தண்டியடிகள் நாயனார்
தண்டியடிகள் நாயனார் | |
---|---|
பெயர்: | தண்டியடிகள் நாயனார் |
குலம்: | செங்குந்தர் [1][2][3] |
பூசை நாள்: | பங்குனி சதயம் |
அவதாரத் தலம்: | ஆரூர் |
முக்தித் தலம்: | ஆரூர் |
“நாட்டமிகு தண்டிக்கும் அடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை
தண்டியடிகள் நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[4]. இவர் திருவாரூரில் பிறந்த பெரும் பேறுடையவர்[5]. இவர் ‘இறைவன் திருவடிகளை மனத்துட் கொண்டு நோக்கும் அகநோக்கு ஒன்றே போதும்’ என்று கருத்தினை வலியுறுத்துவது போன்று, பிறக்கும்போதே பார்வையை இழந்திருந்தார். தண்டியடிகள் திருவாரூர்ப் பூங்கோயிலில் தேவாசிரியமண்டபத்தினுள் அடியார்களை வணங்கிவிட்டு, இறைவன் முன் வலம் வந்து, காதலாகி, நமச்சிவாய அன்புடையவராய்த் திருத்தொண்டுகள் பல செய்து வந்தார்.
ஆரூர்த் திருக்கோயிலின் மேற்புறத்திலுள்ள திருக்குளம் பக்கம் எங்கும் சமணர்களின் பாழிகள் பெருகிக் குளத்தின் இடம் வரவரக் குறைவடைந்தது. இதனை அறிந்த தண்டியடிகள், திருக்குளத்தை முன்போற் பெருகத்தோண்ட எண்ணினார். குளத்தில் இறங்கி மண்ணை வெட்டியெடுத்துக் கயிற்றைப் பற்றி ஏறிக் கரையிலே போடுவாராயினார். இவ்வாறு நாள்தோறும் தண்டியடிகள் குளத்தினைத் தோண்டக் கண்டு சமணர்கள் பொறாது அவரை அடைந்து ‘மண்ணைத்தோண்டினால் சிற்றுயிர்கள் இறந்துவிடும், வருத்தல் வேண்டாம்’ என்றனர். அதுகேட்ட தண்டியடிகள் ‘திருவில்லாதவர்களே, இந்தச் சிவதொண்டின் பெருமை உங்களுக்குத் தெரியவருமோ’ என்றனர். அமணர்கள் அவரை நோக்கி, ‘சிந்தித்து இந்த அறத்தினைக் கேளாத நீ செவியும் இழந்தனையோ’ என்று இகழ்ந்துரைத்தனர். அதுகேட்ட தண்டியடிகள் ‘மந்த உணர்வும், விழிக்குருடும், கேளாச்செவியும் உமக்கே உள்ளன. நான் சிவனுடைய திருவடிகளை அல்லால் வேறு காணேன்; அதனை அறிவதற்கு நீர் யார்? உங்கள் கண்கள் குருடாகி உலகெலாம் காண யான் கண்பெற்றால் நீர் என்ன செய்வீர்? என்றார். அதுகேட்ட சமணர், ‘நீ உன் தெய்வத்தருளால் கண்பெற்றாயாகில் நாங்கள் இந்த ஊரில் இருக்கமாட்டோம்’ என்று சொல்லி அவர் கையிலுள்ள மண்வெட்டியைப் பறித்து நட்டதறிகளையும் பிடுங்கி எறிந்தனர்.
