என் மலர்
நீங்கள் தேடியது "slug 97424"
- இந்தியாவில் சூர்ப்பனகைக்கு உள்ள ஒரே ஒரு கோவில் இது மட்டுமே.
- கர்ப்பகிரகத்தில் அம்மன் தலை மட்டும் இருக்கும்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள கூனவேலம்பட்டிபுதூரில் இருக்கிறது ஆயா கோவில் என்று பிரசித்தி பெற்ற அழியா இலங்கை அம்மன் திருக்கோவில். மூன்று வாயில்கள் கொண்ட கோவிலில், தினமும் வடக்கு, கிழக்கு திசை வாயில்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. திருவிழாக்காலங்களில் மட்டுமே மேற்கு திசை வாயில் திறக்கப்படுகிறது. வடக்கு வாசல் முன்பாக 25 அடி உயரத்திலும், வடக்கு வாசலுக்கு செல்லும் வழியில் 10 அடி உயரத்திலும் கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. கருவறை முன்மண்டபம் 16 தூண்களால் எழுப்பப்பட்டுள்ளது. முன் மண்டபத்தை ஒட்டியுள்ள ஊஞ்சலில் திருவிழாக்காலங்களில் அம்மனை ஊஞ்சலில் வைத்து, பாட்டுப்பாடி வழிபடுவது வழக்கமாக உள்ளது. ''இலங்கை அதிபதி ராவணனின் சகோதரியான சூர்ப்பனகை தான், அழியா இலங்கையம்மன் என்ற பெயரில் இங்கு அருள்பாலிக்கிறார். சீதையைத்தேடி அனுமன் இலங்கை சென்ற சமயம், வடக்கு வாசலில் காவலுக்கு நின்ற சூர்ப்பனகை தடுத்தாள்.
அனுமன் தன் வாலினால் அவளை கட்டி சுருட்டி வீச, புதர்மண்டிய வனப்பகுதியான இந்தப்பகுதியில் தலைகீழாக வந்து விழுந்தாள். அந்த சூர்ப்பனகையை அழியாஇலங்கை அம்மனாக மக்கள் வழிபடுகின்றனர்,'' என்பது தலவரலாறு. இந்தியாவில் சூர்ப்பனகைக்கு உள்ள ஒரே ஒரு கோவில் இது மட்டுமே. கர்ப்பகிரகத்தில் அம்மன் தலை மட்டும் இருக்கும். ராம, லட்சுமணர்களால் வெட்டப்பட்ட சூர்ப்பனகையின் தலை விழுந்த இடத்தில் கோவில் கட்டப்பட்டதால் உடல் இல்லாத தலை மட்டுமே உள்ளது. இலங்கை அழிவதற்கு முன்பே இங்கு வந்து சேர்ந்ததால், அழியா இலங்கை அம்மன் என்று அழைக்கப்படுகிறார் என்பது பெயர்க்காரணம். பிரசித்தி பெற்ற அத்தனூர் அம்மனின் தமக்கையாகவும் அழியா இலங்கை அம்மனை வழிபடுகின்றனர். இதனால் அத்தனூர் அம்மன், விநாயகர், முனியப்பன், பசு, நந்தி, நாக தெய்வங்களுக்கும் தனிச்சன்னதி உள்ளது.
மேலும் தனிக்கட்டிடம் ஒன்றில் அழியா இலங்கை அம்மனின் குழந்தைகள் என்று அழைக்கப்படும் 27 குழந்தைகளின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பங்களை 27 நட்சத்திரங்களாக பக்தர்கள் வழிபடுகின்றனர். மற்றொரு புறத்தில் நாகர் சிற்பங்கள் உள்ளன. இதற்கு அருகிலுள்ள பாம்பு புற்றில், பால் ஊற்றி முட்டைகளை உடைத்து வழிபடுகின்றனர். இப்படி வழிபடுவதால் பிரசவம் சிறப்பாக அமையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நோய் நொடிகள் தீரவும், தீய சக்திகள் அண்டாமல் இருக்கவும் பக்தர்கள் திரண்டு வந்து அழியா இலங்கை அம்மனை வழிபடுகின்றனர். வேண்டுதல்கள் நிறைவேறும் போது சிறிய பசு உருவங்களை மண்ணால் செய்து கோவிலில் வைத்துச் செல்கின்றனர். நாய், பாம்பு உருவங்களையும் சமர்ப்பிக்கின்றனர். அதோடு கோவிலை 3 முறை வலம் வந்து, அங்கபிரதட்சணம் செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
400 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில், ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் வெள்ளிக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நாளை இரவு தொடங்கி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருவிழா நடக்கிறது. இதில், வேண்டுதலை நிறைவேற்ற வெள்ளிக்கிழமை அதிகாலையில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர், ஆடுகளை பலியிட்டு விருந்து அளிப்பர்.
திருவிழாவை ஒட்டி, செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்கள் கூனவேலம்பட்டி, கூனவேலம்பட்டி புதூர், பாலப்பாளையம், தோனமேடு, ஆனைகட்டி பாளையம், குறுக்கபுரம் உள்ளிட்ட பகுதியில் உள்ள கிராமங்களில் பொங்கல் வைப்பவர்கள் குடும்பத்திலும், வெளியூர்களில் இருந்து பொங்கல் வைக்க வருபவர்களின் குடும்பத்திலும், சமையலுக்கு எண்ணெய் பயன்படுத்த மாட்டார்கள்.
வீட்டில் அரிசி சோறு சாப்பிட மாட்டார்கள். கேழ்வரகு, கம்பு, சோளம், திணை போன்றவற்றால் சமைக்கப்பட்ட உணவு வகைகளை தான் சாப்பிடுவர். மேலும் பொங்கல் வைக்கும் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி கொள்வர். கட்டிலில் படுத்து உறங்க மாட்டார்கள். திருவிழாவை முன்னிட்டு நேற்று முதல் கிராம மக்கள் அரிசி சாதம் சாப்பிடுவதை தவிர்த்து கம்பு, கேழ்வரகு போன்ற உணவு வகைகளை சாப்பிட தொடங்கி உள்ளனர்.
- பிற்பகல் 3 மணி அளவில் கோவில்கள் நடை சாத்தப்பட்டது.
- கிரகணம் முடிந்த பின் கோவிலை சுத்தம் செய்து பூஜைகள் நடைபெற்றது.
பல்லடம் :
பல்லடத்தில், சூரிய கிரகணத்தை முன்னிட்டு நேற்று பிற்பகல் 3 மணி அளவில் கோவில்கள் நடை சாத்தப்பட்டது. பின்னர் மாலை 6 மணிக்கு கிரகணம் முடிந்த பின் கோவிலை சுத்தம் செய்து பூஜைகள் நடைபெற்றது.
