவரது பௌத்தக் கோட்பாடுகள் சுத்தமான ஆதி பௌத்தம் என்று அவர் கூறினாலும் உண்மையில் அது தனித்தன்மை கொண்டவை என்றே கூறவேண்டும்.

பிரும்மஞான குழுமம் தொடங்கிய பின்னரும் சில காலங்கள் அவர் வழக்கறிஞர் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டார். மேலும் அப்பொழுது எழுச்சியுடன் இருந்த மதப் புத்துயிர் இயக்கங்களுக்கு தன்னாலான நிதி உதவியையும் தொடர்ந்து செய்தார். அப்பொழுது (1875) பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிகழ்வு - கேட்டி கிங் எனும் ஆவியுடன் தாங்கள் தொடர்பில் இருப்பதாக கூறிய ஜென்னி மற்றும் நெல்சன் ஹோம்ஸ் அறிவித்தார்கள். இதில் ஏதும் ஏமாற்று செயல்கள் உண்டா என்று விசாரிக்கும் பணி இவருக்கு வழங்கப்பட்டது.

பிரும்மஞானிகள் குழுமம்

[தொகு]
அன்னி பெசண்ட், லெட்பீட்டர் ஆகியோருடன் ஹென்றி ஒல்கொட் (இடது).

எலேனா ப்லாவட்ஸ்கியின் அறிமுகம் மற்றும் நட்பு, அவருள் இருந்த தணியாத ஆன்மிக மோகம் இவை அனைத்தும் இணைந்து பிரும்மஞான சங்கம் தொடங்குவதற்கான முகாந்திரத்தைக் கொடுத்தன. 1875 ஆம் ஆண்டு, ஆல்காட், ப்லாவட்ஸ்கி மற்றும் வில்லியம் க்வான ஜட்ஜ் ஆகியவர்கள் இணைந்து அமெரிக்காவின் நியூயார்க்கில் பிரம்மஞான சங்கத்தைத் தொடங்கினர்.

1878 ஆம் ஆண்டு நியு யார்க்கிலிருந்து குழுமத்தின் தலைமையை இந்தியாவிற்கு மாற்றினார்கள். புத்தர் பிறந்த மண்ணை அடைந்த ஆல்காட் இந்தியா எங்கும் சுற்றி திரிந்து சென்னை அடையாறில் குழுமத்தின் தலைமையை உருவாக்கினார். மேலும் உள்ளே அடையார் நூலகம் மற்றும் ஆய்வு மையத்தையும் தொடங்கினார்.

இந்தியாவில் இருந்த காலங்களில் அவரது தேடல் சமஸ்க்ருத ஆன்மிக மூல நூல்களை நோக்கியே இருந்தது. மேற்கில் கிட்டிய மேற்கத்திய பாணியில் வந்த ஆங்கில மொழிபெயர்ப்புகள் மூலத்திலிருந்து வேறுபட்டு இருப்பதாக எண்ணினார். மூலத்தை முழுவதும் அறிந்தால் ஒழிய அதன் சாரத்தை அனைவருக்கும் கற்பிக்க முடியாது என்று எண்ணினார். பௌத்த, இந்து மற்றும் சோரஸ்திர நூல்களின் பால் அவர் ஆர்வத்தோடு இயங்கினார்.

ஆல்காட் இலங்கையில் பௌத்தத்திற்கு ஆற்றிய தொண்டு முக்கியமாகக் கருதபடுகிறது. அதற்காகவே அவர் இன்று உலகெங்கிலும் அறியப்படுகிறார். 1880, மே 16 அன்று கொழும்பு சென்று இறங்கினர். பின்னர் மே 19 அன்று அவரும் ப்லாவட்ஸ்கியும் "பஞ்ச ஷீலாணி" எனும் தேரவாத பௌத்த ஒழுக்க பிரமாணங்களை காலியில் உள்ள விஜயானந்த விகாரையில் எடுத்துகொன்டனர். அன்று முதல் அவர்கள் முறையாக பௌத்தத்தில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டது. முன்னரே, அதாவது அவர் அமெரிக்காவில் இருக்கும் சமயமே இதில் இணைந்ததாக அறிவித்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இலங்கையில் வாழ்ந்த காலங்களில் பௌத்தத்திற்கு புத்துயிர் ஊட்டினார், மேலும் பௌத்த நூல்களை மேற்கிற்கு அறிமுகம் செய்யும் வேலையையும் செய்தார். அப்படி அவர் எழுதிய நூல் தான் "புடிஸ்ட் கடேசிசம்" (buddhist catechism-1881).

இலங்கை முழுவதும் பல்வேறு இடங்களில் பௌத்த போதனை நிறுவனங்களை தோற்றுவித்தார் ஆல்காட். அதில் முக்கியமானவை -கொழும்பில் உள்ள ஆனந்தா கல்லூரி, கண்டியில் உள்ள தர்மராஜா கல்லூரி, காலியில் உள்ள மகிந்தா கல்லூரி, குருநாகலில் உள்ள மயிலதேவா கல்லூரி ஆகியவை எனலாம். 1885 ஆம் ஆண்டு பௌத்த கொடி அமைக்கும் குழுவிற்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அப்படி அவர் உருவாக்கிய கொடி உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களின் அதிகார பூர்வ கொடியாக அங்கீகரிக்கப்பட்டது.

