பழந்தமிழ் இசை
தமிழ்நாட்டு வரலாறு |
தமிழக வரலாறு |
---|
பழந்தமிழ் இசை (Ancient Tamil Music) என்பது தமிழரின் மரபு வழியான மிகப் பழமையான இசைச் செல்வமாகும். பழந் தமிழிசையெனக் குறிப்பிடும்போது ஐரோப்பியர் ஆட்சிக்கு முற்பட்ட காலத் தமிழ் மொழியின் இசை நடை, சிறப்புகள், பெற்ற மாற்றங்கள் ஆகியவை இங்கு குறிப்பிடப்படுகிறது. சங்கத் தமிழானது இயல், இசை, நாடகமென மூன்று வகையாகும். இதில் இசை என்பது தமிழிசையாகும். பழந்தமிழ் மக்கள் வேறு இன மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொள்வதற்கு முன்பே இசையும் அதோடு இணைந்த கூத்தும் உருவாகி வளரத் தொடங்கின. இசை, கூத்து ஆகியவற்றின் கலை நுட்பங்களை விளக்கும் இலக்கணத் தமிழ் நூல்கள் எழுந்தன. இந்நூல்கள் எழுதப்பட்ட காலம் முச்சங்க காலமென அறியப்படுகிறது. இம்முச்சங்க காலம் இற்றைக்கு ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே தமிழர் இசையும் கூத்தும் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே செவ்விய கலைகளாக விளங்கின என உறுதியாகக் கொள்ளலாம்.
கி. பி. 16 ஆம் நூற்றாண்டளவில் சிறப்பு பெற்ற கர்நாடக இசைக்கும் தமிழிசைக்கும் பலவிதமான ஒற்றுமைகள் உண்டு. இன்று தழைத்தோங்கி இருக்கும் கர்நாடக இசையே தமிழிசையின் மறுவடிவம் என்றும் கூறுவர். சங்க நூல்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, தொல்காப்பியம் ஆகிய நூல்களிலும், ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்திலும் தமிழிசை பற்றிய பல செய்திகள் கூறப்பட்டுள்ளன. கி. பி. ஆறாம் நூற்றாண்டில் தொடங்கி 10 ஆம் நூற்றாண்டு வரை தோன்றிய இந்து சமய மறுமலர்ச்சிக் காலத்தில் அப்பர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் போன்ற நாயன்மார்கள் தோன்றி பழந் தமிழிசைக்குப் புத்துயிர் அளித்தனர், தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த முதல் நூல் அகத்தியம் என்று அறிஞர்கள் கூறுவர். ஆனால் அந்த அரிய நூல் இப்போது இல்லை. அகத்தியம் ஏழாயிரம் வருடங்களுக்கும் முன்னர் அகத்தியரால் எழுதப்பட்டது என்பது தமிழாய்வாளர்களின் கருத்தாகும்.
தமிழிசையின் தொன்மை
[தொகு]இசையும் கூத்தும் ஒன்றோடொன்று இணைந்த கலைகள். கூத்து என்பதைப் பழந்தமிழ் மக்கள் நாடகம் என்றும் அழைத்தனர். நாட்டியம், ஆடல் என்ற சொற்களும் கூத்துக் கலையைக் குறிக்கும். முச்சங்க காலத்தில் இசைக்கு இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. கூத்துக்கும் இலக்கணம் எழுதப்பட்டது. எனவே இரு கலைகளை இணைத்தும் இலக்கண நூல்கள் எழுதப்பட்டன. இசைக்கு இலக்கணம் வகுத்த நூல் அகத்தியம் என்பர். எனவே அகத்தியத்திற்கு முன்னரும் பல இசை நூல்கள் இருந்திருக்க வேண்டும். அகத்தியத்திற்குப் பின்னர் தோன்றிய இசை நூல்களான பெருநாரை, பெருங்குருகு, முதுநாரை, முதுகுருகு, பஞ்சபாரதீயம், பதினாறுபடலம், வாய்ப்பியம், குலோத்துங்கன் இசைநூல் போன்ற நூல்களும் காலத்தால் அழிந்தன. எஞ்சிய நூல்கள்பற்றி இடைக்கால உரையாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.
நூல் | எழுதியவர் | கூறும் பொருள் |
---|---|---|
அகத்தியம் | அகத்திய முனிவர் | இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழுக்கும் இலக்கணம் கூறும். |
இசை நுணுக்கம் | சிகண்டி என்னும் முனிவர் | இது ஓர் இசைத் தமிழ்நூல். |
இந்திர காளியம் | யாமளேந்திரர் | |
பஞ்சபாரதீயம் | தேவவிருடி நாரதன் | |
பஞ்சமரபு | அறிவனார் | பழந்தமிழர் இசை, நாடக இலக்கண நூல். இசை மரபு, வாக்கிய மரபு, நிருத்த மரபு, விநய மரபு, தாளமரபு என்னும் ஐந்து மரபுகள் பற்றிய நூலிது. |
பெருங்குருகு | தெரியவில்லை | இந்நூல் முதுகுருகு என்றும் சொல்லப்படும். |
பெருநாரை | தெரியவில்லை | இந்நூல் முதுநாரை என்றும் சொல்லப்படும் ஓர் இசைநூல். |
தாளவகை யோத்து | தெரியவில்லை | தாள இலக்கணம் கூறும் பழந்தமிழ் நூல். |
தொல்காப்பியம்
[தொகு]பழந்தமிழ் இலக்கண நூல்களுள் முழுமையாகக் கிடைக்கும் நூல் தொல்காப்பியம். இசைத்தமிழ், தொடர்பான செய்திகளை இந்நூல் ஆங்காங்குக்கூறுகிறது. தமிழிசை பற்றிய நூல்களில், இன்று கிடைக்கப்பெறுகின்ற மிகத் தொன்மையான நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் காலம் கி.மு. 3 ஆம் நூற்றாண்டளவினது என்பது அறிஞர்கள் கருத்து. இந்நூலின் காலக் கணிப்பு தமிழர் இசையின் தொன்மையை உறுதிப்படுத்தும்.
இசையைத் தொழிலாகக் கொண்ட மக்கள் உபயோகப்படுத்தும் இசைக்கருவிக்குப் பறை என்றும், இன்பமாகப் பொழுது போக்கும் மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவி யாழ் என்றும் தொல்காப்பியத்தில் இருவகை இசைக்கருவிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார் தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியல் 18 ஆம் நூற்பா தமிழர் வாழ்க்கை நெறியின் அடிப்படைப் பண்பாட்டுக் கருவூலங்களைக் குறிப்பிடுகிறது. இந்நூலில் தெய்வம், உணா, மா, மரம், புள், பறை, யாழ் ஆகிய கருப்பொருள்கள் சொல்லப்பட்டுள்ளன.[1] இந்த ஏழும் தமிழர் பண்பாட்டுக் கருப்பொருள்கள். ஏழு கருப்பொருளில் ஒன்று யாழ். மற்றொன்று பறை.
யாழ்
[தொகு]தொல்காப்பியம் கூறும் ‘யாழ்’ என்னும் சொல் பழந்தமிழர் வகுத்த பண்ணிசையைக் குறிக்கும். இது மிடற்றிசை (குரலிசை), நரம்புக் கருவியிசை (யாழ் என்னும் தந்திக் கருவி இசை) காற்றுக் கருவியிசை (குழல் கருவியிசை)ஆகியவற்றின் முறைகளும் மரபுகளும் பற்றியதாகும். பண்வகைகளை ‘யாழின் பகுதி’ எனவும் இசைநூலை ‘நரம்பின் மறை’ எனவும் தொல்காப்பியர் குறித்துள்ளார். இதனால், பண்டைநாளில், நரம்புக் கருவியாகிய யாழினை அடிப்படையாகக் கொண்டே பண்களும் அவற்றின் திறங்களும் ஆராய்ந்து வகைப்படுத்தப்பட்டன என அறியலாம்.
