என் மலர்tooltip icon

    வழிபாடு

    • பாப்பனாத்தான் பெருமாள் கோவில் ஆறு, சதுரகிரி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
    • பாதுகாப்பு கருதி நேற்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பாப்பனாத்தான் பெருமாள் கோவில் ஆறு, சதுரகிரி உள்ளிட்ட ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    இந்தநிலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவிலுக்கு செல்லக்கூடிய மலைப்பாதைகளில் உள்ள நீரோடைகளில் நீர்வரத்து இருப்பதாலும், மாலை நேரங்களில் மழை பெய்வதாலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி நேற்று சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர்.

    இந்தநிலையில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அலங்காரம்.
    • தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பொங்கல் திருவிழா.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-22 (சனிக்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி நள்ளிரவு 1.07 மணி வரை பிறகு நவமி

    நட்சத்திரம்: திருவாதிரை காலை 10.47 மணி வரை பிறகு புனர்பூசம்

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    சூலம்: கிழக்கு

    நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் அலங்காரம். தாயமங்கலம் ஸ்ரீ முத்துமாரியம்மன் பொங்கல் திருவிழா. நெல்லை ஸ்ரீ நெல்லையப்பர், சென்னை ஸ்ரீ மல்லீஸ்வரர் கோவில்களில் பவனி. ராமகிரிப்பேட்டை ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெமாள் சிம்ம வாகனத்தில் பவனி. பழனி ஸ்ரீ ஆண்டவர் உற்சவம் ஆரம்பம். புதுச்சேரி சப்பரத்தில் புறப்பாடு. குற்றாலம் ஸ்ரீ குற்றாலநாதர் உற்சவம் ஆரம்பம். திருவள்ளூர் ஸ்ரீ வீரராகவப் பெருமாள், மதுரை ஸ்ரீ கூடலழகர், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் கோவில்களில் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்த ராஜப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜ பெருமாள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆதாயம்

    ரிஷபம்-சுகம்

    மிதுனம்-செலவு

    கடகம்-பாராட்டு

    சிம்மம்-திடம்

    கன்னி-உறுதி

    துலாம்- பக்தி

    விருச்சிகம்-முயற்சி

    தனுசு- சாந்தம்

    மகரம்-உழைப்பு

    கும்பம்-ஆதாயம்

    மீனம்-ஊக்கம்

    • கடந்த 1-ந்தேதி மரகத நடராஜர் சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
    • பிரதான மூர்த்திகளுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டம் திரு உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்களே சுவரி உடனுறை மங்கள நாதர் சுவாமி கோவில் உள்ளது. உலகின் முதல் சிவாலயமாக கருதப்படும் இந்த ஸ்தலத்தில் மங்களநாத சுவாமி, மங்களேஸ்வரி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.

    மேலும் இங்குள்ள மரகத நடராஜருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ரா நாளன்று சந்தனம் களையப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்வார்கள்.

    இதுபோன்று பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டு உள்ள இந்த கோவிலில் பலகோடி ரூபாய் மதிப்பில் கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்றது. பணிகள் முடிவடைந்த நிலையில் கும்பாபிஷேகம் இன்று (4-ந்தேதி) நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.

    இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. நேற்று வரை ஐந்து கால யாக பூஜைகள் நடைபெற்றன. விழாவில் சிகர நிகழ்ச்சியான கும்பாபி ஷேகம் இன்று நடைபெற்றது.

    இதையொட்டி இன்று அதி காலை கோவில் நடை திறக்கப்பட்டு மூலவர் மங்களநாதர்-மங்களேஸ்வரிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம் அதனைத் தொடர்ந்து ஆறாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

    காலை 9 மணிக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத யாகசாலை யில் இருந்து புனித நீர் உள்ள கும்பத்துடன் வலம் வந்தனர். சரியாக 9.30 மணிக்கு மங்களநாதர்-மங்களேஸ்வரி கோவில் ராஜகோபுரங்கள், விமான கோபுரங்கள், மூலஸ்தான பிரதான மூர்த்திகளுக்கு புனித நீரூற்றி கும்பாபிஷேகம் நடந்தது.

    அப்போது அங்கு திரண்டு இருந்த திரளான பக்தர்கள் சிவனே போற்றி என பக்தி கோஷ மிட்டு வழிபட்டனர். தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்தனர்.

