Published : 13 Jan 2025 03:11 AM
Last Updated : 13 Jan 2025 03:11 AM

அதிமுக, தேமுதிகவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை பாஜகவும் புறக்கணிப்பு: காரணம் என்ன?

அதிமுக, தேமுதிகவை தொடர்ந்து, பாஜகவும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு பிப்ரவரி 5-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதியும் நடைபெற உள்ளது.

திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக அறிவித்துள்ளன. பொங்கல் நாளில் வேட்பாளரை அறிவிப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, பொது வேட்பாளரை நிறுத்தலாமா என்று ஆலோசித்து வந்த பாஜகவும் இத்தேர்தலை புறக்கணிப்பதாக தற்போது அறிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நடந்து வரும் மக்கள் விரோத ஆட்சியை கடந்த 4 ஆண்டுகளாக பார்த்து வருகிறோம். அனைத்து துறையிலும் ஊழல், சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல் துறையினர் உள்ளிட்ட யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழல் என, இருண்ட காலத்துக்கு தமிழகம் தள்ளப்பட்டுள்ளது.

சட்டமேதை அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியலமைப்பு சட்டத்துக்கு நேர் எதிராக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் பல வகையிலும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், ‘‘இது திராவிட மாடல் இல்லை, பேரிடர் மாடல்’’ என்று உரக்க சொல்லத் தொடங்கிவிட்டனர்.

கடந்த 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறி செயல்பட்டது. மக்களை பட்டியில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியது. அங்கு நடக்க இருப்பது இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல்.

வரும் 2026-ம் ஆண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தல், திமுகவை முழுமையாக அகற்ற இருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருகிறது. அதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளை போல பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்க தேசிய ஜனநாயக கூட்டணி விரும்பவில்லை. எனவேதான், கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்து ஆலோசித்த பிறகு, இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை அகற்றி, தேசிய ஜனநாயக கூட்டணியின் நல்லாட்சியை மக்களுக்கு வழங்குவதே எங்கள் இலக்கு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x