search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ICC"

    • முதல் டி20 போட்டியின் போது நியூசிலாந்து பந்துவீச்சாளரை வேண்டுமென்றே மோதியுள்ளார்.
    • குஷ்தில் ஷாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில், போட்டி விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஸகாரி ஃபால்க்ஸை வேண்டுமென்றே மோதியதாக குஷ்தில் ஷா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை கள நடுவர்களும் உறுதிசெய்தனர்.

    இது ஐசிசி விதிகளுக்கு எதிரானது என்பதால், குஷ்தில் ஷாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், மூன்று கரும்புள்ளிகளையும் அபராதமாக விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

    அதேசமயம் சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோல் விதிமுறையை மீறும் வீரர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இரண்டாம் தர குற்றங்களில் ஈடுபடும் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 முதல் 100 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குஷ்தில் ஷா கடந்த 24 மாதங்களில் செய்த முதல் குற்றம் இது என்பதால் அவருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருதுகளை ஐ.சி.சி. வழங்கி வருகிறது.
    • பிப்ரவரி மாத சிறந்த வீரருக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் பரிந்துரை செய்யப்பட்டார்.

    துபாய்:

    ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது ஐ.சி.சி. சார்பில் வழங்கப்படுகிறது.

    இதற்கிடையே, பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர், வீராங்கனைக்கான பரிந்துரை செய்யப்பட்ட பட்டியல் வெளியானது.

    சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் சுப்மன் கில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில், பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரர் விருதை இந்தியாவின் சுப்மன் கில் வென்றார். சிறந்த வீரர் விருதை சுப்மன் கில் மூன்றாவது முறையாக வென்றுள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேசம் (101 ரன்), பாகிஸ்தானுக்கு (46) எதிராக விளாசிய இவர், இந்தியா பைனலுக்கு செல்ல கைகொடுத்தார்.

    ஏற்கனவே கடந்த 2023-ம் ஆண்டில் ஜனவரி மற்றும் செப்டம்பர் மாதங்களில் சுப்மன் கில் சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு ஆஸ்திரேலியாவின் அலானா கிங் வென்றார்.

    • பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் உள்ளார்.
    • பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    துபாய்:

    சமீபத்தில் 8 அணிகள் பங்கேற்ற 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்தது. இதன் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில், ஒருநாள் கிரிக்கெட்டில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. இன்று வெளியிட்டது.

    இதில், பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் தீட்சனா முதலிடத்தில் நீடிக்கிறார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சிறப்பாக செயல்பட்ட நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் 6 இடங்கள் முன்னேறி 2-வது இடம் பிடித்துள்ளார்.

    இந்தியாவின் குல்தீப் யாதவ் 3 இடங்கள் முன்னேறி 3-வது இடம் பிடித்துள்ளார்.

    இந்தப் பட்டியலில் இந்திய வீரரான ஜடேஜா 10-வது இடத்தில் உள்ளார்.

    பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் சுப்மன் கில் முதலிடத்திலும், ரோகித் சர்மா 3வது இடத்திலும், விராட் கோலி 5வது இடத்திலும், ஷ்ரேயாஸ் அய்யர் 8வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியாவிடம் இருந்து அதிக பணம் வருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
    • இந்தியா சொல்வதை எல்லாம் மற்ற நாடுகளும் ஐசிசியும் கேட்கக்கூடாது.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்திய அணி மூன்றாவது முறையாக கைப்பற்றியது. பாகிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரர்கள் மற்றும் தற்போது உள்ள வீரர்கள் இந்திய அணியை விமர்சனம் செய்து வந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான்களும் இந்திய அணியை கடுமையாக சாடி வருகின்றனர்.