    500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வடக்கு வாசல் பகுதியில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையில் போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

    கும்பாபிஷேக விழாவில் ராமநாதபுரம் காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., ராமநாதபுரம் சேதுபதி ராணி, ராஜேஸ்வரி நாச்சியார், இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, திவான் பழனிவேல் பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் கலந்துகொண்டனர்.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 1-ந்தேதி மரகத நடராஜர் சந்தனம் களையப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். நடராஜரை தரிசிக்க நாள்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகம் முடிந்த நிலையில் இன்று இரவு மரகத நடராஜருக்கு 32 வகையான திரவ பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மீண்டும் சந்தனம் பூசப்பட்டு நடை சாத்தப்படும். அதன் பின் ஆருத்ரா நாளன்று மரகத நடராஜர் சன்னதி திறக்கப் படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர்.
    • எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன.

    வடவள்ளி:

    கோவை மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் பிரசித்தி பெற்ற மருதமலை முருகன் கோவில் அமைந்துள்ளது. பக்தர்களால் முருகப்பெருமானின் 7-வது படைவீடு என இந்த கோவில் அழைக்கப்பட்டு வருகிறது.

    இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 வருடங்கள் நிறைவு பெற்று விட்டது. இதனை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான கோவிலில் திருப்பணிகள் நடைபெற்று வந்தன.

    பணிகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக விழா கடந்த 30-ந் தேதி மாலை 6 மணிக்கு மங்கல இசை, திருமறை, திருமுறை பாராயணம், விநாயகர் பூஜை, இறை அனுமதி உள்ளிட்ட நிகழ்ச்சிகளோடு தொடங்கியது.

    அதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை யாகசாலை பூஜை நடைபெற்றது. மேலும் முதல் கால வேள்வி, 2-ம் கால வேள்வி, 3-ம் கால வேள்வி பூஜைகளும் நடைபெற்றது.

    திருச்சுற்று தெய்வங்கள், அடிவாரத்தில் உள்ள தான்தோன்றி விநாயகர் உள்பட அனைத்து தெய்வங்களுக்கும் எண் வகை மருந்து சாற்றுதல் நடைபெற்றது.

    இதையடுத்து கும்ப அலங்காரம், இறை சக்தியை திருக்குடங்களுக்கு எழுந்தருள செய்தல், மூலவரிடம் இருந்து யாகசாலைக்கு திருக்குடங்களை எழுந்தருள செய்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது. நேற்று 4 மற்றும் 5-ம் கால வேள்வி பூஜைகள் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு மங்கள இசை, திருமறை, திருமறை பாராயணம் மற்றும் 6-ம் கால வேள்வி பூஜை நடந்தது.

    அதனை தொடர்ந்து காலை 6 மணி முதல் 6.45 மணிக்குள் திருச்சுற்று தெய்வங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 7.30 மணிக்கு யாக சாலையில் இருந்து திருக்குடங்கள் ஏந்தி கோவிலை சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது.

    காலை 8.30 மணிக்கு மருதாசலமூர்த்தி விமானம், ஆதி மூலவர் விமானம், ராஜகோபுரம், கொடிமரம், பரிவார விமானங்கள் அனைத்துக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து 9 மணிக்கு ஆதி மூலவர், விநாயகர், மருதாச்சலமூர்த்தி, பட்டீஸ்வரர், மரகதாம்பிகை, வீரபாகு, கரிவரதராஜபெருமாள், சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவருக்கு பேரொளி வழிபாடும் நடந்தது.

    இந்த கும்பாபிஷேக விழாவில் பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், அறங்காவலர் குழு தலைவர் ஜெயக்குமார், அறங்காவலர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா ராஜரத்தினம், கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கும்பாபிஷேகத்தை யொட்டி அதிகாலை முதலே மருதமலை முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கணக்கான பக்தர்கள் கூட்டம், கூட்டமாக வந்தனர். அவர்கள் படிக்கட்டுகள் வழியாகவும், கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்ட பஸ்களிலும் பயணித்து மலைக்கோவிலுக்கு சென்றனர்.