பறை
[தொகு]தொல்காப்பியர் கூறும் "பறை" என்னும் சொல் தாளம் பற்றியதாகும். அதாவது தாளத்தைக் கொட்டிக் கொடுக்கும் பல்வேறு தாளக்கருவிகளின் (percussion instruments) முறைகளும் மரபுகளும் பற்றியதாகும்.
நிலத்தை ஐந்தாக வகுத்துக் கொண்ட தமிழர் அந்தந்த நிலத்துக்குரிய இசையை உருவாக்கினர். தொல்காப்பியர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் உரிய தொழில் இசையையும, இன்ப இசையையும் தெளிவாக வகுத்து வைத்துள்ளார். பண் இசைப்பதற்குரிய பொழுதையும் வரையறை செய்துள்ளார்.[2] இசை என்ற சொல் தொல்காப்பியத்தில் 24 இடங்களில் வந்துள்ளது. இவை அனைத்தும் இசைக் கலையுடன் ஒரு வகையில் தொடர்பு உள்ளதாகவே அமைந்துள்ளது.
தொல்காப்பியர் குறிப்பிடும் பாட்டு, வண்ணம் ஆகிய சொற்கள் இசையோடு தொடர்புடைய ஆழ்ந்த பொருள் பொதிந்த சொற்களாகவே அமைந்துள்ளன. பாடல்களை அவற்றின் அமைப்பு, கருத்து மற்றும் இசைத்தன்மையைக் கொண்டு பாகுபாடு செய்துள்ளார். கலிப்பாவும், பரிபாடலும் இவ்வகையில் குறிப்பிடத்தகுந்தன, பரிபாட்டு என்பது இசைப்பா எனப் பேராசிரியர் குறிப்பிடுகிறார். பிசியைப் போன்ற இயல்புடையதாகப் பண்ணத்தி என்னும் இசைப்பாடல் இருப்பதைத் தொல்காப்பியத்தின் வழி அறியலாம். ஊடல்தீர்க்கும் வாயில்களாகத் தொல்காப்பியர் குறிப்பிடும் பாணன், கூத்தன், பாடினி, விறலி ஆகியோர் இசையிலும் கூத்திலும் திறமை உடையவர்கள் என்பதைச் சங்க இலக்கியத்தின் வாயிலாக அறிய முடிகிறது.
இசைத்தூண்கள்
[தொகு]தமிழிசையின் மகத்துவம் நிலைத்து வாழ வேண்டும் என்று பண்டைத்தமிழ் மக்கள் நினைத்தார்கள். ஆலயங்களிலே இசைத்தூண்களை அமைத்தார்கள். அந்தத் தூண்களைத் தட்டினால் இனிமையான இசை ஒலிக்கும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், திருநெல்வேலி, திருக்குறுங்குடி, சுசீந்திரம் ஆகிய இடங்களிலே இசைத்தூண்களிலே இன்றைக்கும் இசை எழுகின்றது. தமிழிசையின் பெருமைக்குச் சான்றாக ஒலிக்கின்றது.
இசைச் சிற்பங்கள்
[தொகு]சுசீந்திரம், தாராசுரம், திருவட்டாறு, திருவெருக்கத்தப்புலியூர், கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய ஊர்களிலே உள்ள கோவில்களில் பண்டைய இசைக்கருவிகளையும் அவற்றை வாசித்த இசைக்கலைஞர்களையும் சிற்பங்களாகச் செதுக்கிவைத்துள்ளனர்.
இசைக் கல்வெட்டுகள்
[தொகு]குடுமியான்மலை இசைக்கல்வெட்டு தமிழிசையின் சுரங்கள்பற்றிய செய்தியைத் தருகிறது. திருவாரூர், திருவையாறு, தஞ்சை ஆகிய கோயில்களிலும், திருவண்ணாமலை, திருச்செந்துறை, திருவிடைமருதூர், திருவீழிமிழலை, திருவல்லம், செங்கம், சந்திரகிரி ஆகிய ஊர்களிலும் உள்ள கல்வெட்டுக்களில் இசையைப்பற்றியும், இசைக் கலைஞர்களைப் பற்றியும் குறிக்கப்பட்டுள்ளன.
பழந்தமிழிசையில் பண்கள்
[தொகு]தமிழிசை 22 அலகு (சுருதி), 12 தானசுரம் (Semitones), நாற்பெரும்பண்கள், ஏழ்பெரும்பாலை(அடிப்படை இராகங்கள்), ஐந்து திணைப் பண்கள், மற்றும் 103 பண்கள் என்ற அடிப்படையில் அமைந்தது.[3] செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை ஆகிய ஏழ் பெரும் பாலைகளே பழந்தமிழ் இசையில் 2000 ஆண்டுகட்கும் முன்னர் தோன்றிய ஆதிப்பாலைகள் ஆகும். பண்களுக்கு தொல்காப்பியத்தில் யாழ் என்றும் சங்க இலக்கியத்தில் பாலை என்றும் இன்று மேளகர்த்தா இராகம் என்றும் பெயரும் வழங்கி வருகின்றது.[4] தமிழ் இசையின் சிறப்பான பாலைகளான ஏழ்பெரும் பாலைகள் முறையே, செம்பாலை, படுமலைப்பாலை, செவ்வழிப்பாலை, அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை எனச் சிலம்பு அரங்கேற்றுக்காதையில் இளங்கோவடிகள் குறிப்பிட்ட வரிசை முறையை [5] அடிப்படையாகக் கொண்டு தமிழ்ப் பண்கள் இசைக்கப்பட்டன.
இந்த ஏழ்பெரும் பாலைகளில் ஐந்து மட்டும் திணைப்பண்களாக தொல்காப்பியத்தில் குறிக்கப்பட்டன. தொல்காப்பிய காலத்தில் பெரும்பண்கள் யாழ் என்ற பெயரில் வழங்கப்பட்டன[6]. அந்த ஐந்து பெரும்பண்களில் இருந்து உருவான ஐந்து சிறுபண்களை யாழின் பகுதி என தொல்காப்பியம் குறிப்பிடுகிறது[7]. இந்த ஏழ்பெரும்பாலைகள் மற்றும் ஐந்து சிறுபண்கள் இவற்றிற்கு நிகரான தற்கால இராகங்களை கீழுள்ள பட்டியலில் காணலாம்.