தண்டியடிகள் ஆரூர்பெருமான் முன் சென்று ‘ஐயனே! இன்று அமணர்களால் அவமதிக்கப்பட்டு வருந்தினேன். இவ்வருத்ததைத் தீர்த்தருள வேண்டும்;’ என முறையிட்டுத் தமது மடத்திற்குச் சென்றனர். இன்று பணிசெய்ய முடியவில்லையே என்ற வருத்தத்தால் அழுதுகொண்டு துயின்றார். அன்றிரவு ஆரூரிறைவர் அவரது கனவில் தோன்றி, ‘தண்டியடிகளே உன் மனக்கவலை ஒழிக! உன் கண்கள் காணவும், அமணர்கள் கண்கள் மறையுமாறும் செய்கின்றோம்’ என்று அருளிச் செய்து, சோழ மன்னர் கனவில் தோன்றி ‘தண்டி என்பவன் நமக்குக் குளந்தோண்ட அதற்குச் சமணர்கள் இடையூறு விளைவித்தனர். நீ அவனிடத்திலே சென்று அவன் கருத்தை முடிப்பாயாக’ என்று பணித்து மறைந்தருளினார்.
வேந்தன் விழித்தெழுந்து இறைவர் திருவருளைப் போற்றிப் பொழுது புலர்ந்ததும் தண்டியடிகளை அடைந்து, அவர் நிகழ்ந்தன சொல்லக்கேட்டு அமணர்க்கும், தண்டிக்கும் இடையே நிகழ்ந்த அவ்வழக்கைத் தீர்க்க எண்ணினான். அமணர்களை அழைத்து அவர்கள் கருத்தை அறிந்துகொண்டான். பின்னர் அமணர்களை அழைத்து தன்னுடன் வரத் தண்டியடிகளாருடன் குளக்கரையை அடைந்தான். வேந்தன் தண்டியடியாரை நோக்கி, ‘பெருகும் தவத்தீர்! நீர் சிவனருளால் கண் பெறுதலைக் காட்டுவீராக’ என்றான். அதுகேட்ட தண்டியடிகளார், ‘தான் சிவனுக்குப் பொருந்திய அடியேன் என்றால் இன்று என் கண்கள் ஒளி விளங்கப் பெற்று அமணர்கள் தங்கள் கண்களை இழப்பர். அதனால் ஆராய்ந்த மெய்பொருளும் சிவபதமே ஆகும்’ என்று சொல்லித் திருவைந்தெழுத்தை எடுத்தோதிக் குளத்தில் மூழ்கிக் கண்ணொளி பெற்று எழுந்தார். அங்கிருந்த அமணர்கள் கண் ஒளி இழந்து வழி தெரியாமல் தடுமாற்றமுற்றனர், ‘பழுதுசெய்து அமண் கெட்டது’ என்றுணர்ந்த மன்னன், தன் ஏவலாளரைப் பார்த்து, தண்டியடிகளோடு ஒட்டிக் கெட்ட சமணர்களைத் திருவாரூரினின்றும் அகன்று போம்படி துரத்துவீராக’ எனப்பணித்தான். கண் கெட்ட சமணர்கள் குழியில் விழுந்தவரும், புதரில் முட்டுப்பட்டவரும், உடுத்த பாய்களை இழப்பவரும், பிடித்த பீலியை இழப்பவருமாய் ஓட்டமெடுத்தனர். பின் திருக்குளத்தின் கரைகளைச் செம்மைபெறக் கட்டித் தண்டியடிகளை வணங்கிச் சென்றான். அகக்கண்ணேயன்றிப், புறக்கண்ணும் பெற்ற தண்டியடிகளார் இறைவனைப் போற்றித் திருவைந்தெழுத்தோதித் திருப்பணிகள் பல புரிந்து திருவடி அடைந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ புகழேந்திப் புலவர் இயற்றிய திருக்கை வழக்கம்- கலிவெண்பா- கண்ணி எண்:86
- ↑ காஞ்சி வீர பத்திர தேசிகர் இயற்றிய செங்குந்த சிலாக்கியர் மாலை- பாடல் எண்:27
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-10-21. பார்க்கப்பட்ட நாள் 2020-05-12.
- ↑ 63 நாயன்மார்கள், ed. (01 மார்ச் 2011). தண்டியடிகள் நாயனார். தினமலர் நாளிதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: numeric names: editors list (link) - ↑ மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)
- பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்