    கோவில் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்ட போது பக்தர்கள் கந்தனுக்கு அரோகரா, முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷம் எழுப்பினர். தொடர்ந்து பக்தர்கள் முருகப்பெருமனை சாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் கும்பாபிஷேகத்தை காணும் வகையில் மலைப்படிக்கட்டுகள், அடிவார பகுதியில் ஆங்காங்கே பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு, அதில் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. அதனை பக்தர்கள் பார்வையிட்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கும்பாபிஷேகத்தை யொட்டி கோவை மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். இதனால் கோவில் படிக்கட்டுகள், மலைப்பாதைகள் என எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.


    பக்தர்கள் வசதிக்காக மலைப்படிக்கட்டுகளில் பச்சைப்பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. ஆங்காங்கே குடிநீர் வசதியும், கழிவறை வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது. கும்பாபிஷேகத்தையொட்டி பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர்மோர், குளிர்பானங்கள், அன்னதானமும் வழங்கப்பட்டது. அமைச்சர் செந்தில்பாலாஜி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

    இன்று மாலை 4.30 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு மகா அபிஷேகமும், மாலை 5.30 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. தொடர்ந்து சுப்பிரமணிய சுவாமி வள்ளி தெய்வானையுடன் வீதி உலா வருகிறார். இதிலும் திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

    கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மருதமலை முருகன் கோவில் பகுதியில் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது.

    • பங்குனி உத்திர திருவிழாவின் போது ஆழித்தேரோட்டம் நடைபெறுவதுண்டு.
    • பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் ஆழித்தே ரோட்டம் நடைபெறவில்லை.

    திருவாரூர் தியாராஜர் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழாவின் போது முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டம் நடைபெறுவதுண்டு.


    இந்த விழாவிற்காக மாசி மாதத்தில் வரும் அஸ்த நட்சத்திரத்தில் கோவிலில் கொடியேற்றப்பட்டு, பங்குனி மாதத்தில் வரும் ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேரோட்டம் நடத்த வேண்டும் என்பது ஆகமவிதி.

    ஆனால், பல ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் ஆயில்ய நட்சத்திரத்தன்று ஆழித்தே ரோட்டம் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆகமவிதியை கடைபிடித்து ஆரூரானுக்கு ஆயில்யத்தன்று தான் தேரோட்டம் நடத்த வேண்டும் என்ற பக்தர்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது.


    30 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021-ம் ஆண்டு ஆயில்ய நட்சத்திர தினத்தன்று ஆழித்தேரோட்டம் நடந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகளிலும், முறையே, கடந்த ஆண்டு (2024) நடந்த பங்குனி திருவிழாவின் போது ஆயில்ய நட்சத்திர தினத்தன்று தான் தேரோட்டம் நடந்தது.

    அதே போல், இந்த ஆண்டும் தொடர்ந்து 5-வது முறையாக ஆயில்ய நட்சத்திரம் வரும் அதே நாளான வருகிற 7-ந்தேதி (திங்கட்கிழமை) ஆழித்தேர் திருவிழா நடைபெற உள்ளது. இது சிவபக்தர்கள் மற்றும் ஆன்மீக அன்பர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    • வன்மீகநாதரை உச்சிகால நேரத்தில் தரிசனம் செய்தால் தோஷம் நீங்கும்.
    • நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம்.

    திருவாரூர் தியாகராஜர் கோவிலின் சிறப்புகள் எண்ணில் அடங்காதவை. அது குறித்து அறிய, அறிய நம்மிடம் பல ஆச்சரியத்தை ஏற்படுத்துபவை. அவற்றுள் சில குறிப்பிடத்தக்க சிறப்புகளை இங்கு சுருக்கமாய் காண்போம்.

    ராஜேந்திர சோழன் சிலை

    தென்கிழக்கு ஆசியாவை கட்டியாண்டவரும், உலகின் மிகப்பெரிய படைக்கு சொந்தக்காரருமாகவும் விளங்கிய ராஜேந்திர சோழனின் உருவச்சிலை திருவாரூர் தியாகராஜர் கோவில் அமைந்துள்ளது. இது இக்கோவிலுக்கு கிடைக்கப்பெற்ற மற்றுமொரு சிறப்பாகும்.


    பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்

    மகாலட்சுமி, தவம் செய்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்ததும், குழந்தைப்பேறு வேண்டி தவம் செய்து குழந்தைப்பேறு பெற்றதும், இந்த தியாகராஜர் தலமாகும்.

    எனவே, குழந்தைப்பேறு இல்லாதவர்கள் தியாகராஜரை வழிபாடு செய்தால் குழந்தைப்பேறு கிட்டும், காதலுக்கு தூது போனவர் தியாகராஜர் என்பதால், காதல் கைகூடவும் எவ்வித சிக்கலும் இன்றி திருமணம் நடந்தேறவும் தியாகராஜரை வழிபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கொடுமையான பாவங்கள் செய்தால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க, வன்மீகநாதரை உச்சிகால நேரத்தில் தரிசனம் செய்தால் தோஷம் நீங்க பெறலாம்.


    தோல் நோய் குணமாகும்

    உடலில் தோன்றும் தோல் நோய், மரு போன்றவை மறைய ஆழித்தேரோட்டத்தின் போது மிளகு, உப்பு, பச்சரிசி, மஞ்சள் பொடி தூவி பக்தர்கள் வழிபடுகின்றனர். இதன் மூலம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் குணமாகும் என்பது நம்பிக்கை.

    தீப வடிவில் நவகிரகங்கள்

    இத்தலம் நளனும், சனியும் வழிபட்ட தலம். தியாகேசர் சன்னதியின் மேல் வரிசையில் 9 விளக்குகள் உள்ளன. நவக்கிரகங்கள் இங்கு தீப வடிவில் சிவபெருமானை வழிபடுவதாக ஐதீகம். பெருமானுக்கு முன் 6 மற்றும் 5 அடுக்குகள் கொண்ட இரு விளக்குகள் உள்ளன. இவை ஏகாதச ருத்திரர்களை குறிக்கும்.

    சந்தனத்தின் மீது குங்கும பூவையும் பச்சை கற்பூரத்தையும் சேர்த்து, உத்ஸவ வீதிகளில் ஆடிய அசதி தீர, தியாகேசருக்கு மருந்து நிவேதிக்கப்படுகிறது. இது சுக்கு, மிளகு, திப்பிலி, வெல்லம் ஆகியவற்றால் தயாரிக்கப்படுகிறது.

    • 16 கரங்களுடன் நின்ற கோலத்தில் பெரிய திரு மேனியுடன் சேவை சாதிக்கிறார்.
    • 21 முக்கியமான பஞ்சலோக சிற்பங்கள் இருக்கின்றன.

    புல்லாங்குழலுடன் காட்சி தரும் கிருஷ்ணன், வேணுகோபாலனாக ஆலயம் கண்ட தலங்கள் பல உள்ளன. அவற்றில் அமர்ந்த, நின்ற, சயனம் என மூன்று கோலங்களிலும் இறைவன் காட்சி தரும் ஆலயமாக, ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது.

    சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு திப்பு சுல்தானின் நிதிப் பொறுப்பாளராக இருந்த ரங்கையா என்பவர், இந்தப் பகுதியில் வரி வசூலித்து திப்பு சுல்தானுக்கு கட்டி வந்தார்.

    ஆனால் மூன்று ஆண்டுகளாக வசூலித்த வரிப் பணத்தை திப்பு சுல்தானுக்கு கொடுக்காமல், அதை வைத்து இங்குள்ள 108 கால் மண்டபத்தை கட்டியதாக வரலாறு கூறுகிறது.

    ராமானுஜரும், வேதாந்த தேசிகரும் மேல்கோட்டில் உள்ள திரு நாராயணபுரத்திற்குச் செல்லும் வழியில் சில நாட்கள் இங்கு தங்கியதாக சொல்லப்படுகிறது.


    கோவில் அமைப்பு

    இந்த கோவில் மூன்று நிலை மற்றும் ஐந்து கலசங்கள் கொண்ட ராஜ கோபுரத்துடன், கண்களை கவரும் வண்ணம் அழகாக காட்சி தருகிறது. மேலும் உயரமான சுற்றுச் சுவர்களையும் கொண்டுள்ளது.

    கோபுரத்தை வணங்கி உள்ளே நுழைந்தால் பெரிய விசாலமான பரப்பைக் காணலாம். கோவிலை கடந்து உள்ளே சென்றவுடன் எதிரே 30 அடி உயரத்தில் செப்புக் கவசத்துடன் நீண்ட நெடிய கொடிக் கம்பம் ரம்யமாக காட்சி தருகிறது.