ஏழ்பெரும்
பாலைகள் பெரும்பண்கள் |
திணை
யாழ் 5. |
7 கர்நாடக இராகங்கள்
(மேளகர்த்தா எண்) |
7 Greek
Modes |
Western
Scale |
யாழின் பகுதி | சிறுபண்கள் 5. | 5 கர்நாடக
ஜன்ய இராகம் |
5 Western
Pentatonic Scale |
---|---|---|---|---|---|---|---|---|
செம்பாலை | முல்லை யாழ் | அரிகாம்போதி (28) | MixoLydian | சிறுமுல்லை | முல்லைத்தீம்பாணி | மோகனம் | Major Pentatonic | |
படுமலைப்பாலை | குறிஞ்சி யாழ் | நடபைரவி (20) | Aeolian | Minor Scale | சிறுகுறிஞ்சி | செந்துருத்தி | மத்தியமாவதி | Egyptian_Suspended |
செவ்வழிப்பாலை | --- | இருமத்திமதோடி (--) | Locrian | --- | --- | --- | ||
அரும்பாலை | பாலை யாழ் | சங்கராபரணம் (29) | Ionian | Major_Scale | சிறுபாலை | கொன்றை | சுத்த சாவேரி | Blues Major |
கோடிப்பாலை | மருத யாழ் | கரகரப்ரியா (22) | Dorian | சிறுமருதம் | ஆம்பல் | சுத்ததன்யாசி | Minor Pentatonic | |
விளரிப்பாலை | நெய்தல் யாழ் | தோடி (8) | Phrygian | சிறுநெய்தல் | இந்தளம் | இந்தோளம் | Blues Minor | |
மேற்செம்பாலை | --- | கல்யாணி (65) | Lydian | --- | --- | --- |
(குறிப்பு1 :- கர்நாடக இசையில், ஏழ்பெரும் பாலைகள் என்றும் ஐந்து சிறு பண்கள் என்றும் தனியே தொகுக்கப்படவில்லை. இங்கு அரிகாம்போதி முதலான ஏழு மேளகர்த்தா ராகங்களும், மோகனம் முதலான ஐந்து ஜன்ய ராகங்களும், தமிழிசையின் நிகர் பண்கள் எவை என்று தெரிந்துகொள்வதற்காக மட்டுமே தரப்பட்டுள்ளன
குறிப்பு 2 :- கர்நாடக இசை என்றும் ஆங்கிலத்தில் குறிக்கப்பட்டவை போக மீத வரிசைகள் தமிழிசைக்கு உரியவை. வரலாற்றில் இந்தப் பெயர்களே முதலில் தோன்றியவை.
குறிப்பு 3 :- தொல்காப்பியத்தில் 14 கருப்பொருள்களில் யாழ் பண் என குறிக்கப்படவில்லை, யாழ் மற்றும் யாழின் பகுதி என்று மட்டுமே உள்ளன. முறையே யாழ் என்பது ஏழு நரம்புகள் கொண்ட பெரும்பண், யாழின் பகுதி என்பது ஐந்து நரம்புகள் கொண்ட சிறுபண்.)
ஆம்பல் பண், காஞ்சிப் பண், காமரம், குறிஞ்சிப் பண், செவ்வாழி பண், நைவனம், பஞ்சுரம், படுமலைப்பண், பாலைப்பண், மருதப்பண், விளரிப்பண் ஆகிய பண்கள் முழுமையாகவும் அவற்றின் பிரிவுகளாகவும் இசைக்கப்பட்டுள்ளன. பண்டைய தமிழகத்தில் பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொரு இசைகளிருந்ததாக (ராகம்) சிலப்பதிகாரம் கூறுகிறது.[8] பிங்கலந்தையில் 103 தாய்ப்பண்களும் (மேளகர்த்தா இராகங்கள்) பன்னீராயிரம் பண்களும் குறிப்பிடப்படுகின்றன.[9]ஆபிரகாம் பண்டிதர் எழுதிய கருணாமிர்த சாகரம் என்னும் நூலில் ஒவ்வொரு பாலைக்கும்(இராகத்திற்கும்) பிறக்கும் பண்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.[10]
தமிழிசையின் பண் அடிப்படைகள், பெயர்க் குழப்பங்கள், அதற்கான தீர்வுகள் பற்றி அறிந்துகொள்ள இக்கட்டுரையினை காணவும்[11].
இசைக்கருவிகள்
[தொகு]சங்க காலத்தில் ஆண்கள், பெண்கள்,[12] மட்டுமல்லாது இசையும் கூத்தும் வல்ல பாணர், பாடினியர், விறலியர்(ஆடல் மகளிர்) போன்றறோர் பண்ணும் தாளமும் கூடிய இசைப்பாடல்களைப் பண்ணிசைக் கருவிகள், தாளவிசைக் கருவிகள் ஆகியவற்றின் துணையோடு சிறப்பாகப் பாடி உள்ளனர். யாழ், கின்னரம், குழல், சங்கு, தூம்பு, வயிர், தண்ணுமை, முழவு, முரசு, பறை, கிணை, துடி, தடாரி, பாண்டில் மற்றும் இன்னியம் முதலான இசைக்கருவிகள் இருந்துள்ளன.[13] சிலப்பதிகாரம் அரங்கேற்றுக் காதையில் அரங்கேற்ற ஊர்வலத்தில் இடம் பெற்ற இசைக் கருவிகள் பண்டைத் தமிழரின் மறைந்தொழிந்த யாழ்களான முளரி யாழ், சுருதி வீணை, பாரிசாத வீணை, சதுர்தண்டி வீணை முதலானவையாகும். யாழினை 'நரம்பின் மறை'(தொல்.1:33 2-3)எனத் தொல்காப்பியரும், 'இசையோடு சிவணிய யாழின் நூல்' எனக் கொங்குவேளிரும் குறிப்பிட்டுள்ளனர். கர்நாடக இசையின் பெருமையான இசைக்கருவியான வீணை, கோட்டு வாத்தியம் இவைகளுக்கு இணையாகத் தமிழிசையில் சொல்லப்படும் இசைக்கருவி யாழ். வீணை பற்றிய குறிப்புகள் பல இலக்கியங்களில் காணப்பட்டாலும், யாழிசைக்கு ஒரு சிறப்பான முதலிடம் தரப்பட்டிருந்ததை காணமுடிகிறது. வீணையைப் போன்றே யாழும் கம்பி அல்லது நரம்புகளை இழுத்துக் கட்டப்பட்டு கைகளால் இசைக்கப்படும் கருவியாக இருந்திருக்கிறது. சுவாமி விபுலாநந்தாவின் “யாழ் நூலில்” யாழினைப் பற்றி பல விவரங்கள் கூறப்பட்டிருக்கின்றன. திருமறையில் சொல்லப்பட்ட மற்ற இசைக்கருவிகளான வீணை, கொக்கறை, குடமுழவு முதலியனவற்றைப் பற்றி “கல்லாடம்” நூலில் விளக்கங்கள் காணப்படுகின்றன. பன்னிரெண்டாவது திருமுறையான பெரியபுராணத்தில் மற்றொரு இசைக்கருவியான குழல் செய்வதைப் பற்றியும், இசைப்பதைப் பற்றியும் சொல்லப்படுகின்றது.[14]
இன்று மேலைநாடுகளில் சிறப்பாக நடத்தப்படும் கூட்டு வாத்திய இசை அமைப்பு முறை மேனாடுகளில் செயற்படத்தொடங்கியதிற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சங்க காலத்தில் இசைக்கருவிகளின் கூட்டு இசையை ஆமந்திரிகை, பல்லியம் எனத் தமிழர் அழைத்து வந்தனர்.