    இந்தியா எங்கேயும் பயணம் செய்யாமல் ஒரே இடத்தில் விளையாடுவதால் தான் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வெற்றி பெற்றதாக வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் ஜாம்பவான் ஆன்டி ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்தியா கேட்கும் அனைத்து விஷயத்திற்கும் ஐசிசி தலையை ஆட்ட கூடாது. சில விஷயங்களுக்கு நோ என்று பதில் சொல்ல கற்றுக் கொள்ள வேண்டும். கடந்த டி20 உலக கோப்பையில் கூட இந்தியாவுக்கு சாதகமாக மைதானம் ஏற்கனவே முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது.

    மற்ற நாடுகளுக்கு எல்லாம் எங்கே விளையாடுகிறோம் என தெரியாத சூழலில் இந்தியாவுக்கு மட்டும் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது சாம்பியன்ஷிப் டிராபி தொடரிலும் இதே தான் நடந்திருக்கிறது. அது எப்படி ஒரு தொடரில் பங்கேற்கும் அணி எங்கேயும் பயணம் செய்யாமல் ஒரே மைதானத்தில் விளையாட அனுமதி அளிக்க முடியும்.

    இந்தியாவிடம் இருந்து அதிக பணம் வருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக இந்தியா சொல்வதை எல்லாம் மற்ற நாடுகளும் ஐசிசியும் கேட்கக்கூடாது. தற்போது நடைபெறுவது கிரிக்கெட்டே கிடையாது. இது மற்ற அணிகளுக்கு பாதகமாக அமைகிறது.

    கிரிக்கெட் என்பது இந்தியா மட்டும் விளையாடும் விளையாட்டு கிடையாது. என்னை பொறுத்தவரை ஐசிசி என்பது தற்போது இந்திய கிரிக்கெட் கவுன்சில் என மாறிவிட்டது. நாளை இந்தியா எங்களுக்கு நோபால் வைடு எடுத்து விடுங்கள் என்று கேட்டால் ஐசிசி உடனே நோ பாலையும் ஓயிடையும் ரத்து செய்து விடுவார்கள்.

    என்று ஆண்டி ராபர்ட்ஸ் கூறினார்.

    • விராட் கோலி 1 இடம் பின்தங்கி 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • முதல் இடத்தில் சுப்மன் கில் தொடர்கிறார்.

    ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையை இன்று ஐசிசி-யை வெளியிட்டுள்ளது. இதில் டாப் 10- இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். அதன்படி 4 இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2 இடங்கள் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். விராட் கோலி 1 இடம் பின் தங்கி 5-வது இடத்திலும் ஷ்ரேயாஸ் ஐயர் 8-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் சுப்மன் கில் தொடர்கிறார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற நியூசிலாந்து வீரர் 14 இடங்கள் முன்னேறி 14-வது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.
    • அது தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.

    சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவு பெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தியது.

    இறுதிப் போட்டிக்கு பின் நடைபெற்ற நிறைவு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்த ஒருவர் கூட மேடையில் இடம்பெறவில்லை என்ற விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வீரர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரின் இறுதிப் போட்டிக்கு பின் நடைபெற்ற நிறைவு விழாவில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளாமல் போனதற்கு "விதிமுறைகள்" தான் என்று தற்போது தெரியவந்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் அளிக்கப்பட்டுள்ளது. "எங்களுக்கு நடந்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது குறித்து ஐ.சி.சி.யிடம் புகார் தெரிவித்து இருக்கிறோம்," என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

    அதன்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய புகாருக்கு ஐ.சி.சி. தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ பதில் ஏதும் வழங்கப்பட மாட்டாது என்று தகவல் வெளியாகி உள்ளது. "பாக். கிரிக்கெட் வாரிய மான்டரியன்கள் பார்த்தால், ஐ.சி.சி. சி.இ.ஓ. ஜெஃப் அலார்டைஸ் கூட மேடையில் ஏறவில்லை. இதற்கான காரணம் விதிமுறைகள் தான்," என்று ஐ.சி.சி. சார்ந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

    • முதல் முறையாக ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு விராட் கோலி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்
    • சிறந்த வீராங்கனை விருதுக்காக ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை மாதம் தோறும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடிய சிறந்த வீரரை தேர்வு செய்து கடந்த ஆண்டு ஜனவரி முதல் ஐசிசி விருதை அறிவித்து வருகிறது.