அந்த வகையில் பல்லடம் அருகே உள்ள சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டையில் சூரிய பகவானுக்கு சிறப்பு பூஜைகளும் 16 வகை திரவியங்களால் அபிஷேகமும் நடைபெற்றது. காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- முருகனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
- 6 நாட்களுக்கு தினசரி மாலை 6.30 மணியளவில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில், எல்.கே.சி நகர் புற்றுக்கண் ஆனந்த விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி விழா முதல் நாளான நேற்று முருகனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
நேற்று செவ்வாய் கிழமை முதல் தொடர்ந்து 6 நாட்களுக்கு தினசரி மாலை 6.30 மணியளவில் சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை அப்பகுதி பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
- இரவு 7 மணிக்கு பின் வழிபாடுகள் நடைபெறும்.
- கடைசி சூரிய கிரகணம் இன்று நடக்கிறது.
கோவை:
நடப்பாண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நடக்கிறது. இன்று மாலை 5.21 மணியில் இருந்து மாலை 6.23 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கிறது.சூரிய கிரகண நேரத்தில் கோவில்களின் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி கோவையில் உள்ள முக்கிய கோவில்களின் நடைகள் அடைக்கப்படுகிறது.
கோவை வடவள்ளி அருகே மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். இந்த கோவிலில் இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை மருதமலை முருகன் கோவில் நடை அடைக்கப்படுகிறது. அப்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
சூரிய கிரகணம் முடிந்தவுடன் நாளை காலை 6 மணி முதல் வழக்கம்போல் கோவில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பொள்ளாச்சி மாசாணி யம்மன் கோவிலுக்கு உள்ளூர் வெளியூர் பக்தர்கள் என தினமும் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து ெசல்கின்றனர்.
சூரிய கிரகணத்தையொட்டி ஆனைமலை மாசாணி யம்மன் கோவில் நடை இன்று பிற்பகல் 3 மணி முதல் அடைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதி கிடையாது. நாளை வழக்கம்போல காலை 6 மணி முதல் நடை திறந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஈச்சனாரி விநாயகர் கோவில் நடை இன்று மாலை 3 முதல் இரவு 7 மணி வரை அடைக்கப்படும். இந்த சமயத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இரவு 7 மணிக்கு பின் வழிபாடுகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.இதேபோல கோவையில் உள்ள பல கோவில்களில் இன்று மாலை நடை அடைக்கப்படுகிறது.
- ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்டு, 1,600 ஆண்டுகள் பழமையானது.
- கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கோவில் கருவறை வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
திருமழபாடி:
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருமழபாடியில் உள்ள வைத்தியநாத சுவாமி கோவில் ஆதித்த சோழன் காலத்தில் கட்டப்பட்டது. 1,600 ஆண்டுகள் பழமையான இந்த கோவில் குறித்த தகவல் அண்மையில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது. இக்கோவிலில் நடைபெறும் நந்திய பெருமான் திருக்கல்யாணம் மிகவும் பிரசித்தி பெற்றது.
இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கின் காரணமாக அதன் கரையில் உள்ள இந்த கோவிலுக்குள் ஊற்று நீர் புகுந்தது. இதைத் தொடர்ந்து சுவாமி கருவறை வரை தண்ணீர் சூழ்ந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் இதனால் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.
பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான பின்னர் இந்த கோவிலுக்கு தற்போது அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரும் நிலையில்,கோவிலின் உள்ளே தேங்கி உள்ள நீரை மோட்டார் மூலம் வெளியேற்ற வேண்டும் என்று அரசுக்கு, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கன்னியாகுமரி போலீசார் விவேகானந்தபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
- கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கோவில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் தலைமையில் போலீசார் நேற்று கன்னியாகுமரி விவேகானந்தபுரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அங்கு சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக் கிளில் வந்த வாலிபர் ஒருவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதைத்தொடர்ந்து போலீ சார் அவரை போலீஸ் நிலை யத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் சுசீந்திரம் அக்கரை பகுதியை சேர்ந்த திராஜ் (வயது 19) என்பதும், தற்போது தெற்கு குண்டலில் தங்கி இருந்து கிறிஸ்தவ ஆலயம் மற்றும் கோவில்களில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும் அவர் 7 வழக்குகளில் சம்பந் தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து திராஜை போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நாகர்கோவிலில் உள்ள ஜெயிலில் அடைத்தனர்.
- இத்தல பெருமாள், கண்திறந்து பக்தர்களை பார்க்கும் கோலத்தில் இருக்கிறார்.
- இத்தல இறைவன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஒரே கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாடகச்சேரி என்ற இடத்தில் 'கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள் கோவில்' அமைந்திருக்கிறது. இத்தல இறைவன் ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஒரே கருவறையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். இத்தல பெருமாள், கண்திறந்து பக்தர்களை பார்க்கும் கோலத்தில் இருக்கிறார். இதைக் காணும் பக்தர்களின் உள்ளம் மகிழ்வதால், இவருக்கு 'கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்' என்ற திருநாமம் ஏற்பட்டது.
இந்த ஆலயத்தில் உள்ள பெருமாளின் திருநாமம் வந்ததற்கான காரணம், ராமாயணத்துடன் தொடர்புடையதாக இருக்கிறது. மாய மான் மூலமாக ராமரை வனத்திற்குள் அனுப்பிவிட்டு, அவருக்குப் பின்னால் லட்சுமணனையும் போகச் செய்து, தனியாக இருந்த சீதையை கடத்தினான், ராவணன். அவனுடன் போராடிப்பார்த்தும் சீதையால் தப்பிக்க முடியவில்லை. தான் கடத்தப்படுவது பற்றி கணவருக்கு தெரிவிக்க நினைத்த சீதாதேவி, தன் உடலில் அணிந்திருந்த ஆபரணங்கள் ஒவ்வொன்றாக கழற்றி, வழிநெடுகிலும் வீசினாள். அப்படி அவள் வீசிய ஆபரணத்தில் 'பாடகம்' எனப்படும் காலில் அணியும் கொலுசும் ஒன்று.
