நாச்சார் வீடுகள்
நாச்சார் வீடுகள் அல்லது நாற்சார் வீடுகள் என்பவை இலங்கையின், யாழ்ப்பாணம் பகுதியில் காணப்படும் ஒரு வகையான வீட்டுகள் ஆகும். இவ்கை வீடுகள் யாழ்ப்பாணம் முழுதும் பரவலாக இருப்பினும் மானிப்பாய், வட்டுக்கோட்டை, மருதனார்மடம் உள்ளிட வலி மேற்கு, வலி வடக்கு போன்ற பகுதிகளில் மிகுதியாக காணப்படுகின்றன. இவை கருங்கல்லும் சுண்ணாம்பும் கொண்டு அமைக்கபட்டவை. சுமார் இருநூறு ஆண்டுகள் பழமையான வீடுகளும் இவற்றில் உள்ளன.
இந்த வீடுகளானது சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் வேலைசெய்து பொருளீட்டிய பணக்கார குடும்பங்களால் முதலில் கட்டப்பட்டன. பின்னர் பலராலும் இவை போன்ற வீடுகள் கட்டபட்டன. நாச்சார் வீடுகளின் மையத்தில் செவ்வக வடிவில் முற்றம் உள்ளதாகவும், அதைச் சுற்றி சற்று உயரமான நடை மேடையும், தூண்களும், பின்னர் அதனைச் சுற்றி அறைகள் அமைக்கபட்டிருக்கும். மர வேலைப்பாடுகள் கொண்டவையாக அமைக்கபட்டுள்ளன. இந்த வீடுகள் பாரம்பரிய பெரிய கூட்டுக் குடும்பங்களுக்காக கட்டபட்டவை. அதற்கேற்றவாறு சில வீடுகள் பத்து பன்னிரண்டு அறைகள் கொண்டதாகவும் இருக்கும். வீட்டுக்கு வெளியே வாயிலுக்கு விசாலமான திண்ணைகள் அமைக்கபட்டிருக்கும். இந்த வீடுகள் ஏறக்குறைய கேரளத்தில் உள்ள நாலுகெட்டு வீடுகளை நினைவூட்டுவனவாக இருக்கும்.
கூட்டுக் குடும்பங்களின் சிதைவால் இன்றைய நாச்சார் வீடுகளில் கூட்டமின்றி முதியவர்கள் மட்டும் வாழக்கூடியதாக உள்ளது.