    இந்நிலையில், அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீரர் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக 3 வீரர்களின் பெயரை ஐசிசி பரிந்துரைத்துள்ளது. இதில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி முதல் முறையாக ஆண்களுக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை கோலி வெளிப்படுத்தி வரும் நிலையில், தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர் மற்றும் ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ராசா ஆகியோருடன் விராட் கோலி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    இதேபோல், மகளிர் ஆசிய கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக பெண்களுக்கான மாதாந்திர ஐசிசி சிறந்த வீராங்கனை விருதுக்காக இந்தியாவின் ஜெமிமா ரோட்ரிக்ஸ், தீப்தி ஷர்மா ஆகியோர் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தானின் நிடா டாரும் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

    ரசிகர்கள் வாக்களிப்பதன் அடிப்படையில் வெற்றியாளரை ஐசிசி விரைவில் அறிவிக்க உள்ளது.

    • அக்டோபர் மாத சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணி வீரர் விராட் கோலிக்கு ஐசிசி அறிவித்தது.
    • சமீபகாலமாக சூப்பர் பார்முக்கு திரும்பியிருக்கும் விராட் கோலிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    துபாய்:

    அபாரமாக விளையாடும் வீரர்களை கவுவரவிக்கும் வகையில் மாதம் தோறும் சிறந்த வீரர்களுக்கான விருது வழங்கி ஐசிசி பெருமைபடுத்தி வருகிறது.

    அந்த வகையில் அக்டோபர் மாதத்தில் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருதை இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு ஐசிசி அறிவித்துள்ளது.

    சமீபகாலமாக சூப்பர் பார்முக்கு திரும்பியிருக்கும் விராட் கோலிக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    • அரையிறுதி போட்டிகளில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
    • நவம்பர் 10-ல் நடக்கவுள்ள அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

    லீக் சுற்றுகளின் முடிவில் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. இதையடுத்து இந்திய அணி நவம்பர் 10-ம் தேதி நடக்கவுள்ள அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. அதேபோல், முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், இந்திய அணி விளையாடும் அரையிறுதி போட்டியில் பணியாற்றவுள்ள நடுவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி குமார் தர்மசேனா மற்றும் பால் ரீபெல் ஆகியோர் கள நடுவர்களாகவும், கிறிஸ் கேவ்னி மூன்றாவது நடுவராகவும் செயல்பட உள்ளனர். நான்காவது நடுவராக ராட் டக்கர் செயல்படுவார். டேவிட் பூன் போட்டி நடுவராக (ரெப்ரீ) இருப்பார்.

    அதேபோல், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையிலான அரையிறுதியில் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் ரிச்சர்ட் இல்லிங்வொர்த் கள நடுவராகவும், ரிச்சர்ட் கெட்டில்பரோ மூன்றாவது நடுவராகவும் செயல்பட உள்ளனர். மைக்கேல் கோக் நான்காவது நடுவராகவும் மற்றும் கிறிஸ் பிராட் போட்டி நடுவராகவும் (ரெப்ரீ) நியமிக்கப்பட்டுள்ளனர்.

    • மழை குறுக்கிட்டால் ஓவர் குறைத்தாவது போட்டியை நடத்த முன்னுரிமை அளிக்கப்படும்.
    • தற்போது மேலும் சில மாற்றங்களை ஐ.சி.சி. வழங்கியுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் 8-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் இறுதிப்போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மெல்போர்னில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஏறக்குறைய 1 லட்சம் ரசிகர்கள் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய ஸ்டேடியங்களில் ஒன்றான மெல்போர்னில் அரங்கேறும் இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோத இருப்பது இது 3-வது முறையாகும். இதற்கு முன் 2009-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் லீக் சுற்றில், பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வி அடைந்தது. அதே சமயம் அந்த ஆண்டு உலக கோப்பையை பாகிஸ்தான்தான் வென்றது.