மானைத் தேடிச் சென்ற ராமரும், லட்சுமணரும் குடிலுக்கு திரும்பியபோது, அங்கு சீதை இல்லை. அவளைத் தேடி வனத்திற்குள் புறப்பட்டனர். அப்போது ஆங்காங்கே சில ஆபரணங்கள் சிதறிக் கிடப்பதை ராமர் கண்டார். அவை யாருடையது என்ற கேட்டதற்கு, 'தெரியாது' என்ற பதிலை உதிர்த்தார் லட்சுமணன். ஒரு இடத்தில் பாடகம் கிடந்தது. அதைக் காட்டியபோது, "இது அண்ணியாருடையது. நான் அதை கண்டிருக்கிறேன்" என்று மகிழ்வுடன் லட்சுமணன் கூறினார்.
எவ்வளவோ ஆபரணங்களை காட்டியும், காலில் அணியும் ஆபரணத்தை லட்சுமணன் அடையாளம் கண்டு கொண்டதற்கு ஒரு காரணம் உண்டு. ஏனெனில் அண்ணன் மற்றும் அண்ணியாரின் முன்பாக தலை தாழ்த்தியே இருந்த காரணத்தால், உடலில் அணிந்த ஆபரணங்களை விட, காலில் அணிந்த கொலுசையே நினைவில் வைத்திருந்தார் லட்சுமணன். அதை அறிந்ததும் ராமபிரான் உள்ளம் மகிழ்ந்தார். இதனால் இறைவனுக்கு, 'கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாள்' என்றும், இவ்வூருக்கு 'பாடகப்பதி' என்றும் பெயர் வந்ததாக சொல்கிறார்கள். பாடகப்பதி என்பதே பின்னாளில் 'பாடகச்சேரி' ஆனதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த ஆலயம் சோழர்களால் கட்டப்பட்டிருக்கிறது. இத்தல பெருமாளை தரிசித்தால், மனதால் நினைத்தால் அவர்களின் மகிழ்ச்சி இருமடங்காகும் என்பது ஐதீகம். ஆலயத்தில் கருடாழ்வார், தும்பிக்கை ஆழ்வார், ராமானுஜர் ஆகியோரின் கல் திருமேனிகளும் உள்ளன.
இந்த ஆலயத்திலேயே சவுந்தர நாயகி உடனாய பசுபதீஸ்வரர் தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். பிள்ளையார், நந்தியுடன், இறைவனும் அம்பாளும் ஒரே கூரையின் கீழ் வீற்றிருப்பது மிகவும் விசேஷமாக போற்றப்படுகிறது. பார்வதியைத் தவிர வேறு எவருக்கும் தெரியாத வகையில், இத்தலம் உள்ள இடத்தில் சிவபெருமான் புற்றுமண் மூடியநிலையில் தவம் இயற்றி வந்தார். ஆனால் காமதேனு பசு, இதுபற்றி அறிந்து புற்றின் மீது பால் சுரக்கும் வேலையை தினமும் செய்து வந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், அம்பாளுக்கும், காமதேனுவுக்கும் காட்சி தந்து அருளினார். காமதேனு பால் சுரந்த காரணத்தால், இத்தல இறைவனுக்கு 'பசுபதீஸ்வரர்' என்ற பெயர் வந்தது.
கண்டுள்ளம் மகிழ்ந்த பெருமாளை வழிபாடு செய்து வந்தால், வசூல் ஆகாமல் இருந்து வந்த கடன் தொகை கைக்கு கிடைக்கும். குழந்தைப் பாக்கியம் இல்லாதவர்களுக்கு, அந்த பலனும் கிடைக்கப்பெறும்.
திருவாரூரில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தூரத்திலும் பாடகச்சேரி திருத்தலம் அமைந்திருக்கிறது.
பாடகச்சேரியில் வாழ்ந்த மகான்
பாடகச்சேரி திருத்தலம், மகான் ஸ்ரீராமலிங்க சுவாமிகள் வாழ்ந்த ஊர் ஆகும். இவர் மிகச்சிறந்த பைரவ பக்தர். கும்பகோணம் நாகேஸ்வரர் சுவாமி கோவிலுக்கு திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நிகழ்த்தியவர் என்ற பெரும் பேறுக்குரியவர் ராமலிங்க சுவாமிகள். இன்னும் பல கோவில்களின் திருப்பணியையும் இவர் செய்திருக்கிறார். பெரும் தெய்வீக சக்தியைக் கொண்ட இவர், பலரது வியாதிகளை குணமாக்கி இருக்கிறார். பாடகச்சேரியில் அவர் தங்கியிருந்த இடத்தில் அவருக்கு ஒரு மடம் கட்டப்பட்டுள்ளது. அதில் அவர் சமாதியான ஆடிப்பூரம் மற்றும் பிற பவுர்ணமி நாட்களில் அன்னதானம் செய்யப்படுகிறது. ராமலிங்க சுவாமிகளின் ஜீவசமாதி, திருவொற்றியூரில் பட்டினத்தார் சமாதிக்கு அருகில் இருக்கிறது.
- இத்தலம் உலகம்மன் கோவில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப் பெறுகிறது.
- இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை.
சுவாமி : அருள்மிகு காசிவிஸ்வநாதர்.
அம்பாள் : அருள்மிகு உலகம்மன்.
தீர்த்தம் : சகஸ்ரநாம தீர்த்தம், ஆனந்த தீர்த்தம், காசிக் கிணறு, வயிரவ தீர்த்தம், ஈசான தீர்த்தம், அன்னபூரணி தீர்த்தம், விசுவ தீர்த்தம்.
தலவிருட்சம் : செண்பக மரம்.
தென்காசி காசி விஸ்வநாதர் திருக்கோவில் தமிழ்நாடு தென்காசி மாவட்ட தலைநகரான தென்காசியில் அமைந்துள்ள சிவாயலமாகும். இத்தலம் உலகம்மன் கோவில் என்றும் தென்காசி பெரிய கோவில் என்றும் அழைக்கப் பெறுகிறது.
இத்தலத்தின் மூலவர் காசிவிசுவநாதர், தாயார் உலகம்மை. இத்தலத்தில் மாசி மகம், ஐப்பசி உத்திரம் ஆகியவை சிறப்பாக கொண்டாப்படும் விழாக்களாகும்
வடக்கில் உள்ள காசி திருத்தலத்திற்கு செல்ல முடியாதவர்கள், தெற்கில் உள்ள இந்த காசி விஸ்வநாதர் திருக்கோவிலுக்கு வந்து அருளைப் பெற வேண்டும் என்பதற்காக கட்டப்பட்டதால் தென்காசி என பெயர் பெற்றது.
தல வரலாறு :
தென்காசியை ஆண்ட பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் காசிக்குச் சென்று காசி விசுவநாதரை வழிபட எண்ணம் கொண்டார். மன்னனின் குலதெய்வமான முருகப்பெருமான் மன்னனுக்கு சக்தி வாய்ந்த அபூர்வ குளிகை ஒன்றை கொடுத்து வான் மார்க்கமாக காசி சென்று வழிபடச் செய்தார்.
