உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழ் மறவன் பட்டாம்பூச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் மறவன் பட்டாம்பூச்சி
தமிழ்க் குடியானவன்
மேற் பகுதி
கீழ்ப் பகுதி
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
லெப்பிடாப்பிடிரா
குடும்பம்:
பேரினம்:
சிரோகோரா
இனம்:
சி. தாயிசு
இருசொற் பெயரீடு
சிரோகோரா தாயிசு
பேபரியேசு, 1787

மலைச்சிறகன் எனும் தமிழ் மறவன் பட்டாம்பூச்சி (அறிவியல் பெயர் சிரோகோரா தாயிசு) தமிழக மலைப்பகுதிகளில் காணப்படும் பட்டாம்பூச்சி இனங்களில் ஒன்றாகும். பல்வேறு சிறப்புகள் கொண்ட இதனை தமிழ்நாடு அரசின் சின்னங்களில் ஒன்றாக தமிழ்நாடு அரசு சூலை, 2019-இல் தேர்ந்தெடுத்துள்ளது.[1][2][3] இதன் ஆங்கிலப் பெயர் தமிழ் யோமேன் (Tamil Yeoman).

தோற்றம்

[தொகு]

தமிழ் மறவன் பட்டாம்பூச்சியின் இடது இறக்கையின் முனையிலிருந்து வலது இறக்கையின் முனை வரையிலான அகலம் 60 மி.மீ. முதல் 75 மி.மீ. வரை இருக்கும்.[4] இவற்றின் இறக்கைகளின் மேல்நிறம் பெரும்பாலும் பளிச்சென்று மஞ்சளாக சிறுத்தைச் சிறகன் பட்டாம்பூச்சியை ஒத்து இருக்கும். முன்ன இறக்கைகளின் மேற்புற நுனிகளில் கருப்புத் திட்டுக்கள் இருக்கின்றன. மேற்புறத்தில் அலை அலையாய் கோடுகளும் இருக்கின்றன. நடுவில் உடற்பகுதியை ஒட்டிய இடங்களில் இறக்கைகள் கரும்பழுப்பு நிறத்தில் இருக்கின்றன.

இப்பட்டாம்பூச்சிகளின் பின்ன இறக்கைகளின் மேல்நுனியில் வெள்ளைப் புள்ளிகள் தென்படுகின்றன. கீழ்நுனியில் அலை அலையாய் வரிசையாகக் கோடுகளும், நரம்புகளுக்கிடையே கரும்புள்ளிகளும் காணப்படுகின்றன. முன்னிறக்கைகளிலும் பின்னிறக்கைகளிலும் கீழ்ப்புறத்தில் ஊதா கலந்த பட்டையான கோடுகள் குறுக்கே ஓடுகின்றன. ஆண் பட்டாம்பூச்சிகளின் அடிநிறம் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாகவும் பெண் பூச்சிகளின் அடியில் வெளிர்மஞ்சள் கலந்த பழுப்பாகவும் அமைந்திருக்கும்.

மழைக்காலம் தவிர்த்த உலர்பருவத்தில் தமிழ் மறவன் பட்டாம்பூச்சிகளின் நிறம் சற்று மங்கிக் காணப்படும். அக்காலத்தில் இவற்றின் இறக்கைகளின் மேலுள்ள புள்ளிகளும் கோடுகளுங்கூட சற்று மங்கலாக அழுத்தம் குறைந்து தென்படுகின்றன. அடிநிறமும் மங்கிச் சிவப்பும் பழுப்பும் கலந்து மண்ணின் நிறத்தை ஒத்து இருக்கும்.

