Last Updated : 13 Jan, 2025 12:26 PM

9  

Published : 13 Jan 2025 12:26 PM
Last Updated : 13 Jan 2025 12:26 PM

எதிர்க்கட்சிகள் ‘புறக்கணிப்பு’ திமுகவுக்கு சாதகமா, பாதகமா? - ஈரோடு கிழக்கும் ‘எதிர்கால’ அரசியலும்

ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதியில் 2-வது முறையாக இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலை அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில், இது ‘புறக்கணிப்பு’ அரசியல் எதிர்காலத்தில் திமுகவுக்கு சாதகமா, பாதகமா என்று அலசுவோம்.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பிறகு 2023-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். அவரது மறைவால் வரும் பிப்ரவரி 5-ம் தேதி ஈரோடு கிழக்கில் 2-வது முறையாக இடைத்தேர்தல் நடைபெறுகிறது. 2021 முதல் ஈரோடு கிழக்கு தொகுதியில் 2 முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை ஆளும் திமுகவே களம் காண்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதியின் தேர்தல் வரலாறு: ஈரோடு கிழக்கு தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் உருவானது. தமிழ்நாட்டின் சட்டமன்ற தொகுதி வரிசையில், 98-வது தொகுதியாக ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளது. குறைந்த பரப்பளவில், அதிக வாக்காளர்களை கொண்ட ஈரோடு கிழக்கு தொகுதி. ஜனவரி 6-ம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல்படி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் 1,09,636 ஆண் வாக்காளர்களும், 1,16, 760 பெண் வாக்காளர்களும், 37 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2,26, 433 வாக்காளர்கள் உள்ளனர்.

2011-ம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் வெற்றி பெற்றார். 2016-ம் ஆண்டில் நடந்த தேர்தலில், அ.தி.மு.க. வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு வெற்றி பெற்றார். 2021-ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். அவரது மறைவுக்குப் பிறகு 2023-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி நடந்த இடைத்தேர்தலில், திமுக கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார்.

கூண்டோடு புறக்கணித்த எதிர்க்கட்சிகள்: ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ மறைவை அடுத்து, ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு பிப்ரவரி 5-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 8-ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக, பாஜக அறிவித்துள்ளன.

“கடந்த முறை நடைபெற்ற ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில், அள்ளி இறைக்கப்பட்ட பணம், பரிசுப் பொருட்கள் மற்றும் திமுக-வின் மிரட்டல், அப்பாவி மக்களைப் பெருமளவில் அச்சுறுத்தியது. வாக்காளர்களை பட்டியில் அடைத்த அவலமும் நடந்தேறியது. நடைபெற உள்ள ஈரோடு (கிழக்கு) சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் அமைச்சர்களும், திமுக-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதாலும்;பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிட்டு, மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும்,தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும் இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறோம்” என்று அதிமுக தெரிவித்துள்ளது.

“இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை திமுக நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதே பாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்க போகிறது. எனவே ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது.” என்று தேமுதிக தெரிவித்துள்ளது.

“கடந்த 2023 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின்போது, ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில் திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறி செயல்பட்டது. மக்களை பட்டியில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியது. அங்கு நடக்க இருப்பது இடைத்தேர்தலுக்கான இடைத்தேர்தல். வரும் 2026-ம் ஆண்டு நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தல், திமுகவை முழுமையாக அகற்ற இருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே தேசிய ஜனநாயக கூட்டணி செயல்பட்டு வருகிறது. அதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளை போல பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்க தேசிய ஜனநாயக கூட்டணி விரும்பவில்லை. எனவேதான், இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம்” என பாஜக தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில், “எதிர்க்கட்சிகள் அவ்வளவு பலமாக உள்ளன” என்று கிண்டலாகக் கூறினார் அண்ணாமலை. தொடர்ந்து அதை விளக்கி, “எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு நாங்கள் பலமாக இருக்கிறோம் என்பதற்கான அர்த்தம்” என்றார்.

எதிர்க்கட்சிகள் கூண்டோடு புறக்கணித்திருந்தாலும் கூட ஈரோடு கிழக்கு தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது வாக்காளர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பெரும்பாலான அமைச்சர்கள், ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பணி ஆற்றினர். பணம், பரிசுப்பொருட்கள் விநியோகம் அதிக அளவில் நடந்ததாக செய்திகள் வெளியாகின. எனவே மீண்டும் ஒரு இடைத்தேர்தல் அத்தொகுதி மக்களுக்கு எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

தவெக vs நாதக: தேர்தலை புறக்கணிப்பதாக அதிமுக, தேமுதிக, பாஜக அறிவித்துள்ளன. பொங்கல் நாளில் வேட்பாளரை அறிவிப்பதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் அதிமுக, பாஜக புறக்கணித்ததால் வாக்குகள் ஒட்டுமொத்தமாக நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்குமா என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதனாலேயே வேட்பாளர் தேர்வில் நாதக கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிகிறது.