இவ்வாறு காசிக்குச் சென்று தினமும் காசி விசுவநாதரை வழிபட இயலாததை எண்ணி, மன்னன் மனம் வருந்தினான். இறைவன் மன்னனது கனவில் தோன்றி நான் இங்கிருந்து அரைக்காத தூரத்தில்தான் இருக்கிறேன். நான் இருக்குமிடத்தில் நீ காண உனக்கு எறும்புகள் சாரைசாரையாக ஊர்ந்து சென்று வழிகாட்டும் என்று கூறி மறைந்தார்.
மறுநாள் எறும்பு சாரைசாரையாக செல்லுமிடத்தை மன்னன் அடையாளம் கண்டு அங்கு சிவலிங்கமும் நந்தியும் இருப்பதைக் கண்டு வணங்கினான். அதன் காரணம் தெற்கில் உள்ள சிவபக்தர்கள் வடக்கில் உள்ள காசிக்கு பாதயாத்திரை செல்லும்போது காசியை வந்தடையும் முன்னரே இறந்துவிடுகின்றனர்.
அதனால் அவர்கள் என் அருள் பெற தெற்கில் தென்காசி கோபுரத்தை கட்டு என்று ஆணையிட்டதே ஆகும். அதனை ஏற்று பராக்கிரமபாண்டிய மன்னனால் தன் முன்னோர் வழிபட்ட லிங்கத்துக்கு கட்டப்பட்டதுதான் தென்காசி கோபுரம். இந்த கோவிலின் பெயராலேயே இந்த ஊரும் தென்காசி என்று அழைக்கப்பெற்றது
அந்த இடத்தில் கோவில் கட்டி, கோபுரமும் கட்டி, தென்காசி நகரையும் நிர்மாணித்து தென்காசி கண்ட பாண்டியன் ஆனான். 1445-ல் பராக்கிரம பாண்டியனால் ராஜகோபுர திருப்பணி துவங்கப்பட்டு 6 ஆண்டுகளுக்குப் பின் பட்டத்துக்கு வந்த பராக்கிரம பாண்டியனின் தம்பி சடையவர்மன் குலசேகர பாண்டியனால் 1505-ல் ராஜகோபுரத் திருப்பணி முடிவடைந்தது என்று கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன.
தலச்சிறப்பு :
இந்திரன், மைநாகம், நாரதர், அகத்தியர், மிருகண்டு முனிவர், வாலி, கண்ம முனிவர் போன்றோர் வழிபட்ட தலம். நந்தியின் அவதார தலம் எனவும் போற்றப்படுகிறது. சிலாகித முனிவர் குழந்தை வரம் வேண்டிய பயன் பெற்றதாக தலவரலாறு குறிப்பிடுகிறது. திருக்கோவிலிலைக் கட்டிய பராக்கிரம பாண்டிய மன்னனின் உற்சவர் சிலை சுவாமி சந்நிதியில் உள்ளது. திருக்கோவில் விழாக்களுக்கு தலைவராக அம்மன்னன் மதிக்கப்பட்டுமன்னனுக்கு முதல் மரியாதை செய்யப்படுவது இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது.
சிறப்பு
இந்த இராஜ கோபுர வாசலில் பக்தர்களுக்கு ஆச்சரியப்படத் தக்க அதிசயம் காத்திருக்கிறது. பொதிகை மலையில் இருந்து ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று, கோபுர வாசலுக்குள் நுழையும் பக்தர்களுக்கு எதிராக மேற்கிலிருந்து கிழக்காக வீசி வரவேற்கிறது.
கோபுர வாசலை கடந்து உள்ளே போகும் போது, கோபுர வாசலில் இருந்து இறங்கும் இடத்தில், காற்று சுழன்று சுற்றி வீசுவது போல ஒரு அனுபவம் ஏற்படும். தொடர்ந்து உள்ளே செல்லும் போது, காற்று உங்கள் பின் புறமாக கோவிலுக்குள் உங்களை உள்ளே தள்ளுவது போல, கிழக்கில் இருந்து மேற்காக காற்று வீசும் அதிசயம் உணர்வீர்கள்.
எந்த தடுப்பும் இல்லாத ஒரே நேர்கோட்டில் காற்று இரண்டு எதிர் திசைகளில் வீசுவதை பக்தர்கள் அனுபவித்து மகிழலாம்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.
கோவில் முகவரி :
அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோவில்,
தென்காசி - 627 811,
திருநெல்வேலி மாவட்டம்.
- 27 நட்சத்திரங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் இக்கோவில் அமைந்திருக்கிறது.
- இக்கோவில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது.
- இங்கு சுயம்பு மூர்த்தியாக முருகபெருமான் அருள்பாலிக்கிறார்.
சுயம்பு முருகனை காண்பது அரிது. அப்படியொரு சுயம்பு வேலவனை வணங்கும் பாக்கியத்தை வில்வாரணி என்னும் ஊரில் நட்சத்திரகிரி, நட்சத்திரக் குன்று என்றெல்லாம் அழைக்கப்படும் நட்சத்திரக் கோயிலில் நாம் பெறலாம்.
வில்வாரணி நட்சத்திரகிரியில் வீற்றிருக்கும் வள்ளி தெய்வானை சமேத சிவசுப்ரமணிய சுவாமி கோவில் தனிச்சிறப்பு பெற்றது.
முருகப்பெருமானின் கருணையால் உருவான இத்திருத்தலத்து கருவறையில், நாகாபரணத்துடன் முருகரும், சுயம்பு வடிவான சிவபெருமானும் ஒருசேர காட்சிதரும் சிறப்பு இங்கு மட்டுமே காண இயலும்.
27 நட்சத்திரங்களும், சிவ சர்பமும் முருகப்பெருமானை வழிபடும் சிறப்பு, இந்த கோயிலை தவிர உலகில் வேறெங்கும் இல்லை.
வள்ளி தெய்வானையுடன் தம்பதி சமேதரராக முருகப்பெருமான் அமர்ந்து, நித்ய சிவபூஜை செய்யும் தனிப்பெருமை மிக்க கோவில் எனும் பெருமையும் இத்திருதலத்துக்கு உண்டு.
27 நட்சத்திரங்களுக்கும் பரிகார ஸ்தலமாகவும் இக்கோவில் அமைந்திருக்கிறது. எனவேதான், நட்சத்திர கோவில் எனும் சிறப்புடன் பக்தர்கள் அழைக்கின்றனர்.