இசைக் கலைஞர்கள்
[தொகு]தமிழ் இசைக்கலைஞர்கள் பொதுவாக பாணர், பொருணர், கூத்தர் என அழைக்கப்பட்டனர், பாணர்,பொருணர் என்பது ஆண்களையும் விறலியர், பாடினியர் என்பது பெண் கலைஞர்களையும் குறிக்கும். இவர்களில் பொருணர் என்பவர் பரணி பாடுவதிலும் நடனம் ஆடுவதிலும் வல்லவராய் இருந்தனர்.[15] பாணர் என்பவர் வாய்ப்பாட்டிலும் அதே நேரம் இசைக்கருவிகளை இசைப்பதிலும் வல்லவராய் இருந்தனர். கூத்தர் என்பவர் பாடிக்கொண்டே ஆடும் ஆடல் வல்லவராயும் இருந்தனர். இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் கதைக்கேற்ற உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
பொருணரின் வகை
[தொகு]பொருணர் மூன்றுவகையாகப் பழந்தமிழ் இலக்கியங்களில் அறியப்படுகின்றனர். அவர்களுள்
- ஏர்க்களம் பாடுவோர்
- போர்க்களம் பாடுவோர்
- பரணி பாடுவோர் என்பவராவர்.
இவர்களுள் உழைக்கும் மக்களுக்காகப் பாடல்களைப் பாடி மகிழ்விப்பவர்கள் ஏர்க்களம் பாடுவோர் எனவும், போர் நடக்கும் போர்க்களங்களில் மன்னர் மற்றும் படை வீரர்களுக்காக அவர்களின் ஓய்வு நேரத்தின் போது போரில் அவர்கள் பட்ட வலிகளையும் வேதனைகளையும் ஆற்றவேண்டி இசைக்கருவிகளை மீட்டிப் பாடி அவர்களை மகிழ்விப்பவர்கள் போர்க்களம் பாடுவோர் எனவும் அழைக்க்கப்படுவர். இவர்கள் தண்டகப் பறை எனும் கருவியை இசைப்பர். பரணி பாடுவோர் என்போர் விழாக்காலங்களில் தங்கள் இசைத்திறமைகளை வெளிப்படுத்துபவராவார். இவ்விழாக்களில் மன்னர்களின் போர்க்கள வெற்றிகுறித்து அவர்களின் வீர தீரச் செயல்கள் குறித்தும் பாடப்படும். பரணி என்பது ஒருவகைக் கூத்து அல்லது நடனமாகும். எனவே பரணி பாடுவோர் ஆடலிலும் திறன் பெற்றிப்பர். மேலும் கூத்தர் என்பவர் நாட்டிய நாடக வடிவில் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்துவர். இவர்கள் ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம்பெயரும் வாழ்க்கை உடையவராவார்கள்.
பாணரின் வகை
[தொகு]- இசைப்பாணர் - வாய்ப்பாட்டு பாடுபவர்கள்
- யாழ்ப்பாணர் - இவர்கள் யாழ் என்னும் இசைக்கருவியை மீட்டுபவர்கள். சங்க இலக்கிய நூல்களான சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்பனவற்றில் இவர்களைப் பற்றிய பெருமளவு செய்திகளை அறியலாம்.
- மணடைப்பாணர் - இவர்கள் மண்டை எனப்படும் ஓட்டினை ஏந்திப் பாடி பிறரிடம் இரந்து வாழ்க்கை நடத்துபவர்களாவர்.
இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் என்பது பாணர்களின் பெயரால் வந்ததாகும்.
ஏழிசையும் சுரங்களும்
[தொகு]“ | 'குரலே துத்தம் கைக்கிளை உழையே
இளியே விளரி தாரம் என்றிவை எழுவகை யிசைக்கும் எய்தும் பெயரே'[16] |
” |
தமிழிசையில் ஏழிசைச் சுரங்களாகக் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் ஆகியவற்றைச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது, இசைக்குரிய எழுத்துகள் ஏழு - ச,ரி,க,ம,ப,த,நி - இதனை ஏழிசை என்பர். தமிழிசையில் இது பறவை, விலங்கினங்களின் குரல்களோடு ஒப்பிடப்பட்டு விளக்கப்படுகிறது. தமிழர் ஏழிசையை இயற்கை ஒலிகளோடு ஒப்பிட்டுப் பார்த்தனர்.
“ | வேண்டிய வண்டும் மாண்டகு கிளியு | ” |
தமிழிசையில் ஐந்திசை கொண்ட (Penta Tonic) பண்கள் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன.
“ | 'கிளை எனப்படுவ கிளக்கும் காலைக்
குரலே இளியே துத்தம் விளரி கைக்கிளை என ஐந்தாகும் என்ப" |
” |
என சிலப்பதிகாரம் உரையிற் கூறப்படும் சூத்திரத்தின் படி குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை, ச, ப, ரி, த, க என்ற ஐந்து சுரங்கள் கிடைக்கின்றன. இந்தச் சுரங்கள் மோகனம் என்ற அழகிய பண்ணை உருவாக்குகின்றன. பழம்பெரும் நாகரிகங் கொண்ட சீன நாடு இந்த ஐந்திசைப் பண்களைப் போற்றுவதோடு அந்த இசையில் எள்ளளவும் மாற்ற இன்னும் உடன்படாது இருக்கின்றது. கூங், இட்சி, சாங்;, யூ, கியோ என அவர்கள் குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளையை அழைக்கின்றனர்.[18] இவற்றுள் சில சொற்கள் தமிழ்ச் சொற்களை ஒத்திருப்பதையும் காணமுடியும்.
வ. எண் | ஏழிசையின் தமிழ்ப் பெயர் | ஏழிசையின் வடமொழிப் பெயர் | பறவை விலங்குகளின் குரலொலி |
---|---|---|---|
1. | குரல் | சட்சம் | மயிலின் ஒலி |
2. | துத்தம் | ரிஷபம் | மாட்டின் ஒலி |
3. | கைக்கிளை | காந்தாரம் | ஆட்டின் ஒலி |
4. | உழை | மத்திமம் | கிரவுஞ்சப் பறவையின் ஒலி |
5. | இளி | பஞ்சமம் | பஞ்சமம் |
6. | விளரி | தைவதம் | குதிரையின் ஒலி |
7. | தாரம் | நிஷாதம் | யானையின் ஒலி |
இச்சுரங்கள் பன்னிரண்டாக விரிவடைகின்றன. அவை
- குரல் - சட்சம் (ஷட்ஜம்)- ச
- மென்துத்தம்- சுத்தரிஷபம் ரிஷபம்,- ரி1
- வன்துத்தம்- சதுஸ்ருதி ரிஷபம்- ரி2
- மென்கைக்கிளை- சாதாரண காந்தாரம்- க1
- வன்கைக்கிளை - அந்தர காந்தாரம் - க2
- மெல்- உழை சுத்த மத்திமம்- ம1
- வல்- உழை பிரதி மத்திமம் - ம2
- இளி-பஞ்சமம்- ப
- மென் விளரி- சுத்த தைவதம்- த1
- வன் விளரி- சதுஸ்ருதி தைவதம்- த2
- மென்தாரம் -கைசகி நிஷாதம்- நி1
- வன்தாரம் - காகலி நிஷாதம் - நி2
ஆகியனவாகும்.[19]
சுரங்கள்
[தொகு]பழந்தமிழ் இசையின் ஏழு சுரங்களுக்கும் கீழ்க்காணுமாறு குறியீட்டு எழுத்துக்களைப் பயன்படுத்தியுள்ளனர்:
“ | 'ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்ற
ஏழும் ஏழிசைக் கெய்தும் அக்கரங்கள்' [20] |
” |
குரல் - ஆ; துத்தம் - ஈ; கைக்கிளை - ஊ; உழை - ஏ; இளி - ஐ; விளரி - ஓ; தாரம் - ஔ. ஆகியன பழந்தமிழர் பயன்படுத்திய சுர ஒலிகளாகும். மேலும்ஒரு சுரத்தில் நான்கில் ஒரு பாகக்கூறுகளை உயிரெழுத்துமூலம் உணர்த்தும் வழக்குத் தமிழ் நாட்டில் இருந்தது. குடுமியான்மலைக் கல்வெட்டில் ஒரு சுரம் நான்காகப் பகுக்கப்பட்டு ர, ரி, ரு, ரெ என்றவாறு குறிக்கப்பட்டுள்ளதைப் பேராசிரியர் சாம்பமூர்த்தி எடுத்துக்காட்டியுள்ளார்.[21] இந்தக் கல்வெட்டு கி.பி. ஏழாம் நூற்றாண்டில் பல்லவமன்னன் மகேந்திரன் காலத்ததாகும். குடுமியான்மலைக் கல்வெட்டில் ஆ.ஈ.ஊ.ஏ (ஏழிசைக்கு சமமான உயிரெழுத்துக்கள்) ரா, ரி, ரு, ரே, (ரீன் நான்கு வகை கள்) கா, கி, கூ, கெ (கவின் நான்கு வகைகள்) தா, தீ, தூ, தே (தவின் நான்கு வகைகள்) எனும் குறிப்புக்கள் உண்டு.