    அடுத்து 2010-ல் வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை தொடரின்போது இவ்விரு அணிகளும் 'சூப்பர் 8' சுற்றில் சந்தித்தன. இதில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. மேலும் அந்த ஆண்டு உலக கோப்பையை இங்கிலாந்து அணி வென்றது.

    இந்த நிலையில் இறுதிப்போட்டிக்கு வருண பகவான் வழிவிடுவாரா? என்பது பலத்த கேள்விக்குறியாகி இருக்கிறது. நாளை மெல்போர்னில் 15 முதல் 25 மில்லி மிட்டர் வரை மழை பெய்ய 95 சதவீதம் வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை மையம் அறிவித்துள்ளது.

    இறுதிப்போட்டிக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) வசதி உண்டு. அதாவது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மாற்று நாளாக அறிவிக்கப்பட்டுள்ள அடுத்த நாளில் (திங்கட்கிழமை) போட்டி நடத்தப்படும். ஆனால் இரண்டு நாட்களும் மழை காரணமாக ஆட்டம் நடத்த முடியாத நிலை உருவானால் இரு அணிகளும் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்படும்.

    லீக் சுற்றில் இரு அணிகளும் குறைந்தபட்சம் 5 ஓவர்கள் ஆடி முடித்து இருந்தால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வெற்றியாளர் முடிவு செய்யப்படுவது வழக்கமாகும். ஆனால் நாக்-அவுட் சுற்று போட்டியில் முடிவு தெரிய இரு அணிகளும் குறைந்தபட்சம் 10 ஓவர்கள் விளையாடி முடித்து இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

    மழை குறுக்கிட்டால் ஓவர் குறைத்தாவது போட்டியை நடத்த முன்னுரிமை அளிக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மழையால் ஓவர் குறைத்து ஆட்டம் தொடங்குவதாக அறிவித்த பிறகு, அந்த நாளில் ஆட்டம் நடக்கவில்லை என்றால் மாற்று நாளில் முழுமையாக 20 ஓவர் கொண்டதாக போட்டி நடத்தப்படும்.

    ஞாயிற்றுக்கிழமை ஆட்டம் தொடங்கி குறிப்பிட்ட நேரத்துக்குள் முடியாமல் போனால் மறுநாளில் அந்த போட்டி முந்தைய நாள் நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து தொடங்கி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது மேலும் சில மாற்றங்களை ஐ.சி.சி. வழங்கியுள்ளது. அதன் விவரம் பின்வருமாறு:-

    1. நாளை 30 நிமிடங்கள் கூடுதல் வழங்கப்படும். ஒருவேளை போட்டி அதற்குள் முடிவடையவில்லை என்றால், திங்கட்கிழமை நான்கு மணி நேரம் வழங்கப்படும்.

    2. போட்டி டை ஆனால் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்படும். மழையால் நடத்த முடியாமல் போனால் இரு அணிகளுக்கும் கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும்.

    3. ஐ.சி.சி. விதிப்படி குறைந்த அளவு ஓவர்கள் கூட வீச முடியவில்லை என்றால் போட்டி ரிசர்வ் டே-க்கு மாற்றப்படும். போட்டி உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கும்.

    4. 10 ஓவர்கள் கட்டாயம் நடத்தப்படும். இருந்தாலும் அதற்கும் குறைந்த ஓவர்களில் போட்டியை நடத்த முயற்சி செய்யப்படும்.

    5. இதற்கு முன் கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்பட்டது. தற்போது தேவைப்பட்டால் நான்கு மணி வழங்கப்படும்.

    • வருங்காலத்தில் டி20 கேப்டனாக என்னை பொருத்த வரை ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும்.
    • ஓய்வு பெற்ற யாரையாவது ஒருவரை தேர்வு செய்யுங்கள்.

    ஐசிசி டி20 உலக கோப்பையில் 2007-க்குப்பின் 2-வது கோப்பை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா ஃபைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது.