பரம்பல்

[தொகு]

மலைச்சிறகன்கள் தமிழகத்தின் மேற்குத்தொடர்ச்சி மலைகளிலுள்ள பசுமைமாறாக் காடுகளிலும் மலையடிவாரங்களிலும் மட்டுமே வாழும் அரியவகை பட்டாம்பூச்சிகள். நீலகிரியில் முதுமலை புலிகள் காப்பகத்திலும், குன்னூர், கூடலூர் பகுதிகளிலும் இவற்றைக் காணலாம்.[2]

சூழியல்

[தொகு]

மலைச்சிறகன்கள் நிழலான பகுதிகளிலும், ஓடைக்கரைப் பகுதிகளிலும் வாழ்பவை. ஆண்டு முழுவதும் காணப்பட்டாலும் பிப்பிரவரி முதல் மே மாதம் வரையிலான காலத்திலும் மழைக்குப் பின்னரும் மிகுதியாகக் காணப்படுகின்றன.

நடத்தை

[தொகு]

தமிழ் மறவன் பட்டாம்பூச்சிகள் மிக விரைவாகவும், நேராகத் திறனுடனும் பறப்பவை. அவற்றின் விரைவை முன்னிட்டே இவ்வினத்தை மறவன்கள் என்று அழைக்கிறார்கள். இவை ஈரமான இடங்களில் அமர்ந்து நீர் உறிஞ்சுவதைக் காணலாம். இவற்றின் புழுக்கள் மரவொட்டி (Hydnocarpus wightiana) இலைகளை தின்கின்றன.

மாநிலச் சிறப்பு ஏற்பு

[தொகு]

தமிழ்நாடு மாநிலத்தின் சிறப்புச் சின்னங்களான பனை, மரகதப்புறா, செங்காந்தள் மலர், வரையாடு முதலியவற்றைப் போன்று பட்டாம்பூச்சி இனமொன்றையும் தேர்ந்தெடுக்கும் நோக்கில் குழுவொன்று மூன்றாண்டுகளாக ஆய்வு மேற்கொண்டது. இறுதிக் கட்டத்தில் மலைச்சிறகன் எனும் தமிழ் மறவன் பட்டாம்பூச்சியையும் தமிழ் வலையிறகி பட்டாம்பூச்சியையும் ஒப்பிட்டனர். தலைமை வனக்காவலரின் பரிந்துரையின் பேரில் தமிழ் மறவனைத் தேர்ந்தெடுத்து தமிழ்நாட்டின் மாநிலப் பட்டாம்பூச்சியாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டது.[2]

தமிழ் நாட்டின் உள்ளக இனமாகிய மலைச்சிறகன்களின் ஆங்கிலப் பொதுப்பெயரில் தமிழ் என்று வருவதாலும், மறத்தைப் போற்றிய தமிழர் பண்பாட்டை அடையாளங் காட்டுவதாலும் இன்னும் பல சிறப்புகளைக் கொண்டிருப்பதாலும் இவ்வினத்தை மாநிலப் பட்டாம்பூச்சியாகத் தேர்ந்தெடுத்தனர்.

இந்தியாவில் மாநிலப் பட்டாம்பூச்சியைத் தேர்ந்தெடுத்த ஐந்தாவது மாநிலம் தமிழகம். இதற்கு முன்னதாக மகாராட்டிரம், உத்தராகண்டம், கருநாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் முறையே நீல அழகி (பட்டாம்பூச்சி)(Papilio polymnestor), மயில் அழகி (Papilio crino), பொன்னழகி (Troides minos), மலபார் மயிலழகி (Papilio buddha) ஆகிய வண்ணத்துப்பூச்சி இனங்கள் ஆவன.[1]

இவற்றையும் காணவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 பல்வேறு சிறப்பம்சங்களை கொண்ட தமிழ் மறவன் பட்டாம் பூச்சி.. தமிழக அரசு சின்னமாக அறிவிப்பு!
  2. 2.0 2.1 2.2 தமிழ்நாட்டின் அடையாளமான தமிழ் மறவன் பட்டாம்பூச்சி
  3. https://www.maalaimalar.com/news/district/2019/07/01083825/1248816/Tamil-yeoman-declared-Tamil-Nadu-state-butterfly.vpf
  4. Bingham, Charles Thomas (1905). Fauna of British India. Butterflies Vol. 1. pp. 421–423.

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]