இக்கோவில் சுமார் 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. காஞ்சிபுராணம், அருணாச்சல புராணம் வாயிலாக அறியும் இக்கோவில் தொடர்பான ஆன்மிக வரலாறு மிகவும் சுவையானது. வேல் விளையாட்டில் வல்லவனாம் வேலவன், வாழைப்பந்தலில் இருந்து எய்த அம்பு, பருவதமலை மீது பாய்ந்தது. அப்போது அங்கு தவமிருந்த சப்த ரிஷிகளின் தலைகள் துண்டிக்கப்பட்டன.
அதனால் பெருக்கெடுத்த உதிரம் ஆறாக பெருக்கெடு த்து மலையில் இருந்து வழிந்தோடியது. உதிரம் பெருக்கெடுத்து ஆறாக பாய்ந்ததால் இன்றைய செய்யாற்றுக்கு சிவப்பு நதி, செய்நதி எனும் பெயரும் உண்டு. சப்த ரிஷிகளின் தலைகளை கொய்ததால் முருகப்பெருமானுக்கு பிரம்ம கத்திதோஷம் பிடித்தது.
எனவே செய்நதியின் வடகரையில் ஏழு இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடக்கரையில் ஏழு இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து, ஒரு மண்டலம் பூஜித்தால் முருகப்பெருமானுக்கு தோஷம் நிவர்த்தியாகும் என பார்வதிதேவி உபதேசித்தார்.
அதேபோல் முருகப்பெருமான், செய்நதியின் வலதுகரையில் வில்வாரணி மலையில் குடிகொண்டு காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மாதிமங்கலம், எலத்தூர், குருவிமலை, பூண்டி ஆகிய இடங்களில் கரைகண்டீஸ்வரரையும், இடதுகரையில் தேவகிரிமலையில் குடிகொண்டு வாசுதேவன்பட்டு, ஓரந்தவாடி, நார்த்தாம்பூண்டி, நெல்லிமேடு, மோட்டுப்பாளையம், பழங்கோவில், மண்டகொளத்தூர் ஆகிய இடங்களில் கைலாசநாதரையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
இன்றளவும் இந்த 14 இடங்களிலும் முருகன் வழிபட்ட சிவாலயங்கள் அமைந்திருக்கின்றன. முருகப்பெருமான் வழிபட்ட இந்த 14 சிவாலயங்களை யும் இரண்டு சிவாச்சாரியார்கள் வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இவ்விருவரும் ஆடிக்கிருத்திகை நாளில் திருத்தணி சென்று முருகப்பெருமானை வழிபடுவது வழக்கம்.
ஒரு வருடம் ஆடிக்கிருத்திகைக்கு திருத்தணிக்கு செல்ல இயலவில்லை. அதனால், மனம் வருந்தினர். இருவரின் கனவிலும் தோன்றிய முருகன், திருத்தணிக்கு செல்லவில்லை என வருந்தவேண்டாம், நான் நட்சத்திரகிரி எனும் குன்றின் நடுமலையில் சுயம்பு ரூபமாக சிவசுப்ரமணிய ஐக்கியத்தில் குடியிருக்கிறேன். சூரியன், சந்திரன் உள்ளவரை 27 நட்சத்திரங்களும், நாகமும் நித்தமும் என்னை பூஜிக்கின்றன.
எனவே, நட்சத்திரகிரி மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் சந்திரபுஷ்கரணி சுனையில் இருந்து நாகம் உங்களுக்கு வழிகாட்ட என்னை வந்து சேருங்கள் என இருவர் கனவிலும் முருகர் அருள்புரிந்தார்.
திடுக்கிட்டு விழித்த சிவாச்சாரியார்கள், அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் புறப்பட்டு, நட்சத்திரகிரியில் நாகம் வழிகாட்டிய இடத்துக்கு சென்றனர். அப்போது, சப்பாத்திகள்ளி புதரில் சுயம்பு வடிவாக முருகப்பெருமான் காட்சியளித்தார்.
முருகனே அருள்காட்சியளித்த நட்சத்திரகிரி கோயிலில், சித்திரை பிறப்பு பால்குட அபிஷேகம், ஆடிக்கிருத்திகை பெருவிழா, கந்தசஷ்டி விழா, கார்த்திகை தீபம், தைக்கிருத்திகை, பங்குனி உத்திர பிரம்மோற்சவம், மாதாந்திர கிருத்திகை விஷேசமானவை.
கிருத்திகைதோறும் நட்சத்திரகிரியை வலம் வருவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.
தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.
இவ்வாலயத்தில் கிருத்திகைகளில் முருகனுக்கு தேன் அபிஷேகம் செய்து, சம்பா சாதம் படைத்து, செவ்வரளி மாலை சாற்றி, அன்னதானம் செய்து வழிபடுபவர்க ளின் நாகதோஷம் புத்திர தோஷம், திருமண தோஷங்கள் அகலும்; புதுவாழ்வு பிறக்கும்.
பாலபிஷேகம் செய்து, சிவந்த விருட்சி புஷ்பங்களால் அர்ச்சித்து, மாதுளைக் கனி படைத்து வழிபடுவோரின் நட்சத்திர தோஷங்கள் யாவும் விலகும்; நல்லருள் கிட்டும் என்பது நம்பிக்கை!
ஆலய அமைவிடம் :
திருவண்ணாமலையில் இருந்து கலசப்பாக்கம் வழியாக சென்றால் 34 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. இதேபோல் வேலூரில் இருந்து போளூரில் இறங்கி அங்கிருந்து 16 கி.மீ. தூரத்தில் கோவில் உள்ளது. பஸ், ஆட்டோ வசதி அதிகளவு உள்ளது
- இந்த ஆலயத்தில், சுமார் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த ‘கோமடி’ சங்கு உள்ளது.
- மூலவரான சிவபெருமான், மணல் லிங்கமாக காட்சி அளிக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டம், அச்சரப்பாக்கம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது, பெரும்பேர்கண்டிகை என்ற ஊர். இங்கு தடுத்தாட்கொண்ட நாயகி உடனாய தான்தோன்றீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. இத்தல மூலவரான சிவபெருமான், மணல் லிங்கமாக சுயம்புவாக தோன்றி அகத்திய முனிவருக்கு காட்சி கொடுத்ததால் 'தான்தோன்றீஸ்வரர்' என்று பக்தர்களால் வணங்கப்படுகிறார்.
