மாச்சியா
மாச்சியா (Machiya) என்பது, சப்பான் முழுவதிலும் காணப்படும் மரபுவழி நகரவீட்டைக் குறிக்கும். இது வரலாற்றுக்காலத் தலைநகரமான கியோட்டோவில் ஒரு வீட்டு வகையாக உருவானது. சப்பானிய மொழியில் "நகரவீடு" என்னும் பொருள்கொண்ட மாச்சியாவும், "பண்ணைவீடு" எனப் பொருள்கொண்ட நோக்காவும் சப்பானிய நாட்டார் கட்டிடக்கலையின் இரண்டு பிரிவுகள். எலன் காலத்தில் உருவான இவ்வகை வீடுகள், எடோ காலத்தினூடாக மேலும் வளர்ச்சியடைந்து மெய்சிக் காலம் வரை இருந்தது. கூட்டாக சோனின் (நகர மக்கள்) என அழைக்கப்பட்ட நகரத்து வணிகர்களும், கைவினைஞர்களும் மாச்சியா வகை வீடுகளில் வாழ்ந்தனர். சப்பானிய மொழியில் மாச்சியா என்னும் சொல் இரண்டு குறியீடுகளால் எழுதப்படுகின்றது. மாச்சி (町) என்பது "நகரம்" எனவும், யா (家 அல்லது 屋) "வீடு" (家) அல்லது "கடை" (屋) எனவும் பொருள்படும்.
கியோமாச்சியா
[தொகு]கியோட்டோ நகரில் உள்ள மாச்சியா, கியோமாச்சியா (京町家 அல்லது 京町屋) என அழைக்கப்படுவதுண்டு. இது பல நூற்றாண்டுகளாக நகர மையப்பகுதியின் கட்டிடக்கலைச் சூழலைத் தீர்மானித்தது.[1] அத்துடன் இதுவே சப்பான் முழுவதிலும் உள்ள மாச்சியா என்னும் வீட்டு வகைக்கான நியம வடிவமாகவும் விளங்கியது.
பொதுவான கியோட்டோ மாச்சியா ஒடுக்கமான சாலை முகப்புடன், சாலைக்குச் செங்குத்தாக நீளமாக அமைந்த மரத்தாலான வீடு. இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய முற்றங்கள் இருப்பதுண்டு. மண் சுவர்களையும், சுட்ட ஓட்டுகளாலான கூரையையும் கொண்ட இவ்வீட்டு வகை ஒன்று, ஒன்றரை, இரண்டு அல்லது சில வேளைகளில் மூன்று மாடிகளைக் கொண்டிருக்கும்.[1] கட்டிடத்தின் முகப்பு பெரும்பாலும் ஒரு கடைக்கான இடவசதியைக் கொண்டிருக்கும். இப்பகுதியின் சாலை முகப்பு, பொருட்களையும் பண்டங்களையும் காட்சிக்கு வைக்க வசதியாக வழுக்குக் கதவு அல்லது மடிப்புக் கதவைக் கொண்டிருப்பது வழக்கம். இந்த வணிகப் பகுதிக்குப் பின்புறம் எஞ்சியுள்ள கட்டிடப்பகுதி தாத்தமி பாய் விரிக்கப்பட்ட உயர்த்திய மரத்தளத்தோடு கூடிய அறைகளாகவும், மண் தளத்தைக்கொண்ட, சமையலறை போன்ற சேவைப் பகுதிகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். மனையில் பின்பகுதிக்குச் செல்வதற்கான வழியாகவும் செயற்படும் இப்பகுதியூடாக பின்பகுதியில் உள்ள களஞ்சியப் பகுதிக்குச் செல்ல முடியும். சமையலறைக்கு மேல் அமையும் இபுகுரோ என்னும் கூறு புகைபோக்கியாகச் செயற்படுவதுடன், சமையலறைக்குள் வெளிச்சத்தைக் கொண்டுவரும் வழியாகவும் அமைகின்றது.[2] மரபுவழியாகக் கட்டிட நிலத்தின் அகலம் செல்வத்தின் குறியீடாகக் கருதப்படுகின்றது. பொதுவாக இந்நிலத்தின் அகலம் 5.4 முதல் 6 மீட்டர்கள் வரை இருக்கும். ஆனால் நீளம் ஏறத்தாழ 20 மீட்டர்கள்.
மிகப் பெரிய அறை வீட்டின் பின்புறத்தில் அமைந்திருக்கும். இது வீட்டுக் கட்டிடத்துக்கும், களஞ்சிய அறைக்கும் இடையில் இருக்கும் தோட்டத்தை நோக்கியபடி இருக்கும். சாசிக்கி என அழைக்கப்படும் இந்த அறை சிறப்பு விருந்தினருக்கும், வாடிக்கையாளருக்குமான வரவேற்பு அறையாகவும் பயன்படும்.[3] பல சப்பானிய மரபுவழிக் கட்டிடங்களில் இருப்பது போலவே மாச்சியா வகை வீடுகளிலும் அறைகளுக்கான பிரிசுவர்கள் வழுக்குக் கதவுகள் போல் அமைக்கப்பட்டிருக்கும். இது இதற்குப் பல்பயன்பாட்டுத் திறனை வழங்குகின்றது. மேற்படி சுவர்களைத் திறக்கவோ மூடவோ அல்லது முற்றாக அகற்றவோ முடிவதால், அந்தந்த நேரத்துத் தேவைகளைப் பொறுத்து அறைகளில் எண்ணிக்கை, அளவு வடிவம் ஆகியவற்றை மாற்றி அமைத்துக்கொள்ள முடியும்.
அழிவு
[தொகு]மாச்சியா வகை வீடுகள் விரைவாக அழிந்து வருகின்றன. இந்த அழிவு, கியோட்டோவிலும் பிற பகுதிகளிலும், அவற்றின் பண்பாட்டுச் சூழலில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. மாச்சியாக்களைப் பேணுவது கடினமானதும் செலவு மிகுந்ததுமாகும். அத்துடன், மரத்தாலான இவை இலகுவில் தீப்பிடிக்கும் ஆபத்துக் கொண்டவை என்பதுடன், தற்கால வீடுகளுடன் ஒப்பிடும்போது நிலநடுக்கத்தையும் தாக்குப்பிடிக்க மாட்டா. இவற்றுடன் மக்களில் மனதில் இத்தகைய வீடுகள் தற்காலப் போக்குகளுக்கு ஒத்துவராத வழக்கிழந்த வீட்டு வகைகளாகவே கருதப்படுகின்றன. 2003ல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில், மாச்சியாவில் வாழும் 50%க்கு மேற்பட்டோர் மாச்சியாவைப் பராமரிப்பது பொருளாதார அடிப்படையில் கடினமானது என்று குறிப்பிட்டனர்.[4]