ஆனால், சமீப காலமாகவே சீமானின் பேச்சுக்கள் எல்லாம் குறிப்பாக பெரியார் எதிர்ப்புப் பேச்சு பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளை சீமான் பேசி வருகிறார். தமிழகத்தில் பாஜக காலூன்றுவதற்கு சீமான் துணை நிற்கின்றார் என்ற விமர்சனங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் நாதகவுக்கு ஈரோட்டில் பின்னடைவே ஏற்படும் என்று கணிக்கப்படுகிறது.

விக்கிரவாண்டியில் நடந்த தவெக முதல் மாநாட்டில் விஜய் ஆற்றிய முதல் உரை பெரியளவில் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தியது. திமுக மூத்த தலைவர்கள் கூட எதிர்வினையாற்றும் அளவுக்கு வீரியம் மிக்கதாக இருந்தது. ஆனால், அடுத்தடுத்த விஜய்யின் நகர்வுகள் தேக்கம் கண்டுள்ளன அல்லது சார்பு அரசியலாக மாறியுள்ளன என்று கூறலாம். அண்ணா பல்கலை., மாணவி சம்பவம் உள்பட 3 மனுக்களுடன் ஆளுநரை சந்தித்த விஜய் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தவிர்த்துச் சென்றது பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. பாஜகவுக்கு சார்பு அரசியலில் விஜய் ஈடுபடுகிறாரா என்ற சந்தேகங்களை வலுப்பெற வைக்கும் அளவுக்கு அவருடைய குற்றச்சாட்டுகள் அனைத்துமே மாநில கட்சிகளின் மீது குறிப்பாக ஆளும் திமுக மீது மட்டுமே உள்ளது.

2026 தேர்தலில் களம் காண்போம், கோட்டை நமதே என்ற முழக்கத்தோடு களமிறங்கியுள்ள தவெக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி எதுவும் சொல்லவில்லை. அரசல் புரசலாக லயோலா மணி வேட்பாளராக இறக்கப்படலாம் என்று கூறப்பட்டாலும் கூட எதுவும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. வெற்றி முழக்கத்தோடு, எதிர்பார்ப்பை உருவாக்கிய தவெக இடைத்தேர்தல் களத்தை முன்னோட்டமாக எதிர்கொண்டாலே அது சட்டப்பேரவை தேர்தலில் களம் காண முடியும் என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். ட்ரெய்லரையே ஃப்ளாப் ஆக்கினால் மெயின் பிக்சர் என்னவாகும் என்று விஜய்யின் திரைப்பின்புல பாணியிலும் விமர்சனங்கள் வருகின்றன.

ஏற்கெனவே விஜய் பனையூரில் இருந்துகொண்டு இருப்பை உறுதி செய்து கொள்ளும் அரசியலை மட்டுமே செய்து வருகிறார் என்ற விமர்சனங்கள் வரும்போது இடைத்தேர்தலைப் புறக்கணித்தல் என்பது அந்த விமர்சனத்தை இன்னும் உறுதி செய்யும். ஆனால், விஜய்யின் இலக்கு சட்டப்பேரவைத் தேர்தல் தான். பெரிய கட்சிகளின் புறக்கணிப்பை பேசுபொருளாக்காவிட்டால் இதையும் ஆக்கக் கூடாது.

தவெக-வுக்கு மாவட்ட அளவில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துதல், மாவட்டச் செயலாளர்கள் வட்டத்தை வலுப்படுத்துதல் போன்ற பணிகளில் விஜய் பக்காவாக ஈடுபட்டு வருகிறார் என்று தவெக வட்டாரம் தெரிவிக்கின்றது. எது எப்படியாயினும், 245 தொகுதிகளுக்கும் விஜய்யின் ஒற்றை முகமதிப்பைக் கொண்டு வேட்பாளர்களை நிறுத்தி ஆட்சியைக் கைப்பற்றுவது எல்லாம் பகல் கனவு எனக் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.

பலமா, பலவீனமா? - எதிர்கட்சிகள் திமுகவை தோலுரித்தக் காட்ட ஒட்டுமொத்தமாக கையிலெடுத்துள்ள உத்திதான் தேர்தல் புறக்கணிப்பு என்றால் அது மிகையல்ல. இத்தகைய சூழலில் திமுக இடைத்தேர்தலில் போட்டியின்றி களம் காண்பது பலமும் அல்ல; பலவீனமும் அல்ல. இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்கு தான் சாதகம் என்பது இந்திய தேர்தல் அரசியலின் தன்மை.