சங்க கால நூல்கள்
[தொகு]இசை உணர்வின் எழுச்சியால் இசைப்பாடல்கள் தோன்றுகின்றன. சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் பண்டைத் தமிழரின் இசைப்புலமையை வெளிப்படுத்துவனவாக அமைந்துள்ளன.
பரிபாடல்
[தொகு]சங்க இலக்கியங்களிலே இடம்பெறுகின்ற எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலே இப்போது கிடைக்கப்பெறுகின்ற இசை நூல்களிலேயே மிகத்தொன்மையானதாகக் கருதப்படுகின்றது. பரிபாடல்களில் மறையோர் பாடல், உழிஞை பாடல், தமிஞ்சிப் பாடல், விறற்களப் பாடல், வெறியாட்டப் பாடல், துணங்கைப் பாடல், வேதப் பாடல், வள்ளைப் பாடல் ஆகியன இசைப்பாடல்கள் என்பன அனைத்துமே இசைப்பாடல்களே என்று தெரிவிக்கின்றார் பரிமேலழகர். பாடல்களை ஆக்கிய புலவர்களின் பெயர்களும், எந்தப் பண்ணில் பாட வேண்டும் என்ற விபரங்களும், பண்ணமைத்த இசையறிஞர்களின் பெயர்களும் அந்தப் பாடல்களோடு கிடைக்கப்பெறுகின்றன. பரிபாடலில் உள்ள பாடல்கள், இசைப் பாடல்களாக அமைவதோடு மட்டுமன்றி, பரங்குன்றம் பற்றிய செவ்வேள் பாடல்களில் இசை தோன்றுவது பற்றியும்,[22] குழல், யாழ், முழவு முதலிய இசைக்கருவிகளின் பெயர்களையும்,[23] பாணர், விறலியர் ஆகிய இசைக் கலைஞர்களுக்கான பொதுப் பெயர்களையும் குறிப்பிடுகின்றன.
இப்பாடல்களை அக்காலப் பாணர்கள் காந்தாரம், நோதிரம், செம்பாலையாகிய பண்களில் பாடியுள்ளனர். பரிபாடலின் யாப்பினைக் குறித்துத் தொல்காப்பியர் பரிபாடல் வெண்பா யாப்பினதேயெனக் குறிப்பிட்டுள்ளார்.[24]. பரிபாடல், வண்ணக ஒத்தாழிசைக் கலிப்பா ஆகிய இருவகைப் பாடல்களுக்கும் தரவு, கொச்சகம், அராகம்அல்லது இராகம், சுரிதகம் போன்ற ஒத்த உறுப்புக்கள் உண்டு.[25].
புற நானூறு
[தொகு]எட்டுத் தொகை நூல்களில் மற்றொன்றான புறநானூற்றில் குறிஞ்சிப்பண், மருதப்பண்,காஞ்சிப்பண், செல்வழிப்பண், படுமலைப்பண், விளரிப்பண் என்னும் பண்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. சீரியாழ், பேரியாழ், வேய்ங்குழல், ஆம்பற்குழல், முழவு, தண்ணுமை, பெருவங்கியம் முதலிய இசைக் கருவிகளைப் பற்றி விளக்கப்பட்டுள்ளது.
அகநானூறு
[தொகு]பெண்ணொருத்தி யாழிலே குறிஞ்சிப்பண்ணை இசைத்து, தினைப்புனத்தில் தீனிக்காக வந்த யானையைத் தூங்கச் செய்தாள் என்ற தகவல் அகநானூற்றில் அறியத்தரப்பட்டுள்ளது.
பதிற்றுப்பத்து
[தொகு]மற்றொரு எட்டுத்தொகை நூலான பதிற்றுப்பத்தின் ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் துறை, வண்ணம், தூக்கு(இசை),பெயர் என்பன குறித்து வைக்கப்பட்டுள்ளன.
ஆற்றுப்படை நூல்கள்
[தொகு]பத்துப்பாட்டில் இடம்பெறும் சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை என்பவற்றில் சீறியாழ், பேரியாழ் என்னும் இசைக்கருவிகளைப் பற்றிச் சொல்லப்படுகிறது. பாணர், பாடினி, விறலியர், கூத்தர் முதலான இசைக் கலைஞர்களைப் பற்றிச் சொல்லப்படுகிறது.
மலைபடுகடாம்
[தொகு]மலைபடுகடாம் என்ற இலக்கியத்தில் தமிழ் இசைக்கருவிகளின் வகைகள் விளக்கப்பட்டுள்ளன. இமிழ், முழவு, ஆகுளி, பாண்டில், கோட்டு, தும்பு, இளி, இமிர், குழல், அரி, தட்டை, எல்லரி,பதலை,[26] முதலான இசைக்கருவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.[27].
சங்கம் மருவிய காலம்
[தொகு]நீதி நூல்கள் பதினெட்டும் தமிழிசையின் நுட்பத்தைச் சிறப்பாக எடுத்துரைப்பனவாக அமைந்துள்ளன. சிறந்த பண்ணிசைக் கருவியான யாழைப் பற்றிக் குறிப்பிடும்போது, குழலினிது யாழினிது என்ப [28] பண்ணமையா யாழின் கீழ்ப்பாடல் பெரிதின்னா[29] என நீதி நூல்கள் குறிப்பிடுகின்றன. குழலினினியமரத் தோவை நற்கின்னா[30] சொற்குறி கொண்டு துடிபண் உறுத்துவ போல்[31] போன்ற பாடல் வரிகள் சங்கம் மருவிய காலத் தமிழிசைச் சிறப்பை உணர்த்துவன ஆகும்.
செவ்வழி யாழ் பாண் மகனே[32] பாலையாழ் பாண் மகனே[33] தூதாய்த் திரியும் பாண்மகனே[34] போன்ற பாடல் வரிகள் இசைக் கலைஞர்களைப் பற்றிக் கூறுவதைக் காணலாம். சங்க கால இசை மரபானது. சமண, பௌத்த சமயங்களின் தாக்கத்தால் சங்கம் மருவிய காலத்தில் செல்வாக்கினை இழக்கத் தொடங்கியது.