கயிலையில் சிவ-பார்வதி திருமணம் நடக்க இருந்தது. திருமணத்தைக் காண்பதற்காக தேவர்கள், முனிவர்கள் உள்ளிட்ட அனைவரும் கயிலையில் குவிந்தனர். இதனால் வட பகுதி தாழ்ந்தும், தென்பகுதி உயர்ந்தும் காணப்பட்டது. இதனை சமன் செய்வதற்காக, தென்பகுதியை நோக்கிச் செல்லும்படி அகத்தியரிடம் கூறினார், சிவபெருமான். 'நான் வேண்டும் இடங்களில் எல்லாம் தங்களின் திருமணக் கோலத்தை காட்டியருள வேண்டும்' என்ற நிபந்தனையுடன் தென்பகுதி நோக்கிப் புறப்பட்டார், அகத்தியர்.
அதன் ஒரு பகுதியாக அவர் பெரும்பேர் கண்டிகை வந்தார். அங்கு தற்போது தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள சஞ்சீவிமலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபடச் சென்றார். இதனை அறிந்த முருகப்பெருமான், வள்ளி-தெய்வானையுடன் தெற்கு முகமாக திரும்பி அகத்தியருக்கு காட்சியளித்தார். இந்த ஆலயத்தில் உள்ள முருகன் சன்னிதி எதிரில் சக்திவேல் மற்றும் பிரம்மாவின் வாகனமான அன்னப் பறவை காணப்படுகிறது. கோவில் தல விருட்சமாக ருத்ராட்ச மரம் உள்ளது. எனவே அகத்தியர், இத்தல முருகனை வணங்கிவிட்டு, பெரும்பேர்கண்டிகை ஏரிக்கரையின் கீழ் உள்ள தான்தோன்றீஸ்வரரை வழிபட்டார். பின்னர் அந்த ஆலயத்தின் அருகில் உள்ள ஆத்திமரத்தின் அடியில் அமர்ந்து, சிவ-பார்வதி திருக்கல்யாணக் காட்சியைக் காண்பதற்காக தவம் இருந்தார்.
அந்த நேரத்தில் சிவபெருமான், திரிபுரத்தை எரிப்பதற்காக தேரில் சென்று கொண்டிருந்தார். விநாயகரை வழிபடாததால் அவரது தேர் அச்சு முறிந்து போனது. தேர் அச்சு முறிந்த இடமே தற்போது 'அச்சரப்பாக்கம்' என்று அழைக்கப்படுகிறது. அதன்பின்னர் விநாயகரை வழிபட்டு, சிவபெருமான் திரிபுரத்தை எரித்தார் என்பது வரலாறு. அதற்கு முன்பாக தேர் அச்சு முறிந்ததும், அந்தப் பகுதியில் தவம் செய்து கொண்டிருந்த அகத்தியரைக் காண்பதற்காக, சிவபெருமானை பெரும்பேர்கண்டிகைக்கு அழைத்துச் சென்றார், பார்வதிதேவி. இதையறிந்த முருகப்பெருமானும், அகத்தியரும் சிவபெருமானையும் பார்வதியையும் வரவேற்பதற்காக வந்தனர். பின்னர் பெரும்பேர்கண்டிகையில் அகத்தியருக்கு, சிவனும் பார்வதியும் திருக்கல்யாண கோலத்தை காட்டியருளினர்.
தேர் அச்சு முறிந்ததும், சிவபெருமானை தடுத்தாட்கொண்டு பெரும்பேர்கண்டிகைக்கு அழைத்து வந்ததால், இத்தல அம்மன் 'தடுத்தாட்கொண்ட நாயகி' என்று அழைக்கப்படுகிறார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் அச்சரப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் முடிந்ததும், சித்திரை மாத சுவாதி நட்சத்திரத்தில் அத்தல சிவபெருமானும், பார்வதியும், பெரும்பேர்கண்டிகையில் எழுந்தருளி அகத்தியருக்கு திருமணக் கோலத்தை காட்டி அருளும் வைபவம் வெகுச் சிறப்பாக நடந்தேறுகிறது.
இந்த தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில், சுமார் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த 'கோமடி' (பசுவின் பால் மடி) சங்கு உள்ளது. இந்த சங்கினைக் கொண்டு சுயம்புவாக உள்ள மணல் லிங்கத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. மணல் லிங்கம் என்பதால் நிரந்தரமாக செப்புக் கவசம் பொருத்தப்பட்டிருப்பதாக கருதப்படுகிறது. சுவாமிக்கு, கோமடி சங்கினால் அபிஷேகம் செய்து வழிபட்டால், தேர்தல், தேர்வு, வாழ்க்கை போன்றவற்றில் வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இந்த ஆலயத்தில் சண்டன், முண்டன் என்ற அசுரர்களை வதம் செய்த சாமுண்டீஸ்வரி அம்மன், ரணபத்ரகாளியாக கோவில் கொண்டிருக்கிறார். தவிர கனகதுர்க்கை அம்மன், மகா கணபதி, அன்னபூரணி, அகத்தியலிங்கம், அகத்திய முனிவர், காலபைரவர், நாகர், நவக்கிரகங்கள் உள்ளிட்ட பல சன்னிதிகளும் இங்கு உள்ளன. இதில் கனகதுர்க்கை அம்மன் சிலை, பல்லவ மன்னர்கள் காலத்து சிற்பக் கலை அம்சத்துடன் காணப்படுகிறது. இந்த ஆலயத்திற்கு திருப்பணி செய்த பல்லவர்கள், சோழர்கள் போன்ற ஆட்சியாளர்கள் இத்தல தான்தோன்றீஸ்வரரையும், கனகதுர்க்கை அம்மனையும் வழிபட்ட பிறகே போருக்கு சென்றதாகவும், அதனால் போரில் வெற்றியைக் குவித்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன.
பில்லி, சூனியம், ஏவல், மாந்திரீகம் போன்ற தீயசக்திகளின் பிடியில் சிக்கித் தவிப்பவர்கள், இங்குள்ள ரணபத்ரகாளி அம்மன் சன்னிதியில், பூசணிக்காயில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். இதனால் தீவினைகள் நீங்குவதாக நம்பிக்கை நிலவுகிறது. கனக துர்க்கை அம்மனை வழிபட்டால், திருமணத் தடை நீங்கி, விரைவில் திருமணம் நடந்தேறும். இத்தல இறைவனான தான்தோன்றீஸ்வரர், பக்தர்களின் சோதனைகளை நீக்கி, சகல வெற்றிகளையும், நன்மைகளையும் அளிப்பதோடு, குடும்ப மேன்மையையும், வம்ச விருத்தியையும் தரும் சிறப்புமிக்கவராக திகழ்கிறார்.