ப்லாவட்ஸ்கி பின்னர் அமெரிக்கா திரும்பி அங்கேயே 1891 ஆம் ஆண்டு உயிர் நீத்தார். ஆனால் ஆல்காட் தொடர்ந்து இந்தியாவில் தங்கினார். அவருக்கு பின் அன்னி பெசன்ட் அம்மையார் தியோசாபிகல் குழுமத்திற்கு தலைவரானார் .

பௌத்த மறைக்கல்வி

[தொகு]

"பௌத்த மறைக்கல்வி" (Buddhist Catechism) என்ற தனது நூலில் கிறித்தவ நூல்களில் உள்ளது போல கேள்வி பதிலாக பௌத்தத்தின் சாரத்தை இந்த படைப்பின் மூலம் அளிக்கிறார். இன்றும் இது வெகு முக்கியமான படைப்பாக வாசித்து வரப்படுகிறது. இந்த புத்தகத்தில் பௌத்தத்தின் அடிப்படைகள், புத்தரின் வாழ்க்கை, தர்மத்தின் செய்தி, அதைக் கொண்டு செல்லும் சங்கத்தின் பங்கு ஆகியவைகளை பற்றி விரிவாக பேசுகிறது. அத்தோடு நில்லாமல் இன்றைய சமூகத்தில் பௌத்தத்தின் கோட்பாடுகள் எவ்வாறு செல்லுபடியாகின்றது என்றும் விரிவாக பேசுகிறது.

ஆல்காட்டின் பிரும்மஞானம் மற்றும் அறிவியல்

[தொகு]

ஆல்காட் ஒவ்வொரு மதத்தின் தத்துவங்களையும் பின்னணிகளையும் அறிவியல் பூர்வமாக அணுக முயற்சித்தார். பிரும்மஞானத்தின் நோக்கமும் அதுவே. பல்வேறு மதங்களில் உள்ள அதிமானுட கூறுகளையும், அதில் மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் எடுத்துக் கொண்டு அதை பகுத்தறிவின் கீழ் கொணர்ந்து அதற்கு அறிவியல் விளக்கம் கொடுக்க முயன்றனர். அவர்களின் கூற்றுப்படி பௌத்தமே இன்று இருக்கும் அனைத்து மதங்களின் சிறந்த கூறுகளை உள்வாங்கி உள்ளது. பௌத்தமும் அறிவியலும் எனும் ஒரு பிரிவில் இதை பற்றி விரிவாகவே பேசுகிறார்.

இறப்பு

[தொகு]

1907 ஆம் ஆண்டு பிப்ரவரி 17 அவர் உயிர் நீத்தார் .அதுவரை அவர் தியோசாபிகல் குழுமத்தின் தலைவராக நீடித்தார் .

இலங்கையில் நினைவகங்கள்

[தொகு]

கொழும்பு மற்றும் காலியில் இரு சாலைகளுக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திற்கு எதிரில் அவரது உருவச்சிலை ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அவர் தொடங்கிய பௌத்த மையங்களில் அவரை நினைவுகூரும் விதமாக சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவரது நினைவு தினம் இன்றும் இலங்கையில் பலராலும் நினைவுகூரப்படுகிறது. அவர் தன்னை ஆசியக் கண்டத்தின் ஆன்மிகப் பண்பாடுகளைக் காக்க வந்த ஒரு நாயகனாகவே எண்ணி கொண்டார். மேலும் இவரது சிந்தனைகளால் உந்தப்பட்டு இலங்கையில் பௌத்தம் புத்துயிர் பெற்றது, அது அங்கிருந்த மக்களைப் பிரித்தானியக் குடியேற்ற ஆதிக்கத்திற்கு எதிரான ஒரு மனப்போக்கை ஏற்படுத்தியது. ஆல்காட் உலக மதங்களின் கூட்டமைப்பில் பௌத்தத்தை 1893 ஆம் ஆண்டு சிகாகோவில் இணைக்க உதவி புரிந்தார். இதன் மூலம் பௌத்தம் நவீன காலகட்டத்திற்கு அறிமுகமாகியது. ஆல்காட் பார்வையில் புத்தர் ஒரு இறுக்கங்கள் இல்லாத சுதந்திர சிந்தனையாளராகவும், பொறுமை, அன்பு, நன்றி ஆகிய குணாம்சங்களை கொண்டவராகவும், மேலும் உலகெங்கிலும் உள்ள மனிதர்களை சகோதர மனபாங்கினின் மூலம் இணைப்பவராகவும் உருவகித்து, அதையே உலகிற்கும் எடுத்து காட்டினார். அநகாரிக தர்மபால போன்ற பலரை அவர் ஈர்த்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Janet Kerschner, The Olcott Family". Archived from the original on 2008-12-18. பார்க்கப்பட்ட நாள் 2011-07-30.
  2. [1]
  3. Baird's Manual of American College Fraternities
  4. McMahon, David L. The Making of Buddhist Modernism. USA: Oxford University Press, 2008. McMahon. பக். 99.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹென்றி_ஸ்டீல்_ஆல்காட்&oldid=3701059" இலிருந்து மீள்விக்கப்பட்டது