    அதனை அடுத்து அழகிய வேலைப்பாடுடன் கூடிய 108 கல் மண்டபங்கள் வரிசையாக அழகாக காட்சி தருகின்றன. இந்த மண்டபத்தின் முகப்பில் ருக்மணி, சத்தியபாமா உடனாய குழல் ஏந்திய கிருஷ்ணனின் சுதை வடிவ சிற்பம் இருக்கிறது.


    கல் மண்டபத்தின் உள்ளே நுழைந்ததும் இடது புறத்தில் வித்தியாசமாக கல்யாண விநாயகரை தனிச் சன்னிதியில் தரிசிக்கலாம். விநாயகர் சன்னிதிக்கு எதிரில் உள்ள தூணில் திப்புசுல்தானின் புடைப்பு சிற்பமும் இருக்கிறது.

    கொங்கு நாட்டை திப்பு சுல்தான் ஆட்சி செய்த போது இக்கோவில் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கருத்து உள்ளது. அதற்கு அடுத்ததாக 16 கரங்களுடன் நின்ற கோலத்தில் பெரிய திரு மேனியுடன் சேவை சாதிக்கிறார், சுதர்சன ஆழ்வார்.

    இவருக்கு சித்திரை நட்சத்திர நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. சுதர்சன ஆழ்வாருக்கு மறுபுறம், யோக நரசிம்மர் யோக நிலையில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

    இவருக்கு அடுத்ததாக விநய ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். கல்விக் கடவுளான ஹயக்ரீவர், ஆரோக்கியத்தை காக்கும் தன்வந்திரி பகவான் ஆகியோர் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

    இவர்களை வணங்கி தாயாரான கல்யாண மகாலட்சுமியை தரிசிக்கிறோம். அமர்ந்த திருக்கோலத்தில் உள்ள தாயார், மேல் இரு கரங்களில் தாமரை மலர்களை ஏந்தியும், கீழ் இரு கரங்களில் அபய - வரத முத்திரையோடும் பக்தர்களுக்கு அனுக்கிரகம் செய்கிறார்.

    ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் காலையில் தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறுவதோடு, விளக்கு பூஜையும் நடைபெறுகிறது.

    தொடர்ச்சியாக 9 வாரங்கள் இந்த விளக்கு பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு, திருமணத்தடை நீங்கி, குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    அடுத்ததாக மூலஸ்தானத்திற்கு துவாரபாலகர்களைக் கடந்து உள்ளே செல்கிறோம். மூலவரை நோக்கி கூப்பிய கரத்துடன் கருடாழ்வார் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.

    கருவறையில் புல்லாங்குழல் ஊதும் வேணுகோபாலனாக ஆனந்தமான முகத்துடன் சங்கு, சக்கரம் ஏந்திய நிலையில் கிருஷ்ணன், ருக்மணி, சத்தியபாமா ஆகியோர் அருள்பாலிக்கிறார்கள்.


    இவரது சன்னிதிக்கு பின்புறம் ரங்கநாதர் சன்னிதி இருக்கிறது. அங்கு சிறிய மற்றும் அழகான வடிவத்தில் 'கஸ்தூரி ரங்கநாதர்' என்ற பெயரில் 7 தலை ஆதிசேஷனின் மேல் தூங்கும் புஜங்க சயன தோரணையில் அவர் உள்ளார்.

    அவருக்கு இரு பக்கமும் நிலமகளும், திருமகளும் நின்றபடி இருக்கின்றனர். திருவரங்கம் போன்ற மற்ற சிலைகளுடன் ஒப்பிடும்போது இந்த சிலை சிறியதாக இருந்தாலும், அழகாக செதுக்கப்பட்டுள்ளது. ரங்கநாதர் சன்னிதிக்கு முன்னால் பல நூற்றாண்டு பழமையான கல்வெட்டும் இருக்கிறது.

    பிரகாரத்தை சுற்றி வரும்போது சிவபெருமான் கோவில்களில் உள்ளது போல, மகாலட்சுமியின் அம்சமான வில்வ மரத்தை காண முடிகிறது. அதற்கு கீழே நாகர் சன்னிதி, அதற்கு பக்கத்தில் காளிங்க நர்த்தனர் மற்றும் வாமன அவதார பெருமாள் ஆகியோரும் தரிசனம் தருகின்றனர்.

