உள்ளடக்கத்துக்குச் செல்

புடைப்புச் சிற்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் நாட்டின் மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் காலத்துப் புடைப்புச் சிற்பம். மகிடாசுரமர்த்தினி.

புடைப்புச் சிற்பம் (relief) என்பது பின்னணியில் இருந்து உருவங்கள் புடைத்து இருக்கும்படி அமைக்கப்படும் ஒரு சிற்பவகை ஆகும். இச் சிற்பங்களில் செதுக்கப்படும் உருவங்கள் பின்னணியோடு ஒட்டியே இருக்கும். இதனால் இச் சிற்பங்களில் ஓரளவு முப்பரிமாணத் தன்மை காணப்பட்டாலும், உருவங்களின் ஒரு பக்கம் மட்டுமே தெரியக் கூடியதாக அமைந்திருக்கும். தனித்து நிற்கும் முழு உருவச் சிற்பங்களைப் போல் எல்லாப் பக்கங்களையும் பார்க்க முடியாது. எனினும் புடைப்புச் சிற்பங்களின் புடைப்பின் அளவு பல்வேறாக அமைந்திருப்பது உண்டு. மிகச் சிறிய அளவே புடைத்துக் காணப்படும் சிற்பங்களும், உருவங்களின் பெரும் பகுதிகள் தெரியக் கூடியவாறு அமைந்த சிற்பங்களுக்கும் எடுத்துக் காட்டுகள் ஏராளமாக உண்டு.

"புடைப்புச் சிற்பம்" என்னும் சொல் சிற்பங்களை உருவாக்கும் ஒரு குறிப்பிட்ட முறையையே குறிக்கிறது. இந்த முறையைப் பயன்படுத்திப் பல்வேறு நாகரிகக் காலங்களிலும், இடங்களிலும் உருவாக்கப்பட்ட சிற்பங்கள் அந்தந்த நாகரிகங்களுக்குரிய கலைப் பாணிகளைத் தழுவி வேறுபட்டு அமைகின்றன. எடுத்துக்காட்டாக கிரேக்க, ரோமப் புடைப்புச் சிற்பங்கள் அவர்களுடைய ஏனைய சிற்ப ஓவிய வடிவங்களைப் போன்றே உலகில் காணும் உருவங்களை காண்கின்றவாறே உருவாக்கினர். ஆனால் இந்தியப் புடைப்புச் சிற்பங்களில், ஓரளவு குறியீட்டுத் தன்மை காணப்படுகின்றது.[1][2][3]

வகைகள்

[தொகு]
பாரசீகத்துத் தாழ் புடைப்புச் சிற்பம்.கசர் காலத்தைச் சேர்ந்த பேர்செப்போலிசு பாணியில் அமைந்தது. இன்றைய ஈரானின் தாங்கோ சவாசி என்னும் இடத்தில் உள்ளது.

புடைத்திருக்கும் அளவை அடிப்படையாகக் கொண்டு புடைப்புச் சிற்பங்கள் "தாழ் புடைப்புச் சிற்பங்கள்", "உயர் புடைப்புச் சிற்பங்கள்" என இருவகையாக உள்ளன. எனினும், இவற்றுக்கு இடையேயான எல்லை தெளிவானது அல்ல. எவ்வளவு புடைத்திருந்தால் அது உயர் புடைப்புச் சிற்பம் என்று தெளிவான வரையறை கிடையாது. ஒரே சிற்பத்திலேயே இரண்டு வகைகளும் காணப்படுவது உண்டு. முன்னணியில் இருக்கும் முக்கியமான உருவங்கள் கூடிய அளவுக்குப் புடைத்திருக்க, பின்னணிக் காட்சிகள் தாழ் புடைப்புச் சிற்பங்களாக அமைந்திருப்பதைக் காண முடியும்.

தொடக்ககாலப் புடைப்புச் சிற்பங்கள் தாழ் புடைப்புச் சிற்பங்களாகவே அமைந்திருக்கக் கூடும்.

பொருட்கள்

[தொகு]
பண்டைக் கிரேக்கத்தைச் சேர்ந்த உயர் புடைப்புச் சிற்பம் ஒன்று

.