    குறிப்பாக 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவம் நிறைந்த கேப்டன் ரோகித் சர்மா இந்த தொடரில் பேட்டிங்கில் சொதப்பியத்துடன் கேப்டனாகவும் சுமாராகவே செயல்பட்டார். அதை விட கடந்த டி20 உலக கோப்பைக்குப் பின் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற அவருக்கு உறுதுணையாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ஜாம்பவான் ராகுல் டிராவிட் சோதனை முயற்சி என்ற பெயரில் கடந்த ஒரு வருடமாக செய்த தேவையற்ற மாற்றங்கள் ஏற்கனவே அனைவரையும் அதிருப்தியடைய வைத்தது.

    இந்நிலையில் சீனியர் வீரர்கள் மட்டுமல்லாது பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் மாற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வெளிப்படையாக கேட்டுக் கொண்டுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    கேப்டன் மட்டுமல்ல டி20 கிரிக்கெட்டை நன்கு புரிந்து கொண்டு சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை நீங்கள் பயிற்சியாளராக தேர்வு செய்ய வேண்டும். ராகுல் டிராவிட் மிகவும் மரியாதைக்குரியவர். என்னுடைய நண்பர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

    நாங்கள் இருவரும் இணைந்து நிறைய கிரிக்கெட் விளையாடியுள்ளோம். அவரிடம் கிரிக்கெட்டின் அபாரமான மூளை உள்ளது. ஆனால் ஒருவேளை அவரை நீங்கள் டி20 கிரிக்கெட்டின் பயிற்சிளராக நீக்காமல் போனால் குறைந்தபட்சம் அவருக்கு உதவி செய்வதற்காக சமீபத்தில் ஓய்வு பெற்ற ஒருவரை தேர்வு செய்யுங்கள்.

    அதிலும் ஆசிஷ் நெஹ்ரா போன்றவர் சிறந்த கிரிக்கெட் மூளையை கொண்டவர். குஜராத் டைட்டன்ஸ் அணியில் அவர் என்ன செய்தார் என்பதை பாருங்கள். விரைவில் நீங்கள் இளம் வீரர்களை அணிக்குள் கொண்டு வரும் திட்டத்தை வைத்திருப்பதால் அவர் இந்த நிலைமையில் சரியாக பொருந்தவர்.

    அவரில்லை என்றாலும் சமீபத்தில் ஓய்வு பெற்ற யாரையாவது ஒருவரை தேர்வு செய்யுங்கள். மேலும் வருங்காலத்தில் டி20 கேப்டனாக என்னை பொருத்த வரை ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும். அவரை விட சிறந்த தேர்வு யாரும் இருக்க முடியாது. டி20 அணியின் சிறந்த வீரரான அவரைப் போன்ற நிறைய பேர் உங்களுக்கு தேவைப்படுகிறது

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆதரவு அளித்த சக ஐசிசி இயக்குநர்களுக்கு கிரேக் பார்க்லே நன்றி தெரிவித்தார்
    • ஐசிசி நிகழ்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீட்டை ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழு கவனிக்கிறது.

    மெல்போர்ன்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக நியூசிலாந்தின் கிரேக் பார்க்லே ஒருமனதாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜிமாப்வேயின் தாவெங்வா முகுலானி போட்டியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து பார்க்லேவுக்கு ஐசிசி வாரியம் தனது முழு ஆதரவை தெரிவித்தது. இதன்மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு பார்க்லே தலைவர் பதவியில் இருப்பார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது பெருமையாக உள்ளது என்றும், தனக்கு ஆதரவு அளித்த சக ஐசிசி இயக்குநர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பார்க்லே கூறினார்.

    இதேபோல், இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளராக பொறுப்பு வகிக்கும் ஜெய் ஷா, ஐசிசி-யின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐசிசி நிகழ்வுகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் உறுப்பினர் நாடுகளுக்குப் பணத்தை விநியோகம் செய்வதை ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரக் குழு கவனிக்கிறது. இந்த குழுவின் தலைவராக உள்ள ரோஸ் மெக்கோலம் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில், அவருக்கு பின் தலைவராக ஜெய் ஷா பதவியேற்க உள்ளார்.

    ×