காப்பிய காலம்
[தொகு]கி.பி.இரண்டாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரையிலான கால கட்டத்தில் சிலப்பதிகாரம் முதல் கம்பராமாயணம் வரையில் காப்பியங்கள் பல தோன்றியுள்ளன. காப்பியங்கள் பலவும் பழந்தமிழ் இசைச் சுரங்கங்களாகவே அமைந்துள்ளன. அவற்றுள்ளும சிலப்பதிகாரம் இசைச் செய்திகளை மிகவும் அதிகமாகத் தருகிறது. அடுத்த நிலையில் பெருங்கதை இசை மலிந்த காப்பியமாகக் காட்சி அளிக்கிறது.
சிலப்பதிகாரம்
[தொகு]இளங்கோவடிகள் இயற்றிய, சிலப்பதிகாரம் தமிழ் இசையின் வளர்ச்சிக்குச் சான்றாக அமைந்துள்ள நூலாகும். சிலப்பதிகாரமும், அதன் உரையாசிரியரான அடியார்க்கு நல்லார் உரையும் தமிழிசையின் மேன்மையைக் கூறி நிற்கின்றன. சிலப்பதிகாரத்தில் உள்ள இசை நுணுக்கங்களையும் மாட்சிமைகளையும் விளக்கிக் காட்டப் பல நூல்களும் உரைகளும் உதவுகின்றன. பஞ்சமரபு வெண்பாக்களின் மூலமாகவும், அரும்பதவுரையாசிரியர், அடியார்க்கு நல்லார் உரைகளின் மூலமாகவும் சிலப்பதிகார இசைத்தொடர்கள் விளக்கப்பட்டுள்ளன. சிலப்பதிகாரத்தில் இசைக் குறிப்புகள் நிரம்பிய பகுதிகள் - ஆய்ச்சியர் குரவை, அரங்கேற்று காதை, கானல்வரி, வேனிற்காதை, கடலாடுகாதை, புரஞ்சேரியிருத்த காதைமுதலியன .
சிலப்பதிகாரத்தின் கானல்வரிப் பகுதியில், வார்த்தல், வடித்தல், உந்தல், உறத்தல், உருட்டல், தெருட்டல், அள்ளல், பட்டடை என்று யாழை மீட்டுகின்ற எட்டுவகைத் திறன் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ஏழிசைபற்றியும், நான்குவகைப் பாலைகள் பற்றியும், முப்பது வகையான தோற்கருவிகளைப் பற்றியும் சிலப்பதிகாரம் கூறுகின்றது.
சிலப்பதிகாரம் தமிழிசைக் காப்பியமாகும். இசை ஆசிரியரின், தன்னுமை ஆசிரியரின் அமைதி பற்றி இளங்கோவடிகள் கூறுகிறார். தன்னுமைக் கருவியின் பயன்பாட்டுச் சிறப்பை ஆக்கல், அடக்கல், மீத்திறம் படாமை எனவும் யாழின் அமைப்பு, யாழிசை அமைப்பு, யாழாசிரியரின் திறமை முதலியனவும் கூறப்படுகின்றன. வரிப்பாடல், தெய்வம் சுட்டிய வரிப்பாடல், குடைப்பாடல் முதலியன இசையின் நுட்பத்தைப் புலப்படுத்துவன. புகாரில் இசை வல்லுநர்கள் இருந்ததை, அரும்பெறன் மரபில் பெரும்பாண் இருக்கையும்[35] என்ற அடியாலும் வீணை இசைக் கருவி இருந்ததை, மங்களம் இழப்ப வீணை மண்மிசை[36] என்ற அடியாலும் உணர முடிகிறது.
பக்தி இலக்கிய காலம்
[தொகு]தமிழர் வழிபாட்டு முறையை இசையிலிருந்து பிரிக்க முடியாது என்பதைப் பக்தி இலக்கியங்கள் தெளிவுபடுத்துகின்றன. இன்று நமக்குக் கிடைத்திருக்கும் பதிகங்களில் பெரும்பாலானவை, சிவபாத சேகரன் என்றும், திருமுறைகண்ட சோழனென்றும் போற்றப்பட்ட இராசஇராச சோழனின் பெரு முயற்சியால் சிதம்பரம் கோவிலில் பூட்டி வைக்கப்பட்ட அறையிலிருந்து ஒன்பதாம் நூற்றாண்டளவில் வெளிக் கொணரப்பட்டவையே. அவற்றில் பண்ணிசை ஏதென்று அறியாத பதிகள் இருக்கக் கண்டு, அச்சோழன் யாழ்ப்பாணர் பரம்பரையில் வந்த மதங்க சூளாமணியார் என்னும் பெண்மணியை அழைத்துப் பண்ணினை வரையறுக்கும்படிப் பணிக்க, அவர் வரையறுத்தப் பண் வரிசையிலேயே அவைகள் இன்றும் பாடப்படுகின்றன.
பத்து பத்தாகப் பாடல்களைப் பாடும் பதிகங்கள் என்ற முறையின் முன்னோடியாகச் சொல்லப்படுபவர் காரைக்காலம்மையார் என்று போற்றப்படும் புனிதவதியார். இவர் பாடிய பதிகங்கள் "மூத்த திருப்பதிகங்கள்" என்று அழைக்கப்படும். அம்மையார் வாழ்ந்த காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டாகும். இவர் தெய்வத்தைப் பண்ணிசையில் பாடி வழிகாட்டினார். இவர் பாடிய பதிகங்கள் "மூத்த திருப்பதிகங்கள்" என்று அழைக்கப்படும். அம்மையார் வாழ்ந்த காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டாகும். இவரைத் தொடர்ந்து சைவ சமயத்தின் நான்கு தூண்களாக சொல்லப்படும் அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் இவர்களில் முதல் மூவர் பல பதிகங்களைத் தமிழ்ப்பண்ணிசையில் பாடியிருக்கின்றனர். தேவாரப்பண்கள் மக்களிடையே மிகப் புகழ்பெற்றமையால், இராசராச சோழன் தொடங்கி பல அரசர்கள் தமிழகத்தின் கோவில்களில் இவற்றை முறைப்படி இசையுடன் பாட ஓதுவார் என்னும் இசைக்கலைஞர்களை நியமித்தனர். இவ்வோதுவார்களின் பணி இன்றும் தமிழகக் கோவில்களில் தொடர்கிறது. சைவ நாயன்மார்களால் தமிழ் இசை முறைப்படி தேவாரப் பாடல்கள் காலந்தோறும் இசைக்கப்பட்டன. திருநீலகண்ட யாழ்ப்பாணர் வரலாறு இசைக்கருவியோடு இணைந்து அமைந்தது ஆகும். கோயில்களில் இசை வல்லார் அமர்த்தப் பெற்றிருந்ததையும், தேவாரம் ஓதப் பெற்றததையும் தஞ்சைப் பெரிய கோயில் முதலான பல கோயில் கல்வெட்டுகள் எடுத்துரைக்கின்றன. பிற்காலத்து அருணகிரி நாதர் தம் திருப்புகழ் முழுவதாயும் பல்வேறு சிவத்தலங்களில் இசைமழைப் பொழிந்து கொட்டியதை அவர்தம் திருப்புகழ் வரலாறு எடுத்துரைக்கிறது.
திருநாவுக்கரசர் அருளியத் தமிழ்ப் பதிகமான தேவாரத்தில் அதிகமாக இருபத்தோரு பண்கள் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. சிலர் இருபத்துநான்கு என்றும், இன்னும் சிலர் இருபத்தேழு என்றும் கூறுகின்றனர். எப்படியாயினும் தேவாரம் முழுதுமே ஒரு முறையான பண்ணிசை வரிசையில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ஒன்பதாவது திருமுறையில் சொல்லப்படும் “சாளராபாணி” என்னும் பண் மற்ற திருமுறைகளில் பயன்படுத்தப்படவில்லை.