    தல விருட்சமாக மகிழம் மரம் உள்ளது. அடுத்ததாக அமர்ந்த நிலையில் லட்சுமி நாராயணர் அருள்கிறார். திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில், இறைவன் நின்ற, அமர்ந்த, சயன கோலத்தில் அருள்வது போல, இங்கும் மூன்று கோலங்களில் இருக்கும் இறைவனை நாம் தரிசிக்கலாம். இந்த மூன்று மூலவர்களுக்கும் வழக்கமான அபிஷேகம் நடைபெறுகிறது.

    மேலும் இங்கு ஆண்டாள் சன்னிதியும், ஐயப்பன் சன்னிதியும் உள்ளது. 108 கால் மண்டபத்தின் கடைசி கல் மண்டபத்தில், சிவலிங்கத்தின் புடைப்பு சிற்பம் காணப்படுகிறது.

    பெருமாள் கோவில்களில் சிவலிங்கத்தின் புடைப்பு சிற்பம் இருப்பது அரிதாக பார்க்கப்படுகிறது. இதேபோல கோவில் சுவர்களில் ஆங்காங்கே மீன் உருவங்கள் பொறிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.


    கோவில் பிரகாரத்தை சுற்றி வரும்போது, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ளதைப் போலவே, மோட்ச பல்லியின் சிற்பமும் இருக்கிறது. விஷ பூச்சியால் பாதிக்கப்பட்டோர் இங்கு வந்து மோட்சப் பல்லியை வணங்கிச் சென்றால், அந்த பாதிப்புகள் நீங்கும் என்பது ஐதீகம்.

    கோவிலுக்கு முன்பகுதியில் கருடஸ்தம்ப ஆஞ்சநேயர் சன்னிதி உள்ளது. ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்த ஆஞ்சநேயர் சிலை, 80 அடி உயரத்தில் பிரமாண்டமாக உள்ளது. இந்த ஆஞ்சநேயர் சங்கு, சக்கரத்துடன் இருப்பது விசேஷமானது.

    புரட்டாசி மாதம் வரும் அனைத்து சனிக்கிழமைகளிலும், ஆஞ்சநேயர் ஜெயந்தி அன்றும் இந்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. கோவிலுக்குள் 21 முக்கியமான பஞ்சலோக சிற்பங்கள் இருக்கின்றன.

    வேணுகோபாலனுக்கு ஆவணியில் நடைபெறும் ஜெயந்தி உற்சவம், மாதந்தோறும் ரோகிணி நட்சத்திரத்தில் சிறப்பு அபிஷேகம், புரட்டாசி பிரம்மோற்சவம், பங்குனி உத்திரம், மாசி மகம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, வைகுண்ட ஏகாதசி, சிரவண தீபம் ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் விசேஷமான வழிபாடுகளாகும். இவ்வாலய இறைவனை வழிபாடு செய்தால், திருமணத் தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 1 கிலோமீட்டரில், வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது.

    • மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில், பைரவர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
    • பைரவருக்கு மேற்கூரை கிடையாது.

    உத்தரகாண்ட் மாநிலம், கேதார்நாத் என்ற இடத்தில் அமைந்துள்ளது, 'கேதாரீஸ்வரர் திருக்கோவில்'. இந்த ஆலயத்திற்கு சாலை வழியாக செல்ல முடியாது. கவுரிகுண்ட் என்ற இடத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தூரத்திற்கு மலை மீது ஏறித்தான் செல்ல வேண்டும். இங்கிருந்தும் சுமார் 500 மீட்டர் உயரத்தில் இருக்கிறது, புகுர்ந்த் பைரவர் கோவில்.

    இந்த இடத்தில் சிவபெருமானின் 64 வடிவங்களில் முக்கியமானவராக கருதப்படும், பைரவர் வழிபடப்படுகிறார். மலை உச்சியில் உள்ள ஒரு பாறையில், பைரவர் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இந்த பைரவருக்கு மேற்கூரை கிடையாது. திறந்தவெளியில்தான் இவர் வீற்றிருக்கிறார்.