இந்தக் கோவிலில் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, கோவிலின் பரம்பரை தர்மகத்தா பகவத்சேவாமணி ஆர்.ரவிச்சந்திர சிவாச்சாரியார், ஆர்.சங்கர்சிவாச்சாரியார் ஆகியோர் தலைமையில் கடந்த 2007-ம் ஆண்டு, கோவில் புனரமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த ஆகஸ்டு மாதம் இரண்டாவது முறையாக மீண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது சுமார் 600 வருடங்களுக்குப் பிறகு முதல்முறையாக விநாயகர், தான்தோன்றீஸ்வரர், தடுத்தாட்கொண்டநாயகி, வள்ளி-தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளும் தனித்தனி வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலித்தனர்.
இங்கு மலை மீதுள்ள முருகன் கோவிலில் வருகிற 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 6 நாட்களுக்கு, கந்தசஷ்டி பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. 30-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு சூரசம்ஹார பெருவிழா மலையடிவாரத்தில் நடைபெறும். மறுநாள் இரவு 7 மணிக்கு முருகப்பெருமான், வள்ளி- தெய்வானை திருக்கல்யாணம் நடந்தேறும். நவம்பர் 7-ந் தேதி (திங்கட்கிழமை) ஐப்பசி மாத பவுர்ணமி அன்று மாலை, தான்தோன்றீஸ்வரருக்கு கோமடி சங்கினால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெறும்.
ஆற்காடு எம்.ஆர்.முரளீதரன், அச்சரப்பாக்கம்.
- 24-ந்தேதி நடக்கிறது
- கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் இயங்குகிறது
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.
இந்தக் கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த கோவில் கட்டப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் திருப்பதியில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் வரும் நரக சதுர்த்தி அன்று தீபாவளி ஆஸ்தானத்தை தேவஸ்தானம் நடத்தி வருவது போல் கன்னியாகுமரியில் உள்ள வெங்கடாஜலபதி கோவிலிலும் தீபாவளி ஆஸ்தானம் நிகழ்ச்சி வருகிற 24-ந்தேதி நடக்கிறது.
இதையொட்டி அன்று காலையில் சுப்ரபாதம் நிகழ்ச்சியும் அதைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடக்கிறது. பின்னர் சுவாமிக்கு புதிய பட்டாடை அணிவித்து பல வண்ண மலர்களால் அலங்க ரித்து பூலங்கி சேவை நடக்கிறது. அதைத்தொ டர்ந்து அலங்கார தீபாராத னையும் அர்ச்சகர்கள் பாராயணம் பாடும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
மாலையில் தோமாலை சேவையும், இரவு ஏகாந்த சேவையும் நடக்கிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோவில் ஆய்வாளர் சாய் கிருஷ்ணா தலைமையில் பக்தர்கள் செய்து வருகிறார்கள்.
- தில்லைக்காளி உக்கிரத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் உள்ளாள்.
- தில்லைகாளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மிகவும் உகந்தது.
சுவாமி : அருள்மிகு தில்லைகாளியம்மன்.
மூர்த்தி : பிரம்ம சாமுண்டீஸ்வரி, விநாயகர், வீணை வித்யாம்பிகை, கடம்பவன தக்ஷண ரூபிணி.
தலச்சிறப்பு :
ஒவ்வொரு ஆண்டும் மாசி பௌர்ணமி நாளன்று காலை 6.00 மணிக்கு சந்திரனும் பௌர்ணமியின் இரண்டு நாட்களுக்கு பிறகு மாலை 6.00 மணி முதல் 6.15 க்குள் சூரியனும் அம்பிகையை வழிபட்டு தன் பொன்னொளி நிகழச்செய்யும் அற்புதம் காணவேண்டிய காட்சி ஆகும்.
தில்லைக்காளி உக்கிரத்துடன் கிழக்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் உள்ளாள். தில்லைகாளிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் மிகவும் உகந்தது. குங்குமத்தால் காப்பிட்டு உடல் முழுவதும் மறைக்கப்படுகிறது. தம்மை வழிப்படுவோர்க்கு சாந்தமே கொண்டிருப்பதாக வெள்ளை வஸ்திரம் சூடி குறிப்பில் உணர்த்துகின்றாள். பெண்களுக்கு விதவைக் கோலம் ஏற்படாதிருக்க தாமே விதவையாக வெள்ளை வஸ்திரம் தரித்து சுமங்கலிகளுக்கு அருள் செய்கிறாள் என்றும் கூறுவர். தில்லைகாளியம்மன் மகம் நட்சத்திரகாரர்களுக்கு அதிதேவதை ஆவாள், எனவே மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட்டால் மிகவும் சிறப்பு.
பிரம்ம சாமுண்டீஸ்வரிக்கு "தில்லையம்மன்" என்ற பெயரும் உண்டு. இவள் பிரம்மனை போல் நான்குமுகத்துடன் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி சாந்த சொரூபிணியாக அருளுகிறாள். பிரகாரத்தில், நின்ற கோலத்தில் "வீணை வித்யாம்பிகை" என்ற பெயரில் சரஸ்வதியும், தெட்சிணாமூர்த்தி பெண் உருவத்தில் "கடம்பவன தக்ஷண ரூபிணி" என்ற பெயரிலும் அருளுகிறார்கள். தெட்சிணாமூர்த்தியை பெண் வடிவில் இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.
சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற தில்லைக்காளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வைகாசிப் திருவிழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் வைகாசிப் திருவிழா காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கும். விழாவையொட்டி, அம்மனுக்கு தினந்தோறும் காலை, மாலை நல்லெண்ணை, சந்தனம், குங்குமம், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.
விழாவை முன்னிட்டு தில்லைகாளியம்மன் தினந்தோறும் இரவு அலங்கரிங்கப்பட்ட சூரியபிரபை, சந்திரபிரபை, பூதகி வாகனத்தில் வீதியுலா, தெருவடைச்சான் உற்சவம், காமதேனு வாகனம், கைலாய, ரிஷப வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெறும்.
விழாவில் முக்கியமானதாக 9–வது திருநாளான தேரோட்ட திருவிழா நடைபெறும். தில்லைக்காளியம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். திருத்தேரில் எழுந்தரித்த தில்லைக்காளியம்மனுக்கு மகாதீபாராதனை செய்யப்பட்டு திரளான பக்தர்கள் அம்மன் திருத்தேரை வடம்பிடித்து இழுப்பார்கள். தேர் 4 ரத வீதிகள் வழியாக வரும்பொழுது திரளான பக்தர்கள் தங்களது குடும்பத்துடன் அம்மனை தரிசனம் செய்கின்றனர். பிறகு தில்லையம்மனுக்கு மண்டகப்படி தீபாராதனை நடைபெற்று கோவில் சன்னதியை தில்லைக்காளியம்மன் சென்றடைவாள்.