கர்நாடக இசையும் தமிழிசையும்
[தொகு]கர்நாடக இசை- தமிழிசை ஆகிய இரண்டு இசை மரபுகளையும் ஒப்பு நோக்குகையில் இன்றைய கர்நாடக இசையில் பயன்படும் இசை வழக்குகள், முந்தைய பழந்தமிழ் இசையின் வழக்குகளுக்குப் புதிதாகப் பெயரிட்டும், அதிக பயன்பாட்டினால் வளர்ச்சி அடைந்தும், கால மாறுபாட்டிற்கேற்ப உருமாற்றமடைந்தும் இருக்கின்றன எனலாம்.[37]
ஏழாம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டுவரை பக்தித் தமிழ் இலக்கியங்கள் தமிழ்நாட்டில் கோலோச்சின.தமிழ்நாட்டு வரலாற்றில் கி.பி. 3 ம் நுாற்றாண்டு முதல் 6ம் நூற்றாண்டு வரை களப்பிரர் ஆட்சி ஏற்பட்டது. தொடர்ந்து 20 ம் நூற்றாண்டு வரை தமிழகம் மாறிமாறி பிற மொழி மன்னர் குலங்களால் தான் ஆட்சி செய்யப்பட்டு வந்தது. அப்போதும் வடமொழி அதிக முக்கியத்துவம் பெற்றிருந்தது. இந்தப் பிறமொழி ஆதிக்கம் காரணமாகத் தமிழ்க்கலைகள் பல ஆதரிப்பார் இல்லாமல் அழிய நேரிட்டது. பல்லவர்கள் வடமொழிக்கும் தெலுங்குக்கும் முக்கியத்துவம் அளித்தனர். நாயக்கர் காலம் தெலுங்கு காலகட்டம். பிறகு மராட்டியர் காலகட்டம். இந்தக் காலகட்டங்களில் பொதுவாகத் தமிழ்க் கலைகளுக்கு இறக்கமும் தொடர்ச்சியறுதலும் நிகழ்ந்தன. தமிழிசையின் ஆதி மும்மூர்த்திகளான அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோர் வளர்த்த தமிழிசை புறக்கணிக்கப்பட்டது.தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துசாமி தீட்சிதர் என்போரும் தெலுங்கு மொழியிலே கீர்த்தனைகளை எழுதினார்கள். பாடகர்கள் அவற்றை மேடைகளில் பாடினார்கள்.[38] தமிழ் இசை கர்நாடக இசை என்றபெயரில் வடமொழிச் சுரங்களோடு வளர்ந்தது. தமிழ்ப் பாடல்களே பாடப்படாமையால் கர்நாடக இசை தமிழிசைக்கு அந்நியமானது என்று மக்கள் எண்ணத் தொடங்கினர். இதனால் பழந்தமிழிசை மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது.
தமிழரிசையே இன்று உழையிசையடிப்படையில் தாய்ப்பண்களையும் கிளைப்பண்களையும் வகுத்தும் பழந்தமிழ்க் குறியீடுகளையும் பண்ணுப் பெயர்களையும் வடசொல்லாக மாற்றியும், 'கருநாடக சங்கீதம்' எனப் பெயரிட்டு வழங்கி வருகின்றது என்று வெற்றிச்செல்வனென்ற இசை ஆய்வாளர் தம்முடைய இசையியல் என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
சாரங்க தேவர்
[தொகு]சாரங்கதேவர் என்பவர் கி.பி.1210 - 1241 வரையுள்ள காலத்தில் காசுமீரத்திலிருந்து தமிழகம் வந்து தேவாரப் பண்களை அறிந்து வடமொழியில் 'சங்கீத ரத்னாகரம்' என்னும் நூலை எழுதினார். அந்நூலில் உள்ள இசையமைப்பு முறை தேவாரம், திவ்விய பிரபந்தத்தில் உள்ள தமிழிசைப் பண்ணமைப்பு முறையை ஆதாரமாகக் கொண்டது. வடமொழிப் பெயர்கள் இராகங்களுக்கு இடப்பட்டு, முதல்முதல் வெளிவந்த கர்நாடக இசைநூல், கர்நாடக இசைக்கு முதல்நூல் அதுதான் என்று அறியப்படுகின்றது. சங்கீத ரத்னாகரத்தின் வாயிலாகத் தமிழிசை வடநாடுகளுக்கு அறிமுகமானதாகக் கூறலாம்.[39] இசை நூல்களில் வடமொழிப்பெயர்கள் இடம்பெறத் தொடங்கின. சில ராகங்களுக்குச் சாரங்க தேவர் 'பாஷா ராகங்கள் ' என்று பெயரிட்டுள்ளார். பாஷா என்று அவர் கூறவது தமிழ் மொழியையேயாகும்.[38]
இந்துத்தானி இசை
[தொகு]கி.பி. 13-ஆம் நூற்றாண்டுவரை தென்னிந்திய இசையென அழைக்கப்பட்ட தமிழிசை மட்டுமே இந்தியா முழுவதும் பரவி வாழ்ந்திருந்தது. தென்னிந்தியாவில் வளர்ந்து நின்ற தமிழிசை வட இந்தியாவெங்கும் பரவி மாறுபட்ட பெயர்களோடு வழங்கிவந்தாலும்கூட, காலப்போக்கில் முஸ்லிம் அரசர்கள் இந்தியாவை ஆட்சிசெய்யத் தொடங்கிய காலம் தொடக்கம் முஸ்லிம் நாடுகளின் இசையின் வரவால் தனித்துவம் இழந்தது. இரண்டறக் கலந்தது. அதுவே இந்துஸ்தானி இசை என்று இப்போது வழக்கத்தில் உள்ளது. பிற நாட்டு இசைக்கலப்பால் புதுவடிவம்பெற்ற வட இந்திய இசையே இந்துஸ்தானி இசை. ஆனால் அடிப்படை மரபு மாறாமல் இன்றும் கடைப் பிடிக்கப்பட்டு வருவது தென்னிந்திய இசை. அதுவே கர்நாடக இசை என்ற பெயரில் வழங்கிவரும் தமிழிசை.
14 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஹரிபாலர் என்பவர் எழுதிய 'சங்கீத சுதாகரம்' என்ற நூலிலேயே முதன்முதலாக, கர்நாடகஇசை, இந்துஸ்தானிஇசை என்ற இரண்டுவகை இசைகளின் பெயர்கள் குறிப்படப்பட்டுள்ளன. கன்னடம் தனியொரு மொழியாகத் தோன்றி 1100 ஆண்டுகளே ஆகின்றன. தெலுங்கு மொழி தோன்றி 900 ஆண்டுகளே ஆகின்றன.[40] ஆனால் இற்றைக்கு 1300 ஆண்டுகளுக்கு முன்னரே பக்தி இலக்கியங்களான தித்திக்கும் தேவாரங்கள் தோன்றிவிட்டன. 2000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழிசை செழித்து தழைத்து ஓங்கி நின்றது என்பதைப் பழந்தமிழ் இலக்கியங்கள் சான்று பகர்கின்றன.