    கேதார்நாத் கோவிலுக்கு தெற்கே மலை உச்சியில் அமைந்துள்ள இந்த கோவிலை, கேதார்நாத் கோவிலில் இருந்து பார்க்க முடியும். அதே போல் மலை உச்சியில் இருந்து கேதார்நாத் ஆலயமும் அழகாகத் தெரியும்.

    கேதார்நாத் கேதாரீஸ்வரர் கோவிலில் காலையில் நடை திறந்து வழிபாடு செய்யப்படுவதற்கு முன்பாகவே, மலை உச்சியில் உள்ள இந்த பைரவர் கோவிலுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.


    ஒருவர் கேதார்நாத் ஆலயத்திற்கு பயணம் சென்றால், அவர் புகுர்ந்த் மலை மீதுள்ள பைரவரை வழிபாடு செய்யாமல், அந்த பயணமும், தரிசனமும் முழுமை பெறாது என்கிறார்கள்.

    • இன்று சுபமுகூர்த்தம் தினம்.
    • திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-21 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: சப்தமி பின்னிரவு 2.16 மணி வரை. பிறகு அஷ்டமி.

    நட்சத்திரம்: மிருகசீரிஷம் காலை 11.30 மணி வரை. பிறகு திருவாதிரை.

    யோகம்: சித்தயோகம்.

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுபமுகூர்த்தம் தினம். தாயமங்கலம் ஸ்ரீமுத்துமாரியம்மன் பூத வாகனத்தில் புறப்பாடு. பரமக்குடி அன்னை ஸ்ரீமுத்துமாரியம்மன் உற்சவம் ஆரம்பம். நெல்லை நெல்லையப்பர் ஸ்ரீவேணுவனலிங்கோபத்தியில் பவனி. காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் அதிகார நந்தி வாகனத்தில் பவனி. கனநாதநாயனார் குருபூஜை. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோவில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம், அலங்காரம். தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். கரூர்தான் தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-வெற்றி

    மிதுனம்-வரவு

    கடகம்-தாமதம்

    சிம்மம்-நலம்

    கன்னி-அன்பு

    துலாம்- புகழ்

    விருச்சிகம்- நட்பு

    தனுசு- ஆதரவு

    மகரம்-லாபம்

    கும்பம்-மேன்மை

    மீனம்-இன்பம்

    • கோவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.
    • சைவ சமய ஆதீனங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

    தென்காசி:

    தென்காசி காசி விஸ்வநாதர்-உலகம்மன் கோவிலில் சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடைபெறுகிறது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில மாதங்களாக கோவிலில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்றது. கோவில் ராஜகோபுரம் வர்ணம் தீட்டப்பட்டு, மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

    7-ந் தேதி நடைபெறும் கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் இன்று தொடங்கியது. அதிகாலை 5 மணி அளவில் உலகம்மன் சன்னதி மண்டபத்தில் கோவிலின் அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பாலகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கோவில் செயல் அலுவலர் பொன்னி ஆகியோர் முன்னிலையில் மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள், மங்கள வாத்தியம் முழங்க நடை பெற்றது.

    நிகழ்ச்சியில சைவ சமய ஆதீனங்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆதினங்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் வல்லம் பால கிருஷ்ணன் பொன்னாடை மற்றும் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    இன்று அதிகாலையில் தொடங்கிய யாகசாலை பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். 

    • 25 ஆயிரம் பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்ட முடிவு.
    • பார்க்கிங் வசதி பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

    திருப்பதி:

    திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது திருப்பதி மலையில் 55 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கான விடுதிகள் மட்டுமே உள்ளன.

    தினமும் தரிசனத்திற்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவதால் அவர்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் இல்லாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

    இது குறித்து அமராவதியில் நேற்று முதல் மந்திரி சந்திரபாபு தலைமையில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு, திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் சியாமளா ராவ், இணை செயல் அலுவலர் வெங்கைய்ய சவுத்ரி மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் திருப்பதி மலையில் பக்தர்களின் நெரிசல் குறித்தும், தங்கும் இட வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    ஆய்வுக் கூட்டத்தில் அலிபிரியில் 3 தனியார் ஓட்டல்கள் கட்ட 35 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு இருந்தது.