அப்படியிருக்க, சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது திமுக-வுக்கு மிகப் பெரிய சவாலாக இருக்காது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதேபோல் திமுக வேட்பாளாராக களமிறக்கியுள்ள வி.சி.சந்திரகுமார் மிகவும் பரிச்சியமானவர் என்பதால் அக்கட்சிக்கு அவர் வெற்றி வேட்பாளர் என்றும் குறிப்பிடலாம்.

இருப்பினும், பொங்கல் தொகுப்பு அதிருப்தி, ஈரோடு தொகுதிக்கே உரித்தான பிரச்சினைகளை சரிகட்டுதல் போன்ற விவகாரங்களால் வாக்காளர்களை சமரசம் செய்ய சில, பல உத்திகளை திமுக கையில் எடுத்தே ஆக வேண்டியிருக்கும். ஆகவே இடைத்தேர்தலை எளிதில் எடுத்துக் கொள்ளாமல் முக்கியப் பிரமுகர்கள் முகாமிட்டு கவனிப்புகளைக் கடைவிரிப்பர் என்றே தொகுதி கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பற்றி அதிமுக, தேமுதிக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் முன்வைத்துள்ள காரணங்கள் வார்த்தைகளால் வேறே தவிர சாராம்சம் ஒன்றே. பண, பரிசுப் பொருள் பட்டுவாடாவே அதில் பிரதான காரணம். திருமங்கலம் இடைத்தேர்தல் ஃபார்முலா தொடங்கி இதுவரை இந்த ஃபார்முலா பரவலாக விமர்சிக்கப்படுவது தேர்தல் ஆணையத்துக்கும் சவால்தான். எளிதான வெற்றி வாய்ப்பில் திமுக இருந்தாலும் கூட கெடுபிடிகள் கூடினால், மாற்றத்தை பற்றி மக்கள் யோசித்தால் நாதகவின் வாக்கு வங்கி பலம் வியக்க வைக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

புறக்கணிப்பு அரசியலின் தாக்கம் என்ன? - ‘தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை, தேர்தலில் போட்டியிடுதல் என்பதுதான் முக்கியமே தவிர வெற்றி, தோல்வி அல்ல. இடைத்தேர்தலில் போட்டியிடுவதால் மற்ற கட்சிகளுக்கு நேரமும், பொருளுமே விரயம் என்பது தெரிந்திருந்தாலும் கூட இடைத்தேர்தலை பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணிப்பது நல்ல உத்தி அல்ல.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் எல்லா கட்சிகளுக்குமே நல்ல முன்னோட்டத்துக்கான வாய்ப்பு. கட்சியின் களப் பணியாளர்களுக்கு புத்துணர்ச்சி பாய்ச்சும் வாய்ப்பு. ஒருங்கிணைந்து வேலை செய்வதற்கான வாய்ப்பு. அதை கட்சிகள் தவறவிட்டிருக்கின்றன.

இது வாக்காளர்கள் மத்தியில் திமுக தன்னை எவ்வித முட்டுக்கட்டையும் இல்லாது இன்னும் ஆழமாக நிறுவிக் கொள்ளவே வழிவகுக்கும். அந்த வகையில் எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு அரசியல் திமுகவுக்கு லாபமாக அமையும். இதன் தாக்கம் வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தொடருமா என்றால் தொடர வாய்ப்புகள் குறைவு என்றேதான் சொல்ல வேண்டும்’ என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

ஏனெனில், ‘ஒரு இடைத்தேர்தல் ஒரு கட்சிக்கு தரும் புத்துணர்ச்சி வேறு, அது கட்சிக்கு சேர்க்கும் பலம் வேறு. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுகவுக்கு இந்த இடைத்தேர்தல் வெற்றி லாபமும் இல்லை, நட்டமும் இல்லை.

2026 சட்டப்பேரவைத் தேர்தலைப் பொறுத்தவரை இதுவரை யார் யாரோடு செல்கிறார்கள் என்று எந்தக் கூட்டணியும் இறுதியாகவில்லை. அதிமுகவும் பாஜகவும் மீண்டும் இணையாது என்பதற்கு எந்த உறுதியும் இல்லை. அதேபோல் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாமே அப்படியே இருக்குமா என்பதற்கும் உறுதியில்லை.

குறிப்பாக காங்கிரஸ், விசிக என்ன மாதிரியான முடிவெடுக்கும் என்பதும் கேள்விக்குறியாகவே இருக்கின்றன. இதில் தவெக வேறு இருக்கின்றது. நாதக, தவெக எல்லாம் பாஜகவுடன் அணி சேரவேண்டும் என்றும், மீண்டும் ஒரு புதுமுக என்டிஏ-வுக்கான ஆசைகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

2026 சட்டப்பேரவை தேர்தல் களம், தமிழக அரசியலில் மிகவும் வித்தியாசமானதாக இருக்கப் போகிறது. திமுக vs அதிமுக என்றில்லாமல் மும்முனையாகவோ அல்லது பல முனையாகவோ, புதிய கூட்டணிகளின் வரவோடு இருக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x