தமிழிசை வரலாற்றினை ஆராய்ந்தவர்கள்
[தொகு]- தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் (கருணாமிர்த சாகரம்)
- சுவாமி விபுலாநந்தர் (யாழ் நூல்)
- வீ.ப.கா சுந்தரம் (பழந்தமிழ் இலக்கியத்தில் இசை)[41]
- வீணை எஸ். இராமநாதன் (சிலப்பதிகாரத்து இசை நுணுக்க விளக்கம்)
- வரகுண பாண்டியன்[42]
- நா. மம்மது[43]
தமிழிசையின் மேல் கடந்த 100 ஆண்டுகளில் நடந்த ஆய்வுகளின் நிலை பற்றி விபரமாக அறிய, “தமிழிசை ஆய்வும் மீட்பும்” எனும் இக்கட்டுரையைக் காணவும்[44].
பண்டைய தமிழ் இசை கருவிகளின் படங்கள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ தொல். அகத்திணையியல் - 18
- ↑ தமிழ் இணையப் பல்கலைக்கழகம்
- ↑ மதுரை நா.மம்மது.தமிழிசைப் பேரகராதி.
- ↑ தகவல் தமிழிசைக் கலைக் களஞ்சியம்
- ↑ சிலப்பதிகாரம் அரங்கேற்றுக்காதை யாழாசிரியன் அமைதி
- ↑ வீ.ப.கா சுந்தரம். "தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதி 1. பக்கம் 328".
- ↑ வீ.ப.கா சுந்தரம். "தமிழிசைக் கலைக் களஞ்சியம் தொகுதி 1 பக்கம் 160".
- ↑ "இசையென்பது நரப்படை வாலுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்றாகிய ஆதியிசைகளும்."-சிலப்பதிகாரம் அரங்கேற்றுகாதை, பக்கம் 89
- ↑ "உயிருயிர் மெய்யள வுரைத்தவைம் பாலினு
முடறமி ழியலிசை யேழுடன் பகுத்து
மூவேழ் பெய்தந் .... .... ....
தொண்டு மீண்ட பன்னீ ராயிரங்
கொண்டன ரியற்றல் கொளைவல்லோர் கடனே"-பிங்கலந்தை நிகண்டு, பக்கம் 170, 171. - ↑ [1][தொடர்பிழந்த இணைப்பு]ஆபிரகாம் பண்டிதர், கருணாமிர்த சாகரம்.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "தமிழிசை அடிப்படைகள் - Tamilisai Basics". Ancient Tamil Music - Basics. 2022-01-01. https://www.academia.edu/74723217/Tamilisai_Basics_Vijay_SA.
- ↑ சங்க காலத்தில் புலவர்கள் மட்டுமல்லாது, அரசர்களும் பொதுமக்களும் இசை ஆர்வம் மிக்கவராய் இருந்தனர் என்பது எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களில் காணலாம்
- ↑ "சோ. சிவசுப்பிரமணியன் தமிழிலக்கியங்களும் தமிழிசையும்". Archived from the original on 2014-06-07. பார்க்கப்பட்ட நாள் 2012-10-07.
- ↑ ஆனாய நாயனார் புராணம் பாடல்:13, 23, 28
- ↑ தேவாரம் தமிழ் செவ்வியல் இசை
- ↑ திவாகர நிகண்டு: 1884
- ↑ "பிங்கலந்தை நிகண்டு"
- ↑ குறித்து சிறு கண்ணோட்டம்
- ↑ மதுரை நா.மம்மது,தமிழிசைப் பேரகராதி
- ↑ பிங்கலந்தை நிகண்டு: 1415
- ↑ தமிழிசை குறித்து சிறு கண்ணோட்டம்
- ↑ பரிபாடல்:17 வரி 33-38
- ↑ பரிபாடல்: 12, வரி 40-43
- ↑ தொல்காப்பியம்,செய்யுளியல்:118
- ↑ தொல்காப்பியம், செய்யுளியல்: 121
- ↑ ..இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு தமிழர் இசைக் கருவிகளுள் ஒன்றாக இருந்த பதலை என்று தோலால் உருவான ஓர் இசைக் கருவியை, இன்று உலகம் தபலா என்று குறிப்பிடுவதைப் போல,..https://ta.wikisource.org/s/1241
- ↑ மலைபடுகடாம். 2-11
- ↑ திருக்குறள்:66
- ↑ இன்னா நாற்பது:31.1
- ↑ இன்னா நாற்பது:35.2
- ↑ பழமொழி: 28:1-2
- ↑ திணைமாலை நூற்றைம்பது:124-1
- ↑ திணைமாலை நூற்றைம்பது: 133:1
- ↑ ஐந்திணை ஐம்பது:22:1-2
- ↑ சிலப்பதிகாரம்:535-37
- ↑ சிலப்பதிகாரம்:6:18-23
- ↑ இராஜ. தியாகராஜன், தமிழிசை வரலாறு - ஒரு விளக்கம்
- ↑ 38.0 38.1 "நா. மம்மது, தமிழிசையும் தஞ்சை ஆபிரகாம் பண்டிதரும், திண்ணை கட்டுரை". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-10-08.
- ↑ "சோ. சிவசுப்பிரமணியன்,தமிழிலக்கியங்களும் தமிழிசையும்". Archived from the original on 2014-06-07. பார்க்கப்பட்ட நாள் 2012-10-07.
- ↑ சு.ஸ்ரீகந்தராசா, தமிழ் இசையா? கர்நாடகசங்கீதமா?
- ↑ தமிழிசைக் கலைக்களஞ்சியம் நான்கு தொகுதிகள்
- ↑ பாணர் கைவழி எனும் யாழ்நூல்
- ↑ தமிழிசைப் பேரகராதி
- ↑ "தமிழிசை ஆய்வும் மீட்பும் - Tamilisai Retrieval". www.academia.edu.
தொகு | தமிழிசைக் கருவிகள் |
---|---|
தோல் கருவிகள் | ஆகுளி | உறுமி | தவில் | பறை | மிருதங்கம் | மத்தளம் | பெரும்பறை | பஞ்சறை மேளம் | முரசு | தமுக்கு | பேரிகை | பம்பை | மண்மேளம் | கஞ்சிரா | ஐம்முக முழவம் | கொடுகொட்டி (அல்லது) கிடிகிட்டி
|
நரம்புக் கருவிகள் | வீணை | யாழ் | தம்புரா | கோட்டு வாத்தியம் | கின்னாரம்
|
காற்றிசைக் கருவிகள் | கொம்பு | தாரை | நாதசுவரம் | புல்லாங்குழல் | சங்கு | மகுடி | முகவீணை| எக்காளம் |கொக்கரை|மோர்சிங்
|
கஞ்சக் கருவிகள் | தாளம் | சேகண்டி |
|
பிற | கொன்னக்கோல் | கடம் |
|
வெளியிணைப்புகள்
[தொகு]- http://www.thoguppukal.in/2011/02/blog-post_6447.html பரணிடப்பட்டது 2014-06-07 at the வந்தவழி இயந்திரம்
- http://www.carnatica.net/tmusic.htm
- http://www.angelfire.com/musicals/kallidaihari/devaram.htm
- http://www.tamilkalanjiyam.com/arts/music_instruments/#.UHS_PBW6f5g ( தமிழ் இசைக் கருவிகள்)
- http://www.pudhucherry.com/pages/tyaga21.html பரணிடப்பட்டது 2019-11-16 at the வந்தவழி இயந்திரம்
- தமிழிசையின் மூல நூல்கள் மற்றும் முக்கியமான ஆய்வு நூல்கள், தினமணி