புடைப்புச் சிற்பங்கள் கல், மரம், உலோகம் முதலிய பல்வேறு பொருட்களில் உருவாக்கப்பட்டு உள்ளன. மரத்தில் செதுக்கு வேலைகளைச் செய்வது இலகுவாக இருப்பதால் காலத்தால் முந்திய புடைப்புச் சிற்பங்கள் மரத்தால் ஆனவையாகவே இருந்திருக்கும். ஆனாலும், மரச் சிற்பங்கள் நீண்டகாலம் நிலைத்திருக்கும் வாய்ப்புக் கிடையாது ஆகையால் நமக்குக் கிடைக்கக் கூடிய மிகப் பழைய புடைப்புச் சிற்பங்கள் கல்லில் செதுக்கப்பட்டவையாக உள்ளன. மரம், கல் முதலிய பொருட்களில் செதுக்குவதன் மூலம் பகுதிகளை அகற்றிப் புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்படும் வேளை, உலோகத்தாலான புடைப்புச் சிற்பங்கள் அச்சுகளில் உருக்கி வார்க்கப்படுவதன் மூலமோ, உலோகத் தகடுகளைப் பின்புறம் அடிப்பதன் மூலமோ உருவாக்கப்படுகின்றன.

வரலாறு

[தொகு]
சாஞ்சி தாது கோபுரத்தின் வடக்குத் தோரண வாயிலில் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

புடைப்புச் சிற்பங்கள் பண்டைக் காலம் முதலே பல்வேறு நாடுகளின் சிற்பக்கலையின் ஒரு அம்சமாக இருந்து வந்துள்ளன. பண்டைக்கால எகிப்து, பபிலோனியா போன்ற இடங்களில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புடைப்புச் சிற்ப முறையிலான சிற்பங்கள் இருந்தன. இவற்றின் அழிபாடுகளை இன்றும் நாம் காணமுடிகின்றது. மேற்கு நாடுகளில் கிரேக்க, ரோம நாகரிகக் காலத்திலும் புடைப்புச் சிற்பங்கள் உருவாக்கப்பட்டன. இவை கட்டிடங்களின் பகுதிகளாகவும், தனியாகவும் செதுக்கப்படன.

இந்தியாவிலும் புடைப்புச் சிற்பங்கள் மிகப் பழைய காலம் தொட்டே இருந்து வருவதற்கான சான்றுகள் உண்டு. சிந்துவெளி நாகரிகக் காலத்தைச் சேர்ந்தனவாக, மொகெஞ்சதாரோ, அரப்பா போன்ற இடங்களில் ஏராளமாகக் கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு உருவங்களைக் கொண்ட முத்திரைகள் புடைப்புச் சிற்பங்களின் கருத்துருவின் அடிப்படையைக் கொண்டவை. எனினும் இவை செதுக்கப்பட்டவை அல்ல. அச்சுக்களில் அழுத்தி உருவாக்கப்பட்டவை.

சிந்துவெளி நாகரிகக் காலத்துக்குப் பின்னர் இந்தியாவில் உருவான பல நாகரிகக் காலங்களுக்கு உரிய கட்டிடங்களில் புடைப்புச் சிற்பங்கள் சிறப்பிடம் பெற்றுள்ளன. இந்து, பௌத்த, சமணக் கட்டிடங்கள் அனைத்திலுமே இவை காணப்படுகின்றன.

தமிழ் நாட்டில் கல்லில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பங்கள் பல்லவர் ஆட்சிக்காலத்துடனேயே தொடங்குகின்றன எனலாம். கோயில்களைக் குடைவரைகளாகக் கல்லில் உருவாக்கியது பல்லவர் காலத்திலேயேயாம். இக் காலக் குடைவரை கோயில்கள் பலவற்றில் புடைப்புச் சிற்பங்கள் ஏராளமாகக் காணப்படுகின்றன. மாமல்லபுரம் குடைவரைகளில் காணப்படும் புடைப்புச் சிற்பங்கள் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. பின்னர் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கற்றளிகளிலும் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. குடைவரைகள், கற்றளிகள் என்பவற்றைத் தவிர்த்து, பல்லவர் காலத்து நடுகற்களிலும் தமிழகத்தில் முதன் முதலாகப் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டன. இதற்கு முந்தியகால நடுகற்களில் கீறல் உருவங்களே வரையப்பட்டிருந்தன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Relief". Merriam-Webster. Archived from the original on 2012-05-31. பார்க்கப்பட்ட நாள் 2012-05-31.
  2. In modern English, just "high relief"; alto-rilievo was used in the 18th century and a little beyond, while haut-relief surprisingly found a niche, restricted to archaeological writing, in recent decades after it was used in under-translated French texts about prehistoric cave art, and copied even by English writers. Its use is to be deprecated.
  3. Murray, Peter & Linda, Penguin Dictionary of Art & Artists, London, 1989. p. 348, Relief; bas-relief remained common in English until the mid 20th century.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புடைப்புச்_சிற்பம்&oldid=4100903" இலிருந்து மீள்விக்கப்பட்டது