    தனியார் ஓட்டல் கட்ட ஒதுக்கப்பட்ட நிலங்களை சந்திரபாபு நாயுடுவின் உத்தரவின் பேரில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்தில் 25 ஆயிரம் பக்தர்கள் தங்கும் வகையில் விடுதிகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளன.

    தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தங்கள் வாகனங்களை அலிபிரியில் நிறுத்திவிட்டு மின்சார பஸ்களில் செல்வதால் காற்று மாசு ஏற்படுவது குறையும். பார்க்கிங் வசதி பிரச்சனைகள் தீர்க்கப்படும்.

    மேலும் அலிபிரியில் ஆன்மீக சூழ்நிலை, தூய்மையை உறுதி செய்வ தற்கான ஏற்பாடுகளை செய்ய தேவஸ்தான அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பதியில் நேற்று 72,721 பேர் தரிசனம் செய்தனர். 25,545 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 4 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 14 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    • அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.
    • காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. 4 பக்கமும் மலைகள் சூழ்ந்துள்ள இந்த கோவில் பகுதி அடர்ந்த வனப்பகுதியை கொண்டது.

    சித்தர்கள் வாழும் பூமியாக அறியப்படும் இந்த மலையில் உள்ள சிவனை வழிபட்டால் நன்மைகள் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷம் நாட்களில் பக்தர்கள் மலையேறிச் சென்று தரிசனம் செய்து வருவார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தது. இதனால் விசேஷ நாட்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் பக்தர்கள் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் மலையில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோரை வனத்துறையினர் பல்வேறு மீட்டனர்.

    இதை தொடர்ந்து சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது வரை இந்த நடைமுறை வழக்கத்தில் இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக சதுரகிரி கோவில் பிரபலமடைய தொடங்கியது.

    இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். ஒவ்வொரு முறையும் கூட்டம் அதிகரித்தது. குறிப்பாக ஆடி, தை, மகாளய அமாவாசை, சிவராத்திரி போன்ற விழாக்களின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு குவிந்து வருகின்றனர்.

    இதற்கிடையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவிலுக்கு பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதிகள் பக்தர்களை தினமும் தரிசனம்செய்ய அனுமதிக்க வேண்டும் என உத்தர விட்டதோடு சில வழிகாட்டு தல்களையும் வழங்கினர்.

    மதுரை ஐகோர்ட்டு உத்தரவை நடை முறைப்படுத்துவது குறித்து விருதுநகர் மாவட்ட அதிகாரிகள், வனத்துறை யினர் தீவிர ஆலோசனை நடத்தினர். இறுதியில் இன்று (3-ந் தேதி) முதல் நாள்தோறும் பக்தர்களை சதுரகிரிக்கு அனுமதிப்பது என முடிவு செய்யப்பட்டது.

    இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ராஜேந்திரன் கூறுகையில், மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சதுரகிரிக்கு தினமும் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே சோதனை சாவடி வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்படு வார்கள். மாலை 4 மணிக்குள் லையில் இறங்கி திரும்பி வந்துவிட வேண்டும்.

    உரிய அனுமதியின்றி எவரேனும் மலையில் தங்கி இருந்தால் கடுமு நடவடிக்கை எடுக்கப்படும். சதுரகிரிக்கு அனு மதிக்கப்பட்ட வழியில் மட்டுமே செல்ல வேண்டும். வேறு எந்த பகுதியிலும் நுழையக்கூடாது. மதுரை ஐகோர்ட்டு வழிகாட்டுதல்களை பின்பற்றி பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

    இதற்கிடையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்பட்டி இன்று முதல் சதுரகிரிக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட னர். காலை 6 மணிக்கு தாணிப்பாறை அடிவார கேட் திறக்கப்பட்டது. ஆனால் பக்தர்கள் யாரும் வரவில்லை.

    நேற்று இரவு உத்தரவு வந்ததால் பொது மக்களுக்கு உடனடியாக விபரம் தெரியவில்லை. இதனால் இன்று பக்தர்கள் யாரும் சதுரகிரிக்கு வரவில்லை. இனிவரும் நாட்களில் பக்தர்கள் நாள்தோறும் வர ஆர்வம் காட்டுவார்கள் என தெரிகிறது.

    ×