இதையடுத்து, சிவப்பிரியை குளத்தில் தீர்த்தவாரி உற்சவம், காப்பு களைதல், மஞ்சள் நீராட்டு விழா, முத்துப்பல்லாக்கு உற்சவமும், தெப்ப உற்சவம் மற்றும் திருஊஞ்சல் நிகழ்ச்சியுடன் வைகாசிப் திருவிழா நிறைவடைகிறது.
தலவரலாறு : சிவமும் சக்தியும் ஒன்றே என்று சிவபெருமான் பலமுறை எடுத்துக்கூறியும் சக்தியான அம்பிகை சமாதானம் அடையவில்லை. சக்தி நான் தான் சக்திமிக்கவள் என சிவனுடன் விவாதம் செய்தாள். சிவனும் சக்தியும் ஒன்று என்பதை உணர்த்த சினம் கொண்ட சிவன், "நீ எம்மை பிரிந்து காளியாக மாறுவாய்" என்று சபித்து விடுகிறார். இதை சற்றும் எதிர்பார்க்காத பார்வதி, தன் தவறுக்கு மனம் வருந்தி சிவனிடம் சாப விமோசனம் கேட்டாள். "கோபத்தில் தந்த சாபமாக இருந்தாலும், தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் அசுரர்களால் ஆபத்து வர இருக்கிறது. எனவே அவர்களை காப்பாற்ற வேண்டிய நேரம் வரும். அதுவரை நீ உக்கிரத்தின் உச்சக்கட்டமாகத்தான் இருக்க வேண்டும் என்று சிவன் கூறினார்.
ஈசன் கூறியது போல் அசுரர்களால் தேவர்களுக்கும் முனிவர்களுக்கும் பல இன்னல்கள் எற்பட ஆரம்பித்தது. எனவே காளிதேவியிடம் தங்களை காப்பாற்ற வேண்டினார்கள். காளிதேவி அசுரர்களை வதம் செய்து முனிவர்களையும், தேவர்களையும் காத்தாள்.
மீண்டும் சிவனிடம் சேர வேண்டும் என்ற விருப்பத்தால் காளிதேவி, சிவனை நினைத்து தில்லையில் தவம் இருந்தாள். பல வருடங்களாக தில்லையில் தவம் இருந்தும் சிவன் காட்சி தராததால், அமைதியாகவும் பொறுமையாகவும் தவம் செய்த காளி, மீண்டும் கடும் கோபம் கொண்டாள். இதனால் தில்லைவாழ் மக்கள் அனைவரும் பாதிப்பு அடைந்தார்கள். அத்துடன் சிவனை நடனம் ஆட போட்டிக்கும் அழைத்தாள்.
ஆடல்நாயகனுடன் போட்டியா? என்று தேவர்களும் முனிவர்களும் மனம் பதறினார்கள். போட்டியில் பந்தயமும் வைத்தாள் காளி. "நான் தோற்றால் தில்லையின் எல்லைக்கே சென்று விடுகிறேன்" என்று கூறினாள். சிவபெருமானுக்கும் காளிக்கும் நடன போட்டி உச்சகட்டத்தை அடைந்தது. இவர்களுடன் பூமியும் சேர்ந்து ஆட அரம்பித்தது. யார் வெற்றி பெறுவார்கள் என்று நிர்ணயிக்க முடியாதபடி இரண்டு பேரும் சரி சமமாக ஆடினார்கள்.
சிவன் தன் காதில் அணிந்திருந்த குண்டலத்தை கீழே விழச் செய்து, ஊர்த்வ தாண்டவம் ஆடி அந்த குண்டலத்தை தன் கால் விரலாலேயே எடுத்து காதில் மாட்டினார். ஈசன் செய்தது போல் பெண்ணான காளி தேவி பல ஆயிரகணக்கான முனிவர்களும் தேவர்களும் சுற்றி இருக்கும் போது எப்படி ஊர்த்வ தாண்டவம் ஆட முடியும்? என்ற வெட்கத்தால் தோல்வியடைந்ததாக ஒப்புக் கொண்டாள்.
தந்திரமாக சிவன் வெற்றி பெற்றதை காளியால் தாங்க முடியவில்லை. "தந்திரமாக ஜெயித்ததை எல்லாம் வெற்றி என்று ஏற்க முடியாது" என்று கூறி முன்பை விட அதிகம் சினம் கொண்டாள். அவள் கோப சக்தியாக, தில்லை எல்லையில் "தில்லைக்காளி" என்ற பெயரில் அமர்ந்தாள். இவளை "எல்லைக்காளி" என்றும் சொல்வர். "நானும் இதே தில்லையில் உன் அருகிலேயே இருக்கிறேன். என்னை வணங்குபவர்கள் உன்னையும் வணங்குவார்கள். இதனால் இன்னும் நீ பெருமையடைவாய்" என்று எவ்வளவோ சிவன் சமாதானம் செய்தும் காளி தேவியின் கோபம் தணியவில்லை. சிவன் கூறியது போல் இன்றும் சிதம்பரத்தில் அருள் செய்யும் நடராஜரைத் தரிசிப்பவர்கள், ஊரின் எல்லையில் தில்லைக்காளியையும் வணங்குகிறார்கள்.
பிரம்மா தில்லைக்காளியின் கோபத்தை போக்க "தில்லைக்காளியை வேதநாயகி" எனப் புகழ்ந்துபாடி, நான்கு வேதங்களாகிய ரிக் வேதம், யசுர் வேதம், சாம வேதம், அதர்வண வேதம் என குறிக்கும் வகையில், நான்கு முகங்களுடன் அருளுமாறு வேண்டினார். அதன்படி காளி, "பிரம்ம சாமுண்டீஸ்வரி" என்ற பெயரில் பிரம்மனைப்போல் நான்கு முகத்துடன் காட்சி தந்து தில்லையிலேயே அமர்ந்தாள் காளி. அன்னை மகாகாளியை தில்லையம்மன் என்றே மக்கள் அழைக்கிறார்கள். பலருக்கு குல தெய்வமாகவும் தில்லைகாளி திகழ்கிறாள். தில்லைகாளியை வணங்கினால் விரோதிகளை அழித்து, கல்வி, செல்வம், வீரம் போன்றவை கிடைக்க அருள்புரிவாள்.
நடைதிறப்பு : காலை 6.00 மணி முதல்பகல் 12.00 மணிவரை / மாலை 4.30 மணிமுதல்இரவு 8.30 மணிவரை
கோவில் முகவரி :
அருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோவில்,
சிதம்பரம் - 608 001,
கடலூர் மாவட்டம்.